Enable Javscript for better performance
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை- Dinamani

சுடச்சுட

  தமிழ் அறிஞர்கள் அறிவோம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

  Published on : 05th January 2014 09:12 AM  |   அ+அ அ-   |    |  

  ramalinkam

  நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற தி.வெ.இராமலிங்கம் பிள்ளை. மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர். அரசியல். சமுதாயம், பண்பாடு ஆகியவை மறுமலர்ச்சி அடைந்த காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரு அகிம்சைக் கவிஞர் தொடக்கக் காலத்தில் வன்முறை புரட்சியால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்று எண்ணி பின்னாளில் காந்தியடிகளின் அஹிம்சை கொள்கை மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என தன்முடிவை மாற்றிக் கொண்ட புரட்சியாளர்.

  பிறப்பு: பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை வெங்கட்டராம பிள்ளை தாயார் அம்மணி அம்மாள். அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் வெங்கட்டராம பிள்ளை.

  இராமலிங்கர் பிறப்பதற்கு முன்னரே அவருக்கு முன் பிறந்தோர் ஏழு பெண்கள் ஆவர். எனவே அவரது பெற்றோர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டி தமிழ்நாட்டுத் தெய்வங்களை வேண்டினார். அச்சமயம் எட்டாவது முறையாக அம்மணி அம்மையார் கருவுற்றிருந்தார். அவ்வேளையில் இராமஸ்வரத்துக்கு தீர்த்த யாத்திரை சென்ற பிராமண தம்பதிகள் வழியில் மோகனூரில் சில நாள்கள் தங்கியிருந்தனர். அவர்களை வெங்கட்டராம பிள்ளையும், அம்மணி அம்மையாரும் போட்டி போட்டுக்கொண்டு பணிவிடைகள் செய்து இளைப்பாற்றினர். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அப்பெரியோர், அம்மணிக்கு ஆண்குழந்தை பிறக்கும் எனவும், பிறக்கும் குழந்தைக்கு இராமேஸ்வரத்தில் இருக்கும் இராமலிங்க சுவாமியின் பெயர் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதன்படி எட்டாவதாக ஆண் குழந்தை பிறக்கவே அக்குழந்தை இராமலிங்கம் எனப் பெயரிட்டார். அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

  கல்வி: நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் தம் தொடக்கக் கல்வியைக் கற்றார். அவர் தந்தை மோகனூரில் தலைமைக்காவலராகப் பணியாற்றிவர். பணி மாற்றலாகி கோவைக்குச் சென்றார். இதன் விளைவாக இராமலிங்கம் பிள்ளையும் தனது உயர்நிலைக்கல்வியை கோயம்புத்தூரில் பயின்றார். 1906 ஆண் ஆண்டு நடைபெற்ற பள்ளி இறிதித் தேர்வில் இராமலிங்கம் கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி கண்டார். பிறகு 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.

  திருமணம்: கல்லூரியில் படிக்கும் போதே அவரது தந்தையாரின் வற்புறுத்தலால் தந்தையின் சகோதரி கரூர் வீரப்ப பிள்ளையின் மகளான முத்தம்மாளை திருமணம் செய்து கொண்டார். எனினும் ஏதோ இனந்தெரியாத வெறுப்புணர்ச்சியால் உந்தப்பட்டு முத்தம்மாளுடன் குடும்பம் நடத்தாமலே காலம் கடத்தினார். ஒருநாள் முத்தம்மாள் இரவில் அவர் காலைப்பிடித்து கண்ணீர் விட மனம்மாறிய இராமலிங்கம் பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். எனினும் குழந்தை பிறக்காமையால் அவரது தந்தை முத்தம்மாளின் தங்கையை மணக்க வேண்டினார். முத்தம்மாளும் வேண்டினார். இதனை ஏற்க மணமில்லாமல் இராமலிங்கர் தவித்தார். அப்போது 1924 ஆம் ஆண்டு முத்தம்மாள் தீராத வயிற்று வலியால் தசுன்புற்று இறந்தார்.

