"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நகைப்பிற்குரியது

தமிழக பாஜக தலைவர் கூறியிருப்பது நகைப்பிற்குரியது.பாஜகவிடமிருந்து முரண்பட்டு உள்ள திமுக, அதிமுக ஆகிய திராவிடக்கட்சிகள் மக்களின்நம்பிக்கையைப்பெறுவதற்காக பாஜகவிடமிருந்து விலகியிருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. முற்காலங்களில் மத்திய ஆட்சியில் பதவியைப்பெறுவதற்காக அக்கட்சிகள் இரண்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது உண்மைதான் என்றாலும் இன்றைய சூழலில் அவை பாஜகவிடமிருந்து விலகியிருந்தால்தான் வாக்குஇழப்பை தவிர்க்கமுடியும் எனும் கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவரைத் தோற்கடிப்பதற்காக அவ்விருகட்சிகளும் கைகோத்துள்ளதாகக் கூறுவது ஏற்கமுடியாதது.

த. முருகவேள், விழுப்புரம்.

சரியல்ல

தமிழக பாஜக தலைவர் கூறுவது சரியல்ல. அதிமுக என்பது திமுக எதிர்ப்பில் வளர்ந்த கட்சி. திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் தன்கட்சி தொண்டர்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள் என்பது அதிமுக தலைமைக்குத் தெரியும். திமுக ஆளுங்கட்சி என்பதோடு சரியான கூட்டணி பலத்தோடும் பயணித்துக் கொண்டிருக்கும் கட்சி. எனவே அதிமுகவோடு திமுக இணக்கம் என்பதெல்லாம் கட்டுக்கதையே. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழி அரசியலுக்குப் பொருந்தாது. இருவரின் எதிரி அண்ணாமலை என்பது உண்மை. அவர் கருத்து அப்பட்டமான பொய் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும்.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

புதிய பொய்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் புதிய பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கடந்த தேர்தல்வரை கூட்டணியாக இருந்ததும் இந்தத் தேர்தலில் கூட்டணி அமை ப்பதற்காகக் காத்திருந்ததும் பாஜகவும் அதிமுகவும்தான். மாநிலத்தைப் பொறுத்தவரை உண்மையான எதிர்க்கட் சிகள் திமுகவும் அதிமுகவும். அவை இணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியமில்லை.கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டாகப் பிரியப்போகிறது. பாஜக தலைவர் தோல்வி பயத்தில் பேசிய பேச்சு இது எனலாம். இந்த கருத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

புலம்பல்

தமிழக பாஜக தலைவர் கொள்கை முரண் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களை ஏமாற்றி வெல்ல இயலாது என்பதை உணர்ந்து புலம்புகிறார். எடப்பாடியார் மற்றும் அண்ணாமலை இருவரின் பிரசாரத்தில் இருந்தே அவர்கள் மறைமுக கூட்டணியில் இருப்பது மக்களுக்கு தெரியும். எடப்பாடியார் ஒன்றிய பாஜகவை எதிர்த்துத் தான் பரப்புரை செய்ய வேண்டும் என்பதை மறந்து திமுகவை மட்டும் எதிர்ப்பது அவர் அண்ணாமலையுடன் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்கிறது. தங்கள் கொள்கைகளை எதிர்க்கும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து எப்போதும் முரணாகவே பேசும் அண்ணாமலை இதை சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

தி. சேகர், பீர்க்கன்கரணை.

நூற்றுக்கு நூறு

பொதுவாகவே அதிமுகவும் திமுகவும் பா.ஜ.கவைக் குறிவைத்து விமர்சனங்களை முன்வைக்கின்றன. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் , தங்கள் கட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பு சக்தியாக, பொது எதிரியாக உருவெடுத்திருக்கும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் இரண்டு திராவிடக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. எனவே, தன்னைத் தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகளுக்குள்ளும் ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியானதுதான்.

உதயம் ராம், சென்னை.

