கோட்ஸேதான் முதல் இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனின் கருத்து சரிதானா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கோட்ஸேதான் முதல் இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனின் கருத்து சரிதானா?

சரி!
கோட்ஸேதான் முதல் இந்து தீவிரவாதி எனக் கூறிய கமல்ஹாசனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியே. இதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்ன இருக்கிறது? வரலாற்று உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார். மகாத்மா காந்தியைக் குறை சொன்னால்கூட மனதார ஏற்றுக் கொண்டு விடுவார்கள் போல இருக்கிறது. ஆனால், குற்றவாளியை குற்றவாளி எனச் சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே ஏன்?
ம.து.மோதிலால், மதுரை.

சரியல்ல!
கமல்ஹாசன் கூறியுள்ளது சரியல்ல. அரசியல் செல்வாக்கையும், வாக்கையும் கருத்தில் கொண்டு நிலை மறந்து உளறிவிட்டார். அவர் பேசியுள்ள இடம் இந்தக் கருத்தையே வலுப்படுத்துகிறது. உலகச் சமயங்கள் அனைத்தும் அறமார்க்கம், அமைதி வாழ்வு இரண்டை மட்டுமே பேசுகின்றன. அஹிம்சை, வன்முறை ஆகியவை சமயங்களுக்கு அப்பாற்பட்டவை. கோட்ஸே ஒரு வெறியர், கொலைகாரர்; இந்துவாகப் பிறந்துவிட்டார் என்ற ஒரு காரணத்தால் மட்டும் அவரை இந்து தீவிரவாதி என்று கூறுவது தவறு. கொலைகாரர்களைச் சமயங்களோடு தொடர்புபடுத்தக் கூடாது.
ச.கந்தசாமி, தூத்துக்குடி.

வாதம் சரி, ஆனால்...
தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் ஒடுக்கப்பட வேண்டியதில் யாருக்கும் மாறுபாடான கருத்து கிடையாது. கோட்ஸேவை தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது சரியான வாதம். ஆனால், அதில் இனத்தையும் சேர்த்துக் கூறிய விதம் கண்டிக்கத்தக்கது. அந்த வார்த்தை இந்துக்களின் மனதில் ஒரு நெருடலை உண்டாக்கியது.
ப.அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

விஷமத்தனமானது!
அரசியல் கொலைகள் என்பது அந்தந்த காலகட்டங்களில் அரசியல் சூழலுக்கேற்ப நடைபெறுவது என்றாலும் அதை ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. ஒரு சீக்கியர் இந்திரா காந்தியைக் கொன்றார் என்பதற்காக சீக்கியர்களை தீவிரவாதிகள் எனக் கூற முடியாது. கமல்ஹாசனின் இந்தக் கருத்து விஷமத்தனமானது. பிறரைப் புண்படுத்தும் நோக்குடையது. இது சரியல்ல.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

காலம் அறியாமல்...
சொன்னது சரிதான். அதற்கான நேரம் இதுவல்ல என்பது அவருக்குப் புரியவில்லை. தேர்தல் முடிந்த பின்பு கூறியிருக்கலாம். முதல் இந்து  தீவிரவாதி என்று ஓர் இந்து கூறியது, மற்ற மதத்தவர்களுக்கு கமல்ஹாசனின் கருத்து மகிழ்ச்சியை வரவழைத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
சு.ஆறுமுகம், கழுகுமலை.

ஏற்க முடியாது!
முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் கூறியுள்ளதை நிச்சயம் ஏற்க முடியாது. தீவிரவாதம் எந்த உருவத்தில், எந்த மதத்தில் இருந்து புறப்பட்டு வந்தாலும் அதை வேரோடு அழிக்க வேண்டும். கமல்ஹாசன் அமெரிக்கா சென்றபோது, அவர் பெயரை வைத்து தீவிரவாதியா, முஸ்லிமா என போலீஸ் பலமுறை அவரிடம் கேட்டதை வசதியாக மறந்து விட்டாரே.
என்.காளிதாஸ், சிதம்பரம்.

சரியானதே!
கமல்ஹாசனின் கருத்து மிகச் சரியானதே. கோட்ஸே ஒரு தீவிர இந்து. மகாத்மா காந்தி தேசத் தந்தை எனப் போற்றப்படுவர். அந்த தேசத் தந்தையை கொல்லும் அளவுக்கு தீவிர இந்து மதப்பற்றுக் கொண்டதனால்தானே காந்தியை கோட்ஸே கொன்றார். அதைத்தானே தான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்ற நூலில் விளக்கினார்.
பி.சுந்தரம், வெண்ணந்தூர்.

