

தேர்தல் என்ற தலைப்பிற்கு வாசகர்கள் எழுதிய கவிதைகள்...
பொழியுது வாக்குறுதி மழை
ஒட்டுகளுக்கு ஏனோ விலை
நயமாக பேசுவது தான்
அரசியல் கலை
நல்லோருக்கு வாக்களித்து
மற்றோருக்கு வைப்போம் உலை
- சா. சந்திரசேகர்
மக்கள் விரல்களின் மதிப்புணர்த்தும் நாள்
காகிதத்தில் முத்திரை
என்ற முறை சென்று
மின்னணு பதிவு வந்தது...!
பல வண்ணக் கொடிகள்
பலவித வாக்குறுதிகள்
வாக்காளர் மனதிலே
வண்ண வண்ண கற்பனைகள்..!
சொன்னதை செய்வது
மனிதத்தன்மையாக அறியப்படுவது
சொல்லாததையும் நடத்திக் காட்டுவது
தெய்வீகமாக உணரப்படுவது
சொல்லியும் செய்யாததை..
எவ்வகையில் சேர்ப்பது ?
மக்கள் நம்பிக்கை நிஜமானால்..
அது தலை நிமிர வைக்கும்
மக்கள் ஏமாற்றம் அடைந்தால்
வெட்கித்தலை குனியவைக்கும்
நம்பிக்கையில் பெறுவது பாராட்டுக்குரியது
காசுக்குப் பெறுவது இகழ்ச்சிக் குரிய
சீர்மிகு பாரதம் செழித்தோங்கிட
சீரிய சிந்தனைசெய்து ஓட்டளிப்போம்
நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவோம் - ஏனெனில்
தேர்தல் நாளும் நம் வாழ்வின் திருநாளாகும்
வாழ்க ஜனநாயகம் ! வளர்க நம் தாயகம் !
- இரா சத்தியமூர்த்தி
தேர்தல் முடிந்து போச்சு தம்பி!
திரையும் தூக்கி யாச்சு!
தில்லு முல்லு திரைப்ப டத்தைத்
திடுக்கி டாமல் பாரு!
வாக்குத் தேடி வீடு வந்த
மனிதர் மறைந்து போவார்!
சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்
. . தட்டிக் கழிப்பார் பாரு!
எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்
என்ற வெற்றி வீரர்
தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை
செய்யும் காட்சி பாரு!
இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்
என்று சொன்ன ஹீரோ
சினிமா முடிவில் வில்ல னாதல்
சினப்ப டாமல் பாரு!
விளக்கு மாறு பழசாய்ப் போனால்
வேலை செய்யு மாப்பா?
களைத்த மக்கள் புதுசு வாங்கக்
காத்தி ருத்தல் பாரு!
-பசுபதி, கனடா
பொய்களின் ஊர்வலங்கள்
அணிவகுக்க,
ஐந்தாண்டுக்கொருமுறை வரும்
திருவிழா.......
அரசியல்வாதிகளின் குழப்பங்களால்
அவ்வப்பொது
அதற்கு முன்பாகவே வரும்
பெருவிழா.......
ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி
ஒற்றைவிரலுக்கு மை பூசி
ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும்
அரசியல்வாதிகளின் பொதுவிழா.....
கால்பணத்திற்கு ஆசைப்பட்டு
வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி
கைப்பணம் முழுதுமிழக்கும்
வாக்காளர்தம் முட்டாள் தினவிழா......
இலவசங்களில் ஏமாந்து
கோஷங்களில் மயக்குற்று
பரவசத்தில் ஆழ்ந்துபோகும்
தேசத்திற்கான ஒருவிழா........
அரங்கேற்றத்திலேயே
திருடுபோகும் மேடைகள்.....
முதுகுக்குப் பின்புறமே
முகத்துதிப் பூச்சூட்டல்கள்.....
காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி
கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி....
கைகளிலே விலங்குகள் பூட்டி...
கால்களுக்குச் சிறைபிடித்தாடுவர்.
தேர்தல் மக்களுக்கான
தேறுதலாகவும்,
நல்ல ஆட்சியாளர்க்கான
மாறுதலாகவும்,
துன்பமுற்றோர் துயர்தீர்க்கும்
ஆறுதலாகவும்,
நன்மைசேர்க்கும் நாட்டிற்கு வழி
கூறுதலாகவும்,
தேர்தலே .... தேர்தலே...வருகவே!
ஆர்வமுடன் வரவேற்போம் வருகவே!
"இளவல்" ஹரிஹரன், மதுரை.
அன்று மன்னன் தொடங்கினான்
குடவோலை
காகித ஒட்டு
எந்திரத்தில் பொத்தான்
மன்னர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்
சேவகர்களை இன்று
- சா. ராஜாராம்,
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
அழகாக முகம் காட்டவே
ஆடிக்கொண்டு வருகிறாய்
உன் வருகையினாலே
உவகை மிகக்கொண்டு
அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க
அசராது பேசி மகிழ்வார்
ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை
அள்ளி வீசி அசத்திடுவார்
ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி
ஏய்த்துப் பிழைப்பார்
எத்தியே மகிழ்ந்திடுவார்
ஏதுமறியா ஏழைகளை
ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா
அண்டப்புளுகர்கள்
அயோக்கிய சிகாமணிகள்..
--ஏகாந்தன், புது தில்லி
விரலில்
கருப்பு மை வைக்கும்போதே
தெரியவில்லையா…
நம்நாடு
நம்மக்களை
நம்பவில்லை என்று!
