பகுதி - 853

வாரி மீதே எழுதிங்களாலே..
பகுதி - 853

பதச் சேதம்

சொற் பொருள்

வாரி மீதே எழுதிங்களாலே

 

வாரி: கடல்; திங்கள்: சந்திரன்;

மார வேள் ஏவியஅம்பினாலே

 

மாரவேள்: மன்மதன்;

பார் எ(ல்)லாம் ஏசியபண்பினாலே

 

பண்பினாலே: தன்மையானே;

பாவியேன் ஆவிமயங்கலாமோ

 

 

சூரன் நீள் மார்புதொளைந்த வேலா

 

தொளைந்த: தொளைத்த;

சோதியே தோகைஅமர்ந்த கோவே

 

தோகை அமர்ந்த: மயில் மேல் அமர்ந்த;

மூரி மால் யானைமணந்த மார்பா

 

மூரி: பெருமை; மால்: அன்பு; யானை: தேவானை;

மூவர் தேவாதிகள்தம்பிரானே.

 

 

வாரிமீதேயெழு திங்களாலே...கடலின்மேல் உதிதெழுகின்ற சந்திரனாலும்,

மாரவே ளேவிய அம்பினாலே... மன்மதன் எய்த மலர்க்கணைகளாலும்,

பாரெலாம் ஏசிய பண்பினாலே...  உலகத்திலுள்ள எல்லோரும் பேசும் வசைச் சொற்களாலும்,

பாவியேன் ஆவி மயங்கலாமோ... (உனைப் பிரிந்து தனித்திருக்கும்) பாவியாகிய நான் என் உயிரிலே கலக்கம் எய்தலாமோ? (அடியேன் உயிர் கலங்காமல் காத்தருள வேண்டும்.)

சூரனீள் மார்பு தொளைந்த வேலா...சூரனுடைய நீண்ட மார்பைத் தொளைத் வேலை ஏந்தியவனே!

சோதியே தோகையமர்ந்த கோவே... ஜோதியே, மயில்மீது அமர்ந்திருக்கின்ற மன்னனே!

மூரிமால் யானைமணந்தமார்பா... பெருமையும் அன்பும் கொண்டவளான தேவானையை மணந்த திருமார்பனே!

மூவர்தேவாதிகள் தம்பிரானே.... மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் தலைவனே!

சுருக்க உரை

சூரனுடைய அகன்ற மார்பைத் தொளைத் வேலை ஏந்தியவனே! சோதியே! மயில் மீது அமர்திருக்கின்ற மன்னனே! சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அனைத்துத் தேவர்களுக்கும் தலைவனே!

கடலில் உதிதெழுகின்ற நிலவாலும் மன்மதன் எய்கின்ற மலர்க் கணைகளாலும் உலகிலுள்ளவர்களுடைய ஏச்சுகளாலும் உன்னைப் பிரிந்திருக்கின்ற பாவியேனாகிய நான் என்னுடைய ஆவியில் கலக்கம் எய்தலாமோ? (அடியேனுடைய ஆவி கலக்கம் எய்தாதவாறு காத்தருள வேண்டும்..)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com