"பாரதி விட்டுச்சென்ற சொத்து' "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன்!

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனையின் ஊற்றாம், கதையின் புதையல், அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படை மருந்து, மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன், அயலார் எத
"பாரதி விட்டுச்சென்ற சொத்து' "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன்!

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனையின் ஊற்றாம், கதையின் புதையல், அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படை மருந்து, மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன், அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன். என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும்; தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்!'

இவைதான் பாரதியார் பெயரில் பாரதிதாசன் வைத்திருந்த அன்பின் அடையாளம்; பாசத்தின் முத்திரை!

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி புதுச்சேரி கனகசபை-இலக்குமி அம்மை பெற்றோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம்.

15-வது வயதில் கவி புனையும் ஆற்றல் பெற்ற சுப்புரத்தினம், 1908-இல் புதுச்சேரியில் வேணு நாயக்கர் இல்லத்தில் பாரதியாரைக் காணும் வாய்ப்பைப் பெற்றார்.

பாரதியின் மீசையும் கம்பீரமும் சுப்புரத்தினத்துக்கு, பாரதி கடவுள் -பரமசிவனாகக் காட்சியளித்தார். அச்சமயத்தில் பாடியதுதான் "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடல்.

அக்காலகட்டத்தில் புதுச்சேரியில் தங்கி, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பகவான் அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்றவர்களுடன் நெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. அதோடு பாரதியார் நடத்திய "இந்தியா' பத்திரிகைக்கு மறைமுகமாக வேலைகள் செய்துவந்தார்.

பாரதியார் பெயரில் கொண்டிருந்த மரியாதை காரணமாக சுப்புரத்தினம் என்ற தன் பெயரை "பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார். அதற்கு நண்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், கடைசிவரை பாரதிதாசன் என்ற பெயரை மாற்றிக் கொள்ளவேயில்லை.

திருபுவனை என்னும் ஊரில் ஆசிரியராக இருந்த பாரதிதாசன், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பின்னர் விடுதலை அடைந்தார்.

1921-இல், பழனியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். தேசிய இயக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் கதர்த் துணியைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார்.

1929-இல் பெரியார் ஈ.வெ.ராவுடன் தொடர்பு ஏற்பட்டது. பெரியார் நடத்திய "குடியரசு' இதழில் கதை, கட்டுரை, கவிதை எழுதத் தொடங்கினார். இந்தியாவிலேயே முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய பாடல் எழுதிய ஒரே கவிஞர் பாரதிதாசன்தான் என்ற பாராட்டையும் பெற்றார்.

 அத்தொடர்புக்குப் பின்னணி, காந்தியைச் சந்தித்த பாரதி, ""அரிஜனங்கள் இழிநிலைக்குப் பரிகாரமாக உங்கள் போராட்டத்தில் இடம் உண்டா?'' என்று கேட்ட பாரதிக்கு, ""முதலில் விடுதலை; அரிஜனங்கள் பிரச்னை காத்திருக்க வேண்டும்'' என்னும் காந்தியின் பதில்கேட்டு, ""அத்தகைய அரசியல் விடுதலை எனக்குத் தேவையில்லை'' என்னும் அழுத்தமான குரலே பாரதியை தேசியத்திலிருந்து விலக்கிவைத்தது. பாரதியின் வழியை பாரதிதாசனும் பின்பற்றினார். பெரியாருடன் தொடர்புகொண்ட பாரதிதாசன், தமிழினத்தைப் பற்றி, தன்மானத்தைப் பற்றி, தமிழ்மொழியைப் பற்றி "தமிழியக்கம்' என்ற நூலை எழுதினார்.

1934-இல் "இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்னும் நாடகத்தை எழுதி, பெரியார் தலைமையில் அரங்கேற்றினார்.

