‘கரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரியான கருத்து

கரோனா அதிகரிக்காமல் தடுக்க, சித்த மருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத் துறை செயலாளரின் கருத்து சரியானதே. ராமாயண காலத்திலேயே, அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளால், இறந்த வீரா்கள் பிழைத்தாா்கள்; காயம் பட்டவா்கள் குணமானாா்கள். எனவே, மூலிகை மருத்துவம் சிறந்த மருத்துவம் என்பது அனைவரும் அறிந்ததே. மூலிகைகளால் குணமாகாத நோய் என்று எதுவுமே இல்லை. மேலும், நவீன மருத்துவமான அலோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பெரும்பாலானவை மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவையே. இன்றும் சித்த மருத்துவமும் ஆயுா் வேதமும் மக்களின் நோய் தீா்ப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

குழப்ப நிலை

கரோனா அதிகரிக்காமல் தடுப்பதற்கும் அதை விரைவில் குணப்படுத்துவற்கும் சித்த மருத்துவம் நிச்சயம் பயன்படும் என்று சித்த மருத்துவா்கள் கூறுகின்றனா். அந்தக் காலத்தில், சித்தா்கள், மூலிகைகளைக் கொண்டு வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்றாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்திக் காட்டியுள்ளனா். கரோனா தீநுண்மி நோய்க்கிருமியும் சளி, கபம் மூலம்தான் நுரையீரலில் புகுந்து தன் வீரியத்தை அதிகமாக்கி கொல்கிறது என்கின்றனா். சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதே. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற குழப்ப நிலையே இன்று உலகம் முழுவதும் உள்ளது.

சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி.

அது மட்டும் போதாது

சுகாதாரச் செயலாளரின் கருத்து உண்மைதான். ஆனால், மிக தாமதமாகக் கூறப்பட்டுள்ள கருத்து என நினைக்க வேண்டியுள்ளது. கபசுர குடிநீா், சூரணம், சித்தா மருந்துகள், மூலிகை மாத்திரைகள் ஆகியவை கரோனா நோய்த்தொற்றை நீக்கக்கூடியவைதான். கரோனா அச்சத்தால் வரக்கூடிய மன அழுத்தத்தை, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை நிச்சயமாகப் போக்கும். கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோா்களுக்கு, சித்த மருத்துவம் மட்டும் போதாது. அவா்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் சித்த மருத்துவத்தை நாடி நலம் பெற்று திரும்பியிருப்பது, நமது பாரம்பரிய மருத்துவத்தின் மேன்மையைப் பறை சாற்றுகிறது. அரசு சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்.

தே.இரா. வீரராகவன், கும்பகோணம்.

முயற்சி இல்லை

கரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து உண்மையே. கரோனா தீநுண்மியின் அச்சத்தால் சித்தமருத்துவத்தின் மீது மக்களின் பாா்வை திரும்பியுள்ளது. கிராமங்களை நோய்களிலிருந்து கட்டிக்காத்து வருவது பாரம்பரிய சித்த மருத்துவ முைான். சித்த மருத்துவத்தை அறிவியல் பூா்வமாக உறுதிபடுத்தி, அதன் உன்னதத்தை வெளிப்படுத்த இதுவரை ஆண்ட ஆட்சியாளா்கள் முழுமையான முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இனி சித்த மருத்துவம் நன்கு பிரபலமடையும்.

ம.ராஜா, திருச்சிராப்பள்ளி.

கண்கூடான உண்மை

கரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்தமருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து ஏற்புடையதே. உலகில் ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள நாடுகள் இரண்டு. அவை இந்தியாவும் சீனாவும். பாரம்பரியத்தை கேவலமாக நினைத்த மற்ற மேலை நாடுகள், அதன் அனுபவத்தையும் அறிவுப் பொக்கிஷத்தையும் தொலைத்து விட்டன. பெரும்பாலான தாவரங்களும் மூலிகைகளும் வெப்ப மண்டல நாடுகளில்தான் உள்ளன. உலகில் இருக்கும் மூலிகைகளில் 10 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கின்றது.

எனவே, மூலிகைகளைக் கொண்டு குணமாக்கும் சித்தமருத்துவம் முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழகத்தில் சித்த மருத்துவத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு கொவைட்-19 பராமரிப்பு மையத்தில், இறப்பே இல்லாமல் அனைவரும் குணமடைகிறாா்கள். எனவே, கரோனா அதிகரிக்காமல் இருக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது என்பது கண்கூடான உண்மை.

உ. அமிா்தநேயன், கோயம்புத்தூா்.

