நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது சரியா

வாடிக்கைதான்!
இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், தனிநபர் விமர்சனம் செய்துகொள்வதும் வாடிக்கையானதுதான். இதில் யார் பேசியது குற்றம் என எப்படித் தீர்மானிக்க முடியும்? வாக்குகள் கிடைத்ததும் அவர்கள் பேசிக் கொண்டது யாவும் காற்றில் மறைந்து போகும். இதுபோன்ற தனிநபர் விமர்சனங்கள், பொய்ப் பிரசாரங்களை தேர்தல் ஆணையம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
நன்னிலம் இளங்கோவன், 
மயிலாடுதுறை.

பெரும் தவறு!
நாட்டின் காவலர் திருடன் என உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை ராகுல் காந்தி கூறியது மிகப் பெரும் தவறு. பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், இப்படிப் பேசியது மிகவும் வருத்தத்துக்குரியது. பிரதமர் வேட்பாளர் எனக் கூறப்படும் ராகுல் காந்தி, ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பேச வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்களைப் பற்றியும், வயதில் மூத்த அரசியல்வாதிகளைப் பற்றியும் விமர்சனம் செய்யும்போது எச்சரிக்கையும், கவனமும் வேண்டும். இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, பகிரங்க மன்னிப்புக் கோருவதே சரியானது. இதில் கௌரவம் பார்க்காமல் ராகுல் காந்தி செயல்படுவது நல்லது.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

முற்றுப்புள்ளி வைக்கலாம்!
மோத்தி என்பது மாணிக்கம்; அதுவே மோடி என்றானது. இந்தச் சிறப்புக்குரியவர் உயர் பதிவியில் (பிரதமர்) இருக்கும் தருணம், அப்பெயர் சார்ந்தவர்களில் சிலர் நீரவ் மோடி, லலித் மோடி போன்றோர்களாக இருக்கின்றனரே என்ற ஆதங்கமே ராகுல் காந்தியுடையது! அத்தகைய நபர்களை தப்பிச் செல்லவிட்டதாலேயே சந்தேகம் எனும் பார்வையே அன்றி வேறில்லை;  யாரும் மனம் புண்படாத வகையில்   பேசுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ராகுல் காந்தியும் வருத்தம் தெரிவித்ததை கடமை என்ற வகையில் அரசு வழக்குரைஞரும் ஏற்றுள்ளார். வாதி, பிரதிவாதி, நீதித் தலைமை என முத்தரப்புமே சமரசம் கொண்டு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

பழக்கம் காரணமாக...
ராகுல் காந்தி ஒரு பெரிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பேசுவதாகத் தெரியவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றைக் கூறி, உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். நீதிமன்றம் சம்பந்தப்படாத எத்தனையோ விஷயங்களில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். பழக்க தோஷம் காரணமாக வழக்கம்போல் பேசி மாட்டிக் கொண்டார். எனவே, பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கே.வேலுச்சாமி, திருப்பூர்.

சரியல்ல!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களுக்காக வாக்கு சேகரிப்பவர்களும் நீதிமன்றங்களினால் வரையறுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி வாக்குசேகரிப்பதில்லை.  அதேபோல வாக்கு சேகரிக்க பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இன்ன வார்த்தைகளை பயன்படுத்துவார்களென்று ஊகித்து, அந்த வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டுமென்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கவும் முடியாது. இருப்பினும் ராகுல் காந்தி போன்ற ஒரு தேசியக் கட்சியின் தலைவர் இத்தகைய பேச்சைத் தவிர்த்திருக்கலாம்.
எம்.ஜோசப்லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர் பாளையம்.

தகுதியைப் பெறவில்லை!
எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதிகபட்சமாக மோடியின் மீது ஊழல் குற்றச்சாட்டு என்பது ரஃபேல் போர் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான அனுமதியை அனில் அம்பானிக்குக் கொடுத்ததுதான். பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கும் ராகுல், ஒரு பிரதமர் வேட்பாளரை இப்படி மூன்றாம் தரமாக விமர்சனம் செய்திருப்பதை எவரும் ஏற்க மாட்டார்கள்.  இது முழுக்க முழுக்க தேர்தல் கால உளறல்களே.  இன்னும் பிரதமர் பதவிக்கான தகுதியை ராகுல் காந்தி பெறவில்லை என்பதேயே இது காட்டுகிறது.
மகிழ்நன், கடலூர்.

