கடந்த வாரம் கேட்கப்பட்ட "தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதே.

 கடமை
 தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதே. நாட்டை ஆள்வதற்குரிய தகுதி படைத்தோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், குடிமக்களுக்குக் கிடைத்த வரம். அது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். கடமையைச் செய்யாதவர்களுக்கு உரிமையைப் பெறும் தகுதியில்லை. எனவே, வாக்களிக்காதவர்கள் அரசின் சலுகைகளைப் பெறக் கூடாது.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 நியாயமல்ல
 எந்த வேட்பாளரும் தகுதியானவர் இல்லை என்றாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவித்திட "நோட்டா' என்கிற வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் தேர்தலில் வாக்களிக்காமல் வீட்டில் முடங்கியிருப்பது நியாயமல்ல. இந்நிலை அகன்றிட கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அயல்நாட்டில் வாழ்வோருக்கும் இணையதளம் வாயிலாக வாக்கினைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.
 க. நாகராஜன், திருவாரூர்.
 ஜனநாயக விரோதம்
 நியாயமான காரணங்களின்றி ஒருவர் வாக்களிக்காமலிருப்பது தவறு. மொத்த வாக்காளர்களில் கணிசமான சதவிகிதம் வாக்களிக்காமலேயே அலட்சியம் செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். நாம் வரியாக செலுத்திய கோடிக்கணக்கான ரூபாய்தான் தேர்தலுக்காக செலவிடப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறவாக்களித்திருப்பது அவசியம் என்ற விதிமுறை தேவை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 வாக்காளர் பட்டியல்
 இறந்த வாக்காளர்களின் பெயர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் தொடர்கிறது. வாக்குப்பதிவின்போது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தி, தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை. எனவே இந்த யோசனை சரியல்ல.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 ஆரோக்கியமானதல்ல
 படித்தவர்கள் வாழும் நகர்ப்புறத்தில் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக பதிவாகி வருவது ஆரோக்கியமானதல்ல. இத்தனைக்கும் தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையை சுற்றுலா செல்லவும் தொலைக்காட்சி பார்த்து பொழுதைக் கழிப்பதற்கும் பயன்படுத்துவது சரியல்ல. வாக்களிக்காத நபர்களின் ஒருநாள் சம்பளத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 தவறு இல்லை
 கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானிய மக்கள் தங்கள் ஜனநாயக கடைமையை நிறைவேற்றத் தவறுவதில்லை. மெத்த படித்த மேதாவிகள் வசிக்கும் நகர்ப்புறங்களில்தான் வாக்களிப்பு விகிதம் குறைவு. மாநிலத்திலேயே சென்னையில்தான் குறைந்த வாக்குப்பதிவு. வாக்களிக்க இயலாமல் போனதற்கு தகுந்த காரணமாக இல்லாவிட்டால் அவர்களுக்கு அரசின் சலுகைகளை ரத்து செய்வதில் தவறு எதுவும் இல்லை.
 க. செல்வபாண்டி, கல்லணை.
 ஏற்கத்தக்கதல்ல
 இந்த யோசனை ஏற்கத்தக்தல்ல. நம்மில் பலர், வேலை பார்ப்பது ஒரு ஊரில். குடும்பம் இருப்பது வேறு ஊரில். குடும்பம் இருக்கும் இடத்தில்தான் வாக்கை அவர்கள் செலுத்த முடியும். வேலை செய்யும் இடத்தில் இருந்து செலவு செய்து வாக்களிக்க போக யாரும் விரும்புவதில்லை. உடல் நலன் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம். வாக்களிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் எவருக்கும் அரசின் சலுகைகளை நிறுத்தக்கடாது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 விதிவிலக்கு
 இந்த யோசனை சரியானதே. ஜனநாயக கடமையை நிறைவேற்றத் தவறும் வாக்காளர்கள் அத்தியாவசிய தேவைகளைப் பெற தகுதியற்றவர்கள் ஆவர். ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். இதில் தேர்தல் ஆணயமும், அரசும் தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுப்பதே வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் உண்மையான ஜனநாயகம் மலரவும் வழிகோலும்.
 மு. நடராஜன், திருப்பூர்.