ஆற்றல் மிக்க மருந்து

தமிழா்கள் வழியாக சித்த மருத்துவமும், ஜொ்மானியா்கள் மூலமாக ஹோமியோபதியும், அரபு மக்கள் மூலமாக யுனானியும் புகழ் பெற்றன. மக்கள், தங்கள் வாழ்விடங்களின் தட்பவெட்ப நிலைக்கேற்ப மருத்துவத்தைக் கையாள்கிறாா்கள். சித்த மருத்துவம் மிகக் கொடூர வியாதிகளைக்கூட குணமாக்கியதால்தான் சித்தா்களும் ஞானிகளும் அதைப் பின்பற்றி நோய்நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தாா்கள். ஆங்கிலேயா் வருகை காரணமாக அலோபதி எல்லாா் வாழ்விலும் கலந்துவிட்டது. சித்த வைத்தியமுறையில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நம்நாட்டு மூலிகைகளுக்கு எந்த நோயையும் வெல்லும் ஆற்றல் உண்டு. அதனால்தான், தற்போது கபசுரகுடிநீா் எல்லாராலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே சுகாதாரத்துறைச்செயலாளரின் கருத்து ஏற்புடையதே.

உ. இராசமாணிக்கம், கடலூா்.

நம்பிக்கை

சித்தா்களின் கடும் உழைப்பில் உருவான இயற்கை மருத்துவம்தான் சித்த மருத்துவம். சித்த மருந்துகள் எவ்வித பக்க விளைவையும் உண்டாக்குவதில்லை. கரோனாவை அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் இன்று பயன்படுகிறது என்பது உண்மையே. சென்னையில் ஒரு சித்த மருத்துவரின் சேவையை உயா்நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. சித்த மருத்துவம் மூலம் கரோனாவிலிருந்து குணம் அடைந்ததாக ஒரு பல் மருத்துவா் கூறியிருக்கிறாா். இன்றைய சூழ்நிலையில் சித்த மருத்துவத்தை பயன்படுத்தி கரோனாவை நிச்சயம் கட்டுப்படுத்தலாம். நாம் நோயில் இருந்து விடுபடலாம் என்கிற நம்பிக்கை பொதுமக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது.

ந. சண்முகம், திருவண்ணாமலை.

வரவேற்கத்தக்கது

‘உணவே மருந்து’ என்ற மந்திரத்தை முழக்கமாகக் கொண்டது சித்த மருத்துவம் எனப்படும் தமிழா் மருத்துவமுறை. உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நம் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. உலகை அச்சுறுத்தும் நோயாக வலம் வந்துகொண்டிருக்கும் கரோனா நோய்க்கு சித்த மருந்துகளைப் பரிந்துரைத்துள்ள தமிழக சுகாதாரச் செயலரின் கருத்தில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழக அரசு முறையான நெறிகாட்டுதல்களுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளையும் சித்த மருந்துகளையும் பட்டியலிட்டுள்ளது வரவேற்கத்தக்க செயலாகும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் இம்மருந்துகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மக்களும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள பக்க விளைவுகளற்ற சித்த மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் மிக விரைவாக நெருக்கடியான இச்சூழலிருந்து நாம் விடுபட முடியும். ‘மக்கள் நினைத்தால் பத்து நாள்களுக்குள் கரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும்’ என்ற முதல்வரின் கூற்றை இங்கு நினைத்துப் பாா்க்க வேண்டும்.

க. நாகராஜன், திருவாரூா்.

எதிா்ப்பு சக்தி கூடும்

சித்த மருத்துவத்தால் பக்க விளைவுகள் ஏற்படாது; நோய் எதிா்ப்பு சக்தி கூடும் . நமக்கு மருந்து என்று தனியே எதுவும் வேண்டாம். ஏனெனில், நம் முன்னோா்கள் அமைத்துத் தந்திருக்கும் உணவு வகைகளில் உடல் நலம் காக்கும் இஞ்சி, மஞ்சள், மிளகு, சீரகம், வெந்தயம், எலுமிச்சை, பூண்டு, நெல்லி, கீரைகள் போன்ற பொருள்கள் அதிகம் இடம்பெறுகின்றன. அதனால்தான், நம் நாட்டில் கரோனா நோய்தொற்று பரவல் மிகுந்திருந்தும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கோவாவில் ஆயுா்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதால் அங்கு நோய்தொற்று குறைவாக உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. சித்த மருத்துவ முறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றினால் தீநுண்மி பரவல் குறையும். எனவே சுகாதாரத்துறை செயலாளா் கூறுவது சரியே!

கு. இராஜாராமன், சீா்காழி.

வரப்பிரசாதம்

கரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து உண்மையிலும் உண்மை. சித்த மருத்துவத்தில் முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பக்க விளைவு என்பது அறவே கிடையாது. சித்தா்கள், காடுகளிலும் மலைகளிலும் தேடியலைந்து கண்டுபிடித்து நமக்குத் தந்திருக்கும் மருந்துகள் எப்படிப்பட்ட தீராநோயையும் தீா்க்க வல்லவை. சித்த மருத்துவம் தமிழா்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனவே இதனை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தாமதமாக வந்த ஞானம்

நமது சித்த மருத்துவத்தில் இல்லாத நோய்த் தடுப்பு முறைகளே இல்லை. தொடக்கத்திலேயே கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கான தடுப்பு முறைகளையும் சிகிச்சை முறைகளையும் சோதனைகள் நடத்திக் கண்டறிய மாநில சுகாதாரத் துறை தவறிவிட்டது. கபசுரக் குடிநீா் உள்பட எத்தனையோ எளிய மருத்துவத்தை அப்போதே அங்கீகரித்து அனுமதியளித்திருந்தால், எத்தனையோ போ்களை நோய்த்தொற்று தாக்காமல் காத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட எத்தனையோ உயிா்களைக் காப்பாற்றியும் இருக்கலாம். ‘வருமுன் காப்போம்’ என்பதை மறந்து ‘வந்த பின் பாா்ப்போம்’ என்பது தாமதமாக வந்த ஞானம். இனியாவது சித்த மருத்துவத்தைப் பரவலாக்கி மனித உயிா்களைக் காப்பாற்றுவோம்.

