"காங்கிரஸுக்கு மாநிலங்களவை வாய்ப்பை திமுக வழங்காதது குறித்து என்ன கருதுகிறீர்கள்' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 திமுகவில் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்தபோது மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று கேட்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு தரப்பட்டது.

கட்டாயமில்லை
 
திமுகவில் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்தபோது மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று கேட்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு தரப்பட்டது. ஆனால், காங்கிரஸுடன் அப்படி ஓர் உடன்படிக்கை இல்லாததால் மாநிலங்களவை வாய்ப்பை காங்கிரஸுக்கு திமுக தர வேண்டிய கட்டாயமில்லை. அளிக்காததில் தவறு ஒன்றும் இல்லை.
 கவியழகன், திருவொற்றியூர்.
 கூட்டணி தர்மத்துக்கு...
 தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை வாய்ப்பை திமுக வழங்காதது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. "அனைத்தும் தனக்கே'என்கிற திமுகவின் மனப்பான்மையும் அணுகுமுறையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை வாய்ப்பு அளித்து கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றியிருக்கலாம்.
 ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
 வேண்டாத விருந்தாளி
 1972-இல் திமுக உடைந்து எம்.ஜிஆர் கட்சி தொடங்கியபோது தங்கள் இழப்பைச் சரிகட்ட இரு கழகங்களுமே (திமுக, அதிமுக) காங்கிரûஸ துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு வந்தனர். தற்போது இரு கழகங்களுமே காங்கிரûஸ வேண்டாத விருந்தாளியாக நினைப்பதை அறிய முடிகிறது. எனவே, கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி பாதிப்பில்லை என்ற நிலையில் திமுக உள்ளதால் மாநிலங்களவை வாய்ப்பை வழங்கவில்லையென தெரிகிறது.
 உ.இராசமாணிக்கம், கடலூர்.
 ராஜதந்திரமல்ல!
 மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெற நான்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தயவை நாட வேண்டிய நிலை உள்ளது. ஓர் உறுப்பினருக்கு இடம் கொடுத்து சமாதானப்படுத்தாமல், அவசரமாக திமுக வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸில் மனக்கசப்பை அதிகரிக்கும். அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும். 2021 பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது திமுகவின் கெளரவப் பிரச்னை. எனவே, வலுவான கூட்டணி அமைக்க காங்கிரûஸயும் அனுசரிக்காமல் புறக்கணிப்பது ராஜதந்திரமல்ல.
 அ. யாழினி பர்வதம், சென்னை.
 "மினிமம் பேலன்ஸ்' இல்லை!
 தேர்தல்களில் திமுகவால் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கணிசமான தொகுதிகளில் அது வெற்றி பெறுவதில்லை. அதன் வாக்கு வங்கிக் கணக்கில் "மினிமம் பேலன்ஸ்'
 இல்லை என்பது உலகறிந்த உண்மை. திமுகவுக்கு காங்கிரஸ் கூடுதல் சுமை - ஆறாவது விரல் போன்றது.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 தொடரும்
 ஒரு காலத்தில் தூணான தொண்டர் படையுடன் பாலமாக உயர்ந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இன்று மாற்றுக் கட்சிகளுக்கு சிதறி ஓடிய தொண்டர் படையை இழந்து, பாலமாக மட்டுமே இருந்து பழக்கப்பட்ட தலைவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. கூட்டணி என்ற தூணில் ஏறி, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் எதிர் வேட்பாளரின் "எதிர்' வாக்குகளையும் மட்டுமே நம்பி களத்தில் நிற்கும் வரை இது தொடரவே செய்யும்.
 க.அய்யனார், தேனி.
 தராதது ஏன்?
 கூட்டணி ஒப்பந்தத்தில் இல்லை என்றபோது வாய்ப்பு தந்துதான் தீர வேண்டும் என்ற கட்டாயமில்லையே.மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்து விடவேண்டுமென்ற முனைப்போடு இருக்கிற காலகட்டத்தில் தனது கட்சிக்காரர்களுக்கு பதவியைக் கொடுத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில்தான் காங்கிரஸுக்கு வாய்ப்பு தரவில்லை என்று தோன்றுகிறது.மேலும், தமிழகத்தில் காங்கிரஸின் வாங்கு வங்கியை கணக்கில் கொண்டால் அது அமைதி காப்பதுதான் புத்திசாலித்தனம்.
 சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 பெரிய அண்ணன்...
