'மரணத்திற்குப்பின் கண்தானம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'மரணத்திற்குப்பின் கண்தானம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

சரியல்ல
மரணத்திற்குப் பின் கண் தானம் அளிப்பது கட்டாயமாக்குவது என்ற கருத்து சரியல்ல. எதையும் கட்டாயமாக்குவது என்பது ஒருவரது சுதந்திரத்தை பறிப்பதாகும். இன்றைய காலகட்டத்தில் கண்தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், மரணத்திற்குப் பின் கண் தானம், உடல் தானம், உடலுறுப்பு தானம் கொடுக்க பலரும் முன்வருகின்றனர். ஆகவே மனமுவந்து கண் தானம் அளிப்பதே சிறந்தது. அதை கட்டாயமாக்குவது என்பது சரியல்ல!
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

விருப்பம்
கண் தானத்தை ஊக்கப்படுத்துவது வரவேற்புக்குரியதுதான். ஆனால், தானம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின்பாற்பட்டது. அதனைக் கட்டாயப்படுத்துவது மிரட்டிப் பறிப்பதற்கு ஒப்பாகும். மரணம் நிகழ்ந்த வீடு எப்போதுமே ஒருவித பதற்றமும் துயரமும் நிறைந்ததாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் இறந்தவர் உடலிலிருந்து ஓர் உறுப்பை எடுப்பதென்பது சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். விருப்பம் உள்ளோர் வழங்கட்டும். வாழ்த்துவோம். அதனைக் கட்டாயமாக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
சு. முருகேசன், ராஜக்கமங்கலம்.

புது வாழ்வு
மரணத்திற்குப் பின் கண் தானம் வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியே. கண்கள் மட்டுமல்லாது பிற உடல் உறுப்புகளை தானம் செய்வதையும் கட்டாயப்படுத்தலாம். இதனால் கண்ணிழந்தவர்கள் மட்டுமல்லாது வேறு பல உறுப்புகளை இழந்தவர்களும் பலனடைவார்கள். மக்களுக்கு மருத்துவச் செலவுகளும் பெருமளவு குறையும். இறந்த பிறகு தானே உறுப்பு எடுக்கப்படுகிறது? எனவே எல்லோரும் இதனை வரவேற்பார்கள். ஒவ்வொருவரும் மற்றவருக்குப் புது வாழ்வு கிடைக்கஉதவலாமே.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

விழிப்புணர்வு
கட்டாயப்படுத்துவது பலன் தராது. இறந்துபோன அனைவரும் கண் தானம் செய்தால் தேவைக்கு அதிகமாக கண்கள் சேர்ந்துவிடும். தேவைப்பட்ட அனைவருக்கும் கண் பொருத்திய பின் மீதியுள்ள கண்களை என்ன செய்வது? மேலும் கிராமங்களில் இறந்தவரின் உடல் மீது கத்தி படுவதை இறந்தவருக்குச் செய்யும் அவமரியாதையாக எண்ணுவார்கள். விபத்தில் இறந்தவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதையே அரைமனதுடன்தான் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் இறந்தவர் கண்ணை எடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய வரும். மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படச் செய்து அவர்களே விரும்பி கண் தானம் செய்யும்படி செய்வதே சிறந்த வழி.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

வெறுப்பு
தனது மறைவிற்குப் பின்னும் தனது கண்கள் இந்த உலகைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதால்தான் தற்போது பலரும் கண் தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பது உண்மையே. இந்த ஆர்வத்தை அதிகரிக்கும் செயலை மட்டும் அரசும், பொதுநல அமைப்புகளும், ஊடகங்களும் செய்தால் போதும். மக்கள் மனமுவந்து கண் தானம் செய்ய முன்வருவார்கள். அதுதான் சிறப்பு. அப்படிச் செய்யாமல் கட்டாயப்படுத்தினால் கண் தானத்தின் மீதே வெறுப்பு வந்து விடும்.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

எதிர் விளைவு
தானாக முன்வந்து தருவதுதான் தானம். அதனைக் கட்டாயமாக்கினால் தனிமனித உரிமையில் தலையிட்டதாகும். இரத்த தானத்திலிருந்து கண் தானமாகி இன்று உடல் தானத்திற்குத் தயாராகி விட்டோம். எதற்கும் பயன்படாத பொருள் ஒன்று உண்டென்றால் அது மனித உடல்தான். உடல் தானம், குறிப்பாக, கண் தானம் செய்ய விரும்புபவரின் விழித்திரை அவர் இறந்த எத்தனை மணி நேரத்தில் அகற்றினால் பலன் உண்டு போன்ற கண் தான உண்மைகளை பிரசாரம் மூலம் அரசு மேற்கொண்டால் பலனுண்டு. அதைவிடுத்து கட்டாயமாக்குவது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

