கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஒவ்வொரு ஜாதிக்கும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியா? தவறா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஒவ்வொரு ஜாதிக்கும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தவறு. அப்படிச் செய்வது, மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்

ஒற்றுமைக்கு ஊறு
 ஒவ்வொரு ஜாதிக்கும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தவறு. அப்படிச் செய்வது, மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மக்கள்தொகை அதிகம் என்று அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கினால், மற்ற ஜாதியினர் எரிச்சலடைவார்கள். ஜாதிய உணர்வுகள் மேலோங்கும். எனவே, இம்முறை கூடவே கூடாது. அரசியல் லாபத்திற்காக எழுப்பப்படும் இக்கோரிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 எதிர்பார்ப்பு
 ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கோரிக்கை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாக கோரிக்கையாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது மக்களிடம் பிரிவை ஏற்படுத்தும் கோரிக்கையாகும். இந்தியாவில் ஜாதி, மத, இன உணர்வு முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இக்கோரிக்கை அதற்கு எதிரானது. இப்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறை தொடர்வதுதான் நல்லது.
 கு. அருணாசலம், தென்காசி.
 ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம்
 இக்கோரிக்கை நிறைவேறினால் ஜாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி விடும். ஜாதிப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து அவை சமூக பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிடும். திறமையின் அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் சூழலில், ஜாதியை அடிப்படையாக வைத்து வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருப்பது சரியா? ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதே இன்றைய தேவை.
 மா. பழனி, தருமபுரி.
 ஜாதி என்னும் வட்டம்
 நல்ல கருத்துகளை, சிந்தனைகளை அரசியல் கட்சிகளிடம் விரும்புவதில்லை. ஒரு சில கட்சிகள் இந்தக் காலத்திலும் ஜாதி என்னும் வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பது மிகவும் தவறு. ஜாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது. ஜாதி என்கிற தகுதியால் வேலைவாய்ப்புப் பெறுவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொள்ள மாட்டார்கள். சமுதாய ஒற்றுமை இல்லாமல் போய்விடும். அரசு இந்த முறையை அனுமதிக்கக் கூடாது.
 ப. மனோகரன், சேலம்.
 தகுதியே முதல்நிலை
 இந்தக் கோரிக்கை ஏற்புடையதல்ல. அதிகமான மக்கள்தொகை உடைய ஜாதிக்கு அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது, இரண்டாம், மூன்றாம் நிலையில் மக்கள்தொகை உள்ள ஜாதியினரையும், சிறுபான்மை சமூகத்தினரையும் மிகவும் பாதிக்கும். இரு ஜாதியினரிடையே பரஸ்பர வெறுப்புணர்வு உருவாகும். கல்வித் தகுதியும் தொழில் சார்ந்த திறனும் உடையவர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தகுதியா ஜாதியா என்று பார்க்கும்போது தகுதியே முதல்நிலை பெறும். ஜாதி ஒரு தகுதியாகாது.
 ச. கண்ணப்பன், திருநெல்வேலி.
 கண்கூடு
 இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றுதான் கொண்டுவரப்பட்டது.ஆனால், அக்கொள்கை, அரசியல் லாபத்திற்காக இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருவது கண்கூடு. இன்றும் அனைத்து ஜாதியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உண்டு. அவர்களுக்கே இச்சலுகை கிடைக்க வேண்டும். ஜாதியின் மக்கள்தொகையை வைத்து இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 நியாயம்தானா?
 ஜாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தவறு. சுதந்திரம் அடைந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஜாதிகளை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல் இப்படி ஜாதி கணக்கு பார்க்கச் சொல்வது நியாயம்தானா? அப்படியானால் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் கூறியது வெறும் மேடை முழக்கம் மட்டும்தானா? இக்கோரிக்கை சிலரின் அரசியலுக்கு வேண்டுமானால் பலம் சேர்க்கலாம்; ஆனால், சமூக ஒற்றுமைக்கு வலு சேர்க்காது.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 ஏற்புடையதல்ல
 இக்கோரிக்கை அபத்தமானது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான மக்கள்தொகை கொண்ட ஜாதியினரேஅதிக எண்ணிக்கையில் பணிகளில் அமர்த்தப்படும் நிலை ஏற்படும். பிற ஜாதியினரின் அறிவும், திறமையும் புறக்கணிக்கப்படும். இக்கோரிக்கையைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலும் இதுபோல இடஒதுக்கீடு கோரும் நிலை வரலாம். இவையெல்லாம் ஜனநாயக நெறிமுறைக்கு ஏற்புடையதல்ல.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 சமநிலை
 இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது, தாழ்ந்து கிடக்கும் மக்களும் சமூகத்தில் வேலைவாய்ப்பு கல்வி போன்றவற்றில் சமநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்க்காகவே. இன்று ஏறக்குறைய அந்த நிலையை அடைந்து விட்டோம் என்பதே உண்மை. இடஒதுக்கீட்டை ஜாதி வாரியாகப் பிரிப்பது, மக்களிடையே ஜாதி உணர்வை மேலும் வளர்ப்பது போல் ஆக்கிவிடும். இனி வரும் தலைமுறையாவது பிரிவினை உணர்வு இல்லாத தலைமுறையாக உருவாக வேண்டும்.