வாபஸ் பெற வேண்டும்!
கமல்ஹாசன் அண்மையில் நாதுராம் கோட்ஸே பற்றி குறிப்பிட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவையே பதற்றத்துக்குள்ளாக்கி விட்டது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயை முதல் இந்து தீவிரவாதி என்று கூறியதை கமல்ஹாசன் வாபஸ் பெற வேண்டும். மன்னிப்பு கோர வேண்டும். எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும் திரும்பத் திரும்ப சரித்திர உண்மை என்றும் சொல்கிறார். அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாக நினைத்தால் தற்போதைக்கு அதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி. கமல்ஹாசன் அரசியலில் நேர்மை, ஊழலற்ற தன்மையில் இருப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவரும் இந்து மதத்துக்கு எதிராகத்தான் அரசியல் செய்யப்போவது தெளிவாகிறது.
பி.துரை, காட்பாடி.

பயங்கரவாதிக்கு ஏது மதம்?
கமல்ஹாசனின் கருத்து தவறானது. பயங்கரவாதிக்கு மதம் கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. கோட்ஸேயை பயங்கரவாதி, தீவிரவாதி, கொலைகாரன் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். அது தவறில்லை. ஆனால், மதம் சார்ந்த அடைமொழியோடு அழைப்பதுதான் பிரச்னையே.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

வரலாறு தெரியாமல்...
இந்து என்ற சொல் நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சொல். அது ஒரு மதத்துக்கான அடையாளச் சொல் அல்ல. இந்து என்ற சொல்லை உயர் ஜாதியினர் தங்களை அடையாளப்படுத்தும் சொல்லாக ஏற்றுக் கொண்டார்கள். மகாத்மா காந்தியைச் சுட்ட கோட்ஸே உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் வரலாறு தெரிந்துதான் கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசனை எதிர்ப்பவர்கள்தான், வரலாறு முழுமையாகத் தெரியாமல் எதிர்க்கிறார்கள்.
அதியமான், ஆதனூர்.

முதல் என்ன, கடைசி என்ன?
ஆட்சி செய்வோருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோரில் மிதவாதிகளும் உண்டு; தீவிரவாதிகளும் உண்டு. சுதந்திரப் போராட்டத்தின்போது மிதவாதப் போக்கை மகாத்மா காந்தி கைக்கொண்டபோது, தீவிரவாதத் தன்மையுடன் செயல்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே. எனினும் மகாத்மா காந்தியைச் சுட்ட கோட்ஸே, முதல் இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறுவது பொருந்தாது. தீவிரவாதத்தில் இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆயுதத்தைக் கையாளும் எந்த மதத்தினரும் தீவிரவாதிகள்தான். இதில் முதல் என்ன, கடைசி என்ன?
அ.கருப்பையா, பொன்னமராவதி.

சுயநலமே காரணம்!
கமல்ஹாசனின் கருத்து சரித்திர உண்மை. எனினும், அந்தக் கருத்தை அரவக்குறிச்சியில் அவர் பேசியிருக்கக் கூடாது. ஏனெனில், அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற சுயநலப் போக்கால் இப்படிப் பேசினார் என்ற எதிரணியினர் கருத்தைப் புறந்தள்ள முடியவில்லை. புதிதாக கட்சி தொடங்கி, வளர்ந்து வரும் அரசியல் தலைவர் இப்படிப் பேசியது சரி அல்ல.
பிரேமா அரவிந்தன், 
பட்டுக்கோட்டை.

அரசியலுக்காக...
கமல்ஹாசனின் கருத்து சரியானது அல்ல. அரசியலுக்காக தேர்தல் நேரத்தில் அள்ளிக் கொட்டிய தீப்பொறிகள். எனவே, அவரது கருத்தை ஒரு விவாதப் பொருளாக விவாதிப்பது அறிவுடைமை ஆகாது.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தேவையற்றது!
கமல்ஹாசனின் வாதம் தேவையற்றது. அதுவும் தேர்தல் பிரசாரத்தில், இஸ்லாமிய மக்களிடையே நடைபெற்ற பிரசாரத்தில் கோட்ஸே குறித்த கருத்தை கமல்ஹாசன் பேசியது மிகவும் தேவையற்றது. நடிகர் என்ற பாதையிலிருந்து விலகி, அரசியல்வாதி என்ற பாதையில் கமல்ஹாசன் பிரவேசித்துள்ளதால், சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

வாக்குகளைப் பெற...
மதப்பற்று வேறு; மதவெறி வேறு. வெறியாக பற்று மாறிவிட்டால், மதக் கலவரங்களும், சண்டைகளும் ஏற்பட்டு நாடே சுடுகாடாகி விடும். மத  வெறி பிடித்த தீவிரவாதிகள், அனைத்து மதங்களிலும் உண்டு. அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துவதே நெறியாகும். கோட்ஸே முதல் இந்து தீவிரவாதி என முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடத்தில் கமல்ஹாசன் பேசியது, தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறும் தன்னல நோக்கமே ஆகும்.
அ.சிவராமசேது, திருமுதுகுன்றம்.

=

தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது 37 மக்களவை இடங்களை வென்ற திமுக கூட்டணியா, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட அதிமுகவா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com