கடந்த வாரம் கேட்கப்பட்ட "நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது. காரணம், அவர்களும் வாழ வேண்டியவர்கள்

 வரவேற்கத்தக்கது
 நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது. காரணம், அவர்களும் வாழ வேண்டியவர்கள். அவர்களுக்கும் எதிர்காலம் என்று ஒன்று உள்ளது. தண்டனை எனும் பெயரில் சிறைச்சாலையில் அவர்களை பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருப்பது சரியானதல்ல. அவர்களை விடுவித்து அவளுடைய வீட்டிற்கு பாதுகாப்பாய் அனுப்பி வைப்பதே சரியானது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகப் போவதில்லை. சிறைச்சாலையில் சமூக இடைவெளி என்பது நிச்சயம் இருக்காது. எனவே, அவர்களை விடுவிப்பதே நல்லது.
 சி. சுரேஷ், தருமபுரி.
 மனிதாபிமானம்
 நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து வரவேற்கப்பட வேண்டியது. சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகமாகி அங்கே ஒருவருக்கொருவர் நோய்த்தொற்று பரவி அதனால் சிறைக்கைதிகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவித்து அனுப்பலாம். சிறைக் கைதிகளும் மனிதர்களே. அவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகுவது நல்லது. விடுவிக்கு முன் சிறைக்கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும்.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 பெரிய தண்டனை
 சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்ற கருத்து ஏற்புடையதல்ல. வெளியில் காட்டுத் தீயாக பரவிவரும் நோய்த்தொற்றிலிருந்து தப்பி பாதுகாப்பாக உள்ளிருக்கும் இவர்களை விடுவித்தால், இவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தண்டனைக் காலம் முடிவதற்குள் இடைக்கால விடுவிப்பால் வெளியே வரும் சிறைக்கைதிகள் நோய்த்தொற்று எனும் மற்றொரு பெரிய தண்டனைக்கு ஆளாக வேண்டுமா? வேண்டாம். சிறையிலேயே அவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்.
 கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
 திறந்தவெளி சிறை
 இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. சிறைச்சாலைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் தொடர்புடைய வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கலாம். சாதாரண குற்றவாளிகளை திறந்தவெளி சிறையில் வைக்கலாம். இப்படிப்பட்டட நடவடிக்கைகள் மூலம் சிறையிலிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம். குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளுக்கு இடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வது எளிது. மேலும் கைதிகளை மொத்தமாக விடுவித்தால் நோய்த்தொற்று காலத்தில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். எனவே இக்கருத்து ஏற்புடையதல்ல.
 ஆ. ஜூடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 சூழ்நிலைக் கைதி
 கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள உலகெங்கிலும் குற்றவியல் நீதிக் கொள்கை மாறி வருகிறது. நோய்த்தொற்றைக் குறைக்க இடைக்காலமாக கைதிகளை விடுவிக்கலாம். கைதிகளை வீட்டுக்கவலில் வைக்க முடியுமா என்பதும் நீதிமன்றங்களின் பரிசீலனையில் உள்ளது. நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக நாம் அனைவருமே இப்போது வீட்டுக்காவலில் வசிக்க வேண்டிய சூழ்நிலைக் கைதிகள்தான். அரசு கைதிகளுக்கு சலுகைகள் தருவது, நோய்த்தொற்று காலக் கொள்கையாக மட்டுமில்லாமல், மனித உரிமை கொள்கைகள் விரிவடைய ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 மிக மிக கடினம்
 சிறைச்சாலைகளும், காவல் நிலையங்களும் விசாரணை கைதிகளாலும் தண்டனை கைதிகளாலும் நிரம்பியுள்ளன. மனம் திருந்திய, தகுதியுள்ள சிறைக்கைதிகளை விடுவித்தால் மட்டுமே சிறையில் கைதிகளுக்கிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலும். கைதிகளுக்கு இடையே கரோனா தீநுண்மி பரவினால் அதனைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். மேலும் ஊரடங்கு கண்காணிப்பிற்கு நிறைய காவலர்கள் தேவை. ஆகவே முடிந்த அளவு தகுதியுள்ள கைதிகளை இடைக்காலமாக விடுதலை செய்து, சிறை கண்காணிப்பு காவலர்களை ஊரடங்கு சோதனையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவலர்களின் பணிச்சுமையை குறைக்கும். ஆகவே இந்தக் கருத்து ஏற்புடையதே.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 தேவையற்ற செயல்
 நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கதிகளை இடைகாலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. அவர்கள் சிறையில் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது. வெளியில் வந்தால் அவர்களால் கட்டுப்பாட்டுடன் வீட்டில் நிச்சயம் இருக்க முடியாது. வெளியில் சென்று தொற்றினை வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். சிறைச்சாலையே அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது ஆகும். அவர்களை எதற்கு இடைக்காலமாக விடுவித்து பிறகு மறுபடியும் சிறையில் அடைக்க வேண்டும்? இது தேவையற்ற செயல். நோய்த்தொற்று அதிகமாக பரவுவதால் நாமே பீதியில் இருக்கிறோம். இந்த நிலையில அவர்களாவது சிறையில் நிம்மதியாக இருக்கட்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 அரசின் நோக்கம்
 இக் கருத்து ஏற்புடையதல்ல. மக்களின் வெளி நடமாட்டத்தைக் குறைக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேரும்போது யாருக்கு ஆரம்ப நிலையில் தொற்று இருந்தாலும் அது மற்றவருக்கும் பரவும் நிலை ஏற்படும். ஏற்கெனவே பல குடும்பங்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் உணவுக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றன. சிறையில் நோய்த்தொற்று கைதிகளுக்கு ஏற்பட்டால் அங்கேயே அவர்களைத் தனிமைப்படுத்துவதே நல்லது. அவர்களை வெளியே நடமாட விட்டு நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறும் செயலைத் தவிர்க்க வேண்டும்
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நன்னடத்தை
 நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகள் சிலரை விடுவிக்கலாம் தவறில்லை. ஆனால் தீவிரமான குற்றப்பின்னணி உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவது சரியல்ல. அப்படியே விடுவிக்க முடிவெடுத்தால் அவர்களின் நன்னடத்தை உறுதி செய்யப்பட்டு அந்தந்த சிறைத்துறை அதிகாரிகள்தான் அதற்கான முடிவை எடுக்க வேண்டும். கரோனா தீநுண்மி மிகவேகமாக பரவிவரும் இச்சசூழலில் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை முறையாக செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு கைதியின் நன்னடத்தைக்கும் அந்தந்த சிறைத்துறை அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும். அப்படியானால் இடைகாலமாக விடுவிப்பதில் தவறில்லை.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 இரு மடங்கு
 பல சிறைகளில் இருக்க வேண்டிய கைதிகளின் எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு அதிகமான கைதிகள் இருக்கின்றனர். ஒருசில சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கிறது. இதனால் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு கைதிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. சிறையில் இருக்கின்ற விசாரணைக் கைதிகளை பிணை மூலம் வெளியில் விடுவதால் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஆகவே, சிறையில் உள்ள தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து ஏற்புடையதே.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 பாதுகாப்பு
 இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. கைதிகளுக்கு சிறைக்குள் தொற்றுப் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. வெளியில்தான் அதிகம். சிறைச்சாலைகளில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினாலே போதும். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் தகுதியுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்து "நோய்த்தொற்று இல்லை' என்கிற சான்றிதழைப் பெற்ற பின்பே விடுவிக்க முடியும். இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குற்றப் பின்னணி உள்ள கைதிகள் வெளியே வந்தால் அவர்களின் எதிரிகளால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே, கைதிகள் சிறைக்குள் இருப்பதே அவர்களுக்கும் பாதுகாப்பு; நாட்டுக்கும் பாதுகாப்பு.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 கேள்விக்குறி
 சிறைக்கைதிகள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலையே. நோய்த்தோற்றை சிறைச்சாலைக்குள் எப்படி எதிர்கொள்வது என்பதை சிறைச்சாலை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிப்பது நீதித்துறையை பலவீனப்படுத்தும். வெளியே வரும் சிறைக்கைதிகளின் பழிவாங்கும் உணர்வால் குற்றங்கள் பெருக வாய்ப்பு உண்டு. மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு நோய்தோற்று வந்ததால், அவை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைக்கைதிகளையும் அங்கேயே தனிமைப்படுத்துவதே நல்லது. அவர்களை வெளியே விட்டால் நீதித்துறையின் நோக்கமே கேள்விக்குறி ஆகி விடும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com