 டி. மகிழ்நன், திருநெல்வேலி.
 வாய்ப்புகள் பறிபோகும்
 இக்கோரிக்கை தவறானது. தற்காலத்தில் இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை இல்லாதவர்களெல்லாம் பதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் பெறுகின்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, ஜாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால், குறைந்த மக்கள்தொகை கொண்ட ஜாதிகளில் உள்ள தகுதி படைத்தவர்களின் வாய்ப்புகள் பறிபோகும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே சரியானது.
 உ. அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
 இடங்கள் போதாது
 இந்தக் கோரிக்கை மிகமிக தவறு. ஒவ்வொரு ஜாதிக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முற்பட்டால் புள்ளிவிவரப்படி ஒவ்வொரு ஜாதியிலும் மக்கள்தொகை பெருகிவிடும். இட ஒதுக்கீட்டில் எல்லா ஜாதியும் இடம்பெற வேண்டுமானால் நூறு விழுக்காட்டு இடங்கள் போதாது. இதனால் எந்த ஜாதியினரையும் திருப்திப்படுத்த முடியாது. ஜாதிக் கலவரங்கள்கூட ஏற்படலாம். இப்போது இருக்கின்ற இட ஒதுக்கீட்டை சரியாக வழங்கினாலே போதும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நியாயமானது
 இந்தக் கோரிக்கை நியாயமானது, சரியானது. எந்த நிபந்தனையும் இல்லாமல் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு வழங்குவதால் கல்விச்சாலையில், வேலைவாய்ப்பில் அவரவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கும். ஒருவர் தன் மதத்தைக்கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஜாதியை மாற்ற முடியாது. இவ்வாறு அமல்படுத்தினால் அனைத்து ஜாதியினரும் மகிழ்ச்சி அடைவர். அரசு ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 கேள்விக்குறி
 இது தவறான கோரிக்கை. எல்லா சாதியினரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; சமமாக ஆளப்பட வேண்டும். சாதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கோரிப் பெற்றால், அங்கு சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி விடும். எண்ணிக்கைப் பெரும்பான்மை உள்ள சாதி கோலோச்ச முயலும். இதனால் சிறுபான்மையோர் பாதிக்கப்படுவர். தகுதியுடையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமே தவிர, சாதிய மோகத்தில் இட ஒதுக்கீடு கோருவோருக்கு வழங்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சியே தேவை.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 காலத்தின் கட்டாயம்
 இக்கோரிக்கை காலத்தின் கட்டாயம். பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் அவரவர் சாதிக்கான கட் ஆஃப் பெற்று இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும், நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பொதுப்பிரிவிலும் என இரண்டு வாய்ப்புகள். முற்பட்டோருக்கு மிக அதிக மதிப்பெண் மட்டுமே வாய்ப்பு. பொதுப் பிரிவில் தற்போது அனைத்துப் பிரிவினரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருவதால், முற்பட்டோர் இடம் பெறாமலும் போகலாம்.
 சு. ஸ்ரீவித்யா, நாமக்கல்.
 புறக்கணிக்க வேண்டும்
 இது தவறான கோரிக்கை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கான இட ஒதுக்கீட்டு பிரச்னையே தீர்ந்தபாடில்லை. தற்போது கோரப்படும் ஜாதிவாரி மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது பிரச்னையை பெரிதாக்குமேயன்றி குறைக்காது. இது ஜாதியில் உள்ள உட்பிரிவுகளுக்கிடையில் மோதலை உருவாக்கும். ஜாதி இட ஒதுக்கீடு என்பது உட்பிரிவு இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும். எனவே, இக்கோரிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அபத்தம்
 இக்கோரிக்கையை ஏற்க இயலாது. ஜாதி, மத பேதமில்லாத சமூகமே முன்னேற்றம் அடையும் என்பது தெரிந்தும், ஜாதியின் பெயரால் சலுகைகள் கேட்பது அபத்தம். நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏன்? இட ஒதுக்கீடு வேண்டும், போட்டித் தேர்வுகள் வேண்டாம் என்கிற மனநிலையை வருங்காலத் தறைமுறையினரின் மனதில் உருவாக்குவது மிகவும் தவறு.
 யாழினி பர்வதம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com