"குறைந்திருந்த கரோனா தொற்று பல மாநிலங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்க ஆரம்பித்திருப்பது குறித்து...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பாதுகாப்பு
 கரோனா தீநுண்மி பல விதங்களில் உருமாறி மனித குலத்தைத் தாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இப்போதுவரை இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பின் தீவிரம் வேண்டுமானால் குறையலாம். முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவைதான் இப்போதைக்கு ஒரே பாதுகாப்பு. நாம் இயற்கை உணவுகளை உண்டு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிவது, கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது இவையே நம்மைக் காப்பாற்றும்.
 கலைப்பித்தன், கடலூர்.
 அவசியம்
 கரோனா வேறு வேறு பெயர்களில் நம்மைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இப்போது பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்தே நடமாடுகின்றனர். இருந்தாலும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும்தான் என்பதை உணர வேண்டும். கரோனா முற்றாக நீங்கும்வரை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 எச்சரிக்கை
 கரோனா நோய்த்தொற்று பெருமளவு குறைந்திருந்ததால், அரசு கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டது. அதனால் மக்களும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் கைவிட்டு விட்டனர். இதுதான் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவுவதற்குக் காரணமாகி விட்டது. இனியாவது பொதுமக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பொதுமுடக்கத்தின்போது நாம் பட்ட சிரமங்களை நினைவில் கொண்டு எச்சரிக்கையுடன் இருந்தால் கரோனா குறித்த அச்சமின்றி சுதந்திரமாக இருக்கலாம்.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 ஒத்துழைப்பு தேவை
 கரோனா பரவல் குறைந்து வரும்போதே, அது முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதி மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கைவிட்டு விட்டனர். அரசு தற்போது முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. முகக்கவசம் அணிவது மட்டும் போதாது. கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவையும் முக்கியமானவையாகும். அரசு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திட முன்வர வேண்டும். மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 அலட்சியம் கூடாது
 பல மாநிலங்களில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் கரோனா தீநுண்மி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே, இந்தியாவில் கரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. கடந்த இரு ஆண்டுகளாக எச்சரிக்கையாக இருந்ததுபோலவே இப்போதும் முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கட்டாயமாக உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு ஏற்பட்டபின் வருந்துவதால் பயனில்லை.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 பாதுகாப்பு நெறிமுறைகள்
 தற்போது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பெரும்பாலோர் கைவிட்டு விட்டனர். இப்போது அரசு முகக்கவசத்தைக் கட்டாயமாக்கியிருப்பதால் பலர் வேறு வழியின்றி முகக்கவசம் அணிகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் ஆகியவை அதிகம் நடைபெற்றதும் தொற்றுப் பரவல் அதிகரிக்கக் காரணமாகி விட்டது. இனியாவது மக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
 பா. சிதம்பரநாதன், கருவேலன் குளம்.
 கட்டுப்பாடின்மை
 கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதற்குக் காரணம், மக்களின் சுய கட்டுப்பாடின்மையே ஆகும். கடந்த இரு ஆண்டாண்டுகளாக விலை மதிப்பற்ற உயிர்களை பலி கொடுத்ததை மறந்துவிடக் கூடாது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றில் இன்றளவும் அலட்சியம் காட்டுவோரும் இருக்கின்றனர். கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து, அவர்களின் இல்லத்திற்கே சென்று கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
 உ. இராசமாணிக்கம், ஜோதி நகர்.
 காரணங்கள்
 அரசுகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தும், அவற்றை எல்லோரும் முழுமையாகக் கடைப்பிடிக்காததும், பலரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாமல் தவிர்த்ததும், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் காட்டிய அலட்சியமுமே கரோனா நோய்த்தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்குக் காரணங்களாகும். உருமாற்ற கரோனாவான ஒமைக்ரான் பரவலைக்கூட அரசு சிறப்பாகக் கையாண்டு சமாளித்து விட்டது. அரசு எச்சரிக்கை விடுத்தாலும், விடுக்காவிட்டாலும் மக்கள் தாங்களே சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் நிச்சயமாக நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கலாம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 பழகிக்கொள்வோம்
 கரோனா தீநுண்மி, வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு உருமாற்றத்தோடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தடுப்பூசி என்பது முதலுதவி ஆகுமே தவிர முழுமையான தீர்வாகாது. ஜப்பானியர்கள் எப்படி பூகம்பத்தோடு வாழ்வதற்குப் பழகிக் கொண்டார்களோ அதே போல் நாமும் கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருதல் என்று வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 வேதனையான செய்தி
 நோய்த்தொற்று நீங்கி விட்டது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்ற சூழலில் மீண்டும் நோய்த்தொற்று பரவுகிறது என்பது வேதனையான செய்தி. நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு, மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றல், கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 ஒரே வழி
 பல மாநிலங்களில் குறைந்திருந்த கரோனா நோய்த்தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்கு முக்கியமான காரணம் கரோனா குறித்த அச்சம் மக்களிடம் இல்லாமல் போனதுதான். இந்த நோய்த்தொற்று என்றுமே முழுமையாக நீங்காது என்பதை மருத்துவர்கள் பலமுறை சொல்லி விட்டார்கள். நம்மை நாமே காத்துக்கொள்வதுதான் இதற்கு ஒரே வழி. முகக்கவசம் அணிந்து கொள்ளாமல் எங்கும் செல்லக் கூடாது. கரோனா தீநுண்மியை காரணம் காட்டி மருத்துவ வணிகமும் அமோகமாக நடக்கிறது. ஆக மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்றால் கரோனா மீண்டும் தனது சுய ரூபத்தைக் காட்டும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 ஐயமில்லை
 நாம் கரோனாவுக்கான சரியான சிகிச்சை பெறுவதற்கு கற்றுக் கொண்டு விட்டோம். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா பெருவெற்றி அடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. கடந்த இரு ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்த தனி மனித இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகிய நடவடிக்கைகளை தற்போது மீண்டும் தொடங்க வேண்டும். திருவிழா, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் மக்கள் நெருக்கமாகக் கூடுவதைத் தவிர்த்தே ஆக வேண்டும். உலகில் எங்கும் கரோனா இல்லை எனும் நிலை வரும்வரை எச்சரிக்கை தேவை.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com