பகுதி - 767

திரண்ட புயங்களை உடையவனே!
பகுதி - 767

பதச் சேதம்

சொற் பொருள்

குமர குருபர குணதரநிசிசர
திமிர தினகரசரவணபவ கிரி குமரிசுத
 பகிரதி சுத சுர பதிகுல மானும்

 

குணதர: குணச்செல்வனே; நிசிசர திமிர: (நிசிசர—இரவில் உலவுபவர், அரக்கர், திமிர(ம்)—இருள்) அரக்கர் என்னும் இருளுக்கு; சரவணபவ: சரவணப் பொய்கையில் பிறந்தவனே; கிரிகுமரி சுத: மலை மகளின் பிள்ளையே; பகிரதி சுத: (பகிரதி—பகீரதி, கங்கை) கங்கையின் மகனே; சுரபதி குலமான்: தேவர் தலைவனின் மக(ளான தேவானை);

குறவர் சிறுமியும்மருவிய திரள்
 புய முருக சரண் எனஉருகுதல்
 சிறிதும்இல் கொடியவினையனை
அவலனை அசடனைஅதி மோக

 

 

கமரில் விழவிடுஅழகு உடை
அரிவையர்கள் அளவினொடுபொருள்
 அளவளவு அருளிய கலவிஅளறிடை
 துவளுறும்வெளிறனைஇனிதாள

 

கமரில்: நிலப்பிளப்பில் (கமர்: Chasm, Cleft); அளவளவு: அளவின் அளவாக—பொருள் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவே; அளறிடை: சேற்றினிலே (அளறு: சேறு); வெளிறனை: அறிவிலியாகிய என்னை;

கருணை அடியரொடுஅருணையில்
 ஒருவிசை சுருதி புடைதர வரும்
 இரு பரிபுர கமல மலர் அடி
கனவிலும் நனவிலும்மறவேனே

 

அருணை: திருவண்ணாமலை; ஒருவிசை: ஒருமுறை; சுருதி புடைதர: வேதகோஷங்கள் சூழ்ந்து வர; பரிபுர: சிலம்பு (அணிந்த);

தமர மிகு திரை எறிவளை 
கடல் குடல் மறுகி அலைபட 
விடநதி உமிழ்வன சமுகமுக 
கண பண பணிபதி நெடு வடமாக

 

தமர(ம்): ஓசை; திரையெறி: அலைவீசும்; விடநதி: விஷத்தை நதிபோலக் கக்கும்; சமுக முக: விளக்கமுற்ற தோற்றத்தைக் கொண்ட; கண பண: கூட்டமான படங்க(ளைக் கொண்ட); பணிபதி: அரவரசன்—வாசுகி; வடமாக: கடையும் கயிறாக;

சகல உலகமு(ம்)நிலைபெற நிறுவிய
கனக கிரி திரி தரவெகு கர
 மலர் தளரஇனியதொர்அமுதினை
 ஒரு தனிகடையா நின்று

 

கனக கிரி: மேருமலை; திரிதர: (மத்தாகச்) சுழல; வெகு கரமலர் தளர: கர கமலங்கள் மிகவும் தளரவும்; ஒருதனி: ஒப்பற்ற முதல்வனாய்; கடையாநின்று: கடைந்து—கடையச் செய்து;

அமரர் பசி கெடஉதவிய 
க்ருபைமுகில் அகிலபுவனமும் 
அளவிடுகுறியவன் அளவுநெடியவன் 
அளவிடஅரியவன்மருகோனே

 

அளவிடு: அளக்க வல்ல; குறியவன்: குறுகிய—வாமன—வடிவினன்; நெடியவன்: விக்கிரமன், திருமால்;

அரவு புனைதருபுநிதரும் வழிபட
மழலை மொழிகொடுதெளி தர
 ஒளி திகழ் அறிவை அறிவது
பொருள் என அருளியபெருமளே.

 

அரவு புனைதரு: பாம்பை அணிந்தவரான; புநிதரும்: சிவனும்; ஒளிதிகழ் அறிவை: பிரணவத்தின் பொருளை;

குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும்... ‘குமரா! குருபரா! குணச்செல்வனே! அரக்கர்கள் என்னும் இருளை விலக்கும் சூரியனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே!  மலைமகள் மகனே! கங்கா புத்திரனே!  இந்திரன் மகளான தேவானையையும்,

குறவர் சிறுமியும்  மருவிய  திரள்  புய  முருக  சரண்  என  உருகுதல்  சிறிதும் இல் கொடிய வினையனை அவலனை அசடனை... குறவர் மகளான வள்ளியையும் தழுவிய திரண்ட புயங்களை உடையவனே! முருகா! சரணம்’ என்றெல்லாம் சொல்லி உருகாதவனும்; கொடுமையான வினைகளை உடையவனும்; அவலம் நிறைந்தவனும்; மூடனும்;

அதி மோகக் கமரில் விழவிடு அழகு உடை அரிவையர் களவினொடு பொருள் அளவளவு அருளிய கலவி அளறிடை துவளுறும்வெளிறனை... அளவுகடந்த மோகம் என்னும் பள்ளத்தில் வீழ்த்துகின்ற அழகை உடைய பெண்கள்; வஞ்சகர்கள்; கொடுக்கும் பொருளுக்கு ஏற்றாற்போல கலவியைத் தருபவர்கள் (என்று இவர்களோடு கிடந்து) துவண்டுபோகின்ற அறீவனனு(மான என்னை);

இனிது ஆள கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர கமல மலர் அடி கனவிலும் நனவிலும்மறவேனே... இனிதே ஆண்டுகொண்டு, கருணை நிறைந்த அடியார்களோடு திருவண்ணாமலையில் ஒருமுறை வேதகோஷங்கள் சூழ்ந்து முழங்க எழுந்து தோன்றிய சிலம்பணிந்த இரண்டு தாமரைப் பாதங்களை அடியேன் கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன்.

தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக... இரைச்சல் மிகுந்ததும் அலைவீசுவதுமான கடலின் குடல் கலங்குமாறு; ஆறுபோல விஷத்தைக் கக்குவதும் படங்களை உடையதும் கூட்டமானதுமான பல தலைகளை உடையதும், அரவரசனுமாகிய வாசுகியை கடைகின்ற கயிறாகவும்;

சகல உலகமு(ம்) நிலைபெற நிறுவிய கனக கிரி திரிதர வெகு கர மலர் தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று... அனைத்து உலகங்களையும் நிலைபெறச் செய்யுமாறு நிறுவப்பட்ட பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழல; (கடைபவர்களுடைய) பற்பல மலர்க் கரங்களும் தளர்ந்துபோக, இனிய அமுதத்தை ஒப்பற்ற முதல்வனாக நின்று கடைவிக்கச் செய்து,

அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே... தேவர்களுடைய பசியைத் தணிக்க உதவியனும்; கருணை நிறைந்தவனும்; மேகத்தை ஒத்தவனும்; எல்லா உலகங்களையும் தன்னுடைய பாதங்களால் அளக்கவல்லவனும்; வாமனனாக வந்தவனும்; அளக்கும்போது விக்கிரமனாக வளர்ந்த நெடியவனும்; இன்ன தன்மையன் என்று உணர்வதற்கு அரியவனுமான திருமாலின் மருகனே!

அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே.​... பாம்பை அணிந்திருக்கும் புனிதரான சிவனாரே உன்னை வழிபட்டுக் கேட்டபோது, உன்னுடைய மழலைச் சொற்களால் ‘ஒளிமயமான அறிவை அறிவதே பிரணவத்தின் பொருள்’ என்று அவருக்கு உரைத்த பெருமாளே!


சுருக்க உரை:

பேரிரைச்சலோடு அலைகளை வீசுகின்ற கடலின் குடல் கலங்கும்படி; ஆறுகளைப்போல விஷத்தை உமிழ்வதும் கொத்துக் கொத்தான படங்களைக் கொண்டதுமான வாசுகிப் பாம்பைக் கடைகயிறாகவும்; உலகம் எல்லாவற்றையும் நிலைநிறுத்தும்படியாக அமைத்த மேருமலை மத்தாகவும் சுழலுமபடியாகக் கடைந்த தேவ-அசுரர்களுடைய கரங்களெல்லாம் சோர்வெய்தும்படியாக அமுதத்தைக் கடையச் செய்து தேவர்களுடைய பசியைத் தணித்வனும்; கிருபை நிறைந்தவனும்; மேகத்தை ஒத்தவனும்; அனைத்து உலகங்களையும் அளக்க வல்ல வாமன வடிவாக வந்தவனும்; அளக்கும்போது திரிவிக்கிரமனாக வளர்ந்த நெடியவனும்; இன்ன அளவினன், இன்ன தன்மையன் என்று அளவிட்டு உணரமுடியாதவனுமான திருமாலின் மருகனே! நாகத்தை ஆபரணமாகப் பூண்ட புனிதரான சிவபெருமான் உன்னை வணங்கிப் பொருள்கேட்டபோது உன்னுடைய மழலை மொழியால்இ ‘ஒளிமயமான அறிவை உணர்வதே பிரணவத்தின் பொருள்’ என்று அவருக்கு உபதேசித்தருளிய பெருமாளே!

‘குமரா! குருபரா!  அசுர்களாகிய இருளைப் போக்கும் கதிரவனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைமகள் புதல்வனே! கங்கையின் மகனே! இந்திரன் மகளான தேவானையும் குறமகளான வள்ளியும் பொருந்துகின்ற வலிய தோள்களை உடையவனே! முருகா! நீயே சரணம்’ என்றெல்லாம் மனமுருகாதவனும்; வினைகளால் பெரிதும் பீடிக்கப்பட்டவனும்; வீணானவனும்; மூடனும்; மோகம் என்கின்ற பள்ளத்தில் விழச்செய்கின்றவர்களும்; தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருளுக்குத் தகுந்தாற்போல் கலவி அளிப்பவர்களுமான பெண்களால் சேற்றில் விழுந்து துவண்டுபோகின்ற அறிவிலியுமான என்னையும் ஆண்டுகொள்வதற்காக திருவண்ணாமலையில் ஒருமுறை சுற்றிலும் வேதகோஷங்கள் முழங்க, உன்னுடைய சிலம்பணிந்த மலர்ப்பாதங்களைக் கண்ட அதனைக் கனவிலும் நனவிலும் எப்போதும் மறவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com