Enable Javscript for better performance
பகுதி - 937- Dinamani

சுடச்சுட

  
  திருப்புகழ்

   

  பதச் சேதம்

  சொற் பொருள்

  தொட துளக்கிகள் அ பகட நினைவிகள் குருட்டு 
  மட்டைகள்குமரிகள் 
  கமரிகள் சுதை சிறுக்கிகள்குசலிகள் 
  இசலிகள்முழு மோச

   

  துளக்கிகள்: (துளக்குதல்: அசைதல்) நெளிபவர்கள்; அபகட: அ பகட—அ: அந்த; பகட: வஞ்சக; நினைவிகள்: நினைப்புக் கொண்டவர்கள்; குருட்டு மட்டைகள்: அறிவுக்கண் அற்ற மூடர்கள்; கமரிகள்: குற்றம் உள்ளவர்கள்; சுதைச் சிறுக்கிகள்: பிளவுண்ட நிலத்தில் தள்ளுபவர்கள்; குசலிகள்: தந்திரசாலிகள்; இசலிகள்: பிணக்குக் கொள்பவர்கள்;

  துறுத்த மட்டைகள்அசடிகள் கசடிகள்
  முழுபுரட்டிகள் நழுவிகள்மழுவிகள் துமித்தமித்திரர் விலை முலைஇன வலை புகுதாமல்

   

  துறுத்த மட்டைகள்: அடைபட்டுள்ள பயனிலிகள்; அசடிகள்: அசடர்கள்; கசடிகள்: குற்றம் உள்ளவர்கள்; நழுவிகள்: நழுவுபவர்கள்; மழுவிகள்: மழுப்புபவர்கள்; துமித்த: அறுக்கின்ற, துணிக்கின்ற; மித்திரர்: நண்பர்கள்; விலை முலை: தனத்தை விற்பவர்கள்;

  அடைத்தவர்க்கு இயல்சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம்என வர உடன்  அழைத்து 
  சக்கிர கிரிவளை படி கொடுவிளையாடி

   

  சரசிகள்: சரசமாடுபவர்கள்; விரசிகள்: துன்பத்தை ஊட்டுபவர்கள்; வித்ரும: பவளம் (போன்ற); நிறம் என: ஒளியைப் போல; சக்கிர கிரி: சக்கரவாள கிரி—அண்டத்தின் எல்லையாக இருக்கும் மலை; வளைபடி: வளைக்கப்பட்ட (சூழப்பட்ட) படி—பூமி;

  அவத்தை தத்துவம்அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர்ஒளி பரவ ந(ல்)ல அருள்புகட்டி உன் அடி இணைஅருளுவது ஒரு நாளே

   

  அவத்தை: ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி என்ற மூன்று அவதிகள் (நிலைகள்); இருளறை விலக்குவித்து: (ஆணவம் முதலான மும்மலங்களின்) இருட்டை நீக்கி;

  படைத்துஅனைத்தையும் வினைஉற நடனோடு துடைத்த பத்தினி மரகதசொருபி ஓர் பரத்தின்உச்சியில் நடன(ம்)நவில் உமை 
  அருள்இளையோனே

   

  வினையுற: இயக்கி—காத்து; நடனொடு: நடராஜப் பெருமானோடு; துடைத்த பத்தினி: அழித்த பத்தினி; மரகத சொருபி: பச்சை நிறத்தவள்;

  பகைத்த அரக்கர்கள்யமன் உலகு உற அமர் தொடுத்த  சக்கிர வளைகரம் அழகியர் படிகடத்தையும் வயிறுஅடை 
  நெடியவர்மருகோனே

   

  சக்கிர: சக்கரப் படை; வளை: சங்கு; கரமழகியர்: கரத்தில் ஏந்திய அழகர்; படி: பூமி(யாகிய); கடத்தையும்: பாண்டத்தையும்; வயிறடை: வயிற்றிலே அடக்கும்; நெடியவர்: திருமால்;

  கடல் திடுக்கிடஅசுரர்கள்  முறிபட கொளு திசை கிரிபொடிபட சுடர் அயில் திருத்தி விட்டு ஒருநொடியினில் 
  வலம் வருமயில் வீரா

   

  திசைக்கிரி: எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு மலைகள்; சுடர் அயில்: ஒளிர்கின்ற வேல்;

  தினை புனத்து இரு தனகிரி குமரி நல் குறத்திமுத்தோடு சசிமகளோடு புகழ் திருத்தணி பதி மலைமிசை 
  நிலை பெறு(ம்)பெருமாளே.

   

  குறத்தி முத்து: வள்ளி; சரி மகளோடு: இந்திராணியின் மகளான தேவானை;

  தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோசம்... தொடும்போது கூசுவதைப் போல நெளிபவர்களும்; வஞ்சகமான எண்ணத்தைக் கொண்டவர்களும்; அறிவற்ற மூடர்களும்; இள மகளிரும்; குற்றம் உள்ளவர்களும்; பிளவுபட்ட பூமியில் தள்ளுபவர்களும்; தந்திரம் நிறைந்தவர்களும்; பிணக்கம் கொள்பவர்களும்; மோசம் நிறைந்த,

  துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல்... பயனற்றவர்களும்; மூடர்களும்; கசடர்களும்; புரட்டு நிறைந்தவர்களும்; நழுவுபவர்களும்; மழுப்புபவர்களும்; பொருளைப் பறிப்பவர்களும்; நண்பர்களைப் போல நடிப்பவர்களும்; மார்பகத்துக்கு விலை பேசுபவர்களுமான பெண்களுடைய வலையில் நான் வீழாமல்;

  அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி... (நற்கதிக்கான பாதையை) அடைத்தவர்களும்; சரசமாடுபவர்களும்; துன்பத்தைத் தருபவர்களும், பவளம் போன்ற ஒளியைப் படைத்தவர்களுமான பெண்களை உடன் அழைத்துக்கொண்டு, சக்கரவாள கிரியால் சூழப்பட்ட இந்த பூமியில் அவர்களோடு வீணே உழலுகின்ற,

  அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ ந(ல்)ல அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே... விழிப்பு, கனவு, சுழுத்தி ஆகிய நிலைகளும் தத்துவ சேட்டைகளும் ஒடுங்கும்படியாக என்னுடைய அறிவீனத்தை நீக்கி, என்னுள்ளே ஞானத்தின் ஒளி பரவ; உன்னுடைய நல்ல திருவருளைப் புகட்டி, உன்னுடைய இரண்டு திருவடிகளையும் அருளும் நாள் ஒன்று உண்டோ? (உனது திருவடிகளை இப்போதே அருள வேண்டும்.)

  படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஓர் பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை அருள் இளையோனே... எல்லாவற்றையும் படைப்பதையும், அவற்றைத் தொழிற்படுத்திக் காப்பதையும், நடராஜப் பெருமானோடு சேர்ந்து அழிப்பதையும் செய்கின்றவளும்; பச்சை நிறத்தவளும்; ஒப்பற்ற பரவெளியின் உச்சியில் நடனமாடுபவளுமான உமாதேவியார் ஈன்ற இளையவனே!

  பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே... பகைகொண்டு வந்த அசுரர்கள் யமலோகத்தை அடையும்படியாகப் போரிட்டவரும்; சக்கரத்தையும் சங்கையும் ஏந்திய திருக்கரத்து அழகரும்; பூமியான பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமான திருமாலின் மருகனே!

  கடல் திடுக்கிட அசுரர்கள் முறிபட கொளுத் திசைக் கிரி பொடிபட சுடர் அயில் திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம் வரு மயில் வீரா... கடல் திடுக்கிடவும்; அசுரர்கள் சிதறியோடவும்; எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் பொடியாகவும் கதிர்வேலை வீசி (அண்டத்தை) ஒருநொடியில் வலம் வந்த மயில் வீரனே!

  தினைப் புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தொடு சசி மகளொடு புகழ் திருத்தணிப் பதி மலை மிசை நிலை பெறு(ம்) பெருமாளே....தினைப்புனத்தைக் காத்தவளும்; மலையை ஒத்த மார்பகங்களைக் கொண்டவளும் குறத்தியும் நன்முத்துமான வள்ளியுடனும்;  இந்திராணியின் மகளான தேவாயுடனனும், புகழ்பெற்ற திருத்தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

  சுருக்க உரை

  உலகம் அனைத்தையும் படைத்தும் காத்தும் நடராசப் பெருமானோடு சேர்ந்து அழித்தும் அருளுபவளும்; மரகத நிறத்தவளும்; ஒப்பற்ற பரவெளியின் உச்சியில் நடனமாடுபவளுமான உமாதேவியின் இளைய மகனே! பகையோடு வந்த அசுரர்கள் யமலோகத்தை அடையும்படியாகப் போரிட்டவரும்; சங்கு சக்கரத்தை ஏந்திய அழகரும்; பூமியாகிய பாண்டத்தைத் தனது வயிற்றிலே அடக்கியவரும் நெடியவருமான திருமாலின் மருகனே!  கடல் திடுக்கிடும்படியாகவும்; அசுரர்கள் சிதறியோடும்படியாகவும் எட்டுத் திசைகளிலுமுள்ள குலபர்வதங்கள் பொடிபடும்படியாகவும் கதிர்வேலை வீசியவனே! உலகை ஒருநொடியில் வலம்வந்த மயில்வீரனே! தினைப்புனத்தைக் காத்தவளும் அழகிய மார்பகத்தைக் கொண்டவளும் குறமங்கையுமான வள்ளியுடனும்; சசிதேவியாகிய இந்திராணியின் மகளான தேவானையுடனும் திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

  அறிவற்ற மூடர்களும்; கபடிகளும்; தந்திரவாதிகளும்; பிணக்கம் கொள்பவர்களும்; பயனிலிகளும்; குற்றம் நிறைந்தவர்களும்; பொருளைப் பறிக்கின்றவர்களும்; நண்பர்களைபோல நடிக்கின்றவர்களும்; மார்பகத்தை விலைபேசுபவர்களுமான பெண்களுடைய வலையில் நான் வீழாமலும்; (நற்கதிக்கான பாதையை) அடைத்தவர்களும்; சரசமாடுபவர்களும்; துன்பத்தைத் தருபவர்களும், பவளம் போன்ற ஒளியைப் படைத்தவர்களுமான பெண்களை உடன் அழைத்துக்கொண்டு, சக்கரவாள கிரியால் சூழப்பட்ட இந்த பூமியில் அவர்களோடு வீணே உழலுகின்ற என்னுடைய ஜாக்கிரதாதி மலங்களும் தத்துவ சேட்டைகளும் ஆணவ மலமும் நீங்கப் பெற உனது திருவருளை ஊட்டி, உன்னுடைய திருவடிகளை எனக்கு அளிக்கின்ற நாளும் உண்டோ? (உனது திருவடிகளை அடியேனுக்கு இப்போதே அளித்தருள வேண்டும்.)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai