தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது 37 மக்களவை இடங்களை வென்ற திமுக கூட்டணியா, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட அதிமுகவா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது 37 மக்களவை இடங்களை வென்ற திமுக கூட்டணியா, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட அதிமுகவா

வெற்றி பெற்றது யார்?
தமிழக மக்களின் மன நிலையை மத்திய அரசுக்குத் தைரியமாகத் தெரிவிக்கவும், தமிழகத்தின் தேவைகளை, உரிமைகளை வாதாடி திமுக கூட்டணியால் பெற முடியும் என்றும் மக்கள் நம்பினர். எனவே, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த 37 உறுப்பினர்களை  வாக்காளர்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டாண்டுகளே உள்ளன. இந்த நிலையில் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து குழப்பமான சூழலை ஏற்படுத்த மக்கள் விரும்பவில்லை. அதிமுக அரசு மக்களுக்குச் செய்த அளவு செய்யட்டும். இரண்டாண்டுகள்தானே; நீடிக்கட்டும் என்பதுதான் மக்களின் எண்ணம். எனவே, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் சரியான தேர்வு செய்த வாக்காளப் பெருமக்களே வெற்றி பெற்றவர் ஆவர்; திமுக கூட்டணியோ அல்லது அதிமுகவோ அல்ல.
ச.கிருஷ்ணசாமி, மதுரை.

திமுக கூட்டணிதான்...
தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது 37 மக்களவை இடங்களை வென்ற திமுக கூட்டணியே. ஏனென்றால் இப்போது நடந்து முடிந்தது மக்களவைத் தேர்தல்; இது இடைத் தேர்தல் அல்ல; பொதுத் தேர்தல். எனவே, வென்றது திமுக கூட்டணி என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
ம.சு.மோதிலால், மதுரை.

சோதனைக் களம்...
தேர்தலில் மக்களவைத் தொகுதிகளில் 37 இடங்களைப் பெற்ற திமுக கூட்டணியும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட அதிமுகவும் வெற்றியில் தோல்வி, தோல்வியில் வெற்றி கண்டுள்ளன என்பதுதான் உண்மை. திமுக கூட்டணியினர் 37 இடங்களில் வெற்றி பெற்றதை உற்சாகமாகக் கொண்டாடினாலும், மக்களவையில் குரல் கொடுத்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய முடியுமே தவிர, அவர்கள் மத்திய அரசிடம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இதேபோன்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டாலும் அவர்களின் சட்டப் பேரவை உறுப்பினர்களில் சிலர் தங்கள் நிலைப்பாட்டில் தடுமாறிக் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாவிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சோதனைக் களத்தில் அதிமுக நீச்சலடிக்க வேண்டியிருக்கும்.
எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

எது சிறப்பு?
மக்களவைத் தேர்தலில் திமுக  கூட்டணியின் வெற்றி, இமாலய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. மக்கள் மத்தியில் இடைவிடாது தீவிரப் பிரசாரம் செய்து அதிக அளவில் மக்களைச் சந்தித்த ஸ்டாலினை எதிர்த்து மிகுந்த அரசியல் செல்வாக்கு இல்லாத எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்ற பெற்ற ஒன்பது தொகுதிகளின் வெற்றி கவனிக்கத்தக்கது. 37 மக்களவைத் தொகுதிகளில் திமுகவைத் தெர்ந்தெடுத்த மக்கள், இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் 13-இல் மட்டும் திமுகவுக்கு வெற்றியை அளித்துள்ளனர். மேலும், 37 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றும் பலன் இல்லை. சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றாலும், ஆட்சியைக் காப்பாற்றப் பயன்பட்டது; எனவே, அதுதான் சிறந்தது.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஆறுதல் பரிசு!
மக்களவைத் தேர்தலில் 37  இடங்களை வென்ற திமுகவின் வெற்றியே சிறந்தது. ஏற்கெனவே இருந்த இடங்களை இழந்துள்ளது அதிமுக. இருப்பதை இழப்பதற்குப் பெயரும் தோல்விதான். ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது ஆறுதல் பரிசு போன்றதுதான். 
எழில் சோம. பொன்னுசாமி, 
சென்னை.

அதிமுகவுக்குத்தான்...
தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட அதிமுக என்பதில் சந்தேகமில்லை. கூட்டணியாகத்தான் 37 மக்களவை இடங்களை திமுக வென்றுள்ளது. ஆனால், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் குறைந்த வெற்றியே ஆயினும் நிறைந்த இடத்தை அதிமுக வென்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக வெற்றியை சாதனை எனக் கருதினாலும், இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்வது யார் என்று வினா எழுப்பினால், அதற்கு பதில், அதிமுகதான்.
உஷா முத்துராமன், மதுரை.