  தனிமையில் வாடிய இராமலிங்கம் பிள்ளையை நண்பர்களும் உறவினர்களும் தேற்றி அவரது மனதை மாற்றி மணைவியின் தங்கையான செளந்தரம்மாளை திருமணம் செய்து வைத்தனர். இனிய இல்லறம் நடத்திய இவர்கள் மூன்று ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

  பணி: தந்தை வெங்கட்ராமன், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பதவி வகித்ததால், தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்பிய இராமலிங்கரது தந்தை அவரை ஏதேனும் ஒரு பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று எண்ணி அப்போதைய சென்னை காவல் துறைத் தலைவராக (டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல்) இருந்த ராபர்ட்சன் துறையிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று உதவி ஆய்வாளர் பதவியை தனது மகனுக்கு பெற்றுத்தர முயன்றார். காவல் துறைப் பணியை விரும்பாத இராமலிங்கர் தனது வீட்டை விட்டு வெளியேறி 15 நாள்கள் சுற்றித்திரிந்தார். தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்ட அவரது எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் அவரது தந்தை அவரை மீண்டும் அழைத்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியை வாங்கித் தந்தார். இவ்வேளையில் மனமில்லாத இராமலிங்கர் சரிவர தனது பணிகளைச் செய்யாமல் பணியை உதறி வெளியேறினார்.

  அதன்பின் நாமக்கல் தொடக்கப்பள்ளியொன்றில் ஆசிரியர் வேலையில் தந்தையார் அமர வைத்தார். அப்பணியிலும் ஈடுபாடு இல்லாமல் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு புரட்சிக் கனல் தெறிக்கப் பேசி வந்தார். இதன் காரணமாக தலைமையாசிரியர் அவரை வேலையில் இருந்து நீக்கினார். அதன் பிறகே அரசியலில் முழு ஈடுபாடு காட்டி அதில் ஈடுபடலானார்.

  இராமலிங்கரின் ஓவியம்: புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர், இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 இல் தில்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

  ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார்.

  குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930 இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

  கவிஞராகவும் ஓவியராகவும் திகழ்ந்த கவிஞர், திருக்குறளுக்குப் புதிய உரை எழுதியவர். பல்சுவைப் பாடல்கள் எழுதியவர். தவிர, அவர் சிறந்த நாவலாசிரியர். அவருடைய தன் வரலாறான "என் கதை'யே நாவல் படிப்பதுபோல் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இவர் எழுதிய "மலைக்கள்ளன்', "மரகதவல்லி', "கற்பகவல்லி', "காதல் திருமணம்' ஆகிய புதினங்கள் வாசகர்களால் ரசித்துப் பாராட்டப்பட்டவை. "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது.

  "அவளும் அவனும்' என்ற சிறு காவியத்தை நாமக்கல் கவிஞர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியாது. காவியம் என்றால் காவியத்துக்கான அமைப்புடன் கடவுள் வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப் படலம் என்ற லட்சணங்களுடன் எல்லாம் அமைய வேண்டும் என்ற காவிய இலக்கணத்தை மீறிய எளிய நடையில் அமைந்த கதைப் பாடல் "அவளும் அவனும்' அந்த நாளில் இளைஞர்களால் பாராட்டப்பட்டது. இவரது மலைக்கள்ளன் எனும் நெடுங்கதை எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடிக்க கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.

  பாரதியார் பாராட்டு: நாடகக் கலையிலும் கவிஞர் நாட்டமுடையவர். அப்போது நாமக்கல்லில் வாழ்ந்து வந்த பிரபல நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கவிஞருக்குப் பிள்ளைப் பிராய நண்பர். அவரின் நடிப்பையும், குரல் வளத்தையும் கண்டு வியந்த கவிஞர், நாடகத்தில், எஸ்.ஜி.கிட்டப்பாவுக்குப் பல பாடல்கள் எழுதிக் கொடுத்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகத்தைப் பார்க்கப் பார்க்க இராமலிங்கத்துக்கும் நாட்டு நடப்பில் நாட்டம் ஏற்பட்டது.

  காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார்.

  எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்'' என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

  1904-இல் வைஸ்சிராயாக இருந்த கர்ஸன், வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்தப் பிரிவினை அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த பாரத மக்களைச் சுதந்திர வேட்கை கொள்ளச் செய்தது.

  அரவிந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி, கோகலே, பாலகங்காதர திலகர் போன்றவர்களின் சொற்பொழிவுகள் பத்திரிகைகளில் வெளிவரும். கவிஞர் அவற்றைப் படித்தார். அவருக்கு நாமக்கல் நாகராஜ ஐயங்கார் என்ற தேசப்பற்றுமிக்கவர் இளமைப் பருவம் முதல் இறுதி வரை உற்ற நண்பராயிருந்தார். இவற்றைப் படித்த இருவரும் முழு மூச்சுடன் தேசத் தொண்டில் இறங்கினர். கவிஞர் பேச்சுத் திறத்தால் திருச்சி மாவட்டத்தில் பிரபலமாகிவிட்டார். திலகரும், காந்தியடிகளும் மக்களிடையே தேசப்பற்றுக் கனலை வளர்க்கத் தொடங்கினர். காந்தியடிகளின் அஹிம்சை, சத்தியாக்கிரகம் என்ற இரு கொள்கைகளும் கவிஞரை ஈர்த்தன. அதுமுதல் முழுக்க முழுக்கக் காந்தியக் கவிஞராக மாறிவிட்டார்.

