காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்

சரிதான்
காஷ்மீரில் அந்நிய தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது சரியே. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடக்கும் பிரச்னைகளை, அந்த நாடே தீர்வுகாண முற்பட வேண்டும். அதைத்தான் அங்கு வாழும் மக்களும் விரும்புவர். அதே போன்று காஷ்மீரின் பிரச்னைகளை இந்தியா மட்டுமே பேசித் தீர்வுகாண முடியும். இது குறித்து கேட்க வெளிநாடுகளுக்கு உரிமை இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பம் என்ன என்று ஆராய்ந்து அவர்களுக்குரிய நலத் திட்டங்களை விரைவாகவும், மன நிறைவாகவும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் காஷ்மீர் மக்களின் நடவடிக்கைகளில் அந்நியத் தலையீட்டை மக்கள் விரும்பவில்லை என்பதைப் பிரதமர் உறுதி செய்யலாம். 
எழில் சோம.பொன்னுசாமி, 
ஆவடி.

தலையீடு தவறில்லை
இரு தரப்புக்கான பேச்சுவார்த்தை பிரதான பிரச்னை பற்றியது எனில், பரஸ்பரம் சமரசம் காண இருவரும் இணங்கி மூன்றாம் நபர் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தால்தான் அது சாத்தியம். மாறாக, ஒரு தரப்பு மற்றொருவரின் தயவை நாடும் சமயம், இரு தரப்புக்கும் ஏற்ற பொதுவான, நம்பிக்கைக்குரிய, நியாயம் வழங்கும் நெறிமிக்காரைக் கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டியதில்லை. அரசுத் தரப்பில் அவை ஒழுங்கு பேணப்பட அவைத் தலைவராக இருப்பவரும், இரு தரப்பின் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் நீதிமான்கூட மூன்றாம் தரப்புதானே? எப்பாடுபட்டேனும் நல்ல வழியில் நல் எண்ணத்தோடு பிரச்னைக்கு தீர்வுகண்டு முற்றுப்புள்ளி வைப்பது இரு தரப்புக்கும் நல்லது. 
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

இரும்பு மனிதர்!
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என மோடி கூறி இருப்பது, நமக்கு கிடைத்த சர்தார் படேல் போன்ற ஓர் இரும்பு மனிதர் என்பதை உணர்த்துகிறது. முன்னாள் பிரதமர் நேரு, ஷேக் அப்துல்லாவின் தவறால் தனி நாடுபோல் இயங்க உதவிய சட்டங்களை பிரதமர் மோடி அகற்றி, 70 ஆண்டுகளாக தீராத பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளார். இப்போதுதான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு, ஒரே சட்டம் எனப் பெருமை பெற்றுள்ளது. இது முழுவதும் நம் நாட்டுப் பிரச்னை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இதைத்தான் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி உணர்த்தியுள்ளார்.
கே.என்.ஜெயின், நெமிலி.

உள்நாட்டுப் பிரச்னை
கடந்த 1971-இல் வங்கதேச போருக்குப் பின், காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம் என்ற நீண்ட நெடிய இந்திய வெளியுறவு கொள்கை தேவையில்லை என்பதில் மோடி அரசும் திடமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. மேலும், இந்த விவகாரத்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நேருக்கு நேர் பேசும்போது  நாசூக்காகவும், நாகரிகமாகவும் புன்னகைத்த முகபாவனையுடன் பிரதமர் மோடி கூறியுள்ளது அரசியல் முதிர்ச்சியையும் காட்டுகிறது. எனவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துரத்தால் ஏற்பட்டுள்ள விவகாரம் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையே. 
செ.சுவாமிநாதன், 
திருவானைக்கோயில்.

நாட்டின் ஒற்றுமைக்காக....
எப்போதும் காஷ்மீர் நமது நாடு; காஷ்மீர் பிரச்னையில் அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டியதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். வீட்டுப் பிரச்னை முதல் நாட்டுப் பிரச்னை வரை நமக்குள்ளே தீர்த்துக் கொண்டால் பிரச்னை சுலபமாக முடிந்து விடும். அந்நியர் தலையீடு இருந்தால் பிரச்னை தீராதது மட்டுமல்லாமல், மேலும் சிக்கலாகிவிட வாய்ப்பு ஏற்பட்டு விடும். இப்போது காஷ்மீரிலும் லடாக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் நடவடிக்கைகள், அந்தப் பகுதிகள் முன்னேற்றத்துக்காகவும் நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தவும் செய்யப்பட்டவையாகும். இதைத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருக்கிறார்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

வாழ்வாதாரத்துக்கு...
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது, இதன் மூலம் மற்ற நாடுகள் காஷ்மீரின் அந்தஸ்து ரத்தை கருதி, அங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்ட நேரிடும் என்பதால்தான்.எந்தச் சூழ்நிலையிலும் அந்நிய நாடுகளின் தலையீட்டை ஏற்பதில்லை என்ற முடிவுடன், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.
எம்.சம்பத்குமார், ஈரோடு.