உள்ளங்கை நெல்லிக்கனி!
தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது, 37 மக்களவை இடங்களை வென்ற திமுக கூட்டணிதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.  கூட்டணிக் கட்சிகளின் நம்பகத்தன்மையுடன் கூடிய உழைப்பு திமுகவின் வெற்றிக்குக் காரணம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட அதிமுக மீண்டும் சோதனைக் களத்தில்தான் உள்ளது.
ச.கண்ணபிரான், 
திருநெல்வேலி.

காரணம் என்ன?
வெற்றி என்னவோ திமுகவுக்குத்தான். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை மக்கள் வழங்கியதற்கு, அடிக்கடி அரசாங்கம் மாறுவதை விரும்பவில்லை என்பதே காரணம்.  யார் ஆட்சி செய்தால் என்ன, நமக்கு என்ன செய்துவிடப் போகிறார்கள்? மீதமுள்ள ஆட்சிக் காலத்துக்கு இவர்களே இருந்துவிட்டுப் போகட்டும். அடுத்த சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் எனப் பெரும்பான்மையான வாக்காளர் முடிவு செய்துவிட்டனர்.
க.சுல்தான் ஸலாஹீத்தீன் , 
காயல்பட்டினம்.

கவிழ்க்கும் எண்ணம் இல்லை!
திமுக பெற்ற வெற்றி, மத்தியில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் தமிழக விரோதப் போக்குக்கு எதிரான வெற்றி. அதேசமயம், அதிமுக பெற்ற வெற்றி,  யார் பேச்சைக் கேட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை இடையில் தமிழக வாக்காளர்கள் கவிழ்க்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்கங்களைத் தவிர்த்து யாரும் வெற்றி பெற  முடியாது என்பதை உரக்கக் கூறியுள்ளது திமுக, அதிமுகவின் வெற்றி.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

முதல்வர் கனவு?
அதிமுகவுக்குத்தான் வெற்றி.  இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என ஸ்டாலின் பிரசாரம் செய்தார். ஆக, ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற திட்டம் தோல்வி. மக்களவைத் தேர்தலில் கணிசமான அளவு வெற்றி பெற்ற பின்னும் ஸ்டாலினின்  முதல்வர் கனவு பகல் கனவானது திமுகவுக்குத் தோல்வியே.
எஸ்.முருகானந்தம், தாழக்குடி.

திமுகவுக்கே வெற்றி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கே வெற்றி. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா, வன்னிய சமுதாயத்தினர் வாக்குகளைப் பெற பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா.  என வலுவான கூட்டணி என்று பேசிவந்த முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் திமுக சகாப்தம் முடியப் போகிறது என்றனர். ஆளும் கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி இடைத்தேர்தல்களில் எல்லா இடங்களிலும் வென்று விடலாம் என்று எண்ணியபோதிலும், 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க
வைத்துக் கொண்ட அதிமுகவைவிட திமுக கூட்டணிக்கே வெற்றி.
பி.துரை, காட்பாடி.

பின்னடைவுதான்!
ராகுல் காந்திதான் வருங்காலப் பிரதமர் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் கருதியும், தன் இடைவிடாத தேர்தல் பரப்புரைகள் மூலமும் திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்தார். காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய திமுக கூட்டணி 37 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியது.  பாஜக மீது தமிழக மக்களுக்கு  இருந்த அதிருப்தியினால்தான் இத்தகைய வெற்றி கிடைத்தது.பலத்த கூட்டணியை ராஜதந்திரத்துடன் முன்கூட்டியே அதிமுக தலைமை  அமைத்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றும்கூட, ஸ்டாலினின் சூளுரை  நிறைவேறாதது அதற்குப் பின்னடைவேயாகும்.
அ.சிவராமசேது, 
திருமுதுகுன்றம்.

வென்றது வாக்காளர்களே!
37 திமுக கூட்டணி உறுப்பினர்கள் மக்களவைக்குச் சென்று, ஆளுங்கட்சிக்கு எதிராக கூச்சல், கோஷம் என்று ஐந்து ஆண்டுகள் இருக்கையில் அமர்ந்து -எழுந்து செல்வதற்கும் தமிழகத்தில், அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்களையும், மிகத்  தெளிவாக தமிழக வாக்காளர்கள் தீர்ப்பளித்துள்ளனர். எனவே, வென்றது தமிழக வாக்காளர்கள்தான்.
இ.ராஜு நரசிம்மன், சென்னை.

=
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை-சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரியா, தவறா?
எஸ்.விக்னேஷ், சென்னை.

இது குறித்த கருத்துகளை வாசகர்கள் பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 இமெயில்: edit.dinamani@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com