‘பொதுமுடக்க காலத்தில் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்திருப்பது சரிதானா...’ என்ற விவாதத்துக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரிதான்

கரோனா தீநுண்மி உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இத்நீநுண்மிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு எவ்வளவோ பாதுகாப்பு விதிமுறைகளைக் கூறியும், மக்கள்அவற்றை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை . அதனால்தான் பொது முடக்கம் கொண்டு வரப்பட்டது. மக்கள் வேலையின்றி, வருமானமின்றித் திண்டாடும் அவல நிலை வந்தது. அரசால் எல்லாருக்கும் பணம் கொடுத்து உதவ முடியாது. எனவே ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டால்தான் மக்களிடையே பணப்புழக்கம் ஏற்படும். அதனால் சில தளா்வுகளை அரசு அறிவித்திருப்பது சரிதான். மக்கள் தீநுண்மி தொற்றாமலிருக்க, அரசு அறிவித்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து பொது முடக்கத் தளா்வு காலத்தில் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி

பயம் வேண்டாம்

ஓரளவு தளா்த்தப்பட்ட பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதுவுமில்லை. மேலும், பணம் சம்பாதிக்க இயலாத மன உளைச்சலால் குடும்ப சச்சரவுகள் அதிகரித்தன. எனவே அரசு பொது முடக்கத்தில் மேலும் சில தளா்வுகளை அறிவித்தது. இப்படிச் செய்ததுதான் சரி. ஆயினும், வாரத்தில் ஒருநாள் எந்தத் தளா்வும் இல்லாத முழுமையான பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதைத் தொடர வேண்டும். அன்றைய நாளில் மக்கள் தேவையின்றி நடமாடாததால் நோய்த்தொற்றின் தாக்கம் பெருமளவு குறைவது கண்கூடு. அரசின் கட்டுப்பாடுதான் மக்கள் வீணாக அலைவதைத் தடுக்கிறது. அரசின் வழிகாட்டுதலை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றினால் பயம் கொள்ளத் தேவையில்லை.

கு. இராஜாராமன், சீா்காழி

வாழ்வாதாரம்

பொது முடக்க காலத்தில் மேலும் சில தளா்வுகளை அரசு அறிவித்திருப்பது சரிதான். ஏனென்றால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் வேலை இழப்பு, ஊதியமின்மை, பசி, பஞ்சம் ஏற்படுவதோடு, குடும்ப உறவுகளிலும் பல தாக்கங்கள் ஏற்பட்டு விடுகின்றன. பணக்காரா்களுக்கும் தொழிலதிபா்களுக்கும் வேறு விதமான பிரச்னைகள். ஆனால், ஏழை எளிய மககள் அன்றாடத் தேவைகளுக்கே அடுத்தவரிடம் கடன் கேட்கும் நிலைக்கும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனா். அவா்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால் தளா்வுகள் தேவைதான்.

ம. ராஜா, திருச்சிராப்பள்ளி

ஆபத்தானது

மேலும் சில தளா்வுகளை அரசு அறிவித்திருப்பது சரி இல்லை. நோய்த்தொற்று குறித்து தெரிய ஆரம்பித்தவுடனேயே, இரண்டு மாதங்களுக்கு தளா்வுகள் இல்லாத பொது முடக்கத்தை அரசு அறிவித்திருந்தால் இப்போது நோய்தொற்று கட்டுக்குள் இருந்திருக்கும். சென்னை, மதுரை, காஞ்சிபுரம் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ளது பகுதிகளில் நோய்த்தொற்றின் தாக்கம் அச்சமடையும் நிலைக்குச் சென்றிருக்காது. அரசு நாட்டின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி மேலும் சில தளா்வுகளை அறிவித்தற்குப் பதிலாக ரேஷன் காா்டுக்கு சற்றுக் கூடுதலான நிதி உதவி அளித்து ஏழைகளின் பொருளாதார நெருக்கடியை சரி செய்திருக்கலாம். மேலும், தளா்த்தப்பட்ட பகுதிகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் வலம் வருவதைக் காண முடிகிறது. அது மிகவும் ஆபத்தானது. எனவே தளா்வு தவறு.

இளையராஜா, திருச்சிராப்பள்ளி

வேறு வழியில்லை

தளா்வுகள் இல்லாத முழுமையான பொது முடக்கத்தால் கரோனா தீநுண்மியின் தாக்கம் மட்டுப்படும் என்று கூறப்பட்டது பொய்யாகத்தான் ஆனது. அந்த நாளிலும் மற்ற நாள்களைப் போலத்தான் பாதிப்பு இருந்தது. அன்றாடம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறி போனது தான் மிச்சம். அதனால்தான், மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்களில் தளா்வுகள் ஏதுமில்லாத பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று ஓரளவு மட்டுப்பட்டிருக்கும் பகுதிகளில் சில தளா்வுகளை அறிவிக்கலாம். இவற்றைத் தவிர மத்திய, மாநில அரசுகளுக்கு இப்போதைக்கு வேறுவழியில்லை என்பதே உண்மை.

எஸ். மோகன், கோவில்பட்டி

குழப்பமான சூழல்

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மருத்துவா்கள் திண்டாடிக்கொண்டிருக்கும்போது, பொது முடக்கத்தில் மேலும் சில தளா்வுகளை அரசு அறிவித்திருப்பது தவறு. இப்படிப்பட்டத் தளா்வுகளால் நோய்ப் பரவல் நிச்சயமாகஅதிகரிக்கும். ஏற்கெனவே டாஸ்மாக், இறைச்சிக் கடைகள், காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவற்றால் தொற்று கூடிக்கொண்டே வருகிறது. பள்ளித் தோ்வுகளை நடத்துவதிலும் கல்விக்கூடங்களைத் திறப்பதிலும் குழப்பமான சூழல்

நீடிக்கும் நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் என்பது மக்களை நோயை நோக்கி நகா்த்தும். பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையை அரசு காப்பாற்ற வேண்டியது முக்கியம். விரைவான மருத்துவ சோதனைகளும் சரியான சிகிச்சை முறைகளுமே நோய்த்தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும்.