பாராட்டு
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என ஜி-7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்திருப்பது, இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று காஷ்மீர் என்பதை அமெரிக்கா தெளிவாகத் தெரிந்துகொள்ள வழி வகுத்துள்ளது. உலக நாடுகளிலும் ஐ.நா. சபையிலும் செல்வாக்குள்ள நாடு அமெரிக்கா. எனவே, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை தனக்கு ஆதரவாக இருக்கும்படி பிரதமர் மோடி கருதுவது அவசியம். மேலும், அமெரிக்கா சொன்னால்தான் இந்தியாவின் விஷயத்தில் பாகிஸ்தான் தலையிடாது. எனவே, காஷ்மீரில் அந்நியத்தலையீட்டை ஏற்பதில்லை என அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. 
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

உரிமை
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து (370-ஆவது சட்டப் பிரிவு) காரணமாக, இந்தியாவில் அனைத்து மாநில மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் காஷ்மீர் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்தன. சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது என முன்னாள் பிரதமர் நேரு கூறினார். இந்தக் காரணங்களினால் காஷ்மீர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று உறுதிப்பாடும், நல்லெண்ணமும், தன்னம்பிக்கையுடனும் பிரதமர் மோடி மோடி உள்ளதால், அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் உறுதிபடக் கூறியிருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின் மிகப் பெரிய சவாலான பிரச்னை எனக் கருதி, காஷ்மீர் நமதே என்பதில் உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க பிரதமர் தயாராக இல்லை. 
என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

துணிச்சல்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டதை எதிர்த்து பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என்று அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தது, அவரது துணிச்சலான முடிவைக் காட்டுகிறது. இரு நாடுகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களை தனக்குச் சாதமாக மாற்ற அமெரிக்கா எப்போதும் தயாராகவே இருக்கும்.
ச.கருணாகரன், கருவேலப்பாடு.

வேறுபாடு வேண்டாம்
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடிதெரிவித்த இந்தக் கருத்துக்குப் பின்னர் அமெரிக்கா திரும்பிய டிரம்ப், இதை வெள்ளை மாளிகை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி காஷ்மீர் பிரச்னையை இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கான பிரச்னை என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கூறி வருவதை அதிபர் டிரம்ப்  ஏற்றுக் கொண்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்பதில் இந்தியாவில் உள்ள கட்சிகள் வேறுபடாமல் ஒன்றுபட வேண்டும்.
பி.துரை, காட்பாடி.

நாசூக்காக...
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது தனது இருப்பை இன்னொரு நாட்டின் அதிபருக்குக் காட்டியிருப்பதுடன் தேசத்தையும் தலைக்குனிவிலிருந்து மீட்டிருக்கிறார். பிறரது விருப்பம் இன்றி, அவர்களது சொந்தப் பிரச்னைகளில் தாமாகத் தலையிடக் கூடாது என்பதை அமெரிக்காவுக்கு நாசூக்காக உணர்த்தியுள்ள பாடம். தங்களது ஆலோசனைகளை அவசியப்படும்போது ஏற்றுக் கொள்கிறோம் என்ற பிரதமரின் கருத்து, குறிப்பறிந்து இப்படித்தான் பேச வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நமது நாட்டின் உள் விவகாரங்களில் அந்நியத் தலையீடு எங்குபோய் முடியும் என்பதை பிரதமர் நன்கு அறிந்திருக்கிறார். தொடக்கத்திலேயே அவர் காட்டியுள்ள உறுதியான பதில் அவரது அறிவின் வெளிப்பாடு. 
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

தலைமைக்கு...
காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  பஞ்சசீலக் கொள்கையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளவில்லை என்பதை உலகுக்கு மத்திய அரசு வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில், சிரியாவில் அமெரிக்காவின் தலையீடு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை உலகம் அறியும். பிரதமர் மோடியின் இந்தக் கடுமையான முடிவு அவரது தலைமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
கே.எஸ்.சுந்தரம், கோவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com