மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு குறித்து என்ன கருதுகிறீர்கள்

உத்தேசமானதுதான்
ஆய்வு என்பது மாதிரிகளைக் கொண்டு செய்வது. முடிவு மாதிரிகளைப் பொருத்தது; மேலும், அது உத்தேசமானதுதான். உண்மையில் மருத்துவப் பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும்போது, 100 சதவீதம் சரியான முடிவுதான் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம். 


உண்மையே...
திரை மறைவில் அரங்கேறும் மருத்துவ மாஃபியாக்களின் அட்டகாசங்களால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மருந்து நிறுவனங்கள், எக்ஸ் ரே, இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை நிலையங்கள், ஸ்கேன் மையங்கள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு கையூட்டு பெற்றுக்கொண்டு தங்களுக்குச் சாதகமான அறிக்கைகளைப் பெறுவதும், தேவையில்லாத மருந்துகளை வாங்க மருத்துவர்கள் பரிந்துரை 
செய்வதையும் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றமும் இது குறித்து ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளது.
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.


காரணம் என்ன?
ஒரு கருவியை உருவாக்கும்போது அதில் என்னென்ன தகவல்களைச் சேமிக்கிறோமோ, அவைதான் அந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது வெளிவரும். இவையேதான் மருத்துவப் பரிசோதனை கருவிகளில் நடைபெறுகிறது. கருவிகளை மனிதர்கள் நம்பும் அளவுக்கு பிற மனிதர்களை நம்புவதில்லை. மருத்துவச் சோதனைக்கான ரசாயனப் பொருள்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. அத்துடன் தனிமனிதத் தவறுகளும் முடிவுகள் தவறாக அமையக் காரணமாய் அமைகின்றன.
கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

நடவடிக்கை...

மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நோயின் தன்மை குறித்த முடிவுக்கு, அடிப்படைத் தரவுகளான பரிசோதனை முடிவுகள் சந்தேகத்துக்கு உட்படுகிறபோது மருத்துவத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும். மனிதர்களை நேரடி பரிசோதனை எலிகளாக ஏற்கெனவே மருந்து நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்ற அச்சம் ஒரு பக்கம் உள்ளது. இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
பா.சக்திவேல், கோயம்புத்தூர்.


யார் பொறுப்பு?
மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்பது குறித்து வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தொடக்க நிலைப் பரிசோதனை முடிவுகளே தவறானவையென்றால், அதன் தொடர்ச்சியாகச் செய்யப்படும் மருத்துவ சிகிச்சை, தரும் மருந்துகள் எப்படி சரியானவையாக இருக்க முடியும்? தவறான சிகிச்சை, மருந்துகளால் உண்டாகும் பாதிப்புகள், பிற நோய்களின் தாக்கம், பண இழப்பு, உயிரிழப்பு - இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு?
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.


பொறுப்பாக்குவது அவசியம்
மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற தகவல் மிகவும் வேதனைக்குரியது. சேவைகளில் மிகவும் புனிதமானது மருத்துவ சேவை. நமது நாட்டில் உள்ள ஏழ்மை, கேள்வி கேட்காத நிலை, மக்களின் நம்பிக்கை போன்றவை அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. ஏனைய நாடுகளில் உள்ளதுபோல நமது நாட்டிலும் மருத்துவ சேவையில் உள்ளவர்கள் பயனாளிகளுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இருக்க, சட்டங்களில் உரிய திருத்தங்களை அரசு செய்ய வேண்டும். மேலும், தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.


கூட்டுச் சதி?
மருத்துவப் பரிசோதனைகளில் 34 சதவீதம் தவறானவை என்றால், நிச்சயம் அந்தத் தவறு நெறிமுறைகளை மீறி அதர்ம வழியில் பணம் சம்பாதிக்க மருத்துவரும் பரிசோதனை மையத்தினரும் சேர்ந்து செய்யும் கூட்டுச் சதிதான். மனிதத் தவறு என்றால் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருக்கலாம். இல்லாத நோய்க்கு மருத்துவம் பார்ப்பதுபோல ஏமாற்றுவது கொலைக்குச் சமமானது. கத்தியை ஆயுதமாகக் கொண்டு கொள்ளை அடிப்பவனுக்கும், அதே கத்தியை ஆயுதமாகக் கொண்ட மருத்துவருக்கும் வித்தியாசம் வேண்டாமா? கடவுளே கயவனாகலாமா?
வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.


யாரை குறை சொல்ல....
மருத்துவப் பரிசோதனையின் தரம் தாழ்ந்துவிட்டது என்பதைத்தான் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவப் பரிசோதனைகள் பெரும்பாலும் பெரிய மருத்துவமனைகளில் அவர்களின் சொந்தப் பரிசோதனைக்கூடங்களிலும், மற்ற மருத்துவமனைகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவப் பரிசோதனை மையங்களிலும் செய்யப்படுகின்றன. மருத்துவமே வியாபாரம், இதில் யாரை குறை சொல்ல!
பி.கே.ஜீவன், கும்பகோணம்.


