"நல்லா வாசிக்கும்போதே நிறுத்திடணும்!'

'சம்பிரதாயா' என்னும் அமைப்பின் சார்பில் இசை தொடர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் மியூசிக் அகாதெமி சிற்றரங்கில் நடைபெற்றது.  "சர்வாதா' என்று பெயரிடப்பட்ட அந்நிகழ்ச்சியை இசை ஆய்
"நல்லா வாசிக்கும்போதே நிறுத்திடணும்!'

'சம்பிரதாயா' என்னும் அமைப்பின் சார்பில் இசை தொடர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் மியூசிக் அகாதெமி சிற்றரங்கில் நடைபெற்றது.

 "சர்வாதா' என்று பெயரிடப்பட்ட அந்நிகழ்ச்சியை இசை ஆய்வாளர் பி.எம்.சுந்தரம் நெறிப்படுத்தி நடத்தினார். பழம்பெரும் நாதஸ்வர கலைஞர் செம்பனார் கோயில் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவும் சீனியர் தவில் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தியும் தங்களது இசை அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பேசியவற்றிலிருந்து சில பகுதிகள்:

 எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா: மயிலாடுதுறைக்கு அருகே உள்ள செம்பனார் கோயில்தான் எங்களது பூர்வீகம் என்றாலும் கூட எங்களது பாட்டனார் காலத்திலேயே நாங்கள் மயிலாடுதுறைக்கு குடிவந்துவிட்டோம். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவானாக விளங்கிய செம்பனார் கோயில் பல்லவி வைத்தியநாதன் பிள்ளை, எங்கள் தந்தை வழிப்பாட்டனார் ராமசாமிப் பிள்ளையின் தந்தையார் ஆவார். அவரைத் தொடர்ந்து எங்கள் பாட்டனாரும் அவரது வாரிசுகளாக கோவிந்தசாமிப் பிள்ளையும் தட்சிணா மூர்த்திப் பிள்ளையும் உருவானார்கள். இவர்களே செம்பனார் கோயில் சகோதரர்கள் என்று முதலில் அழைக்கப்பட்டார்கள். அந்த கோவிந்த சாமிப் பிள்ளையின் புதல்வர்கள்தான் எனது அண்ணன் சம்பந்தமும் நானும். எங்களையும் செம்பனார்கோயில் சகோதரர்கள் என்றே அழைக்கிறார்கள். எத்தனையோ ஊர்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளில் வாசித்திருக்கிறோம். இருந்தாலும் கோயிலில் வாசிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு தனிதான்.

 எங்களுடைய குரு பந்தநல்லூர் குருசாமிப் பிள்ளை. அவரிடம் முறையாக கற்றுக் கொண்டு 1946 முதல் வாசித்து வந்த நானும் அண்ணன் சம்பந்தமும் 1998-ல் வாசிப்பதை நிறுத்தினோம். நன்றாக வாசித்துக் கொண்டிருக்கும் போதே நிறுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி நிறுத்தினோம்.

 இப்போது இசைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வர்ணம், கிருதிகளை வாசிக்க கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவற்றோடு சேர்ந்து மல்லாரி, ரக்தி போன்ற நமது பாரம்பரியமான இசைக் கூறுகளையும் கற்கவேண்டும். அப்போதுதான் மரபுகள் அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். வளரும் கலைஞர்களுக்கு ஒன்றே ஒன்று கூறுகிறேன். இசையில் சாதகம் என்று சொல்லப்படுகிற பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். இசை வசமாகும்வரை சாதகத்தை விடாதீர்கள். சங்கீதத்தில் புகழ் பெற குறுக்கு வழிகளில்லை. சாதகம் ஒன்றே வழி.

 திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி: எனது சொந்த ஊர் மயிலாதுறைக்கு அருகில் உள்ள திருவாளப்புத்தூர். அங்கு இருந்த புகழ்பெற்ற தவில் கலைஞர் பசுபதிப்பிள்ளைதான் எனது குரு. அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாட்டிய மேதையாக விளங்கிய திருவாளப்புத்தூர் கல்யாணி அம்மாளின் சகோதரர் அவர். பசுபதிப்பிள்ளையின் குரு அம்மாசத்திரம் கண்ணுசாமி பிள்ளை.

