"தீநுண்மிப் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் இயங்க அரசு அனுமதித்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் மதுக்கடைகளை மட்டும் மூடாமல் இயங்க அனுமதித்திருப்பது மிகவும் தவறு.

 மிகவும் தவறு
 தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் மதுக்கடைகளை மட்டும் மூடாமல் இயங்க அனுமதித்திருப்பது மிகவும் தவறு. ஆனால், அரசின் பெரும்பகுதி வருவாய் மது விற்பனையை சார்ந்து இருப்பதால் அரசு மதுக்கடைகளை மூடத் தயங்குகிறது. அரசு வருவாய்க்கு வேறு வழிகளை உருவாக்கி மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையாவது மது போதையற்ற தலைமுறையாக உருவாகும். மதுக்கடைகளை மூடுவதுதான் தீநுண்மியிலிருந்து மட்டுமல்ல, பிற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்களைக் காக்கும்.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 நல்ல தருணம்
 முந்தைய ஆட்சியில் தீநுண்மிப் பரவலின்போது மதுக்கடைகளை மூடாததை அப்போதைய எதிர்க்கட்சி கண்டித்தது. மதுக்கடைகளை மூடிவிட்டால் மக்களிடம் இருக்கும் மதுப்பழக்கத்தை மெல்ல மெல்லக் குறைத்துவிடலாம் என்று கூறியது. இப்போது அக்கட்சி ஆளுங்கட்சியாக இருப்பதால் நிச்சயமாக மதுக்கடைகளை மூடத்தான் வேண்டும். தற்போது ஆளுங்கட்சி இதனை ஒரு நல்ல தருணமாகக் கருதி தமிழ் மானம் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும். அரசு வருமானத்திற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. மேலும், மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காது.
 தெ. முருகசாமி, புதுச்சேரி.
 கண்கூடு
 தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கல்விக்கூடங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது தீநுண்மி வேகமாகப் பரவி வருவது கண்கூடு. இருந்தும் அரசு வருவாயை நோக்கமாகக் கொண்டு மதுக்கடைகளை மூடாமல் இருக்கிறது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் மக்களிடையே உள்ளது. அரசு வருவாயை இழக்க விரும்பாத நிலையில், ஏனைய துறைகளில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்பது போன்று மதுக்கடைகள் இயங்குவதிலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 முரண்பாடு
 தீநுண்மிப் பரவலைத் தடுப்பதற்காக திரையரங்குகளில் ஐம்பது சதவீத மக்களை மட்டுமே அனுமதிக்கும் அரசு, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மூடி வைத்திருக்கும் அரசு, வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு மதுக்கடைகளை மட்டும் இயங்க அனுமதித்திருப்பது முரண்பாடாக உள்ளது. மதுக்கடைகளில் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியுமா? வழிபாட்டுத் தலங்களை வார இறுதி நாட்களில் மூட வேண்டுமென அரசு உத்தரவிட்டிருப்பதைப் போலவே மதுக்கடைகளையும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கட்டாயமாக மூட அரசு உத்தரவிட வேண்டும்.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 எளிதல்ல
 மக்கள் கூடுகின்ற எந்தவோர் இடத்திலும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது எளிதல்ல. அப்படியிருக்க மதுக்கடைகளைப் பற்றி கூற வேண்டியதே இல்லை. அது எப்போதும் மக்கள் கூட்டம் கூடி முண்டியடிக்கிற இடமாகவே இருக்கிறது. எனவே, எளிதில் தீநுண்மி பரவக்கூடிய ஆபத்து அங்கு உள்ளது. அரசு வருவாயை மட்டுமே கவனத்தில் கொள்வது சரியல்ல. மக்களின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் மதுக்கடைகளைத் திறந்துவைத்து மக்களின் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் செயலில் அரசு ஈடுபடலாமா? அரசு உடனே மதுக்கடைகளை மூடி மக்களைக் காக்க வேண்டும்.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 வாய்ப்பு
 உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கினை விளைவிக்கும் மது விற்பனையை அரசு நடத்துவது தவறு. நோய்த்தொற்று ஊரடங்கை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூடி அதன் சாதக பாதகங்களை அரசு ஆராய்ந்து, அதன் பின்னர் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதை நோக்கிச் செல்லலாம். கடந்த அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவு போட்டபோது அதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் சென்றது. மது மயக்கமும் ஒரு வகையான பெருந்தொற்றுதான். இந்த நிரந்தர தொற்றிலிருந்தும் மக்களை காப்பாற்றுவது அரசின் பொறுப்பு.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 நியாயமில்லை
 மதுக்கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற இயலாது. மது அருந்துபவர்கள் மதி மயங்கி காணப்படுவர் என்பதால் கட்டுப்பாடுகளை அவர்கள் மதிக்க வாய்ப்பே கிடையாது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மதுப்பிரியர்கள் பின்பற்றமாட்டார்கள். இதனால் நோய்த்தொற்று சமூகத் தொற்றாக மாறிவிடக்கூடும். இது தெரிந்தும் அரசுக்கு வருமானம் என்று மதுக்கடைகளை திறந்திருப்பது, மக்கள் நலனை அரசு சிந்திக்காதது போன்று உள்ளது. நோய்த்தொற்று பரவாமலிருக்க பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு மதுக்கடைகளை மட்டும் திறந்து வைப்பது நியாயமில்லை.
 வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 முன்னெச்சரிக்கை
 மதுவினால் இளைஞர்கள், சிறுவர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் தங்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் இழந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை. இந்த தீநுண்மிக் காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நோய்த்தொற்றுப் பரவிவிடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. அப்படிப் பார்த்தால் அதிக மக்கள் கூடும் மதுக்கடைகளால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்காதா? நோய்த்தொற்றுக்காக மட்டுமல்ல நிரந்தரமாகவே மதுக்கடைகளை அரசு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைவர்.
 மா.பழனி, தருமபுரி.
 சாபக்கேடு
 அரசின் நிதி வருவாயில் முதல் இடம் வகிப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயே. அது மட்டுமல்ல, இப்போதுள்ள சூழ்நிலையில் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயமும் கலப்பட மது விற்பனையும் கொடிகட்டி பறக்கும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய செலவுகளின் பட்டியலில் மதுவையும் இணைத்து விட்டது காலத்தின் சாபக்கேடாகும். எனவே கள்ளச்சாராய விற்பனை, கலப்பட மது விற்பனைஆகியவற்றைத் தடுக்கவும், அதிக வருவாயைக் கருத்தில் கொண்டும் அரசு மதுக்கடைகளை இயங்க அனுமதித்துள்ளது என்பதே நிதர்சனம்.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 கொடுமை
 தீநுண்மி அதிவேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள், சந்தைகள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, நாட்டின் "குடிமகன்கள்' கூடும் மதுக்கடைகள் மட்டும் இயங்க அனுமதித்திருப்பதும், அங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்து வருவதும் கொடுமையிலும் கொடுமை. பொருளாதார நெருக்கடி மிக்க இந்த நேரத்தில் மது விற்பனையால் கிடைக்கும் வருவாய் அரசுக்கு பெரும் உதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. மதுக்கடைகளை அனுமதிக்கக்கூடாது என்று கூறினாலும் அரசு கேட்காது என்றே தோன்றுகிறது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கட்டுப்பாடுகள்
 அரசு, மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கோயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும். திரையரங்குகள், ஹோட்டல்கள், மால்கள், பேருந்துகள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏராளமான கட்டுப்பாடுகள். ஆனால், மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இவற்றிற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அதாவது, மக்கள் இயல்பாகவே கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் இடங்களில் அனுமதி மறுப்பு. கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்காத இடங்களில் கட்டுப்பாடுகள் இல்லை. இதுவா மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு?
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 சரியே
 மதுக்கடைகள் மூடப்படுமானால் நாட்டில் கள்ளச் சாராய உற்பத்தியும் அதன் விற்பனையும் பெருகும். கள்ளச் சாராயத்தினால் பலர் தங்கள் உயிரை இழக்க நேரிடலாம். அரசு எப்படி கடுமையாக நடந்து கொண்டாலும் சிலர் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை காண்கிறோம். அவர்கள் அதிக விலைக்கு கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடிப்பார்கள். அதனை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலையில் மதுக்கடைகளை இயங்க அனுமதித்திருப்பது மூலம் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது; மக்கள் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழப்பதும் தடுக்கப்படுகிறது. எனவே, மதுக்கடைகள் இயங்குவது சரியே.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com