1946-இல் கவிஞர் பாரதிதாசன் பற்றி, முல்லை முத்தையா முதன் முதலாக அறிஞர், புலவர், கவிஞர், மறுமலர்ச்சி எழுத்தாளர் ஆகியோரிடமிருந்து பெருமுயற்சி எடுத்து கட்டுரை, கவிதை, வாழ்த்துரை ஆகியவற்றைச் சேகரித்து "புரட்சிக் கவிஞர்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். அந்நூல் நான்கு பதிப்புகள் கண்டது. முல்லைப் பதிப்பகத்தார் கவிஞருக்கு நிதி திரட்டி அளிப்பதற்காகக் கவிஞரிடம் அபிமானம் கொண்ட பலர் சேர்ந்து குழு அமைத்தனர். அக்குழுவுக்கு அறிஞர் அண்ணா பொருளாளராகவும், முல்லை முத்தையா செயலாளராகவும் இருந்தனர்.

அதே ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் விளையாட்டுத் திடலில், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கவிஞருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் நிதி அளித்து, பொன்னாடை போத்திக் கெüரவிக்கப்பட்டது. அதை அறிஞர் அண்ணா சிறப்பாகச் செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சில தேசியக் கலைஞர்கள் அதற்கு மேல் எழுதுவதற்குத் தூண்டுதலோ, தத்துவச் சரக்கோ அற்றுப்போன காலத்திலும் இவர் தொடர்ந்து மக்களுக்காக எழுதிவந்தார். அதனாலேயே நாட்டில் எழுந்த அத்தனை வாதங்களும் கருத்துப் போர்களும் மோதல்களும் இவரது இலக்கியத்தில் மிகுந்த அழுத்தத்துடன் தமது முத்திரையைப் பதித்தன.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் ஏழை எளிய மக்களுக்குச் சுதந்திரம் இல்லாததைக் கண்ட பாரதிதாசன், விசாலப்பார்வையுடன் உலகப்பனைப் பாடுகிறாய்.

ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்!

ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா!

தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்

செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகி விட்டால், ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!

இப்படி எழுதிய பிறகு, பாரதிதாசன், ஏழை எளிய உழைப்பாளிகள் மனதில் இடம்பெற்றார். மேலும், "குடும்ப விளக்கு' (ஒருநாள் நிகழ்ச்சி), "குடும்ப விளக்கு' (விருந்தோம்பல்), "குடும்ப விளக்கு' (திருமணம்), "குடும்ப விளக்கு' (மக்கட்பேறு), "குடும்ப விளக்கு' (முதியோர் காதல்) என ஐந்து நூல்கள் எழுதி தமிழர்கள் குடும்பத்தில் நிகழும் ஐந்து வகையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு ஐந்திணை காவியம்போல் படைத்தார்.

பாரதிதாசன் படைப்புகளில் "குடும்ப விளக்கு' சிறப்பான படைப்பு என்பது அறிஞர்களின் கருத்து. இதுபோல் 62 அரிய படைப்புகளைப் படைத்துள்ளார் பாரதிதாசன். அவற்றுள் சில திரைப்படங்களாக வந்துள்ளன. அவருடைய திரைப்படங்களில் "பொன்முடி', "வளையாபதி' போன்றவை சிறப்பானவை - குறிப்பிடத்தக்கவை.

சங்கே முழங்கு, தமிழுக்கு அமுதென்று பேர், துன்பம் நேர்கையில் யாழெடுத்து, வேரில் பழுத்த பலா - இவையெல்லாம் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள். இன்றளவும் பலரது மனதிலும் நினைவிலும் நீங்கா இடம்பிடித்த செந்தமிழ்ப் பாடல்கள்.

1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், சென்னையில் மூதறிஞர் ராஜாஜியால் கவிஞருக்குப் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கப்பட்டது.

1963-இல் "பாண்டியன் பரிசு' நூலை திரைப்படமாக்க முயன்றார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. தமிழை அமுதமாகக் கருதி பலவாறு பாடிய அந்தக் குயில் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி மண்ணுலகைவிட்டுப் பறந்தது. வரவிருக்கும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வது சாலப்பொருந்தும். பாரதிதாசனைப் பற்றிக் கூறவேண்டுமானால் இக்கட்டுரை ஒன்று போதாது. காவியமே படைக்கவேண்டும்.

பாரதிதாசன் வாழ்ந்த காலத்திலேயே சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன், ""பாரதியார் தமிழுக்கு விட்டுச்சென்ற சொத்து பாரதிதாசன்'' என்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழுக்குக் கிடைத்த அந்த அழியாச் சொத்தை பாதுகாப்பது நமது தலையாய கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com