பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வரவேற்போம்

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சென்னை, மதுரை போன்ற நகர்ப்பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் எல்லா இடங்களிலும் பொதுவான வாக்குப்பதிவிற்கே பணிகளை மேற்கொண்டன. சென்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் அதை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது நடத்தும் கள ஆய்வு காலம் கடந்த முயற்சி என்றாலும் உரிய காரணங்களைக் கண்டறிந்து அடுத்து வரும் தேர்தலுக்காவது குறைந்தது 80 சதவீத வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். எனவே, கள ஆய்வை வரவேற்போம்.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஆய்வு தேவை

படிக்காத பாமர மக்கள் வாழுகின்ற கிராமப்புறங்களில் வாக்கு சதவீதம் நன்றாக இருக்கிறது. ஆனால் மெத்தப் படித்தவர்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் குறைந்துள்ளது. நகரவாசிகள் வாக்களிப்பதில் ஏன் சுணக்கம் காட்டுகிறார்கள் என்பது பற்றி விரிவான ஆய்வு தேவை. நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சி கிராமப்புறங்களில் பலனளித்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் இந்த விழிப்புணர்வு ஏன் சென்று சேரவில்லை என்ற கேள்வி எழுகிறது. எதுவாக இருந்தாலும் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன என்பதை களஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறியிருப்பது சரியே.

மா. பழனி, கூத்தப்பாடி.

கேள்விக்குறி

அதிகாரிகள் வாக்களிக்காதவர்களை தனித்தனியே சந்திப்பதும், அவர்கள் வாக்களிக்காமைக்கான காரணத்தை கேட்டறிவதும் சாத்தியமான ஒன்றுதான். ஆனால் அக்காரணங்களை கேட்டறிந்தாலும் அவர்கள் குறிப்பிடும் குறைபாடுகளை களைவது தேர்தல் ஆணையத்தால் இயலுமா என்பது கேள்விக்குறியே. என்றாலும் உண்மைக்காரணங்களை அறிந்து அதை அரசின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துகொண்டே செல்வது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடும். எனவே வாக்களிப்பு விழுக்காட்டை உயர்த்தியாக வேண்டியது முக்கியம்.

த. முருகவேள், விழுப்புரம்.

திருத்தம் தேவை

நகரங்கள்தான் நாகரிகத்தின் தொட்டில் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஆனால் இன்று அங்குள்ள மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் கூட பின்தங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது. அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசு விடுமுறை அளிக்கிறது. அந்த விடுமுறையில் வாக்குச் செலுத்தாமல் தொடர் விடுமுறையைக் கொண்டாட ஊர் சுற்றுவது ஏற்புடையது அல்ல. பெருநகரங்களில் குடியேறியவர்களில் சிலருக்கு அவர்களின் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.அப்படி இருந்தால் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.

பா. சக்திவேல், கோயம்புத்தூர்.

சுணக்கம்

மெத்தப்படித்த மேதாவிகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் நகர்ப்புறங்கள் வாக்களிப்பில் சுணக்கம் காட்டுகின்றன. அங்கும் கூட அதிகம் வாக்களிப்பவர்கள் அடித்தட்டு, நடுத்தர வகுப்பு வாக்காளர்களாகத்தான் இருப்பர். நகர்ப்புறங்களின் இத்தகைய மனோபாவத்துக்கு முக்கிய காரணம் சொகுசான வாழ்க்கை வாழப் பழகியதுதான். ஒருநாள்கூட அவர்கள் தேசத்திற்காக சிரமப்படமாட்டார்கள். அதன்பின் ஆட்சியாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வதில் மட்டும் குறையே வைக்க மாட்டார்கள். எனவே நகர்ப்புறக் கல்வி நிலையங்களில் ஜனநாயகத்தின் உன்னதம் மாணவர்கள் மனதில் பதியவைக்கப்பட வேண்டும்.

முகதி. சுபா, திருநெல்வேலி.

அரசாணை

படிப்பிற்கேற்ற வேலையும், திறமைக்கேற்ற ஊதியமும் கிடைக்காததால் பெருநகரங்களில் வாழ்பவர்களில் பலர் வெளி மாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வாக்களிக்க குடும்பத்தினரோடு சொந்த ஊருக்கு வர வேண்டுமென்றால் பயணத்திற்கு விடுப்பெடுக்க வேண்டும். சொந்தப் பணத்தையும் செலவிட வேண்டும். ஊழியர்கள் வாக்களிக்க ஊதியத்தோடு விடுப்பளிக்க வேண்டும் என்று அரசாணை இருந்தாலும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அந்த ஆணையைக் கண்டு கொள்வதே இல்லை. பெருநகர மக்கள் வாக்களிக்காமல் இருந்தது நிச்சயம் தவறுதான்.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

அவசியம்

கிராமத்து மக்களை விட நகரத்து மக்கள் வாக்களிக்கப் பின்தங்கி வருவது ஏற்புடையதல்ல. வெயில் மிக அதிகம், பலரது பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன என்றெல்லாம் காரணம் சொல்லலாம். விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தும், பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததும் பெருநகர்வாசிகள் வாக்களிக்கச் சுணக்கம் காட்டியதை கள ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது அவசியம். படித்தவர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணராதது மிகவும் வேதனையளிக்கிறது. சரியான காரணமின்றி வாக்களிக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கினாலும் தவறில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியிருப்பது மிகவும் சரியே.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தீர்வு

பெருநகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் பரப்புரைக்கு செல்லும் வேட்பாளர் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அந்தப்பகுதியில் குடியிருப்போர் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓட்டுப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு செல்வதில்லை. இதனை கருத்திற்கொண்டு உரிய காரணங்களை அறிய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுதோறும் சென்று கள ஆய்வு நடத்தி குறைந்த வாக்குப்பதிவு பிரச்னைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்.

ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

கடமை

தேர்தல் நாளன்று சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கைப்பேசியுடன் வாக்களிக்கச் சென்ற போது தேர்தல் பணியாளர்கள் கைப்பேசியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர். அவர்கள் கூறுவதை ஏற்று வாக்காளர்கள் சிறிது நேரம் கைப்பேசியை யாரிடமாவது கொடுத்துவிட்டு வாக்களித்திருக்கலாம். அல்லது வீட்டிற்கு சென்று கைப்பேசியை வைத்துவிட்டு வந்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அவர்கள் வாக்களிக்காமல் சென்றுவிட்டனர். உரிமையைக் கோரும் மனிதர்கள், தம் கடமையை மறந்து விடுவதே இம்மாதிரியான மோதல்களுக்கு காரணம். எனவே, கள ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திரா காந்தி, பிடாரிப்பட்டு.

தண்டனை தேவை

பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதை விரும்புவதில்லை. இவ்வாறு தொடர்ந்து வாக்களிக்காமல் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கு முன்பாக வாக்களிப்பதன் இன்றியமையாமை குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதைவிட முக்கியம், அதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் செய்கின்ற பல்வேறு குளறுபடிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பணி செய்த பல்வேறு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இக்குறைகள் களையப்பட்டால்தான் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த முடியும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

நம்பிக்கையின்மை

பெருநகரங்களில் வசிப்பவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் கொள்ளாததற்குக் காரணம், அரசியல் கட்சிகளின் மீது ஏற்பட்டுவிட்ட நம்பிக்கையின்மைதான். எல்லா கட்சிகளும் ஊழலில் திளைத்திருப்பதை அவர்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களும் வாக்களித்திருக்க வேண்டும். உரிய காரணமின்றி, வாக்களிக்காதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களின் பலனோ இலவசங்களோ வழங்கப்பட மாட்டாது என்று அரசு அறிவிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் அதிகாரியின் கருத்து சரியே.

குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

கண்கூடு

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு வாக்காளர்களை மட்டும் குறை சொல்வது தவறு. தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்தான் வாக்குப்பதிவு குறைவுக்குப் பொறுப்பு. பெருநகரங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களின் பெயர்கள்கூட வாக்காளர் பட்டியலில் இல்லாததுதான் குறைவான வாக்குப் பதிவுக்குக் காரணம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கச் சொல்லி விண்ணப்பித்தவர்களின் பெயர் சேர்க்கப்படாமலும் நீக்கச் சொன்னவர்களின் பெயர் நீக்கப்படாமலும் குளறுபடி நடந்தது கண்கூடு. மக்களும் இனியாவது வாக்களிப்பது தங்கள் தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.

தி. சேகர், பீர்க்கன்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com