தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதன்று.

 ஏற்புடையதன்று
 தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதன்று. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சொந்த மாநில மக்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கலாம். மீதமுள்ள 20 சதவீதத்தை தகுதியுள்ள பிற மாநித்தவருக்கு வழங்கலாம். ஒரு மாநிலத்தின் 100 சதவீத வேலைவாய்ப்பும் அந்த மாநில மக்களுக்கே தரவேண்டும் என்று கூறுவது சரியாகாது. அதே சமயம், ஒரு மாநிலத்தில் பணிவாய்ப்பு பெறுபவர் அம்மாநில மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அம்மாநில மொழியைப் பேச, படிக்க, எழுத கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
 பா. திருநாவுக்கரசு, சென்னை.
 ஏற்புடையதே
 இக்கோரிக்கை ஏற்புடையதே. அப்படிப்பட்ட நிலை வந்தால்தான் தமிழர்கள் பிற மாநில அரசுப் பணிகள் குறித்து கவலைப்படாமல், தமிழக அரசை நம்புவார்கள். நம் மாநிலத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தவர் நமது தமிழ்மொழிக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் உரிய மதிப்பு தரமாட்டார்கள். அவர்கள் தமது மாநில பழக்கவழக்கங்களிலேயே உறுதியாக இருப்பர். தனியார் துறைகளைப் பொறுத்தவரை எந்த மாநிலத்தவரும் எந்த மாநிலத்திற்கும் சென்று பணியாற்றலாம். அதற்கு மறுப்பில்லை. ஆனால், அரசுப் பணியைப் பொறுத்தவரை மண்ணின் மைந்தர்களுக்கே நூறு சதவீதம் என்பது ஏற்புடையதே.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 நியாயமானது
 தமிழக அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பணியாற்றப்போவது தமிழகத்தில். அவ்வாறு பணியாற்றும்போது அவர்கள் மக்களை எளிதில் தொடர்புகொள்ள தமிழராகவும், தமிழ் மொழி தெரிந்தவராகவும் இருப்பது அவசியம். மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்தியா முழுக்க பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் உயர் அதிகாரிகளுக்கு இதிலிருந்து விலக்கு கொடுக்கலாம்.ஆனால், தமிழக அரசால் தேர்வு நடத்தப்பட்டு, தமிழக அரசால் நியமிக்கப்பட்டு, தமிழர்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் ஒருவர் தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே.
 கே. ஸ்டாலின், மணலூர்பேட்டை.
 குறுகிய நோக்கம்
 இக்கோரிக்கை குறுகிய நோக்கம் கொண்டது. வேலைவாய்ப்புக்கு மாநில சாயம் பூசுவது ஆபத்தானது. அது உலகெங்கும் பணிபுரியும் நமது தமிழர்களின் நலனுக்கு எதிரானது. அரசு வேலைவாய்ப்பில் வெளிமாநிலத்தினர் தந்திரமாக பெரும் அளவில் நுழைவதை நேர்மையான நிர்வாக திறன் மூலம் தடுக்க முடியும். ஒருவர் அரசு வேலைவாய்ப்பை பெறுவதில் கணக்கிலடங்கா சவால்களை எதிர் கொள்கிறார். அரசு வேலைவாய்ப்புகள் லஞ்ச, லாவண்யம், அரசியல் தலையீடு இவை எதுவும் இல்லாமல் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர சொந்த மாநில மக்களாகவே இருக்க வேண்டும் என்பது தேவையற்றது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 ஜனநாயக நெறிமுறை
 தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் 100 சதவிகிதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல என்பது மட்டுமல்ல அது சாத்தியமும் அல்ல. பல மாநிலத்தவர்கள் இங்கு பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். தகுதியுள்ள அனைவருக்கும் அரசு வேலைகளில் இடம் கொடுப்பதே ஜனநாயக நெறிமுறையாகும். இதே போல பிற மாநிலங்களும் தங்கள் மாநிலத்தவருக்கே நூறு சதவீத வேலைவாய்ப்பு என்று முடிவு செய்தால் இன பிரச்னை, மொழி பிரச்னை உருவாக அது வழிவகுக்கும். மொழியை வைத்து வேலைவாய்ப்புகளில் பாரபட்சம் கூடாது.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 முன்னுரிமை
 தமிழர்களுக்கு அரசுப்பணியில் 100% இடம் வழங்கப்பட வேண்டும் என்பதைவிட தமிழர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே ஏற்புடையது. அரசுப்பணியில் தமிழர்கள் வேலை செய்யும்பட்சத்தில் பொது மக்களிடம் எளிதில் தொடர்பு கொள்ள இயலும். மக்கள் தொடர்பும் சிறப்பாக இருக்கும். தமிழர்களின் தேவைகள் உரிமைகள் பூர்த்தி அடைந்த பின்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு இடம் அளிப்பதில் தவறில்லை. அரசுப்பணி என்பது பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கு தமிழர்கள் அரசு பணியில் இருப்பதுதான் நல்லது.
 இராம். மோகன்ராம், சென்னை.
 முரண்பாடு
 இந்தியக் குடிமக்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேறலாம், பணிபுரியலாம் என்று அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது. எனவே, இக்கோரிக்கை அரசியல் சட்டத்திற்கு முரண்பாடானது ஆகும். கர்நாடக மாநில அரசு "மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலை' என்கிற நிலைப்பாட்டை எடுத்தபோது தமிழர்களாகிய நாம் அதனை எதிர்த்தோம். காரணம், ஏராளமான தமிழர்கள் அம்மாநிலத்தில் அரசுப்பணியில் இருக்கிறார்கள் என்பதே. இப்போது எழுந்துள்ள "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு' எனும் கோரிக்கையால், பிற மாநிலத்தில் பணிபுரியும் தமிழர்களை அந்தந்த மாநில அரசுகள் வேலையிலிருந்து நீக்கும் நிலை ஏற்படும்.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 பண்பாடு சிதையும்
 தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதல்ல. இது இந்திய ஒருமைப் பாட்டிற்கு எதிரான செயல் ஆகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதுதான் தமிழ் மண்ணின் பண்பாடு. இப்பண்பாடு இதனால் சிதைக்கப்படும். தமிழர்கள் பல வெளிமாநிலங்களிலும், பல வெளிமாநிலத்தவர் தமிழகத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய நாட்டின் எப்பகுதியிலும் யாரும் பணியாற்றலாம் என்பதுதான் சட்ட ரீதியான வரையறை. அதனை மாற்றுவது கூடாது. இக்கோரிக்கை தவறானது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 ஏமாற்றம்
 லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைவாய்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக அரசுப் பணிகளிலும் மற்ற மாநிலத்தினர் இடம்பெறுவது தமிழக இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். மாநிலப் பணிகளில் அந்தந்த மாநிலத்தவருக்கே முழு ஒதுக்கீடு தருவதோ முன்னுரிமை தருவதோ பணியாளர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், வேலைவாய்ப்பின்மை எல்லா மாநிலங்களிலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் நிலையும் உருவாகும்.
 கே. ராமநாதன், மதுரை.
 என்ன நியாயம்?
 இக்கோரிக்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ்மொழியை பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். பல வருடங்களுக்கு முன்பே பிற மாநிலங்களில் இருந்து பலர் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். அவர்களின் பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படித்து நன்றாக தமிழ் பயின்றுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும்போது அவர்கள் தமிழர்கள் இல்லை என்று கூறி அவர்களுக்கு வேலைவாய்ப்பை மறுப்பது என்ன நியாயம்? தமிழ்நாட்டு அரசுப்பணியில் சேர "தமிழ்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று அறிவிக்க வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 முதலிடம்
 தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களில் பெரும்பாலோர் ஆசிரியர்களும் உள்ளாட்சித் துறை ஊழியர்களும்தான். இவர்களுக்கு மக்களோடு தொடர்பு கொள்வதற்கு தமிழும் அலுவலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் தெரிந்தால் போதும். இந்நிலையில் மத்திய அரசு தகுதி என்ற அடிப்படையில் வங்கிகள் அஞ்சலகங்கள் போன்ற தமிழக அலுவலகங்களில் பிறமொழி பேசுபவர்களை நியமனம் செய்வது முற்றிலும் தவறானதாகும். அவர்கள் எப்படி நம் மொழி பேசுபவரோடு உரையாடி தம் பணியை சிறப்பாகச் செய்ய முடியும்? எல்லா மாநிலங்களும் தாய்மொழிக்கு முதலிடம் என்னும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அர்ப்பணிப்பு
 தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதே. தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி வழங்கப்பட வேண்டும். ஒரு மாநில கட்டமைப்பையும், மாநில அரசின் நோக்கங்களையும் அம்மாநிலத்தவர் மட்டுமே கூர்ந்து பார்க்க இயலும். வேற்று மாநிலத்தவர்கள் இருந்தால் அது வெறும் பணியாகத்தான் இருக்குமே தவிர அர்ப்பணிப்பு உணர்வு இருக்காது. எனவே, எல்லா மாநில அரசுப் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர்களே நூறு சதவீதம் இடம்பெற வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com