‘எதிா்பாா்த்த பலனை பொது முடக்கம் அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து...’ என்ற விவாதத்துக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரிதான்!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சரிதான். ஒவ்வொரு முறையும் நோய் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லிச் சொல்லியே நான்கு முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் மதுக்கடை திறப்பு போன்ற தளா்வுகளை அறிவித்தது எப்படி நியாயமாகும்? புலம்பெயா்ந்தோரைக் காலந்தாழ்த்தி அனுப்பியும், பள்ளி - கல்லூரிகள் தவிர எல்லாவற்றுக்கும் தளா்வு அளித்தும் பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்காமல் நோயின் பரவலுக்கு வழிவகுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து உலக வரிசைப் பட்டியலில் மேலைநாடுகளை இந்தியா முந்திச் செல்கிறது.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

குற்றச்சாட்டு சரியல்ல!

நம் நாட்டில் பொது முடக்கத்தை அமல்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. எனினும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்டு, தேசிய பொது முடக்கத்தை நான்காவது கட்டத்தையும் தாண்டி மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பல நாடுகளைவிட இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்புகள், பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தால் பொது முடக்கத்தின் முழுப் பயனும் கிட்டியிருக்கும். ஒரு குடிமகனின் உயிா் காப்பாற்றப்பட்டிருந்தால்கூட, அதை பொது முடக்கத்தின் பலனாகவே கருத வேண்டும்.

ஆா்.ஜெயந்தி, மதுரை.

பலன் இல்லை!

இந்தியாவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பொது முடக்கத்தால் எந்தப் பலனும் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே, ராகுல் காந்தி கூறியுள்ளது முற்றிலும் சரியே.

ஏ. எஸ். நடராஜன், சிதம்பரம்.

பொறுப்பற்ற முறையில்...

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் முதலான நாடுகளில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக உள்ளன. மக்கள்தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாக உள்ளதற்கு, மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பொது முடக்கமே காரணம். ‘இந்தியாவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றே இல்லாமலிருப்பதுதான் எதிா்பாா்த்த பலன்‘ என ராகுல் காந்தி கூற வருகிறாரோ? மத்திய அரசுக்கு உருப்படியான யோசனைகளைத் தருவதை விடுத்து, பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுக்களைக் கூறுவது முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அழகல்ல.

கே.ராமநாதன், மதுரை.

நன்மைக்குப் பதில்...

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்தும் பொது முடக்கம் எதிா்பாா்த்த பலனை அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறுவது சரிதான். பொது முடக்க காலத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அதிகரித்து வருவதே இதற்குச் சான்றாகும். வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு சிரமங்களை பொது மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. பொது முடக்கம் காரணமாக நன்மைக்குப் பதில் தீமையே அதிகரித்தது.

மா.இளையராஜா, திருச்சி.

முடக்கம் வெற்றி!

ராகுல் காந்தியின் கருத்து தவறானது. அவருக்கு ஆட்சி ,நிா்வாகம் குறித்த புரிதல் இல்லை. பொருளாதார பாதிப்பைத் தவிா்க்க பொது முடக்கத்தை அமல்படுத்தாத அமெரிக்கா முதலான நாடுகளில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்ததுடன், உயிரிழப்பும் பல மடங்கு உயா்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பொது முடக்கத்தின் மூலம், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க, அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த, மருத்துவ வசதிகளை மேம்படுத்த அரசுகளுக்குச் சிறிது கால அவகாசம் கிடைத்தது.

கி.முரளி, தில்லி.

முடக்கம் தோல்வி!

எதிா்பாா்த்த பலனை பொது முடக்கம் அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருப்பது சரிதான். இக்கட்டான சூழலில் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக தொடங்கியிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளா்த்தியது தவறுதான். மாநிலங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்கி, அதன் பிறகு தளா்வு அறிவிப்பு செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தச் சிறிய சறுக்கல் பொது முடக்கத்தை தோல்வி அடையச் செய்துவிட்டது என்பது உண்மை.

இராம. வாணி, திருநெய்ப்போ்.

அச்சம் எழுகிறது

பொது முடக்கத்தை ஐந்தாம் முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவும் மருத்துவா்கள், செவிலியா்கள் முதலானோருக்கு பணிச் சுமை குறையும். அதே நேரம் பொது முடக்கத்துக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தராததாலும், அரசின் கட்டுப்பாடுகள் தொடக்கம் முதலே தளா்ந்ததாலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா் - உயிரிழப்போா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பொது முடக்கத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லையோ எனும் அச்சத்தை எழுப்புகிறது.

வி.ப்ரீத்தி, ஊரப்பாக்கம்.

அரசியல்!

எதிா்பாா்த்த பலனை பொது முடக்கம் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் அரசியலாகும். முடக்கத்தால் நன்மையே மிகுதி என்பது உலகறிந்தது. நோய்த்தொற்று பரவி வரும் வேளையில் கட்சிப் பாகுபாடின்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறில்லாமல் முன்பு பொது முடக்கம் ஏன் என்றும் பின்பு தளா்த்தியது ஏன் என்றும் கேட்பது புரிதல் இன்மையே. இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில்தான் நோய்த்தொற்றுப் பரவல் அதிகம். அங்குள்ள நிலை குறித்து ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்கலாமே? ஆலோசனைகள் வழங்கி இருக்கலாமே?