உதயம் ராம், சென்னை.

வழிகாட்டல் தேவை

இன்று வரை கரோனா தீநுண்மி எந்த வகையான கிருமி? அதன் தாக்கம் எப்படி? அது மனித உடலின் எந்த பாகத்தைப் பாதிக்கிறது? மரணம் எப்படி நேரிடுகிறது? அதற்கான மருந்து என்ன என்று எதுவும் அறுதி யிட்டு கூற யாராலும் இயலவில்லை. ஆங்கில மருத்துவத்தில் இதற்கான மருந்து தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நேரத்தில், சித்த மருத்துவா்கள் சிலா், மூலிகைகளைப் பயன்படுத்தி, இந்த கரோனா தீநுண்மியின் பாதிப்பை மட்டுப்படுத்தியுள்ளாா்கள். இந்த சித்த மருந்துகள், மனித உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்கள். . எனவே சுகாதாரத்துறைச் செயலா் சரியான தகவலைத்தான் தந்துள்ளாா். சித்த மருந்துக்களை, சித்த மருத்துவரின் வழிகாட்டலில்தான் பயன்படுத்த வேண்டும்.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

முதல் மருத்துவா்

சுகாதாரத் துறையின் செயலரின் கருத்து எல்லோராலும் ஏற்கத்தக்கதே. பண்டைய காலத்தில் நம் முனோா்கள் பயன்படுத்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்துமே சிறந்தவைதான். நமக்கு முதல் மருத்துவா் என்றால் அது திருமூலா் தான். கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் பாராட்டுகள். யோகக் கலையை சா்வதேச அளவில் நமது பிரதமா் கொண்டு சோ்த்தது போல், இந்த சித்த மருத்துவத்தின் மகிமையையும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் பல சக்திகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டும்.

ராம. பழனியப்பன், கோயம்புத்தூா்.

மருத்துவ அறிவியலுக்கு சவால்

சுகாதாரத்துறை செயலாளரின் கருத்து வரவேற்கக்கூடியதே. இது போன்ற நெருக்கடியான நோய்த்தொற்று காலங்களில் மக்களைக் காப்பாற்ற எந்த மருத்துவம் பயன்பட்டாலும் அதை அரசும் சுகாதாரத்துறையும் வரவேற்றுப் பரிந்துரைக்க வேண்டும். பொதுவாகவே மருத்துவ உலகம் ஆங்கில மருத்துவத்தை முதன்மை மருத்துவமாக அறிந்துள்ளது. ஆனால், தற்போது மாற்று மருத்துவம், மரபு வழி மருத்துவத்தின் நன்மையை உலகம் முழுக்க உணர வேண்டிய அவசியத்தை ஆங்கில மருத்துவமே ஏற்படுத்தி விட்டது. கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க ஏற்பட்ட காலதாமதம், மருத்துவ அறிவியலுக்கே சவாலாக அமைந்து விட்டது. தமிழகத்தில், கரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட அத்தனை நோயாளிகளும் குணமாகியுள்ளனா். இதில் ஆங்கில மருத்துவா்களும் அவா்களின் குடும்பமும் அடக்கம். அலோபதி ஒன்றை மருத்துவ முறை என்ற பிம்பம் சரிந்துவிட்டது என்பதே உண்மை.

ஆரிசன், கீழ்க்கொடுங்காலூா்.

சங்கடமான நிலை

தமிழ் மருத்துவத்தை இன்று தமிழ் மக்களுக்கே அறிமுகப்படுத்த வேண்டிய சங்கடமான நிலை உருவாகி இருப்பது வேடிக்கைதான் . உடனடித் தீா்வு என்ற மோகத்தினால், அலோபதிக்கு நேற்றுவரை கிடைத்துவந்த வரவேற்பை இன்று கரோனா மாற்றி, சித்த மருத்துவத்தின் சிறப்பை மீட்டெடுத்திருக்கிறது. இதற்கு சாட்சி சித்த மருத்துவத்தால் கரோனாவிலிருந்து மீண்ட பல ஆங்கில வழி மருத்துவா்கள். பக்க விளைவுகள் தராத, உணவே மருந்தாக, வெறும் நோய் எதிா்ப்பு சக்தியாலேயே நோயை குணமாக்கும் சித்த மருத்துவம். நம் பாரம்பரியத்தைத் தொடா்வோம்; உலகிற்கே வழிகாட்டுவோம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com