  1906 ஆம் ஆண்டு முதல் நாட்டுச் சுதந்திரத்தில் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1

  914 இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

  வேதாரண்யம் கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதற்கான பாதயாத்திரையை ராஜாஜி தலைமையில், பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து நடைப்பயணம் சென்றனர். அப்போதுதான் நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் தொண்டர்கள் உற்சாகத்தோடு பாடிக்கொண்டே சென்றனர். பிற்காலத்தில் அந்தப் பாடலை எழுதியவர் மகாகவி பாரதியாரோ என்ற ஐயம் ஏற்படும் அளவுக்கு அந்தப் பாடலும், எழுதிய கவிஞரும் புகழ் பெற்றனர்.

  சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932 இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழகமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன.

  1937-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

  காங்கிரஸ் இயக்கத்துக்குக் கவிஞரின் கவிதைகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன. காங்கிரஸ் கவிஞர், தேசத் தொண்டர் என்றெல்லாம் தமிழகத் தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட கவிஞருக்கு வாழ்வளித்தது ஓவியக்கலையே. தன் வறுமையை வெளியே புலப்படுத்தாமல் கெளரவமாக வாழ்க்கையைக் கம்பீரமாக நடத்தியவர் கவிஞர். அவர் கவிதையின் பெருமையை உணர்ந்த தேசபக்தர் சின்ன அண்ணாமலை அவருடைய நூல்களை வெளியிடத் தொடங்கிய பிறகுதான் கவிஞர் வாழ்க்கையில் மெல்ல மெல்ல வறுமை விலகத் தொடங்கியது. தேவகோட்டை தியாகி சின்ன அண்ணாமலை, சென்னைக்குக் குடியேறி, "தமிழ்ப்பண்ணை' என்ற புத்தக வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

  1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள்.

  அரசவைக் கவிஞர்: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார்.

  'பத்மபூஷன்' விருது: மத்திய அரசு 1971 இல் இவருக்கு தில்லியில் 'பத்மபூஷன்' விருதளித்து பாராட்டியது.

  மறைவு: 84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.

  நினைவு இல்லம்: ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  கவிஞரின் சுதந்திர வேட்கையின் பாடல் வரிகள்:

  நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம் சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

  இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;

  பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?

  'வேண்டும்' என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்

  யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

   

  'அடிமையல்ல நான்' எனும் ஆண்மையே சுதந்திரம்;

  தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?

  ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;

  மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

   

  அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே

  நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ?

  நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம்

  கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ?

   

  கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்;

  உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்?

  தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம்

  வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம்.

   

  ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும்

  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

   

  கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை

  கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன்

  செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை

  தேசிய பாரதியின் திறமும் இல்லை

  புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து

  புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த

  உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா

  உத்தமராம் காந்திதனை உவந்து பேச.

   

  சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்

  சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்

  எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்

  எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்

  தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்

  சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல

  இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி

  இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

   

  கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி

  கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு

  தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம்

  சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி

  உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ

  ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி

  விலைமதிக்க முடியாத செல்வமன்றோ

  வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

   

  புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்

  போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்

  கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்

  களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்

  சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த

  தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்

  உத்தமரைக் 'கண்டோமா' என்னும் ஏக்கம்

  ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

   

  குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்

  கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்

  ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி

  நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட

  அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து

  அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி

  ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்

  உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

   

  என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்

  எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?

  நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்

  நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?

  கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்

  கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்

  இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்

  எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

   

  கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்

  கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்

  புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை

  பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்

  தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி

  தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில்

  யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்

  ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க.

   

  தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்

  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

   

  தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும்

  தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார்

  சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில்

  தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

   

  நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம்

  நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்

  ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை

  அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ?

   

  செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை

  ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!

  முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே

  மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

   

  உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய்

  உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம்

  உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை

  ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ?

   

  அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை

  ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்

  விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால்

  வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி?

   

  ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்

  நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது

  பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்

  பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்?

  இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இன்று பெருமையாக முணுமுணுக்காதவர்களே கிடையாது என்று கூறலாம்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp