"மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளைப் பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாத்தியமற்றது
 மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளைப் பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு கூறியிருப்பது சரியானதே. இன்று தமிழகத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒருவரின் பிள்ளை மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பயின்றுகொண்டிருப்பார். நாளை அவர், மும்பைக்குப் பணி மாறுதலாகிச் செல்லும்போது அவர் பிள்ளை மராட்டிய மொழியைப் பயிற்று மொழியாகப் பயில முடியுமா? அடுத்த ஆண்டே அவர் பிகாருக்கு பணி மாறுதல் பெற்று சென்றால் அம்மாநில மொழியில் பயில முடியுமா? அது நடைமுறை சாத்தியமற்றது. அதனால்தான் மத்திய அரசுப் பள்ளிகளில் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளது.
 கி. இராமசுப்ரமணியன், புதுச்சேரி.
 சிக்கல்கள்
 பல மொழிகள் பேசுகின்ற நாடாக இருக்கின்ற இந்தியாவில் இத்தகைய சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளின் வசதிக்காகத் தொடங்கப்பட்ட கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் ஆங்கிலமும் இந்தியும் பயிற்று மொழியாகவும், எட்டாம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் கட்டாயப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்மொழி போன்ற மாநில மொழிப் பாடம் என்பது மாணவர்கள் விருப்பப்பட்டால் தேர்ந்தெடுக்கும் பாடமாக உள்ளது. இந்தப் பள்ளிகளில் சேர்வது கட்டாயம் அல்ல என்பதால் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 என்ன பிரச்னை?
 மாணவர்களைப் பொறுத்தவரை பயிலும் மொழியில் என்ன இருக்கிறது? பாடத்தின் கருப்பொருள் மாணவர்களை சென்று சேர்ந்திருக்கிறதா என்பதுதானே முக்கியம்? மத்திய அரசின் தரமான பாடத்திட்டம் மாநில மொழிகளில் மாணவர்களிடம் சென்றடைவதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என மகாத்மா காந்தி முதல் இன்றைக்கு உள்ள கல்வியாளர்கள் வரை அனைவருமே சுட்டிக் காட்டியிருக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசுவது மட்டும் போதாது. இந்தக் கருத்தாக்கம், மாநில மொழிகளை மத்திய அரசு மதித்து அவற்றுக்கு உரிய தகுதியை வழங்கும்போதுதான் வலுப்பெறும்.
 கே. ஸ்டாலின், மணலூர்பேட்டை.
 நோக்கம்
 மத்திய அரசு, கல்வி நிறுவனங்களைத் தொடங்கியதன் நோக்கமே, அந்த நிறுவனங்களில் கல்வி கற்றவர்கள் மத்திய அரசுப் பணியில் இணைந்தால், அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மொழி பிரச்னை இல்லாமல் பணியாற்றும் வகையில் அவர்களைத் தகுதியுடையவர்களாக்குவதுதான். அங்கே பயிற்றுமொழியாக மாநில மொழியைக் கொண்டு வந்தால் மத்திய அரசின் நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கெனவே, மாநில அரசுகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் மாநில மொழியைப் பயிற்றுவிக்கும் மொழியாகக் கொண்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால், தேவைப்படுவோர் அங்கே சேர்ந்து பயிலலாம்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 சரியல்ல
 மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருப்பது சரியல்ல. சில மாநிலங்களின் மொழிகளில் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கல்வி பயிற்றுவிப்பது என்ற நிலையும் சரியல்ல. இந்தியா பல மொழிகள் கொண்ட மாநிலங்களின் ஒருங்கிணைந்த பிரதேசம். ஆகையால்தான் இந்தியாவினுடைய தேசிய மொழிகள் என்று ஒரு பட்டியலே உருவாக்கப்பட்டுள்ளது. அரசு தன்னுடைய பிடிவாதத்தைக் கைவிட்டு அந்தந்த மாநிலத்தில் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு உரிய முறையில் அவர்கள் தாய்மொழியையும் பயிற்று மொழியாக்க வேண்டும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 மாற்றம் தேவை
 ஹிந்தி தாய்மொழியாக உள்ள மாநிலங்களில், ஹிந்தியும் ஆங்கிலமும் பயிற்று மொழிகளாக உள்ளன. அதேபோன்று அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக இருப்பதுதான் சிறப்பு. தாய்மொழி வழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டால் மிகச்சிறந்த அறிஞர்களை உருவாக்க இயலும். ஏனெனில் தாய்மொழி வழியே பயிலும்போது புரிந்து படித்து செய்முறை பயிற்சி மற்றும் எழுத்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்க இயலும். அந்தந்த மாநில மொழிகளில் பயின்றால் இனிவரும் காலங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்க இயலும். எனவே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 நியாயம்
 இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதுதான் நியாயம். மத்திய அரசின் கருத்து கல்வி கற்றுக் கொள்பவர்களின் உரிமையை பாதிப்பதாக கருதவும் இடமுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒருவர், மத்திய அரசின் கல்வி நிறுவனத்தின் கல்வி பயிலும்போது தமிழ் பயிற்று மொழியால் கற்க இயலாது என்கிற நடைமுறை மாற்றப்பட வேண்டியதே. மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் பயிற்றுவிக்கக்கூடிய கல்வி நிறுவனங்களை மத்திய அரசு உருவாக்குவதே சரியான செயலாகும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 பொறுப்பு
 மத்திய அரசின் ஊழியர்கள் கண்ணோட்டத்தில் இருந்து இதனைக் காண வேண்டும். அரசின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசு ஊழியர்கள் கரங்களில் இருக்கிறது. நாகர்கோவிலில் வேலை பார்க்கிற மத்திய அரசின் ஊழியர் நாகாலாந்தில் சென்று பணிபுரியும் நிலை வரும் போது அவரது குழந்தையின் கல்வி என்ன ஆகும்? அங்கு மாநில மொழியாக இருக்கும் நாகாலாந்து மொழியை பிள்ளைகள் படிக்க வேண்டுமா? பிறகு வேறொரு மாநிலத்திற்கு பணி மாறுதல் வந்தால் மாணவர்களின் நிலை என்ன? மத்திய அரசின் ஊழியர்களுக்காக மத்திய அரசு நடத்தும் பள்ளியின் முதன்மை நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 ஏற்புடையதல்ல
 மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு கூறியிருப்பது தவறு. மாநில மொழிதான் தாய்மொழி. அது பயிற்று மொழியாக இருக்க இயலாது எனில் மாணவர்கள் நன்கு புரிந்து படிக்க இயலாது போய்விடும். எல்லா மாநிலத்தாருக்கும் அவரவர் தாய்மொழியே சிறந்தது. எனவே, மத்திய அரசு, தாய்மொழியை பயிற்று மொழியாக்க இயலாது என்று கூறுவது ஏற்புடையதல்ல. இந்த மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்க, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகள் பயிற்று மொழியாக வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கேள்வி
 மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில் அமைந்திருக்கும்போது அந்தந்த மாநில மக்களின் மொழி பயிற்று மொழியாக இல்லை என்று சொன்னால் எதற்காக அந்த மாநிலங்களில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கல்வி நிறுவனங்கள் மக்கள் விருப்பப்படி அமைய வேண்டியது அவசியம். மாநில மொழிகளில் கல்வி கற்பதுதான் மாணவர்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும். மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனமாயினும் மாநில மொழிகளில் பயிற்றுமொழி இருப்பதுதான் நல்லது. மத்திய - மாநில அரசுகள் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டால் இது சாத்தியமே.
 மா. பழனி, தருமபுரி.
 பேருதவி
 மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளை பயிற்றுமொழியாக்க இயலாது என்கிற மத்திய அரசின் கருத்து பிற்போக்கானது. ஹிந்தி மற்றும் ஆங்கில முறையில் கல்வி கற்பிக்கப்படும்போது, அந்தந்த மாநில மொழிகளிலும் மாணவர்கள் பயில வசதி செய்து தரப்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் கோலோச்சும் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்களின் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. இது, மாணவர்கள் தங்கள் மொழியில் சிந்தனைகளை உள்வாங்கி செயல்படுத்துவதற்குப் பேருதவியாக அமையும். எனவே, மாநிலமொழி பயிற்று முறையை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்.
 சோ.பி. இளங்கோவன், தென்காசி.
 பட்டியல்
 எல்லா மாநில மொழிகளும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இருக்க இயலாது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், தமிழ்மொழியை மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் பயிற்று மொழியாக்குவது அவசியம். ஏற்கெனவே இருக்கும் ஹிந்தி, ஆங்கிலம் இவற்றோடு தமிழையும் பயிற்றுமொழிப் பட்டியலில் மத்திய அரசு சேர்க்க வேண்டும். ஹிந்தி மொழி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி. ஆங்கில மொழி அரசு அலுவலகப் பயன்பாட்டுக்கான இணைப்பு மொழி. தமிழ்மொழி தமிழகத்தின் மாநில மொழி மட்டுமல்ல, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஆட்சிமொழியாகவும் இருக்கிறது.
 டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com