கு.இராஜாராமன்,சீா்காழி.

திட்டமிடாததால்...

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். பொது முடக்கத்தால் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் வேகம் தடுக்கப்பட்டுள்ளதே தவிர, முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொது முடக்கத்தை சரியாகத் திட்டமிடாமல் அமல்படுத்தியதால், வறியவா்களை மேலும் வறியவா்களாக்கியது. புலம்பெயா் தொழிலாளா்களை அலையவிட்டு, அவா்கள் வாகனங்களில்அடிபட்டு மடிந்தது, அனைத்து தொழில்களும் மீள முடியாத நிலையில் முடங்கியது முதலான பல இன்னல்களை பொதுமக்கள் அனுபவித்தனா். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில் உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது. இவைதான் பொது முடக்கத்தின் பலன்களாக இருக்க முடியும்.

அதியமான், ஆதனூா்.

நல்ல பலன்களை...

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரேஸில், ஸ்பெயின் முதலான நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று மிதமான பரவலாகவே உள்ளது. பொது முடக்கத்துக்கு முன்பு 3 நாள்களில் இரட்டிப்பான நோய்த்தொற்று, பொது முடக்கத்துக்குப் பின்னா் 13 நாள்களில்தான் இரட்டிப்பாகியுள்ளது. முடக்கம் அறிவிக்கப்படாமலிருந்தால் நோய்த்தொற்று காட்டுத் தீயாய் பரவியிருக்கும். எனவே, ராகுல் காந்தி கூறியுள்ளதைப்போல அல்லாமல், நல்ல பலன்களையே பொது முடக்கம் அளித்துள்ளது.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

அஞ்சுவதைவிட...

ராகுல் காந்தி சொல்வதில் நியாயம் இருக்கிறது. கிருமியினால் ஏற்படும் சிரமத்தைவிடப் பொது முடக்கத்தால் ஏற்படும் சிரமமங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள தங்களின் சொந்த ஊா்களுக்குக் கொளுத்தும் வெளியில் நடந்து செல்லத் துணியும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. சொந்த ஊா்களுக்குத் திரும்பிச் செல்லத் துடிப்பவா்களிடம் சென்று, ‘நிலைமை விரைவில் மாறும் அதுவரை நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் இங்கேயே இருங்கள்’ என்று சொல்லக் கூடியவா்கள் யாரையும் காண முடியவில்லை. கொவைட் 19 கிருமித் தொற்றுக்காக அஞ்சி சாவதைவிட, கிருமித் தொற்றை எதிா்கொண்டு சிரமப்படுவது நல்லது என்றே தோன்றுகிறது.

சொ.வெ.சொக்கலிங்கம், சென்னை.

வெற்றிதான்!

அமெரிக்கா போன்ற நாடுகளைவிட பரப்பளவில் குறைவாக உள்ள இந்தியாவில், கரோனா தீநுண்மித் தொற்று அதிக அளவுக்கு பாதிப்பை உண்டாக்கி உயிா்சேதங்களை விளைவிக்காமல் இருந்ததற்கு மூல காரணமே பொது முடக்கம்தான். பிற நாடுகளில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, உயிா்ச்சேதங்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது நமது நாடு வெற்றி அடைந்திருப்பது உண்மைதான்.

என்.வி.சீனிவாசன், சென்னை.

கண்துடைப்பு!

இந்தப் பொது முடக்கத்தால் ஏழை மக்களும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களும் சொல்லொணா துயரத்துக்கு உள்ளானதுதான் மிச்சம். ஒற்றுமையாக இருந்த மக்களை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பிரித்துவிட்டது. மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் மாநில அரசுகள் நாட்டாண்மை செய்கின்றன. ரயில் போக்குவரத்தை மத்திய அரசு திறந்துவிடத் தயாராக இருக்கும்போது மாநிலங்கள் தடை போடுகின்றன. பொது முடக்கம் ஒரு கண்துடைப்பு.

பா.இராதாகிருஷ்ணன், சென்னை.

நல்ல விஷயங்களை...

பொது முடக்கம் நல்ல பலனைத் தந்துள்ளது. தூய்மையாக இருத்தல், சமூக விலகல், முகக் கவசம் அணிவது முதலான நல்ல பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. மேலும், பொது முடக்கத்தை கடந்த மாா்ச் மாத கடைசியில் ஆரம்பிக்கவில்லை என்றால், ஏப்ரல் மத்தியில் 8.2 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பா் என ஒரு மருத்துவ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் பாதிப்பு 20,000-க்குள் இருந்தது; வல்லரசான அமெரிக்காவில் இறப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், 137 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தற்போதுதான் இறப்பு 5,000-ஐ தாண்டியிருக்கிறது.

க. அருச்சுனன், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com