"வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் தேர்தல் முறை மேலும் நம்பகத்தன்மை உடையதாக மாறுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் தேர்தல் முறை மேலும் நம்பகத்தன்மை உடையதாக மாறும் என்பது சரியே.

கண்காணிப்பு எளிது
 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் தேர்தல் முறை மேலும் நம்பகத்தன்மை உடையதாக மாறும் என்பது சரியே. இதனால் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும். ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இருப்பது தவிர்க்கப்படும். இதனால் போலி வாக்காளர்கள் இல்லாத நிலை உருவாகும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்ப்பதும் நீக்குவதும் எளிதாகும். போலி வாக்காளர்கள் நீக்கப்படுவதால் மொத்த வாக்காளர் எண்ணிக்கையும் குறையும். இதனால் தேர்தலைக் கண்காணிப்பதும் எளிதாகும்.
 உ. அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
 எதற்காக?
 இந்த இணைப்பு கட்டாயமில்லை என்று அரசு கூறுவதிலிருந்தே இது தேவையற்றது என்பது புலனாகிறது. தேவையற்ற ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு எதற்காக துணைபோக வேண்டும்? தற்போதுள்ள தேர்தல் நடைமுறையில் நம்பகத்தன்மை நிரம்ப இருக்கிறது. எனவே, நம்பகத்தன்மை கூடுதலாகும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. போலியாக வாக்களிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இந்த இணைப்பை வேண்டுவது, தேவையற்ற மன உளைச்சலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். மேலும், இதனால் பண விரயமும் அதிகமாகும். எனவே இம்முடிவை அரசு கைவிடுவதே நல்லது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 வியப்பதற்கில்லை
 ஆதார் அட்டை ஏற்கெனவே வங்கி, வருமானவரி, குடும்ப அட்டை ஆகியவற்றோடு இணைக்கப்பட்டு விட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் "ஒரே நாடு ஒரே அட்டை' என்ற இலக்கை நோக்கி அரசு செல்வதாகக் கருதலாம். அரசு அளிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் ஆதார் அட்டை அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. ஆதார் மட்டுமே முக்கியம் என்று அரசு கருதுகிறது. விரைவில், ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆதார் எண்ணை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு ஆணையிட்டாலும் வியப்பதற்கில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 வரவேற்கத்தக்கது
 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது வரவேற்கத்தக்கது. இதனால், பதிவாகும் கள்ள ஓட்டுகளின் எண்ணிக்கையை பெருமளவு கட்டுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஆதாருடன் வங்கிக் கணக்கு, சிலிண்டர் மானியம், ஓட்டுநர் உரிமம், மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீட்டு அட்டை ஆகிய பலவற்றையும் இணைத்தால் ஒரே ஒரு ஆதார் கார்டு மட்டுமே குடிமக்களின் அனைத்து தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கும். இது தேர்தல் முறையை மேலும் நம்பகத்தன்மை உள்ளதாக மாற்றும். வாக்காளர்கள் ஆதார் கார்டு மூலமாக வாக்களிக்கவும் வழிவகை செய்யும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 முழு அதிகாரம்
 ஆதார் அட்டை வாக்காளரின் அடையாளத்துக்கான ஆவணமாகப் பயன்படுவதுதான் சரியாகும். இந்த இணைப்பால் தேர்தல் முறை மீது நம்பகத்தன்மை ஏற்பட்டு விடாது. தேர்தல் முறை மீது மக்களுக்கு நம்பகத் தன்மை ஏற்பட வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற, சுதந்திரமான, முழுமையான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய முடிவுகளில் தலையிடக்கூடாது. தேர்தல் ஆணையம் அரசியல் அழுத்தத்திற்கு வளைந்துவிடாமல் துணிவுடன் செயல்பட வேண்டும். இந்த செயல்பாடுதான் தேர்தல் நடைமுறைகளில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தும்.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 முற்றுப்புள்ளி
 குடும்ப அட்டையோடு ஆதார் எண்ணை இணைப்பதால் போலி குடும்ப அட்டைகள் நடைமுறையில் இல்லை என்று கூறப்படுகிறது. கிராமத்தில் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள், சென்னை போன்ற நகரங்களில் மற்றொரு வாக்காளர் அட்டையை பெற்றுக் கொண்டு தேர்தல் நேரத்தில் வசதிக்கேற்ப தங்களது வாக்குகளை பதிவு செய்கிறார்கள். இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால்தான் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 சீர்திருத்தம்
 ஆதார் அட்டையுடன் வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டையை இணைத்தார்கள். வருமானவரி குற்றங்கள் குறைந்தன. ஆதார் அட்டையை குடும்ப அட்டையுடன் இணைத்தார்கள். லட்சக்கணக்கான போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டன. அதுபோல ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால் போலி வாக்காளர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒரு நபரே பல ஊர்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது தவிர்க்கப்படும். இது ஒரு சிறப்பான தேர்தல் சீர்திருத்தம் ஆகும். இதனை வரவேற்று ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் கடமை.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 அச்சம்
 இது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஏனெனில் தற்போது வாக்களிப்பதற்கு, புகைப்படத்துடன் கூடிய 14 வகையான அடையாள அட்டைகள் காண்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறினாலும் இன்றளவும் தேர்தலில் போலி வாக்குகள் பதிவாவது நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது. புகைப்படத்தைவிட கருவிழி மற்றும் கைரேகை போன்ற தனித்தன்மை வாய்ந்த பதிவுகள் இருக்கும் ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்தால் நிச்சயம் நம்பகத் தன்மை இருக்கும். மற்றவர் வாக்கை நாம் செலுத்திவிடலாம் என்று எண்ணும் கயவர்களுக்கு இதனால் ஒருவித அச்சம் ஏற்படும் என்பது உறுதி.
 வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 உறுதி
 எரிவாயு இணைப்பு கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்ததால் லட்சக்கணக்கான போலி எரிவாயு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோன்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பதன் மூலமாக கள்ள ஓட்டுகள் ஒழிக்கப்படும் என்பதை உறுதியாக கூறலாம். ஆனால் நாம் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை ஆதார் எண் இணைப்பின் மூலமாக, தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் கட்சியினரால் பலவிதமான பிரச்னைகள் மக்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 தவறில்லை
 தனிமனித அடையாளங்கள் யாவும் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனி மனித அடையாளத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையை கேட்கின்றன. அப்படி இருக்கும்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தவறில்லை. மேலும் ஆதார் அட்டை இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகளின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியமாக இருக்கும் போது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் எவ்வித தவறும் இல்லை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 எதிர்பார்ப்பு
 ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க அரசு திட்டமிட்டபோது மக்களுக்கு தங்களின் தனியுரிமை காக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்தது. அரசு அதற்கு உரிய உத்தரவாதம் அளித்தது. அடுத்து ஆதார் அட்டை குடும்ப அட்டையுடனும் இணைக்கப்பட்டது. இவற்றால் பல முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்தியக் குடிமகன் எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதும், வாக்குப்பதிவில் எந்தத் தவறும் நடந்து விடக்கூடாது என்பதும் அரசின் எதிர்பார்ப்பாகும். எனவே, ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது சரியான முடிவே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தொடர்பு இல்லை
 ஆதார் எண் இணைக்கப்படாத காலத்திலேயே எத்தனையோ மாநிலத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இப்போதைய கேள்வி இந்திய தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையோடு இருக்கிறதா என்பதே. அரசியல் தலையீடுகள் ஆணையத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைப்பதற்கும் நம்பகத்தன்மைக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதி செய்துவிட்டால் தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com