கடந்த வாரம் கேட்கப்பட்ட "மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல.

 ஏற்கத்தக்கதல்ல
 மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்வரை மத்திய அரசு முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது. கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதன்பிறகு அந்தந்த மாநிலங்களே அதற்கான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். கடந்த காலங்களில் மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு நடந்தது போலவே நடந்தால் சிறப்பாக இருக்கும். மாநில அளவில் நீட் தேர்வு தேவையற்றது.
 மா. பழனி, தருமபுரி.
 தேவையற்றது
 நீட் தேர்வு பல கல்வி வாரிய முறையிலும் பல மாநில பாடத்திட்டத்திலும் பயிலும் மாணவர்களுக்காக ஒட்டுமொத்தமாக நடத்தப்படும் தேர்வு. மாநில அளவில் பொதுத் தேர்வை மாநில அரசு தான் நடத்துகிறது. அப்படியிருக்க மீண்டும் ஒரு தேர்வு தேவையற்றது. மாநில அளவில் நீட் தேர்வு எழுதுவதும் தேசிய அளவில் நீட் தேர்வு எழுதுவதும் ஒன்று தான். கல்வி மத்திய பட்டியலில் உள்ள போது மாநில அளவில் நீட் தேர்வு நடத்துவதோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்துவதோ சாத்தியமல்ல.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
 வேம்பார்.
 தடை அகலும்
 மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே. ஏனெனில் மாநில அளவில் தேர்வு நடத்தப்பெறும் பொழுது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய இட ஒதுக்கீட்டினைப் பெறுவதில் ஏற்படக்கூடிய தடை அகலும். மேலும் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் வாய்ப்பும் உருவாகும். தற்போது தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வினால் ஏற்படும் சர்ச்சைகள், குழப்பங்கள் நீங்கும். மேலும், நீட் தேர்வை எதிர்த்து மாநிலங்களின் அரசியல் கட்சியினரால் நடத்தப்படும் போராட்டங்களும் கைவிடப்படும். எனவே, இக்கோரிக்கை சரியே.
 வ. ரகுநாத், மதுரை.
 கண்மூடித்தனம்
 இக்கோரிக்கை நியாயமானதே. நீட் தேர்வை மாநிலங்களே நடத்தினால், மாணவருக்கும், பெற்றோருக்கும் தேர்வு குறித்து ஏற்படும் மன அழுத்தம் குறையும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்ட கல்விக்கொள்கைகள் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே வருவதற்கு இதனால் வாய்ப்புகள் ஏற்படும். தமிழகத் தேர்வர்களை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் கண்மூடித்தனம் தவிர்க்கப்படும். உடைக்கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவிகளை இழிவுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும். எனவே, இதனை நடைமுறைப்படுத்தலாம்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 பலன் கிட்டாது
 மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியானதே. தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் மூலம் படித்து, உயர்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள்தான் "நீட்' தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் பெருவாரியானவர்கள் வெற்றிவாய்ப்பை இழக்கின்றனர். மத்திய அரசு தயாரிக்கும் "நீட்' நுழைவுத் தேர்வு முறையில், சிபிஎஸ்இ வழியில் பயின்ற மாணவர்களுக்கே பலன் கிட்டுகிறது. நீட் தேர்வுக்கான பயிற்சி வசதி, நம் கிராமப்புற மாணவர்களுக்குக் கிட்டாதபோது, இவர்கள் எப்படி அவர்களுடன் போட்டிபோட்டு மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும்?
 கு.மா.பா. திருநாவுக்கரசு,
 மயிலாப்பூர்.
