குடும்பத்தைக் காட்டுவது எப்படி?
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காட்சி ஊடகங்கள் பற்றிய விழாக்கள் நடைபெற்றன. இரண்டும் எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் விழா "காட்சிப் பிழை' என்ற திரைத்துறை சார்ந்த புதிய இதழின் அறிமுக விழா. எழுத்தாளர் பிரபஞ்சன், திரைத்துறை ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, இயக்குநர் சேரன், இயக்குநர் சற்குணம், எழுத்தாளர் ரவிகுமார் உள்ளிட்டோர் பேசினர். மாற்று சினிமா பற்றியும் மாற்று சினிமா இதழுக்கான தேவை பற்றியும் சுவையான பேச்சுகளாக அவை அமைந்தன. உதாரணத்துக்கு ''தமிழ் சினிமா விமர்சகர்கள் திரைப்படத்தை விமர்சிக்கும்போது, கேமிரா கவிதை எழுதுகிறது என்று எழுதுகிறார்கள். பசுமையான காட்சியைக் காட்டிவிட்டால் இப்படி சொல்வது வழக்கமாகிவிட்டது. அதே போல் குணச்சித்திர நடிப்பு என்கிறார்கள். எல்லா நடிப்புமே குணத்தைச் சித்திரிப்பதுதானே?'' என்று பிரபஞ்சன் விவரித்தது சுவையாக இருந்தது.
பேச்சின் நடுவே விவாதமாக அமைந்த விஷயம் இது:
எழுத்தாளர் ரவிகுமார் பேசும்போது சினிமாவில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் துயரங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று குறைபட்டுக் கொண்டார். ஏற்கெனவே பேசி முடித்திருந்த சேரன், ""குழந்தைகள் இல்லாமல் ஒரு குடும்பத்தை எப்படி காட்ட முடியும்? ஏற்கெனவே சிகரெட் பிடிப்பதைக் காட்டக் கூடாது, குடிப்பதைக் காட்டக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். சமூகத்தில் நடப்பதைப் பிரதிபலிப்பதுதானே சினிமா?'' என்றார் ஆவேசமாக. மீண்டும் ரவிகுமார் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று விளக்கவேண்டியதாகிவிட்டது.
அவர் அப்படித்தான்!
ரண்டாவது நாள் விழா எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா. எந்த புகழாரங்களையும் தாங்கிக் கொள்ள முடியாதவர் என்று லெனின் பற்றி கேள்விப்பட்டிருந்தது இந்த விழாவிலும் நிரூபணமானது. விருதைப் பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. மாறாக விழாவை நடத்திய தமிழ் ஸ்டூடியோ அமைப்பினருக்கு அதற்காக திட்டுக்கிடைத்ததுதான் மிச்சம்.
அமைப்பாளர்களுக்கு தேற்றுதலாக விழாவில் நடிகர் பாரதிமணி, இயக்குநர் ஜனநாதன், கவிஞர் மதுமிதா போன்றவர்கள் "அவர் அப்படித்தான்' என்பதற்கான பல்வேறு சான்றுகளை சம்பவங்களோடு சொன்னார்கள்.
ஒரு தயாரிப்பாளருக்கும் ஆபிஸ் பையனுக்கும் நடந்த பிரச்னையில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பள பாக்கியால் ஒரு திரைப்படமே வெளியாகாமல் நிறுத்துவதற்காக லேபுக்கு ஒரு நோட்டீஸ் வர, அந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை தம் சம்பளத்தில் இருந்து (அப்போது லெனினுக்கு சம்பளம் பத்தாயிரம்) தந்து படத்தை வெளியிட வைத்தது பற்றி ஜனநாதன் சொன்னார். லெனின் காப்பாற்றிய அந்தப் படத்தின் பெயரை மட்டும் நல்லெண்ணம் கருதி எடிட் செய்துவிட்டார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.