கேள்விக்குறி

பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை குறுகிய காலத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை உருவாக்கி விட்டார். இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று மத்திய அமைச்சராகி விட்டால் பிரதமர் மோடியின் நேரடிப் பார்வையில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க வின் செல்வாக்கை விரிவுபடுத்தி விடுவார். திமுக, அதிமுக இரு கட்சிகளின் செல்வாக்கையும் குறைத்து விடுவார். அதன்பின் தங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்ற பொதுவான அச்சத்தோடு இரு கட்சிகளுமே தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. அதையெல்லாம் பார்க்கும்போது அண்ணாமலை கூற்று சரி என்றே தோன்றுகிறது.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

வாய்ஜாலம்

தமிழகக் கட்சிகளை அழிப்பதில் ஆர்வம் காட்டி வந்த பாஜக தலைவர்கள் தேர்தல் நெருங்கியதும் தினந்தோறும் தமிழகத்திற்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள். தமிழக மக்களிடம் வாக்குறு திகளை அள்ளி வீசுவதும், தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் பணத்தைப் பதுக்குவதும், தமிழகம் போல் மாநிலம் உண்டா, தமிழ்மொழி போல் வேறு மொழி உண்டா, திருக்குறள் போல் வேறு நூல் உண்டா என்றெல்லாம் புகழாரம் சூட்டுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதைத் தடுக்க எதிரும் புதிருமான திமுகவும் அதிமுகவும் கைகோப்பதில் தவறில்லை.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

உறுதி

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே ஒன்றை ஒன்று பங்காளிக் கட்சியாகவே பார்க்கின்றன. ஆனால், ஊழலுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பகையாளியாகப் பார்க்கின்றன. "தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிராளிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்' என்ற அடிப்படையில் அந்த இரு திராவிடக் கட்சிகளும் செயல்பட்டன. குறிப்பாக அதிமுக அண்ணாமலை வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. அக்கட்சியின் வாக்குகள்கூட திமுகவுக்கு சென்றிருக்கக்கூடும். ஆனால், மக்களின் கணக்குதான் வெற்றியைத் தீர்மானிக்கும்.

முகதி. சுபா, திருநெல்வேலி.

சப்பைக்கட்டு

பாஜக தலைவர் அண்ணாமலை யார்? தனிப்பட்ட அவருக்கு ஏது செல்வாக்கு? பாஜக மாநிலத் தலைவராக இருப்பதால் அவருக்கு பாஜக ஆதரவு வாக்குகள் கிட்டும், அவ்வளவுதான். இவர் ஏன் வலைக்கு முந்தி கல்லெறிகிறார் என்றால், தேர்தலில் தான் வெற்றி பெற முடியாமல் போய்விட்டால், அதற்குக் காரணம் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் திரைமறைவுக் கூட்டணிதான் என்று சப்பைக்கட்டு கட்டுவதற்காகத்தான். அப்போதுதான் இவர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். தன்நெஞ்சு அறிவது பொய்யற்க எனும் வள்ளுவர் வாக்கை பாஜக தலைவர் மறந்துவிட்டார் போலும்.

ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

வரலாறு

கடந்த காலங்களில் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்த பாஜக தலைவர் அண்ணாமலை சமீப காலமாக அதிமுகவை திமுக வுடன் இணைத்து விமர்சித்து வருவதற்கு பாஜகவின் தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணையாததுதான் காரணம். அந்தந்த மாநிலங்களில் மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளுடன் தேசிய கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி செய்து வருவதுதான் வரலாறு. மாநில கட்சிகளாகிய அதிமுக, திமுக ஆகியவற்றின் பலத்தை உணர்ந்ததனால்தான் அண்ணாமலை இவ்வாறு கூறுகிறார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து விடலாம் என்று அண்ணாமலை காணும் கனவு பலிக்காது.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

முக்கியக் கொள்கை

திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிளுக்கும் ஒரே பொது எதிரி அண்ணாமலைதான். மேலும் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதே இரு கட்சிகளின் முக்கியக் கொள்கையாக உள்ளது. அப்படியே பாஜக வெற்றி பெற்றாலும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்றே இரு திராவிடக் கட்சிகளும் விரும்புகின்றன. அவர் வெற்றி பெற்றால் மத்தியில் அமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி. அதனைத் தடுப்பதற்காகவே இரு திராவிடக் கட்சிகளும் மறைமுகமாகக் கைகோத்து அண்ணாமலையை வீழ்த்த முயல்கின்றன.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

கண்கூடு

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு மக்களிடையே செல்வாக்கை உயர்த்தியுள்ளது. அண்மைக்காலமாக, தமிழகத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகிவருவது கண்கூடு. தமிழக வளர்ச்சியையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர் அண்ணாமலை. திமுக, அதிமுகவின் பொது எதிரியான அண்ணாமலைக்கு எதிராக இரு கட்சிகளும் மறைமுகமாகக் கைகோத்ததில் வியப்பில்லை. அரசியலில் இது வாடிக்கைதான். எப்படியோ எலியும் பூனையுமான இரு கட்சிகளையும் ஒன்றிணைந்து செயல்படவைத்த பெருமை

அண்ணாமலையையே சாரும் !

கே. ராமநாதன், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com