மழை - வாசகர் கவிதைகள்

நெற்றியில், மூக்கில்,காதில்பட்டிருக்கலாம்
மழை - வாசகர் கவிதைகள்
Updated on
3 min read

அடுத்த தலைப்பு
 

‘மழை’ என்றதும் அடர்க் கவிதை மழை பொழிந்த வாசக கவிஞர்களுக்கு நன்றி.

அடுத்த தலைப்பு ‘மது ஒழிப்பு’.

மதுவுக்கு எதிரான உங்கள் நியாயமான கோபத்தை வரிகளாக்கி எங்களுக்கு அனுப்புங்கள் askdinamani@dinamani.com.

1) மழையும் முத்தமும்

நெற்றியில், மூக்கில்,

காதில்

பட்டிருக்கலாம்

லேசாகவோ, 

அடர்த்தியாகவோ

விழுந்திருக்கலாம்

கறையோடு 

படலாம்

இடையில் ஆடை

தடுத்திருக்கலாம்


எப்படி பட்டிருந்தாலும்

ஒன்று தான்

என் மேல் பட்ட


எதிர்பாராத

மழையும்,

உன்

முத்தமும்.


**

புது மழை

தொலைந்த சூரியன் - அது

தொலைத்த வெளிச்சம்

கருண்ட சாலைகள்

காற்றில் திரும்பும் குடை

தற்காலிக ஆறுகள்

நனைந்து சிரிக்கும்

மரங்கள்

வழியில் விழுந்த

கிளைகள்

நனைந்து சிலுப்பும் 

காக்கைகள்

நீர் தெறிக்கும் வாகனம்

மூட முடியாத 

பேருந்து ஜன்னல்

முட்டி உயர ஷூவோடு

போலீஸ்

உருளும் வார்த்தைகளில்

பள்ளி விடுமுறை அறிவிப்பு

ஒளிந்து கொள்ளும்

மின்சாரம்

ஈர ரூபாய் நோட்டு

மற்றுமொரு பெரிய

புது மழை

**

80-களில் ஒரு மழை
===================


சாப்பிட்டு முடித்ததும்
ஆரம்பித்தது மழை
ஓலைக்கூரை பொத்தல் வழி
இறங்கிய சில்வர் ஃபால்ஸ்கள்
அன்னக்கூடை கடலில்
சங்கமிக்க

ரெக்கார்ட் நோட்டை
பத்திரப்படுத்தினர் சிறுவர்
படுக்கும் பாயையும்,
தூங்கும் குழந்தையையும்
பத்திரப்படுத்தினர் பெண்கள்
எரவாணத்தில் சொருகிய
பாக்கியலட்சுமி பம்பர்
சீட்டைப் பத்திரப்படுத்தினார்
திண்ணையில் படுத்த
பெரியப்பா

அவரவர் மழை
அவரவர் கனவு
 

 - கவிஞர் டோடோ, அம்பத்தூர், சென்னை


**

2) வான் மழை

இயற்கையின் நன்கொடை வான் மழை

இதில் இனி தடை வேண்டாம் எனில் மரம் வளர்ப்போம்

வான் மழை ரகசியம் வானில் இல்லை

அது நம் கையில் தான் உள்ளது எனவே மரம் வளர்ப்போம்

தரிசு நிலமும் தரமான நிலமாகும் வான் மழையால்

எனில் தரமான உணவமையும் வான் மழையால்

மாதம் மும்மாரி என்பது பொய்த்த தடா

யாரிதற்க்கு காரணம் யோசிக்க வேண்டுமடா

மழை இல்லையெனில் எங்கும் பசி பட்டினியடா

இதை உணர்ந்து நீ செயல் படு என்னருமை மானிடா

பெய்யும் மழை நீர் சேகரிக்க திட்டமிடு

அதற்கேற்ற கட்டமைப்பும் இன்றே செய்திடு

நீரின்றி உலகமையாது என்பதை உணர்ந்திடு

மழை கொணரும் இயற்கையை போற்றி காத்திடு


அன்பன்

இரா .சத்தியமூர்த்தி

மந்தைவெளி , சென்னை

9940286330

•••

3) மழையும் நீயும்

வாராது நீ இருந்துவிட்டால்

வாடி வதங்கி நிற்பார்

வறட்சி என அரற்றிடுவார்

அடித்துப் பெய்தாலோ

இப்படியா ஒரேயடியா

பெய்து தொலைக்கணும்

எப்போது நிற்குமோ இந்த சனியன்

எள்ளளவும் இரக்கமின்றி

ஏடாகூடமாய்ப் பேசிடுவார்

அடிக்கடிப் பார்த்திடுவார் விண்ணை

விடாது நொந்துகொள்வார் உன்னை

புத்தி இவர்களுக்குக் கொஞ்சம் மொண்ணை !

