ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டுக் காலம் நிறைவடைவதால்தான் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருக்கும் கருத்து ஏற்புடையதா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

இந்திய ரிசர்வ் வங்கி கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அன்று இந்த ரூ.2,000 நோட்டுகளை அச்சடிக்க செய்த அரசின் செலவினம், முன்யோசனை இன்றி செய்யப்பட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது.

ஏற்புடையதல்ல
 இந்திய ரிசர்வ் வங்கி கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அன்று இந்த ரூ.2,000 நோட்டுகளை அச்சடிக்க செய்த அரசின் செலவினம், முன்யோசனை இன்றி செய்யப்பட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது. தற்போது வங்கிப் பெட்டகங்களிலும் கறுப்புப் பண பதுக்கல்காரர்களிடமும்தான் ரூ.2,000 நோட்டுகள் இருப்பில் உள்ளன. இதனால் ரூ. 2,000 அதிகமாக புழக்கத்தில் இல்லாமற் போய்விட்டது. மேலும், வங்கிகளில் இந்நோட்டுகளை மாற்ற மக்கள் திரளவும் இல்லை. வங்கி வாடிக்கை
 யாளர்களை மட்டும் ரூ. 2,000 நோட்டுகளை தங்கள் கணக்கில் வரவு வைக்க அனுமதிக்கலாம். மற்றவர்களை அனுமதிப்பது தவறு.
 பா. திருநாவுக்கரசு, சென்னை.
 பரபரப்பு
 ரிசர்வ் வங்கி கூறுவதைத் தவறு என்று சொல்ல முடியாது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகவே வங்கிகளிலும், தானியங்கி இயந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டு கிடைப்பதில்லை. அதனால், பொதுமக்களிடமும் 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. மேலும் இப்போதெல்லாம் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது. பெட்டிக்கடைகளில் கூட பணம் தேவைப்படாமல் க்யூ ஆர் கோடு மூலம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. வருங்காலங்களில் ரூபாய் நோட்டு அச்சடிப்பு குறையக்கூடும். எனவே 2,000 நோட்டு திரும்ப பெறப்படுவதில் மக்களுக்கு பிரச்னை இல்லை.
 கு. அருணாசலம், தென்காசி.
 அச்சம்
 இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்து ஏற்புடையதல்ல. 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது பயன்பாட்டுக் காலம் முடிந்தவுடன் இது திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. பயன்பாட்டுக் கால வரையறை குறித்த விளக்கமும் இல்லை. கறுப்புப் பணத்தை அகற்றுவதற்காகத்தான் ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டதே. நாட்டில் தற்போது கறுப்புப் பணம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதா? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மீட்கப்பட்டு விட்டதா? ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் எப்போது திரும்பப் பெறப்படுமோ என்ற அச்சம்தான் எழுகிறது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 இன்னல்கள்
 உயர் செலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை 2016 நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்டதால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதுள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் 2017 மார்ச் மாதத்திற்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன் பயன்பாட்டுக் காலம் நான்கு முடிவடைய உள்ளது என்று குறிப்பிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறுவது ஏற்கத்தகுந்த காரணமாக இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அலைக்கழிப்புகள் இந்த நோட்டை மாற்றும்போது இல்லை என்பது மட்டுமே ஆறுதலான செய்தி.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 பெருங்குறை
 எந்த அறிவிப்பும் இல்லாமலே சில ஆண்டுகளுக்கு முன்னரே புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை அரசு நிறுத்தி விட்டது. அதனால் இப்போது பொதுமக்கள் மத்தியில் ரூ. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்திலும் அதிகம் இல்லை. ரூ.500-க்கும் ரூ.2,000-க்கும் இடையிலான பரிவர்த்தனைக்கு ரூ. 1,000 நோட்டு இல்லாதது பெருங்குறை. ரூ.2,000 நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்போர்தான் இந்த அறிவிப்பால் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கும் மாற்றிக் கொள்ள போதிய அவகாசமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு இதனால் நன்மையும் இல்லை; தீமையும் இல்லை.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கால வரையறை
 பொதுவாக, வங்கி ரூபாய் நோட்டு பயன்பாட்டுக்கு, கால வரையறை ஏதும் கிடையாது. இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறப் போவதாக தற்போது அறிவித்தாலும், மக்களிடையே புழக்கத்தில் இருந்து இந்த நோட்டு விடை பெற்று சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ரூ.2,000 நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.54 முதல் ரூ.3.77 செலவாகிறது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டது. இதை திடீரென திரும்ப பெறுவதில் அரசியல் காரணங்கள் இருக்கலாம். நோட்டின் பழமைதான் காரணம் என்பதை நம்ப முடியவில்லை.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 நல்ல முடிவு
 ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் ரூ.1, ரூ.2, ரூ.5 என்றும், அடுத்தகட்டமாக ரூ.10, ரூ.20, ரூ.50 தொடர்ந்து ரூ.100, ரூ.200, ரூ.500 என்றும்தான் உள்ளன. இப்படி இருந்தால் தான் குறைந்த தொகையை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள எளிதாக இருக்கும். தற்போது ரிசர்வ் வங்கி எடுத்திருப்பது நல்ல முடிவுதான். சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜி.பே, க்யூ.ஆர். கோடு உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதால் ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து எடுப்பதால் சாமானியர்கள் எவரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.
 வி.சி. கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு.
 பாதிப்பு இல்லை
 ரூபாய் 2, 000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கியிலும் தானியங்கி இயந்திரங்களிலும் வழங்கப்படவில்லை. வங்கிகள் இந்த நோட்டுகளை பெற்றுக்கொண்டு வேறு நோட்டுகளை வழங்குவதாலும் அவகாசம் வழங்கியிருப்பதாலும் மக்கள் அவசரப்படவில்லை. கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மட்டுமே இதனால் பயமேற்படலாம். அனைத்து கடைகளிலும் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் கருவிகளை கொண்டு வரலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நியாயமே
 ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, மற்ற நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வரும்வரை ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடாகவே ரிசர்வ் வங்கி கூறியது. மேலும் ரூ.2,000 நோட்டை சில்லறையாக மாற்றுதல் மற்றும் பாதுகாப்பாக வைத்திருத்தலில் இருந்த சிக்கல்கள் காரணமாக இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்களிடையே குறைந்தது. 2018-19 ஆண்டில் இந்த நோட்டு அச்சடிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அரிதாகப் புழக்கத்தில் இருப்பது 2017-இல் அச்சிடப்பட்ட பழைய நோட்டுக்களே. எனவே, அவற்றின் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்திருப்பதால் திரும்பப் பெறப்படுவது நியாயமே.
 கே. ராமநாதன், மதுரை.
 விடை இல்லை
 2,000 ரூபாய் நோட்டின் பயன்பாட்டுக் காலம் முடிவடைவதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2,000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் அச்சடிக்கப்பட்டது எவ்வளவு, தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகள் எவ்வளவு என்பதற்கெல்லாம் விடை தெரியாமலேயே இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக் காலம் நிறைவடைகிறது என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
 க. இளங்கோவன், நன்னிலம்.
 சாதகம்
 கறுப்புப்பண ஒழிப்பு, கள்ளநோட்டு அழிப்பு, ஊழல் தடுப்பு, தீவிரவாதத் தடுப்பு போ ன்ற காரணிகளைக் சொல்லி உயர் செலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இப்பொழுது திரும்பப் பெறும் பொழுது அது போன்ற எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி மட்டுமே அறிவித்துள்ளது. ரூ. 2,000 நோட்டை வங்கியில் எவ்வித ஆவணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு பதுக்கி வைத்திருப்பவர்களுக்கே சாதகமாகும். இந்த நடவடிக் கையால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 சரியல்ல
 ரிசர்வ் வங்கி கூறியிருக்கும் கருத்து ஏற்புடையது அல்ல. மற்ற நோட்டுகள் எல்லாம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டுக் காலம் முடிவடைவதாகக் கூறுவது சரியல்ல. ரூ.2,000 நோட்டுகள், வணிகர்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை சேர்த்து வைப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தன. சில மாதங்களாக வங்கியில் கூட ரூ. 2,000 நோட்டுகள் வழங்கப்படவில்லை. சிலர் பதுக்கி வைத்துள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையே இது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com