'தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

கேலிக்கூத்து
தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரியானதே. அவர்களுக்குத் திரும்பவும் போட்டியிட வாய்ப்பளித்தால் மீண்டும் தவறு செய்ய மக்களே அனுமதி அளித்தது போலாகிவிடும். அவர்கள் மக்கள் மத்தியில் வரவே அச்சமும், கூச்சமும் பட வேண்டும். இன்று தண்டனை பெற்றவர்களே வாக்குக் கேட்கவும் தயாராக உள்ளனர் என்பது இந்திய அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்குவதாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

சிவப்புக் கம்பளம்
இக்கருத்து சரியே. நம்நாடு லஞ்சம், ஊழல், சுயநலம் எல்லாம் மிகுந்த தேசமாகி விட்டது. பழையபடி நீதி, நேர்மை, நியாயம், வாய்மை மிக்க நாடாகத் திகழ கடுமையான சட்டங்கள் தேவை. அந்த அடிப்படையில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்நாள் தடை தேவைதான். இதனைக் கண்டிப்பாக செயல்படுத்தி பொதுநலம் நாடும் இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களைஅரசியலுக்கு வரவேற்போம்.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
இராஜபாளையம்.

சரியல்ல
மக்கள் பிரதிநிதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் குற்றம் புரிந்ததனால் தண்டனை பெறுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர்கள் மனம் திருந்தி சமுதாயத்தில் நல்ல முறையில் பொது நலப்பணிகள் ஆற்ற விரும்பலாம். அதுபோன்றதொரு நிலையில் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது சரியா? அவர்கள் சிறந்த தலைவராகவும் உருவாகக்கூடும். எனவே தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியல்ல.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

கடிவாளம்
இந்தியாவில் தகுதி நிர்ணயம் செய்யப்படாத ஒரு பதவி உண்டென்றால் அது மக்கள் பிரதிநிதி பதவியே ஆகும். மக்களின் மனசாட்சிகளாக செயல்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் மனசாட்சியற்றவர்களாக மாற்றம் கொள்கின்றனர். பணம், பதவி, அதிகாரம் இவற்றால் அவர்கள் அப்படி ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட நச்சுக்காளான்கள் மீண்டும் மீண்டும் முளைக்காதிருக்கப் போட வேண்டிய கடிவாளம்தான் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

ஜனநாயகம்
இந்த நடைமுறை ஜனநாயகத்தை வலுவடையச் செய்யும். அரசாங்க ஊழியனைப்போல சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பல பெற்று சட்டத்திற்குட்பட்ட நிலையில் செயல்பட வேண்டியவர்கள் அவ்வாறு செயல்படாது குற்றச்செயல் புரிந்து தண்டனை வேறு பெற்றால் அவர்களால் எப்படி மக்களுக்கு நேர்மையாகப் பணியாற்ற முடியும்? எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற மதிப்புமிக்க பதவிகள் ஒருவருக்கு ஒரு முறைதான் என்று மரபு இருந்தால் நேர்மையாகப் பணியாற்ற எண்ணுவார்கள்.
டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.

கலாசாரம்
இக்கருத்து சரியானது. தண்டனை பெற்ற எல்லாருமே திருந்திவிடுவார்கள் என்பது நிச்சயமில்லை. மேலும் அரசியல்வாதிகள் தண்டனை அனுபவித்தாலும் தாம் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. மாறாக, அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள். எனவே அரசியல் தூய்மைப்பட வேண்டுமானால் குற்றவாளிகளுக்கு நிரந்தரத் தடை கண்டிப்பாக வேண்டும். இதனால் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள். தூய்மையான அரசியல் கலாசாரம் உருவாகும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

அளவுகோல்
மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை கிடைத்தாலும், குற்றத்தின் தன்மையைப் பொருத்து இரண்டு அல்லது மூன்று தேர்தல்களில் நிற்க தடை விதிக்கலாம். சாதாரண சட்டமீறல்களுக்காகக் குறைந்த அளவு தண்டனை பெற்றவர்களை இதே அளவுகோலை வைத்துப் பார்க்கக் கூடாது. தேர்தலில் போட்டியிடும் உரிமை எல்லாக் குடிமகனுக்கும் இருக்கிறது. எனவே தண்டனை பெற்ற அனைவருக்கும் வாழ்நாள் தேர்தல் தடை விதிக்க வேண்டும் என்பது சரியல்ல.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

முன்னுதாரணம்
மக்கள் பிரதிநிதி என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர். அவரே தவறு செய்தால், அதனால் தண்டனை கிடைக்கிறது. அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தப்பவும் தனது பெயரையும் புகழையும் காத்துக்கொள்ளவும் பணம் மற்றும் அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார். இதனால் லஞ்ச, ஊழல் உருவாகிறது. தூய்மையான அரசியல் உருவாக, தண்டனை பெற்ற பிரதிநிதிகளுக்கு வாழ்நாள் தடைவிதிப்பது சரியே.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

அறமல்ல
தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என்பது சரியே. தன்னலத் துறப்பு மிக்கவர்களே பொதுவாழ்வில் தூய்மையோடும், நேர்மையோடும் நடப்பார்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவார்கள். பதவிக்கு வரும்முன் கண்ணியம் மிக்கவர்களைப்போல் பேசுவது, பதவிக்கு வந்த பின்பு நடந்து கொள்ளும் விதம் வேறாக இருப்பது அறமல்ல. தவறிழைத்தவர்கள் மீண்டும் வருவதற்கு இடமளித்துவிடக் கூடாது.
பொன் நடேசன்,
சின்ன அய்யம்பாளையம்.

துயரம்
தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்தவர்கள். இவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், பொதுமக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாவார்கள். எனவே, அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியே. மேலும் இந்த தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதியின் மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென்று தடை விதிப்பது மிகவும் சிறப்பானது.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

நியாயமல்ல
தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் வருந்துவதற்கும் திருந்துவதற்கும் ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அவர்களை ஒரேயடியாக அரசியலைவிட்டே ஒதுக்கிவிடுவது நியாயமல்ல. அவர்கள் ஈடுபட்ட குற்றச் செயல்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள்தடைவிதிப்பது சரியாக இருக்கும். நிரந்தரத் தடை வேண்டாம். ஒருவேளை அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவது நிரூபணமானால் அவர்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கலாம்.
கடல் நாகராஜன், கடலூர்.

கருவி
பதவி என்பது பொதுமக்களுக்குத் தொண்டாற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கருவியே. பதவிக்கு வருவோர் மிக எளிமையாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எளிமைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. காந்தியடிகள் தன்னைப் 'பங்கி' என்றே அழைத்துக் கொண்டார். சுயநலத்தாலும், லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட கட்டாயம் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.
கி. பாஷ்யம், சலுப்பை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com