அரசின் கவனத்துக்கு...
"நோய் முதல் நாடி' யான மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு மிகமிக அதிர்ச்சி அளிக்கும் தகவல். நோயைக் குணப்படுத்தவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் முறைதான் "டயக்னஸிஸ்' எனப்படும் பரிசோதனை. இந்த பரிசோதனையே தவறாக இருந்தால், மருத்துவரால் எப்படி சரியான சிகிச்சையை அளிக்க முடியும்? எப்படி நோய்க்குரிய மருந்துகளை வழங்க முடியும்? இந்தத் தவறுகள் நடைபெறாமல் கண்காணிப்பதும், தவறுகள் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மருத்துவத் துறையும், பொது சுகாதாரத் துறையுமே. 
பொன்.கருணாநிதி, கோட்டூர்.


கண்டறிய வேண்டும்
மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.  இது யாருடைய தவறு என்று கண்டறிய வேண்டும். ஆய்வுக் கருவிகளிலோ அல்லது அவற்றைக் கையாள்பவர்களாலா? ஏற்கெனவே சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 36 சதவீதம் தரமற்றவை என்ற அறிக்கை வெளியானது. தற்போது நாட்டில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவது மேலும் ஓர் அதிர்ச்சி தகவல். 
எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.


துல்லிய முடிவு அளிக்க...
மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நோயாளிகளைத் தமது குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர் என்று நினைத்துக் கரிசனத்துடன் சோதனை செய்ய வேண்டும். மருத்துவம் என்பது ஒரு வணிகம் அல்ல, மாறாக உயிர்காக்கும் சேவை என்பதை அனைத்து மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருந்து மற்றும் மருத்துவ உபகரண உற்பத்தியாளர்களும் முதலில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் துல்லிய முடிவு சாத்தியம்.
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.


தவறுகளைத் தவிர்க்க.
மருத்துவப் பரிசோதனைகள் பொய்த்துப் போவதற்கு ஒப்பந்த பயிற்சியாளர்களுக்கு போதிய பயிற்சியின்மையும், பணியில் அக்கறையின்மையுமே காரணமாகச் சொல்லப்படுகிறது. அலட்சியத்தால் பரிசோதனை முடிவுகள் மாற்றி எழுதப்பட்டு, விபரீத விளைவுகளானதுண்டு. சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு மருத்துவ பரிசோதனைகள் எந்தச் சூழலில் எப்படி செய்ய வேண்டுமென்பதும் தெளிவில்லாமல் கையாளப்படுகின்றன. உயிர் காக்க உதவும் மருத்துவப் பரிசோதனைகளை கவனத்துடனும், பிற மருத்துவமுறை துணையுடனும் செய்தால் தவறுகளைத் தவிர்க்கலாம்.
அ.யாழினி பர்வதம், சென்னை.


உயிருடன்...
மருத்துவப் பரிசோதனைகளை அளிக்கும் ஆய்வகங்களில் 34 சதவீதம் வரை தவறான அறிக்கை அளிப்பதாக ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். சாதாரணமாக ஒரு சில தனியார் மருத்துவ ஆய்வகங்களில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் தவறான அறிக்கைகளாக உள்ளதால் இந்த மாதிரி அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. உயிரோடு விளையாடுகிறோம் என்பதை இத்தகையவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
பி.துரை, காட்பாடி.


அர்ப்பணிப்பு இல்லை
மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு அறிக்கை கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்யும். மருத்துவத் துறையில் சேர்ந்து படித்து பட்டம் பெற்று மருத்துவராக,  அதற்கான நுழைவு தேர்வு எழுத பயிற்சி தரும் தனியார் வகுப்புகளில் பணத்தைச் செலவழிக்கும் நிலை உள்ளது; மேலும், மருத்துவத் துறை தேர்வுகளில் பெரிய இடத்து பரிந்துரை உள்ளவர்கள் போட்டி போடுவதால் நேர்மையான முறையில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு பல் மருத்துவப் படிப்பில்கூட இடம் கிடைப்பதில்லை. இதனால் விரக்தியடைந்து வேறு படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கின்றனர். பரிந்துரையும் பணமும் மருத்துவத் துறைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதால் அதற்காக தங்களை அர்ப்பணிப்பு செய்யாத நிலையில் பிற்காலத்தில் மருத்துவர்கள் பட்டம் பெற்று வருவதால் நோயாளிகள் எல்லோரும் சிகிச்சை பெற்று குணம் பெறுவதில்லை. அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத மருத்துவர்களின் பணியைத்தான் இந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

உள்ளாட்சிப் பதவிகளால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?


இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com