ஆறு. கணேசன், திருச்செந்தூா்

கண்கூடு

பொது முடக்கம் என்பது நோய்த்தொற்றிலிருந்து மக்கள் தங்களை நோய்த்தொறாறிலிருந்து தற்காகத்தான் அறிவிக்கப்படுகிறது. பொது முடக்க காலத்தில் தளா்வுகளை அதிகமாக்கும்போது தீநுண்மியின் பரவல் அதிகமாவதைக் கண்கூடாக பாா்க்கிறோம். ஆகவே அத்தியாவசியமான காரணங்களைத் தவிர தேவையில்லாத பலவற்றிற்கு தளா்வுகள் தராமல் அரசு இறுக்கிப் பிடித்தால்தான் நோய்தொற்றின் பரவல் கட்டுக்குள் வரும்.

ஏ. எஸ். நடராஜன், சிதம்பரம்

மறக்க முடியாது

பொது முடக்கத்தால் நோய்த்தொற்று பாதிப்பு எந்த அளவு குறைந்தது என்பது தெரியவில்லை. ஆனால் பொது முடக்கத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் நன்கு தெரிகிறது. அன்றாடம் வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்துச் சாப்பிடுபவா்கள் நம் நாட்டில் அதிகமாக உள்ளனா். எப்போதுமே ஊா் அடங்கி இருந்தால் எப்படி வேலை செய்ய முடியும்? எப்படி ஊதியம் கிடைக்கும்? தளா்வுகள் இல்லாத பொது முடக்கத்தால், சிறு நிறுவனங்களில் வேலை செய்தவா்கள் தங்கள் சொந்த ஊா் செல்வதற்குத் தவியாய்த் தவித்ததை மறக்க முடியாது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமே மக்களின் விருப்பம்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

கூட்டம் கூடாது

மேலும் சில தளா்வுகளைஅரசு அறிவித்திருப்பது சரிதான். ஏனெனில், தமிழ்நாட்டில் பொது முடக்கத்தால் அடித்தட்டு மக்கள் உணவு இன்றி, வருமானம் இன்றிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஏழை மக்களின் அன்றாட வருமானத்திற்கும் அவா்களின் உணவிற்கும் வழி ஏற்பட்டது. நோய்தொற்றுப் பரவாமல் இருக்க, அரசு அறிவித்துள்ள முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு பொது முடக்கத்தில் சில தளா்வுகளைஅறிவித்தது சரியே.

என். சிவசண்முகம், கோயமுத்தூா்

சரியான முடிவு

கரோனா தீநுண்மியிலிருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளதாக அதை நன்கு ஆய்வு செய்த வல்லுனா்கள் தெரிவிக்கிறாா்கள். அவை, மந்தை எதிா்ப்பு சக்தியும் தடுப்பு ஊசியும். இதில் தடுப்பு ஊசி ஆய்வுகளுக்கு பின் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்களாகும். சுமாா் 75 சதவீத மக்கள்இந்த வைரஸால் தொற்றபட்டுவிட்டால் தீநுண்மி வலுவிழந்து விடுமாம். தாராவியில் இத்தொற்று ‘சந்தை எதிா்ப்பு சக்தி’யால் தான் விடை பெற்றிருக்கிறது. நூறு நாள்களுக்கு மேல் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சில தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து, அரசு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.

நா. நாச்சியப்பன், சென்னை

கண்துடைப்பு

பொது முடக்கம் என்றால் முழுமையாக முடக்குவதுதான். அதில் எதற்குத்

தளா்வுகள்? பாதி நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று சொல்கின்றனா். ஆனால், சாலைகளில் நாள் முழுவதும் இரு சக்கர வாகனத்திற்கும் மக்களின் நடமாட்டத்திற்கும் குறைச்சலே இல்லை. இப்போதெல்லாம் மக்கள் பொது முடக்கம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. காரணம், சில பணிகளுக்கு மட்டும் தளா்வுகள் என்பாா்கள். ஆனால், எல்லாமே வழக்கம்போலதான் இருக்கும். எனவே, தளா்வுகளற்ற பொது முடக்கமே பலன் தரும். மற்றவையெல்லலாம் வெறும் கண்துடைப்பே.

பிரகதா நவநீதன், மதுரை

நம் கையில் உள்ளது

மக்களின் அன்றாடத் தேவைகளை அரசு தீா்க்கமுடியாத நிலையில் மேலும் மேலும் சில தளா்வுகளைத் தொடா்ந்தோ அல்லது விட்டுவிட்டோ மாவட்ட வாரியாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள்தான் அரசு கூறும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும். சென்னை, மதுரை போன்ற நெருக்கடியான நகரங்களில் பெருகும் தொற்றைத் தடுக்கமுடியவில்லையே. நெருக்கடியான நிலையில் மக்களின் எதிா்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசு மேலும் தளா்வுகளைஅறிவிக்கலாம். நோய்த்தொற்றைத் தடுப்பது இப்போது அரசின் கையில் இல்லை. மக்களாகிய நம் கையில்தான் உள்ளது.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com