வரம்பு மீறல்!
நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது வரம்பு மீறிய பேச்சு ஆகும். அரசியல் தலைவர்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து, வார்த்தைகளை அளந்து பேசுதல் அவசியம். எதிர்க்கட்சியின் தலைவர்களேயாயினும் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பேசுபவர்களின் தரத்தைப் பரிசீலனைக்கு உள்ளாக்கிவிடும். அடுத்தவரை காழ்ப்புணர்ச்சியுடன் மோசமான வார்த்தைகளால் பேசுவது தங்களது தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வதாகும்.
எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

ராகுல் காந்தியும்...
ஒருவரைத் திருடன் என்று நீதிமன்றம்தான் கூறவேண்டும் என்பதில்லை. மகாத்மா முதல் இன்றைய தலைவர்கள் வரை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோரை இதைவிடக் கேவலமாக பலர் விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு ராகுல் விதிவிலக்கல்ல. தவறு எனத் தெரிந்தும் இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களை யார் பேசினாலும் தவறுதான்.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

அரசியலுக்காக...
ரஃபேல் விவகார விசாரணை முடிந்தால்தான் ஊழல் நடந்ததா என்ற உண்மை தெரியவரும். அதற்குள், அரசியலுக்காக ஊதிப் பெரிதாக்கிய ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை தேர்தல் லாபத்துக்காக திரித்துப் பிரசாரம் செய்தது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, ஒரு கட்சி தலைவருக்குரிய கௌரவமும் அல்ல. ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டதே, அவர் தவறு செய்ததற்கான சாட்சிதான். வீண் பழி சுமத்தி அவப் பெயர் உண்டாக்கி, யாரையும் அழிக்க நினைப்பது மாபாதகம்.
அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை.

முரண் ஏன்?
நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என்று ராகுல் காந்தி சொல்வது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடிக்கு நாட்டின் காவலர் என்று பட்டமளித்து விட்டு, திருடன் எனச் சொல்வது முரண்பாடாக உள்ளது. காவலர் எப்படித் திருடனாக முடியும்?  காவலராகவும், திருடனாகவும் ஒருவர் இருக்கவே முடியாது.  அப்படி காவலர், திருடனாக மாறினால் அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய பெரிய பொறுப்பு உள்ளது.
உஷா முத்துராமன், மதுரை.

விவரம் இன்றி...
ராகுல் காந்தியின் பேச்சு மிக மிகத் தவறானது. நேற்று வரை நாட்டை ஆண்ட பெரிய கட்சியின் இன்றைய தலைவர், நாளைய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் போட்டியாளர், மக்கள் மன்றத்தில் இப்படிப் பொறுப்பு இல்லாமல் பேசிவிட்டு, நீதிமன்றத்தில் போய் வருத்தம் தெரிவிப்பது என்பது விவரமான அரசியல்வாதி செய்யும் செயல் அல்ல. இந்தப் போக்கு அவரது எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.

முதிர்ச்சியில்லை!
ஊடகங்கள், பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிடும் தகவல் வரலாற்றில் பதிவாகி
விடும். பேசும் முன்னர் அவர் சிந்தித்துப் பேச வேண்டும்; கருத்துக் கூற வேண்டும். நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் எனக் கூறுவது மிகவும் தவறு. இது அவரின் முதிர்ச்சியற்ற தன்மையையும், அரசியலில் பக்குவமற்ற நிலையையும் காட்டுகிறது.
டி.ஆர்.ராசேந்திரன்,
திருநாகேஸ்வரம்.

அழகல்ல!
நீதிமன்றத்தின் தீர்ப்பை சரிவரப் புரிந்துகொள்ளாமல், நாட்டின் பெரிய அரசியல் கட்சியின் தலைவர், நீதிமன்றம் கூறியதாக ஒரு தகவலை பொது இடத்தில் கூறுவது மிகவும் பொறுப்பற்ற செயல். ஒரு சாதாரண மனிதர் இவ்வாறு கூறினால் என்ன தண்டனை கிடைத்திருக்கும்?  ஒரு பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் முன் பேசும்போது,  உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக நீதிமன்ற பிரமாண பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு வங்கிக்காக மிகவும் கீழ்த்தரமான செயல்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபடுகிறார்கள். இதற்கு விதிவிலக்கின்றி ராகுல் காந்தியும் செயல்பட்டுள்ளது, ஒரு பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அழகல்ல.
பி.கே.ஜீவன்,  கும்பகோணம்.

பிரதமரே கட்சித் தாவலை ஊக்குவிப்பது போன்று பேசுவது சரியா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு

விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com