 எங்கள் குருநாதரின் வீட்டில் எப்போதும் ஐம்பது சீடர்களுக்குக் குறையாமல் குருகுல வாசகமாக இருப்பார்கள். சாப்பிடுவது படுப்பது எல்லாம் அங்கேதான். அவர்கள் தங்குவதற்கென்றே தனி கொட்டகை போடப்பட்டிருக்கும். சிஷ்யக் கொட்டாய் என்று நாங்கள் அந்தக் காலத்தில் கூறுவோம். அதெல்லாம் இப்போது இல்லை. அந்தக் கொட்டகை இருந்த இடத்தில்தான் இப்போது என் வீடு இருக்கிறது.

 அந்தக் காலத்திலும் பேர் பெற்ற தவில் வித்வான்கள் நிறையபேர் இருந்தாலும் முதன் முதலில் தனித் தவில் வாசித்து புகழ் பெற்றது நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான். இசையுலகில் அவரை எல்லோரும் தம்பி என்று அழைப்பார்கள்- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டு திருமணப் பத்திரிகையில் "நீடாமங்கலம் தம்பி அண்ணன்' என்று போட்டிருந்தார்கள். அந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புதல்வர் சண்முக வடிவுதான் முதன்முதலில் தவிலில் சொல் வாசித்து புதுமை செய்தார். நான் நிறைய வித்வான்களுக்கு வாசித்திருந்தாலும் அதிகமாக வாசித்தது செம்பனார் கோயில் தட்சிணா மூர்த்தி பிள்ளைக்குத்தான்.

 முன்பெல்லாம் ஆட்டுத் தோலில் தவில் செய்தார்கள். ஏனோ இப்போது மாட்டுத்தோலில் செய்கிறார்கள். அதனால்தான் முன்புபோல் அந்தச் சப்தம் இல்லை. இருந்தாலும் இளம் தவில் கலைஞர்கள் நன்றாகத்தான் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை. தவில் நாதஸ்வரத்தின் பக்கவாத்தியம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். அனுசரணைதான் முக்கியம்.

 பி.எம். சுந்தரம்: கர்னாடக சங்கீதத்தில் ராக சங்கதிகள் என்று அதிகம் பேசப்படுகிறது. அதன் அடிப்படையே நாதஸ்வர இசைதான். சுமார் 150 ஆண்டுகளாக தொடர்ந்து நாதஸ்வர கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் குடும்பம் செம்பனார்கோயில் குடும்பம். இன்றைக்கும் ரக்தி ராகம் என்றால் அது செம்பனார் கோயில்தான். ஒரு குடும்பத்திலிருந்து வருகிற அத்தனை பேருமே நிபுணர்களாக இருப்பது இந்த செம்பனார்கோயில் குடும்பத்தில் மாத்திரம்தான்.

 அதுபோலதான் திருவாளப்புத்தூரும். அந்த ஊர் பசுபதிப்பிள்ளையை தவிலின் குருபீடம் என்று கூறுவார்கள். அவரது சீடர் நமது கலியமூர்த்தி. தற்போது தவிலில் கணக்கு, ஸ்பீடு எல்லாம் இருக்கிறது. ஆனால் அதில் நடைச் சொல் என்று ஒன்று உண்டு. அதை இப்போது பெரும்பாலும் யாரும் வாசிப்பதில்லை. திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி நடைச் சொல் வாசிப்பதில் நிபுணர்.

 இந்த இரண்டு மகா கலைஞர்களும் வாசித்து நிறைய கேட்டிருக்கிறோம். பேசிக் கேட்டது குறைவு. அதற்கு இது ஒரு வாய்ப்பு. தொடர்ந்து இது போன்று சீனியர் கலைஞர்கள் தங்கள் இசையனுபவங்களை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். அதனை ஜூனியர் கலைஞர்கள் வந்து கேட்டு பயன் பெற வேண்டும். வணக்கம்.

 -ராஜ்கண்ணன்

 எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, பி.எம்.சுந்தரம், டி.ஏ.கலியமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com