நாங்கள்
ஆட்சிக்கு வந்தால்
அனைத்தும் தரும்
அட்சயப் பாத்திரம் ஆவோம்
என்பவர்கள்…
தேர்தலுக்குப் பிறகு
எங்கள்
திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்!
விதிமீறல்களை
வேடிக்கை பார்ப்பதற்கென்றே
உருவாக்கப்பட்ட
ஓர் அமைப்புதானோ
தேர்தல் ஆணையம்.
எல்லாரும்
இந்நாட்டு மன்னர்கள் என்பது
கனவு ஜனநாயகம்.
மந்திரிகள் மட்டுமே
மன்னர்கள் ஆவது
நவீன ஜனநாயகம்!
ஊழலில் சிதறிய
ஒரு சொட்டே
வெள்ளமாய்ப் பாயும்
விந்தையைப் பார்க்கலாம்
தேர்தல்
திருவிழாவில் மட்டுமே!
நோட்டு வாங்கி
ஓட்டு போட்ட
நம் மக்களுக்கு
அரசியல்வாதிகளைக் குற்றம்சொல்ல
அருகதை இல்லையாமே!
வாக்குரிமை
மட்டுமே கொண்ட
எங்கள் மக்களில் சிலர்,
சாக்கடைப் பன்றிகளோடு
சண்டையிட்டு
எச்சிலையை வழிக்கிறார்கள்.
தேர்தல் அகராதியில்
இல்லாத ஒருசொல்
‘நேர்மை’
எத்தனை தேர்தல் வந்தாலும்
எத்தனை ஆட்சி மலர்ந்தாலும்
ஏழைகள் வாழ்வது மட்டும் ஏனோ
கண்ணீரில்….!
-கோ. மன்றவாணன்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் உண்டு - ஆகா!
ஓடேந்தி நிற்கும் எமக்கதிலே ஓட்டுண்டே!
கேட்டு வாங்கிப் போகப் பல கட்சிக்காரர் உண்டு;
பணம் என்ற பொருளை அவர் கையில் கண்டதுண்டு!
அவரிடமே பலம் உண்டு;
படை உண்டு; அதிகாரம் உண்டு;
தான் என்னும் அகந்தை உண்டு!
வறுமையைப் போக்க
அவரிடம் திட்டம் உண்டு!
வாழையடி வாழையாக அதில் அவர்கள்
வாழ்வதும் உண்டு!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் உண்டு - அதில்
யார் ஜெயித்தாலும் எமக்கு வறுமை உண்டு!
- லலிதா சூரி. சென்னை
மாற்றம் தேடி மானுடம் மண்ணில்
ஆற்றும் செயலே அரசவைத் தேர்தல்!
சேவகர் மிகுக்கச் சேனைகள் திரண்டு
போரிடும் முறைகாண் புதுச்சது ரங்கம்!
ஆவது வெற்றி ஆர்புற மாயினும்
சேவகர் அவர்க்கே செல்லும் தோல்வி!
வேட்டிக் கறையை விரல்களில் ஏற்றி
ஆட்சி பிடிக்க அடிதடி நடக்கும்;
ஆண்டைந் தாக அரிதாய்க் குறிஞ்சியை
வேண்டிக் கொய்தென்? விளைவெது மில்லை;
வசுதேவ குடும்பத்தில் வாராக் கண்ணன்,
சிசுவை அழிக்கத் திரும்பும் கம்சன்!
எண்களைக் கூட்டி எமதும தெனுமிவர்
முன்பொது சனமோ முழுதாய்ப் பூஜ்ஜியம்!
சீரிடும் பாம்பெனச் சில்லறை சேர்த்து,
கீரியும் பாம்பும் கிளம்பும் கைகோத்து!
சொற்போர் கொண்டு தொடங்கும் தேர்தல்
மற்போர் தன்னில் மரிப்போர் நடுவர்!
ஊளை யிட்டே ஓடிடும் வண்டி,
சாலை நிற்கும் சாசு வதமாய்!
முகவரி இல்லை, முத்திரை எதற்கெனும்
தகவலும் அறியாத் தபால் காரர்கள்!
பாரதப் போரில் பாண்டவர், கெளரவர்,
சாரதி கண்ணன், சரிதான் எல்லாம்;
மெத்தன மாக முத்திரை குத்தும்
இத்தனை திருத ராஷ்டிரர் ஏனோ?
- சந்தர் சுப்ரமணியன்
லாபம் எனக்கு
நஷ்டம் தேசத்துக்கு எனும்
சந்தை வணிகர்களை
தலைவர்கள் ஆக்குவது தேர்தல்
காற்றில் கரையும் கற்பூரங்களாய்
சத்தியப் பிரமாணங்களைத் தூவும்
அக்மார்க் வேடதாரிகளை
தலைவர்களாக்குவது தேர்தல்
ஊழலை கரம் கோர்த்து
உலகை உலாவரும்
வெண்ணிற ஆடைப் புனிதர்களை
உருவாக்குவது தேர்தல்
வாக்குறுதிகளை விதை நெல்லாக்கி
பணப் பயிர்களை அறுவடை செய்யும்
கரன்சி விவசாயிகளாய்
மடை மாற்றுவது தேர்தல்
மாறுபட்ட இலக்கணத்தோடு
மக்கள் நலனுக்கு மாத்திரமே- என
தலைவர்கள் முகிழ்ந்து மலர்ந்திட
செய்ய வல்லதும் தேர்தல்
- பி.எஸ். கமலா பார்த்த சாரதி
====================================================================
தேர்தல் தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..!
இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு
நெல்மணி
உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.