

அடுத்த தலைப்பு கவிதைமணி பகுதிக்கு தொடர்ந்து உங்கள் கவிதைகளை அனுப்பும் கவிஞர்களுக்கு நன்றி! அடுத்த வாரத்திற்கான தலைப்பு ‘தேர்தல்’. உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ’தீபாவளி’ என்ற தலைப்பில் சிறப்பு கவிதையும் வரவேற்கப்படுகின்றன. |
1) கலை ஓவியம்
திரைப்படம் - இது
நிழல்நீரில்
நிஜமனங்களைப்
பிடிக்கப்பயன்படும் வலை!
கற்பனைத் தூரிகை
காலத்தைக்குழைத்துக்
கனவுத்திரையில்
தீட்டிய
'கலை' ஓவியம்!
இருட்டுமனங்களிலிருந்து
இரவலாய் வாங்கிய
ஏக்கங்களின்
பெருமூச்சுகளாய்
ஒளிச்சிதறல்கள்!
நட்சத்திரங்களைக் காட்டி
இருட்டில் மானுடத்தைக்
குவிக்கும்
மாயாவி!
திரைப்படம் - இது
இருள்நதியின் கரையோரத்தில்
வெற்றுச் சொற்களை ஏந்திய
வெளிச்சத்தூண்டில்!
இது
ஓலியை விழுங்கி
இருளில் பிரசவிக்கும்
இளமைப்பெண்!
-சந்தர் சுப்ரமணியன்
2) கலை வளர்த்தார்!
தெருக்கூத்து பொம்மலாட்டம் நாட கங்கள்
தெருத்தெருவாய் நடத்தியன்று கலைவ ளர்த்தார்
அரும்பொழுதாய்ப் போக்குதற்கு மட்டு மின்றி
அருங்கருத்தை மனத்தினிலே பதிய வைத்தார்
கருத்தாகப் பண்பாட்டை ஒழுக்கந் தன்னைக்
காண்கின்ற காட்சிகளில் மிளிர வைத்தார்
திருவாக அக்கலைதான் விஞ்ஞா னத்தால்
திரைப்படமாய் வளர்ந்ததின்று வியக்கும் வண்ணம் !
காட்சிமட்டும் ஓடியது ஊமை யாக
காட்சியொடு சேர்ந்ததொலி அதற்குப் பின்பு
காட்சிவெள்ளை கறுப்புமாறி வண்ண மாகிக்
காணும்முப் பரிமாணம் ஆன தின்று
மாட்சியுடை புராணங்கள் இதிகா சங்கள்
மன்னர்கள் கதையென்னும் நிலைமை மாறி
நாட்டிலுள்ள வர்க்கபேதம் ஊழ லாட்சி
நற்குடும்பம் கதைக்கருவாய் ஆன தின்று !
துடிப்பான வசனங்கள் மக்கள் நெஞ்சில்
தூர்வாரி ஆட்சிமாற்றம் செய்த திங்கே
நடிகர்கள் தம்குரலில் பேசிப் பாடி
நடித்ததெல்லாம் இரவலாக மாறி னாலும்
படிக்காத பாமரர்க்கும் விழிப்பு ணர்வை
பகுத்தறிவை ஊட்டிமாற்றம் செய்த திங்கே
முடியாத செல்களையும் முடித்து வைக்கும்
முயற்சிக்கு வித்தேதான் திரைப்ப டங்கள் !
-பாவலர் கருமலைத்தமிழாழன்
3) சினிமா, சினிமா
விசித்திரமான வானம் இது
மின்னும் நட்சத்திரங்களுக்கானது.....
எப்போது வேண்டுமானாலும்
மங்கவைத்து காணாதுசெய்து விடும்.
விசித்திரமான இராட்டினம் இது
கீழிருப்போரை மேலேற்றி
மேலிருப்போரை கீழிறக்கி
அசந்தால் குப்புறத் தள்ளி விடும்.
விசித்திரமான மாயவலை இது
மீளமுடியாமல் சிக்கவைக்கும்,
சிக்கிக்கொண்டோரை மாயவைக்கும்,
சிக்கலைச் சிக்கலாக்கி ஓயவைக்கும்.
விசித்திரமான மாயக்கண்ணாடி இது
சிரித்தால் அழுது காட்டும்
அழுதால் சிரித்துக் காட்டும்
விழுந்தால் எழுந்து காட்டி விழவைக்கும்.
விசித்திரமான சூதாட்டம் இது
பணம்பெருக்கி குணம் சுருக்கும்
பணம்சுருக்கிப் பிணமாக்கும்
பணத்தாலே பணம்பண்ணும்.
