கடந்த வாரம் கேட்கப்பட்ட "தேமுதிக தனித்துப் போட்டியிடத் தயார் என்று பிரேமலதா கூறியுள்ளது குறித்து...' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாலோ, கூட்டணி சேர்ந்து களமிறங்குவதாலோ மக்களுக்கு என்ன பயன்? அக்கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறதா அல்லது அவர்களின் முந்தைய கூட்டணி ஆட்சியில்

பலன் ஒன்றுமில்லை
 தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாலோ, கூட்டணி சேர்ந்து களமிறங்குவதாலோ மக்களுக்கு என்ன பயன்? அக்கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறதா அல்லது அவர்களின் முந்தைய கூட்டணி ஆட்சியில் மக்கள் மனதில் நிலைக்கும்படி ஏதாவது நல்லது செய்திருக்கிறார்களா என்றால் இரண்டுமே இல்லை. கடந்த தேர்தலில் 12 லட்சம் ஓட்டுக்களை மட்டும் பெற்று, முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட அக்கட்சி வரும் தேர்தலில் தனித்து நின்றால் என்ன? கூட்டணி சேர்ந்தால் என்ன? பலன் ஒன்றுமில்லை!
 ராமநாதன், ஓசூர்.
 ராஜதந்திரம்
 தேமுதிக தனித்துப் போட்டியிடுவது வருத்தப்பட வேண்டிய விஷயம். தனித்து நின்று போராடுவது முடியாத செயல். வாக்குகளைப் பெற பணபலம், ஆள்பலம் கிடையாது. பெரும் கட்சிகளின் துணையோடு நின்று ஜெயிப்பதுதான் ராஜதந்திரம்.
 ஜி.தியாகராஜன், திண்டிவனம்.
 வேறு வழியில்லை
 தேமுதிகவின் வாக்கு வங்கி பெருமளவு சரிந்துபோய் விட்டது. தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிக்க விஜயகாந்தின் உடல்நிலை ஆரோக்கியமாகவும் இல்லை. இந்நிலையில் 41 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்று பிரேமலதா விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை மற்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ, அதிமுகவோ முன் வராது. எனவே, தேமுதிகவுக்கு தனித்து நிற்பதைத்தவிர வேறு வழியில்லை.
 மு. நடராஜன், திருப்பூர்.
 தனித்தே போட்டியிடலாம்
 தேமுதிக மட்டுமல்ல எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட தயார் என்றால், தனித்தே போட்டியிடட்டும். அப்போதுதான் அந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும் தங்களது தனிப்பட்ட பலத்தை நிரூபிக்க இயலும். ஆனால் கூட்டணிக் கட்சிகளிடையே அதிக தொகுதிகளைப் பெறுவதற்காக தனித்துப் போட்டியிட தயார், என்று கூறுவது நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை அதிகமாகப் பெற மட்டுமே உதவும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 கைகொடுக்கும்
 இப்போது தேமுதிக பெறும் வாக்கு சதவீதத்தால் வெற்றி திசை மாறினால்கூட, அடுத்தத் தேர்தலில் அது கைகொடுக்கும் அல்லவா?
 எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.
 இருப்பை நிரூபிக்க...
 தமிழகத்தைப் பொருத்த அளவில் , திமுக, அஇஅதிமுக இரண்டுக்கும் மாற்றாக வந்திருக்கூடிய நல்ல வாய்ப்பை, சில தவறான அரசியல் முடிவுகளாலும், குடும்ப அரசியல் காரணமாகவும், நழுவவிட்டுவிட்டதன் விளைவு இன்று இதுபோன்ற அறிக்கைவிட்டு தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 சொல்வது சரி
 தேமுதிக என்ற அணி தனித்து போட்டியிட தயார் என்ற பிரேமலதாவின் பேச்சில் நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது. ஒருவர் மனதில் தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே இது போன்ற திடமான வார்த்தைகளை சொல்ல முடியும். விஜயகாந்த் மக்களிடையே பிரபலமானவர். அதனால் அந்த நம்பிக்கை பிரேமலதா பேச்சில் தெரிவதால், அவர் சொல்வது சரியே.
 உஷாமுத்துராமன், மதுரை
 அந்தஸ்தை இழக்கும்
 தனிப்பெரும் கட்சியாக இல்லாத வரை அல்லது மாறாத வரை, கூட்டணி வைப்பது தான் தேமுதிகவுக்கு நல்லது. தனித்து நிற்க அவர்கள் தயாராக இருக்கலாம். நிலவும் சூழலில் மக்கள் ஓட்டு போட தயாராக இருக்க மாட்டார்கள். அதையும் மீறி தனித்து நின்றால், கட்சி என்ற அந்தஸ்தை இழந்து காணாமல் போய் விடும்.
 ஆர்.அஸ்வின்குமார், போத்தனூர்.