 சமமற்ற போட்டி
 நீட் தேர்வு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மன அழுத்தம் கொடுக்கும் அனைத்து தகுதித் தேர்வுகளும் தேவைதானா என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயிற்சி வகுப்பு செல்ல வசதியும் வாய்ப்பும் இல்லாத நிலையில் தகுதித் தேர்வுகள் சமமற்ற போட்டியாகவே கருதப்படுகின்றன. இன்றைய இந்திய சமூக பொருளாதார சூழலில் தகுதித் தேர்வுகள் ஏற்றத்தாழ்வையே ஏற்படுத்துகின்றன. தமிழகத்திற்கு தனி நீட்தேர்வு என்பதற்கு பதிலாக 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 அவல நிலை மாறும்
 இக்கோரிக்கை சரியானதுதான். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் மருத்துவம் என்பது வெறும் கனவுதான் என்று தவிப்பவர்களின் தவிப்பு தீரும். அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் வேறு துறை சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் அவல நிலையை இந்த முடிவு நிச்சயம் மாற்றும். மேலும், மாணவர்கள் வேறு மாநிலத்தில் சென்று படிக்க வேண்டாம். அவர்கள் பிறந்து வளர்ந்த மாநிலத்திலேயே அவர்கள் விரும்பிய மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். இப்படி எல்லா கோணங்களிலும் இது சரியான கோரிக்கையே.
 உஷா முத்துராமன், மதுரை.
 நம்பிக்கை
 மருத்துவக் கல்வி என்பது மிக கடினமான படிப்பு. அதில் சேரும் மாணவர்கள் மிகத் தரமான நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும். நீட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கும் மருத்துவராகப் பணியாற்றவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. அரசியல் நோக்கங்களுக்காக சரியான தேர்வு முறையை புறக்கணிப்பது புத்திசாலித்தனம் அல்ல. கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களின் தரத்தையும் உயர்த்த முடியும்.
 கி. முரளி, புதுதில்லி.
 வேறுபாடு இல்லை
 கரோனா பெருந்தொற்று பல மாணவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பல மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். இணைய வழி வகுப்புகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியாக நடத்தபடவில்லை. மாநில அளவில் தேர்வு வைத்தாலும் சிபிஎஸ்இ மாணவர்களே மருத்துவப் படிப்பிற்கு செல்வர். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் வழங்கினால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியும். தேசிய நுழைவு தேர்விற்கும் மாநில நுழைவு தேர்விற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே அரசு பள்ளி மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவதை தடுக்கும்.
 பா. ஆதவன், திருத்துறைப்பூண்டி.
 அவசியம்
 மருத்துவத்துறை என்பது இன்று பரந்து விரிந்த துறை என்பதால் அத்துறைக்கான படிப்பைத் தேர்வு செய்ய அகில இந்திய அளவில் நீட் தேர்வு அவசியமே. ஆனால் அதற்குரிய கல்வித் தகுதியைப் பெறும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்களாக இருக்கவேண்டியது அவசியம். எனவே, அதற்குரிய பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் நாடெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அகில இந்திய அளவில் ஒரே தரமிக்க மாணவர்கள் தேர்வெழுதவும் தேர்ச்சி பெறவும் வாய்ப்பு உருவாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கேள்விக்குறி
 இக்கோரிக்கை தவறானது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய-மாநில அரசுகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகிவிடும். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்துவிட்டதால் நிறைவேற்றியே தீரவேண்டும் என்கிற அவசியமில்லை. கல்வி மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசுகள் மத்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். மாநில அரசு, கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான நீட் தேர்வும் வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் பிளஸ் 2 தேர்வு முடிவின்படியே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்க வேண்டும்.
 கலைப்பித்தன், கடலூர்.
 தலையீடு
 மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் "நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியானது ஆகும். மாநில அளவிலான "நீட்' தேர்வு அந்தந்த மாநிலங்களில் உள்ள தகுதியான தேர்வர்கள் அனைவருக்கும் உரிய இடத்தை மருத்துவப் படிப்பில் பெற்றுத்தரும். மாநில மொழியில் உறுதியாக "நீட்' தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு மாநில அளவிலான "நீட்' தேர்வில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் "நீட்' தேர்வுக்கான வினாத்தாள்களை வடிவமைக்க முடியும். மாநில அளவிலான "நீட்' தேர்வு சுதந்திரமான, நேர்மையான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வழி வகுக்கும்.
 மு. சம்சுதீன் புஹாரி, தூத்துக்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com