

ஸ்ரீசக்ரா ஸ்டேஜூம் நாடகக்காவலர் கலைக்கூடமும் இணைந்து தயாரித்துள்ள "திருநாவுக்கரசர்' நாடகம் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்றப்பட்டது. (பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.மனோகருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த நாடகம் இது.)
சைவ சமயத்திலிருந்து நீங்கி சமண சமயத்தைத் தழுவிய மருள்நீக்கியார் தருமசேனராகி சூலை நோயால் துயருற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி, சூலைநோய் நீங்கப்பெற்று திருவதிகை ஈசன் மீது "கூற்றாயினவாறு' என்ற முதல் பதிகத்தைப்பாட, ஈசன் அவரிடம் இன்று முதல் நீ நாவுக்கரசன் என்று அழைக்கப்படுவாய் என்று கூறுவதிலிருந்து இந்நாடகத்தில் திருநாவுக்கரசர் வரலாறு தொடங்குகிறது.
திருநாவுக்கரசர் மீது கோபம் கொண்ட பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் (சுண்ணாம்பு கால்வாய்) இட்டு தாழிடுகிறான். உணவில் நஞ்சு கலந்து கொடுக்கிறான். பட்டத்து யானையை அவரைக் கொல்ல ஏவுகிறான். அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் வீசுகிறான். இவை எல்லாவற்றிலுமிருந்து திருநாவுக்கரசர் ஐந்தெழுத்தின் துணையோடு எப்படி மீண்டு வருகிறார் என்பது அழகாக தொகுத்து சொல்லப்பட்டுள்ளது.
கோயில்கோயிலாக செல்லும் அவரது பக்தி பயணத்தில் திருஞானசம்பந்தரைச் சீர்காழியில் சந்திப்பது, திங்களூரில் நாகம் தீண்டி இறந்த சிறுவனை உயிர்ப்பிப்பது, மறைக்காட்டில் மறைக்கதவம் திறப்பிப்பது, திருவையாற்றில் கயிலைக்காட்சி காண்பது இறுதியாக திருப்புகலூர் அடைந்து "எண்ணுகேன்' என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் பாடி அங்கேயே முக்தி அடைவது என அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் சுவைபட சொல்லப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் மருள்நீக்கியாரும் அவரது தமக்கை திலகவதியாரும் கோயிலில் சந்திக்கும் காட்சியிலும், திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சந்திக்கும் காட்சிகளிலும், அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் மைந்தனின் சடலத்தைக் கண்டு கதறியழும் காட்சியிலும் ரசிகர்களை உருக வைத்துவிடுகிறார்கள்.
கே.பி.அறிவானந்தத்தின் வசனம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். அதில் "இந்த சூலை என்பது நோய் அல்ல, இறைவன் எனக்குக் காட்டிய தாய்', "பஞ்சமாபாதகம் செய்தவர் பாவமும் பஞ்சாட்சரம் சொல்ல தீரும்', "சிவநாமத்தை சொல்ல மறந்தாலும் அப்பரின் திருநாமத்தைச் சொல்ல மறந்ததில்லை', "நம்புவோம் நமசிவாய நம்பு ஓம் நமசிவாய' இப்படி பற்பல வசனங்களைச் சுட்டலாம்.
சிவனுக்குத் தீபம் தானாக ஆராதனை செய்வது, திருநாவுக்கரசர் கல்லோடு கடலில் முழ்கி மேலே வருவது, கோயில் கதவின் பூட்டு தானாக திறப்பது, தாழ்ப்பாள் விலகுவது, கதவு மூடுவது, இப்படி பல வியப்பூட்டும் மாயாஜால காட்சிகளும் உண்டு.
அப்பருடைய,(திருநாவுக்கரசர்) முக்கியமான பதிகங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். (நாமார்க்கும் குடியல்லோம், குனித்த புருவமும், விறகில் தீயினன் போன்ற சில நல்ல பதிகங்களைப் பயன்படுத்த இயலாமற் போனாலும்).
ஆனால் பாடல்கள் இசையோடு இருப்பதைத் தவிர்த்து வெறும் குரல் மட்டும் ஒலித்தால் இன்னும் இயல்பாக இருக்கும்.
அதுபோலவே அப்பர் வாழ்வின் முக்கிய சம்பவங்களான இறைவன் இடபக்குறி, சூலக்குறி பொறித்தது (தூங்கானை மாடம்), இறைவன் திருவடி தீட்சை அளித்தது (நல்லூர்), சம்பந்தரின் சிவிகையை சுமந்தது (திருப்பூந்துருத்தி),
இறைவன் பொதிச்சோறு அளித்தது(திருப்பைஞ்ஞீலி) போன்றவற்றையும் சுருக்கமாகவாவது சேர்த்திருக்கலாம். (சில நகைச்சுவைக் காட்சிகளைக் குறைத்து).
இந்நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி கதைப்போக்கிற்குத் தொடர்பில்லாமல் அமைந்துள்ளது. தேனிலவிற்கு அனுமதிக்காத மாமனார் மீது மருமகன் கோபப்படுவது, அதற்காக தனது தகப்பன் இறக்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்ப, எதிரே தகப்பனே வந்துவிட கலவரமாவது.. இவைபோன்ற சராசரி காட்சிகளாக இப்பகுதி அமைந்திருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில் நடப்பதை விளக்குவது, திருமண சடங்குகளை விளக்குவது போன்றவை பயனுள்ள தகவல்களே. ஆயினும் தேனிலவு போவது, கைது செய்வது, கம்பி எண்ணுவது போன்ற வாசகங்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு ஏற்றவையாக இல்லை. இவையாவது பரவாயில்லை. ஒரு காட்சியில் ஒருவர் "திருஞான சம்பந்தரை வரவேற்க நல்லா அரேஞ்ச் பண்ணியிருக்கேன் என்று கூறுகிறார். கொடுமையடா சாமி!
திருநாவுக்கரசராக வரும் மாஸ்டர் ஸ்ரீதரின் (இன்னுமா மாஸ்டர்) நடை உடை பாவனை அனைத்துமே அருமை. உடல்மொழியும் வெகு சிறப்பு. பாராட்டுகள். ஆனால் உணர்ச்சிவசப்பட்டுபேசும்போது அப்பரின் வயதுக்கேற்ற நிதானம் கொஞ்சம் குறைகிறது. (திருவருட் செல்வர் சிவாஜியை ஒருமுறை பார்த்தால் தவறில்லை.)
மற்றொன்று திருவதிகை, திங்களூர், திருப்புகலூர் போன்ற எல்லா ஊர் கோயில்களுக்கும் ஒரே கோயிலைக் காட்டுவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம். குறைந்தபட்சம் அந்தந்த ஊர் இறைவனின் பெயரையாவது எழுதி வைத்து வேறுபாட்டை உணர்த்தியிருக்கலாம்.
மற்றபடி வழக்கமான சபா நாடகங்களைப் போல் அல்லாமல் திருநாவுக்கரசரின் வாழ்க்கையை சுருக்கமாகவும், சுவையாகவும் அறியும் வாய்ப்பு இந்நாடகத்தைப் பார்ப்பதன் மூலம் கிட்டும். இளைய தலைமுறையினர் அவசியம் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும். பக்தி உணர்வுக்காக அல்ல தமிழுணர்வு கொள்ள. ஏனெனில் "தமிழோடு இசைப்பாடல் மறந்தறியா' தொண்டரல்லவா திருநாவுக்கரசர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.