 காங்கிரஸ் கட்சி தயவு இருந்தால்தான் திமுகவின் மூன்றாவது வேட்பாளர் மாநிலங்களவை உறுப்பினராக முடியும் என்பது தெரிந்தும் கூட்டணி தர்மத்துக்காகவாவது காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை திமுக அறிவித்தது, "பெரிய அண்ணன்' மனப்பான்மையை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற சுயமரியாதையை இழந்து நிற்கும் காங்கிரûஸ பார்க்கும்போது வேதனை அளிக்கிறது.
 முருகு. செல்வகுமார், சென்னை.
 முக்கியத்துவம் கருதி...
 தன் கட்சி (திமுக) முன்னோடிகளிடையையே போட்டி நிலவும்போது கூட்டணிக் கட்சிக்கு இடம் ஒதுக்க யாரால் முடியும்? மேலும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் தன் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வாதங்களை எடுத்து வைத்து அரசியல் முக்கியத்துவம் பெறவேண்டும் என திமுக கருதலாம். அதில் தவறில்லை.
 துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.
 மீறிய செயல்
 மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் திமுகவுக்கு நல்ல வளமான கேபினட் அமைச்சர் பதவியை "பிளாக்மெயில்' செய்து வாங்கினர். ஆனால், தமிழகத்தில் "மைனாரிட்டி' பலத்துடன் - காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்தபோது, காங்கிரûஸ திமுக மதிக்கவில்லை. இந்த ஆண்டாவது ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் காங்கிரஸுக்கு கிடைக்குமென அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். அரசியல் தர்மத்தை திமுக மீறி உள்ளது.
 குறிஞ்சிப்பாடி ஜெயராமன், அரியூர்.
 காரணம் என்ன?
 மாநிலங்களவையில் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதன் மூலம் தில்லியில் தனது செல்வாக்கை திமுக உயர்த்திக் கொள்ள நினைக்கிறது. மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் தனது கட்சியின் பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளித்து திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் மாநிலங்களவை வாய்ப்பை காங்கிரஸுக்கு திமுக வழங்கவில்லை.
 பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
 வழங்கியிருக்க வேண்டும்!
 2006 - 2011 தமிழக சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸின் ஆதரவுடன்தான் ஆட்சியை திமுக தொடர முடிந்தது. மாநிலங்களவை திமுக உறுப்பினராகக் கனிமொழி தேர்வு செய்யப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பே காரணம். இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முறை மாநிலங்களவை வாய்ப்பை காங்கிரஸுக்கு வழங்கியிருக்க வேண்டியது திமுகவின் கூட்டணி தர்மமாகும்.
 எஸ். ராஜசிம்மன், திருவாரூர்.
 கூட்டணி தொடருமா?
 கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு போதுமான வெற்றி கிடைக்கவில்லை. மேலும், அந்தக் கட்சிக்கு சரியான தலைமையும் இல்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவதும் இல்லை. சரியான கொள்கைகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியோடு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்பதே சந்தேகம்.
 நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
 சுமை போல...
 பொதுவாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரûஸ ஒரு சுமை போலவே திமுக கருதுகிறது. திமுகவின் வாக்குவங்கியால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்ற எண்ணம் திமுக தலைவர்களுக்கு இருக்கிறது. எனவே, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரûஸ திமுக நடத்துவதால்தான் மாநிலங்களவை இட வாய்ப்பு தரவில்லை.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 எதிர்பார்த்ததுதான்
 காங்கிரஸுக்கு வாய்ப்பு தருவதால் திமுகவுக்கு எந்த லாபமும் இல்லை. மீறிக் கொடுத்தால் கட்சிக்குள் பிரச்னைகள் எழும். இது நஷ்டம். கொள்கை பற்றி பேரம் பேசலாம் என்றால், கொள்கைக்கான கூட்டணியும் இல்லை. இந்த விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்த பிறகே காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி விட்டதாகத் தோன்றுகிறது.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 கணித்துத்தான்...
 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேவையில்லாமல் அதிகப்படியான காங்கிரஸ் உறுப்பினர்களை திமுக சார்பில் அனுப்பிவிட்டோம் என்று திமுக வருந்திக் கொண்டிருக்கும். மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியோ, தேர்தல் காலத்தில் தொண்டர்களின் உழைப்போ, அர்ப்பணிப்போ கிடையாது. இதையெல்லாம் திமுக கணித்து காங்கிரஸுக்கு மாநிலங்களவை இட வாய்ப்பை அளிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தில் திமுகவை நம்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்து திமுக இல்லை. அதனால், திமுக செய்தது சரியே.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com