 மன அழுத்தம்
 வெளியூரில் வேலை செய்யக்கூடிய வாக்காளர்கள், தங்கள் ஊருக்கு வந்து வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க இயலாமல் போகலாம். வாக்குச்சாவடிக்கு வர இயலாமல் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் வயதானவர்களாகவும் இருக்கலாம். அரசின் சலுகையென்பது பெரும்பாலான பொதுமக்களின் வாழ்வாதாரமாகயிருக்கும் சூழலில், அதனை ரத்து செய்வது தவறு. மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 விழிப்புணர்வு
 வாக்காளர்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறில்லை. ஆனால், கட்டாயப்படுத்துதல் என்பது மறைமுகமான மனித உரிமை மீறலே ஆகும். நியாயமான காரணத்தால் வாக்களிக்காதவர்களுக்கும், வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்களுக்கும் அரசின் சலுகைகளை ரத்து செய்வது சரியா? வாக்களிப்பதன் அவசியத்தை வாக்காளர்கள் உணர அரசு ஆவன செய்ய வேண்டும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 தார்மிக உரிமை
 தேர்தல் என்பது நமக்கு ஏற்ற அரசை நாமே அமைத்துக்கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பு. கடமையை நிறைவேற்றாதவர்களுக்கு அரசின் சலுகைகளைப் பெற எந்தவிதமான தார்மிக உரிமையும் இல்லை. விலைமதிக்க முடியாத வாக்களித்தல் எனும் கடமையைச் செய்பவரே அரசின் விலையில்லா சலுகைகளைப் பெறத் தகுதியுடையோராவர். அரசின் எல்லாச் சலுகைகளும் வாக்களிக்காதவர்களுக்கு ரத்து செய்யப்பட வேண்டும்.
 வி.கே. இராமசாமி, கோயமுத்தூர்.
 கருத்துக் கணிப்பு
 அதிக வாக்கு சதவிகிதம் வர எது தடையாக இருக்கிறது என்பதை அறிய தேர்தல் ஆணையம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களிக்காதவர்கள் பட்டியல் கைவசம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தில் அனைவர் பங்கும் வேண்டும் என்று தீர்மானித்தால், எதற்காக சிலர் வாக்களிக்கவில்லை என்பதைக் கண்டறிந்து அந்தக் குறையைக் களைய முயற்சி எடுக்க வேண்டும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 சிக்கல்கள்
 மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. வாக்களிக்காதோர் விவரம் சேகரிக்கும் நடைமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். கோடிக்கணக்கில் வரிப்பணமும் மனித உழைப்பும் வீணாகும். எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்காததுதானே ஜனநாயகம்? வேண்டுமானால் வாக்களித்தோர்க்கு அரசு கூடுதலாக சில சலுகைகளை அளிக்கலாம்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 என்ன தகுதி?
 இந்த யோசனை சரியே. ஜனநாயகம் எனும் மாளிகையை பெருவாரியான மக்கள் அரும்பாடுபட்டுக் கட்டுவார்கள். அதற்காக ஒரு செங்கல்லைக்கூட நகர்த்தாமல், அந்த மாளிகையில் ஜம்பமாக வாழலாம் என்ற குறுகிய மனப்பான்மையுடன் சில மனிதர்கள் இருப்பார்கள். இது சரியா? அப்படிப் பொறுப்பற்று இருக்கும் மனிதர்களுக்கு ஜனநாயக முறைப்படுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சலுகைகளை அனுபவிக்க என்ன தகுதியிருக்கிறது?
 துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.
 தேசியக் கடமை
 வாக்களிக்க இயலாதவர்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கி இருக்கலாம். நடமாட முடியாத நிலையில் இருக்கலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் வாக்களிக்க இயலாதவர்களுக்கு அரசின் சலுகைகளை ரத்து செய்வது சரியல்ல. வாக்குரிமை முக்கியமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே தேர்தலைப் புறக்கணிக்கலாம். அவர்கள் குறைந்த விழுக்காட்டினரே. வாக்குரிமை என்பது தேசியக் கடமை என்று அரசு உணர்த்த வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 சாத்தியமாகாது
 இந்த யோசனை ஜனநாயக நாட்டில் சாத்தியமாகாது. வாக்களிப்பது கட்டாயம் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து அதன் பிறகு வேண்டுமானால் அரசின் சலுகைகள் வாக்களிக்காதவர்களுக்கு ரத்து செய்வது பற்றி பரிசீலிக்கலாம். நூறு சதவீத வாக்குப்பதிவு கட்டாயம் என்ற நிலையை உறுதி செய்வதற்கு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com