விசித்திரமான புதைகுழி இது
தோண்டினால் புதையலும் கிடைக்கும்
தோண்டுவோர்க்கான புதைகுழியுமாகும்.
எட்டிப்பார்ப்போர்க்கு அதிசயக்குழியாகும்.
ஜரிகைக் கனவுகளால்
கட்டப்படும் கூடாரமிது........
எந்நேரமும் கலையலாம், உடையலாம்
கலைத்தபின் கூடலாம், சேரலாம்.
மொத்தத்தில் இது
தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு
சைத்தான்களால் சபிக்கப்பட்டு
மனிதர்களால் விளையாடப்படும்
மாயவிளையாட்டு ஆகும்.
- கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.
98416 13494
4) இன்றைய சினிமா
திரையுலகம் ஓர் நாடகமேடை
விட்டில் பூச்சியை போல் வீழ்ந்தோர் பலர்
அனைவரையும் கவரும் ஓர் காந்தம்
தீயவைக்கு திசை காட்டும் ஓர் மார்க்கம்
சாக்கடை புழுவை போல் நல்லிடம் என நம்பி இருப்போர்
பொய் என உணருவது எந்நாளோ ?
-சா. சந்திரசேகர், கோவை
5) சினிமாவில் வெற்றி!
சினிமாவில் வெல்லுவழி ஒன்றே
சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே
“அஞ்சாமல் திரைகடல் ஓடு
அங்குள்ள திரவியத்தைத் தேடு “
என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!
இவ்வழியில் உறுதியாய் நில்லு!
சுயமாக யோசித்தல் எதற்கு?
துட்டொன்றே போதும் நமக்கு!
பிறமொழிகள் ‘திரை’க்கடலில் தேடு!
பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!
கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!
காசுவந்து குவியும்கண் கூடு!
- பசுபதி, கனடா
6) இனி வருமா
மனதிற்கு இனிமை வேண்டும்
வாழ்விற்கு நல்ல கருத்து வேண்டும்
இளமைக்கு புத்துணர்ச்சி வேண்டும் - அதில்
விரசமில்லா தன்மை வேண்டும்
முதுமைக்கு ஆனந்தம் வேண்டும்
களிப்புக் காட்சிகள் பல வேண்டும்
செவிக்கு இனிய இசை வேண்டும் -அதில்
வாழ்வின் துன்பம் மறக்கப்படவேண்டும்
நற்சிந்தனை தூண்டப்பட வேண்டும்
சிறார் முதல் பெரியவர் வரை சேர்ந்து பார்க்கப்படவேண்டும்
சமூக நீதி காண்பிக்கப்பட வேண்டும் - இவைஅனைத்தும்
நெடுங்காலம் நினைவில் நிற்கவேண்டும்
இப்படிக் கிடைத்தால் அது தரமானசினிமா ......
அது இனி வருமா ?
-இராசத்தியமூர்த்தி, சென்னை, 99402 86330
7) சினிமாவுக்கு வந்த கடவுள்
திடீரென்று திருக்கோவிலை விட்டுத்
திரையரங்குக்கு வந்தார்
கடவுள்.
சினிமா நாயகனின்
சித்திர வெட்டுருவை
அண்ணாந்து பார்த்தபோதுதான்
முதன்முதலாகக் கழுத்துச் சுளுக்கியது
கடவுளுக்கு!
படநாயகனின் பதாகைகளுக்குத்
தீபாராதனை நடத்தின
தெருவுக்குத் தெரு உள்ள
தீவிர ரசிகர் மன்றங்கள்.
ஜீன்ஸ் அணிந்த சிறுசுகளும் இளசுகளும்
பால்குடம் சுமந்து வந்து
அபிஷேகம் செய்து ஆர்ப்பரித்தன
அந்தக் கட் அவுட்டுக்கு!
படம்போடும் முன்பே
அரங்கில் சந்தோஷ சப்த
சங்கீத ஆலாபனை விதவிதமாக…
படத்தில் படிக்கட்டுத் தெரிந்தது…
பின்னர் நாயகனின்
கால்ஷு மட்டும் தெரிந்தது…
அதற்காகவே தவம்கிடந்த
ரசிகர்கள்
தம் உள்ளங்கையில் வைத்தே
கற்பூர ஆராதனை செய்தனர்
கால்ஷுவுக்கு!
இடையிடையே விசிலோசை
எதிரொலித்தது எட்டுத்திக்கும்.
வேத மந்திரத்தைவிட விசிலோசையில்தான்
பக்தி சுகம் அதிகமென்று
பட்டிமன்றத் தீர்ப்பளித்தார் பகவான்.