 துணிச்சலைப் பாராட்டலாம்
 காலங்கடந்து வந்தாலும் இந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஆனாலும் இந்த முடிவு இறுதியானதாக இருக்குமா என்பதும் சந்தேகத்திற்குரியதே. திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் மேல் அதிருப்தி உள்ள வாக்காளர்களின் அடுத்த "சாய்ஸôக' இருந்தது தேமுதிகதான் என்பது கடந்த கால நிதர்சனம். மற்ற சில கட்சியினர் ஒட்டுண்ணிகளாகவே தேர்தல் அரசியல் செய்கிறார்கள். சில திடீர் கட்சிகளும் வெற்று ஆரவாரம் செய்கிறார்களேயொழிய அவர்களுக்கு வாக்கு வங்கி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஓரளவுக்காவது வாக்கு வங்கியுள்ள தேமுதிக இந்த முடிவில் உறுதியாக இருப்பது அக்கட்சிக்கு கெüரவமாக இருக்கும்.
 துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.
 சாதிக்கப்போவது...
 அதிமுக கழற்றி விடப்பட்டதை அறிந்து, பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்று கூறினார். இப்போது தனித்துப் போட்டி என்று அறிக்கை விட்டிருக்கிறார். தனித்துப் போட்டியிடுவதால் என்ன சாதிக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!
 எஸ்..அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
 தன்னம்பிக்கை
 தேமுதிக தனித்துப் போட்டியிடத்தயார் என்று பிரேமலதா கூறியது அவருடைய உரிமை. அக்கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களின் குறிப்பை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார். தமிழகத்தில் குறிப்பிட்ட வாக்காளர்களின் ஆதரவைப்பெற்றுள்ள ஒரு கட்சியின் பொருளாளர் இவ்வாறு கூறியுள்ளது தன்னம்பிக்கையும் அடிப்படையாகும். கூட்டணியின் முடிவைப் பொறுத்து அக்கட்சி சிறந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இக்கருத்து அரசியல் நுட்பம் வாய்ந்தது. மாற்றம் ஏற்பட்டால் பார்க்கலாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 பகல் கனவு
 தேமுதிக தனித்து போட்டியிடத் தயார் என பிரேமலதா கூறுவது இருட்டில் விளக்கை பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதைப் போன்றது. அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் தனித்து நிற்க விரும்பாது கூட்டணி தேடும் நிலையில், பிரேமலதா காண்பது பகல் கனவாகும்.
 வி.கே.இராமசாமி, கோயம்புத்தூர்.
 மிரட்டும் எண்ணம்
 அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து பெற்றுவரும் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அணிகளுக்குச் சமமாக இடங்களை தமக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், இரு கூட்டணியிலும் பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டால் வெளியேறும் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்துத் தலைமை தாங்க எண்ணியும் மொத்தத்தில், அதிமுகவை மிரட்ட "தேமுதிக தனித்துப் போட்டியிடத் தயார்' என்று பிரேமலதா கூறியுள்ளார்.
 அ.கருப்பையா,
 பொன்னமராவதி.
 காணாமல் போய்விடும்...
 தேமுதிக, அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தால்தான் கொஞ்சமாவது தப்பிக்க முடியும். இல்லையென்றால், சுத்தமாக காணாமல் போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், தனியாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அது மிகவும் நகைப்புக்குரிய
 தாகும்.
 கா.ராமசாமி, கீழ்ப்பனையூர்.
 அரசியல் லாபத்துகே
 பிரேமலதாதான் முடிவெடுப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். தனித்துப் போட்டி என்று சொல்லி அதிமுகவிடம் அதிகம் தொகுதிகளைப் பெற முயல்வது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் இதேபோன்று சொல்லி மேலும் நியமன எம்பிக்காக மிரட்டி நின்றது வெட்ட வெளிச்சம். தனியாகப் போட்டியிட்டால் முதன்முதலாகப் பெற்ற ஒரு தொகுதியைக்கூட தற்போது பெறக்கூடிய வாக்கு வங்கியுமில்லை. செயல்பாடுமில்லை. அரசியல் லாபம் பார்க்கவே தனித்துப் போட்டி என்று மிரட்டிப் பார்க்கிறார். தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு என்பது இருக்காது என்பது நன்றாகவே அவருக்குத் தெரியும்.
 ப. தாணப்பன்,
 தச்சநல்லூர்.
 சோர்வடையச் செய்யும்
 தனித்துப் போட்டியிடுவதால் அதன் வாக்கு வங்கியைத் தெரிந்து கொள்வதற்கான களமாக அமையுமே தவிர, அது கட்சிகளுக்கு எந்த எதிர்கால நன்மையையும் கொடுத்துவிடாது. விஜயகாந்த் உடல்நிலை பிரசாரத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் பட்சத்தில் தனித்துப் போட்டி என்பது தேமுதிகவின் தொண்டர்களை சோர்வடையச் செய்து
 விடும்.
 ச.கருணாகரன், தூத்துக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com