இடைவெளி
விழி வேண்டி காத்திருப்போர் பட்டியல் ஒருபுறம் கூடிக்கொண்டே இருக்கிறது. அதுபோலவே, கண் தானம் குறித்த விழிப்புணர்வும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அந்த இடைவெளி முழுமையடையவில்லை. நாம் எல்லாருமே கண் தானம் வழங்கி விழியற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம். குடும்ப உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்புடன் விருப்பத்துடன் கண் தானம் வழங்கப்பட வேண்டும். தானம் என்பது தானாக விரும்பி செய்யப்பட வேண்டுமே தவிர அது கட்டாயமாக்கப்படக் கூடாது.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

பற்றாக்குறை
இந்தக் கருத்து மிகவும் சரியே. அனைவருமே மரணத்திற்குப் பின் தங்கள் கண்களைப் பிறருக்குப் பயன்படும் விதத்தில் தானமாக அளிப்பது நன்று. இதனால் கண்கள் கிடைக்கவில்லை என்ற பற்றாக்குறை தீரும். பலருக்கு மறுவாழ்வு கிட்டும். தானத்தில் சிறந்தது கண் தானம். ஒரு மனிதன் தனது இரு கண்களால் இருவருக்குப் பார்வை தரலாம். பரந்த மனதுடன் உற்றார், உறவினரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஒத்துழைத்தால் நிச்சயம் நல்ல பலன் கிட்டும்.
பைரவி, புதுச்சேரி.

பொருத்தமல்ல
மரணத்திற்குப் பின் கண் தானம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து உடன்பாடானதாக தோன்றவில்லை. சமீபகாலமாக எல்லா விஷயங்களும் 'கட்டாயம்' 'கட்டாயம்' என்று திணித்து மக்களின் மனக்கசப்புக்கு ஆளாகி விட்டார்கள் ஆட்சியாளர்கள். தனது உடல் உறுப்புகளை தானம் செய்வது ஒருவரின் சொந்த விருப்பமாகும். இறந்த பிறகு கண் தானம் செய்வது, இறந்தவரின் குடும்பத்தினர் சம்மதம் இருந்தால்தான் சாத்தியமாகும். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது ஜனநாயக நடைமுறைக்குப் பொருத்தமல்ல.
கே. அசோகன், மேட்டுப்பாளையம்.

கொடை
ஒருவர், தான் இறந்தபின் கண் தானம் செய்ய உயிருடன் இருக்கும்போதே விருப்பம் தெரிவிப்பதும் அல்லது ஒருவர் இறந்த பின் அவரது கண்களை எடுத்துக்கொள்ள அவருடைய குடும்பத்தினர் ஒப்புதல் அளிப்பதும் விழிப்புணர்வு காரணமாக இன்று அதிகரித்துவிட்டது. எனவே இதனைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது தேவையற்றது. 'அரிமா சங்கம்' போன்ற இயக்கங்களும் கண்தானம் வழங்குவது குறித்து பிரசாரம் செய்து வருகின்றன. அது மட்டுமல்ல, கண் தானம் அளித்தோரின் குடும்பங்களை கௌரவித்தும் வருகின்றன. அதனால், விரும்பி வழங்கும் தானத்தைக் கட்டாயமாக்கி அக்கொடையை கொச்சைப்படுத்த வேண்டாமே!
அ. கருப்பையா, பொன்னமராவதி.

உண்மை
கண் தானத்தைக் கட்டாயமாக்குவது சரியல்ல. கண் தானம் அவசியம்தான். இன்று விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கில் ஒரு பங்கு கண் தானம் மட்டுமே கிடைக்கிறது என்பது உண்மை. சில சமூகத்தினரிடையே இறந்த பின் எந்த உறுப்பையும் தானம் வழங்கும் வழக்கமின்மையால் கண் தானம் பெற இயலவில்லை. கண் தானத்தைப் பெறுவதில் தமிழகத்தில் அரிமா சங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. இறந்து விட்டவரின் கண்களை தானம் செய்வதால் பார்வையற்றவர்களுக்குப் பார்வை கிடைக்கும் என்பதை நாம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சட்டத்தால் சாதிக்க இயலாது.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

வெளிச்சம்
மரணத்திற்குப் பின் கண் தானம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வரவேற்கக்கூடியதே. இறந்த பின் யாருக்கும் பயனளிக்காமல் மண்ணோடு மண்ணாக மாறும் கண்ணை தானம் கொடுப்பது வரவேற்புக்குரிய முடிவே. எத்தனையோ பேர் பிறவியிலேயே பார்வையற்றவர்களாக இந்த உலகத்தையே காண முடியாதவர்களாக இருக்கிறார்கள். இறந்தவர்கள் கண்களை அப்பபடிப்பட்டவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வில் வெளிச்சம் கிடைக்குமல்லவா?
கூத்தப்பாடி பழனி, தருமபுரி.

மன உணர்வு
இது தவறான கருத்து. கண்களை தானம் அளிப்பது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமைக்கு எதிரானது. அதற்குப் பதிலாக, கண் தானம் பற்றிய அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களாகவே முன் வந்து கண் தானம் அளிக்க ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். இரத்த தானமாக இருந்தாலும், கண் தானமாக இருந்தாலும், பிற உடலுறுப்புகளின் தானமாக இருந்தாலும் அதற்கு உடன்படுவது அவரவர்களின் மன உணர்வைப் பொறுத்தது.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com