லாரிகளில்
வாரிவந்த ரோஜாப் பூக்களை
நாயக பிம்பத்தின் மீதும்
நாடிவந்த ரசிகர்ள் மீதும்
மழையாகப் பழிவதற்குப்
பயிற்சி பெற்ற ரசிகப்படை
பார்க்கும் இடமெல்லாம்.
எல்லாவற்றையும் பார்த்த பிறகு…
இந்த ரசிகர்ளைப்போல் விசுவாசமாக
இருக்கவில்லையே என்று
தன் பக்தர்களை நொந்துகொண்டார்
கடவுள்!
தெய்வம் திரும்பவே இல்லை
திருக்கோவில் பக்கம்.
இனி
படத்தில் நடித்தால்தான்
தம்பெருமையைத்
தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று
இயக்குநர் புதுமைராஜ் வீட்டின்
வாயிலில் வாய்ப்புக்காகக்
காத்துக் கிடக்கிறார் கடவுள்
கூர்க்கா விரட்டியும்!
-கோ. மன்றவாணன்
8) சினிமாவே உன்னை…
வாழ்க்கை வண்டியை எப்படியோ ஒரு
வழியாக ஓட்டிச் செல்லவேண்டி
வகைவகையான தொழில் செய்து
வியர்வையில் சோர்ந்துபோன அவன்
சம்சாரியோ சன்னியாசிபோல் திரிபவனோ
ஒரு வடிகாலாய் பொழுதுபோக்காய்
ஒளிர்கிறாய் அவனுக்காக
வெள்ளித் திரையில் சினிமா என்று
வேலையில்லா வெட்டிகளும்
வம்புதும்புக்காரன்களும்கூட
விளையாட்டாய்ப் போய்
வசதியாக இருக்கையில் சாய்ந்து உன்
வாயைத்தான் பார்க்கவைக்கிறாய்
அரங்கினில் நீ ஓடாவிட்டால்
பெரும்பாலோர்க்குப் பொழுது போகுமா
உனையே நம்பி அரங்கிற்கு வெளியே நின்று
டீ ஆத்தும், கடலை முறுக்கு விற்கும் மனிதனுக்கு
பிழைப்புதான் நடக்குமா அவன்
பிள்ளை குட்டி பள்ளிக்கூடம் போகுமா
சாதாரணின் வாழ்க்கையில்
சளைக்காமல் பங்குவகித்து
புதுசுபுதுசாய்க் கதைகள் சொல்லி
புளகாங்கிதம் தருகிறாய்
சினிமாவே என் செய்வேன் உனை
சிரித்துக்கொண்டே வாழ்த்துகிறேன் !
-கவிஞர் ஏகாந்தன், தில்லி
9) நியாயம் தானா?
பாதல் பலநாள் தொட்டு வணங்கியும்
பாவம் என்றொரு சொல் பேசாத கடவுளை
ஏழை எளிய மக்களிடம் பேச வைத்த; அவர்தம்
இதயம் தன்னில் பக்தி வளர்த்த -
நாட்டுக்குழைத்த நல்ல தலைவர்களை
நாம் காண முடியாமல் போனபோது
ஊருக்குள் அவர்களை உலவவிட்ட; அவர்களால்
உயர்ந்தது தியாகம் என்றுரைத்த -
அன்புக்கோர் அன்னை; தன்னலமில்லாத தந்தை
பாசமிகு தங்கை; நாடும் நட்பும் என்றன்று
படமென்று சொல்லி பாடமெடுத்த சினிமாவே!
வன்முறையால் துடிக்க துடிக்க கொல்வதுமாய்
வீழச் செய்வது நியாயம் தானோ?
-முத்து இராசேந்திரன், சென்னை, 9884125372
10) திரைக்கு அப்பால்…
விழிகள் முன் விரியும்
சலனக் காட்சிகளால்
ஒவ்வொரு கணமும் புதிதாய்
நிரம்பி வழிகிறது இதயம்!
நிகழ் மறந்து எங்கோ நிலைக்கிறது
மனமும் புத்தியும்.
காட்சிப் பிழையன்று
ஆயினும் மறக்கிறேன் தொலைக்கிறேன்
மீண்டும் மீண்டும் ரசித்துத் திளைத்து!
தன்னிலிருந்து விடுபட்ட
அந்த சில மணித்துளிகளில்
தியானம் பழகுகிறேன்
திரைப்படம் எனக்கு மற்றுமொரு
ஜென் நிலைதான்!
-உமா ஷக்தி, சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.