-ஏகாந்தன், டெல்லி. http://aekaanthan.wordpress.com

***

4) மழை

மனிதர்க்குப் பெற்றதாயின் பாலைப் போன்று

மண்ணிற்கு மழையொன்றே தாயின் பாலாம்

இனிதான வானமிழ்தாம் என்றே முன்னோர்

இருகரத்தால் வணங்கியதை சிலம்பு கூறும்

தனியாத தாகத்தைத் தீர்த்து வெம்மை

தரைகுளிர ஏரிகுளம் நிரப்பும் தாயாம்

கனிகொடுக்கும் மரங்களினை ; பூகொ டுத்துக்

கண்மயக்கும் கொடிகளினை வளர்க்கும் தாயாம் !


(1)

வயல்செழிக்கப் பயிர்வளர்த்தே உணவாய் ஆக்கி

வயிறாற நாமுண்ண அளிக்கும் தாயாம்

கயல்பிறழும் கடல்நீரின் உப்பை நீக்கி

கானாறாய் அருவியாக ஈயும் தாயாம்

புயலாக வந்தாலும் அழுக்கை நீக்கிப்

புதுநீரால் அணைநிறைத்துக் காக்கும் தாயாம்

செயல்படுத்தி உலகத்தை இயக்கு கின்ற

செவ்வச்சாய்த் திகழ்கின்ற தெய்வத் தாயாம் !

முத்தமிழ்போல் முன்பிங்கே மாதந் தோறும்

மும்மாரி யாய்ப்பெய்த மழையோ இன்று

சத்தமின்றிப் போய்மறையக் காட்டை வெட்டி

சாய்த்துமலை பொடியாக்கி சுற்றுச் சூழல்

மொத்தமுமாய் நஞ்சாக்கிக் கெடுத்து வைத்து

மோதுகின்றோம் செயற்கையுடன் கைகள் கோர்த்தே

பத்திரமாய் நாம்வாழ இயற்கை காப்போம்

பழையபடி மழைபொழிய தூய்மை செய்வோம் !

- கருமலைத்தமிழாழன்

***

5) மழை

அளவாய் வரும் போது

அமுதத்துளி.

அளவின்றி வரும் போது

அதுவே விஷத்துளி.

அறவே வராதபோது

வரவைக்கும் கண்ணீர்த்துளி.

மொத்தத்தில் இதுவே

மண்ணின் உயிர்த்துளி.

சித்தத்தில் உறுதிகொண்டு

சேமிப்போம் மழைத்துளி.

கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

மதுரை.

***
 

6) மழை

விடைகளைப் பெற்று

வந்தவன் விடைபெற்றான்;

போகாதே என்று

மேகம் அழுதிட

மண்ணை நோக்கிப்

பாய்ந்தோடி வந்தேன்

இன்னொரு துளியின்

தோளில் கைபோட்டு

இன்றைக்கு எனை

ஒருவன் பேட்டி

கண்டான் என்றேன் ;

ரா. நிரஞ்சன் பாரதி - சென்னை - 9884839158
 

•••

7)  மழை

இப்போதெல்லாம்

எப்போதாவது பெய்யும் மழையில்

காளான்கள் கூட முளைப்பதில்லை

விளைச்சலுக்கு பயன் பெறாமல்

வீணே கொட்டித் தீர்க்கும்

மழையில்

ஏராளமாய் விளைந்து கிடக்கிறது

கவிதைகள் மட்டும்..

அருங்காட்சியகத்தில் வைத்து

அழகு பார்க்கும் பழைய பொருட்கள் போல்

மழை எங்களுக்கு ஏனோ

வெறும் பாடு பொருளானது

பாடுபட்டு உழைத்தும்

பயனில்லாமல் போனது

மழையின் பயணத் திட்டத்தில்

அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்..!

  • திருமலை சோமு


8) மழை


யாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை? 

பாரதமே நாறுதே பாதிப்பால்! -- கோரிக்கை 

வாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி? 

ஓய்ந்திடுமோ ஊழல் மழை? 

- பசுபதி, கனடா 

9) மழை

சும்மாடு வைத்த

தலையில் ஒருகுடம்

இடுப்பில்

இன்னொரு ஒருகுடம்

தொங்கிய கையில்

மற்றொரு குடம்

என்றபடி…

சர்க்கார் சாலையில்

சர்க்கஸ் வித்தை புரிந்தபடி…

வியர்க்க விறுவிறுக்க

நெடுந்தொலைவு நடக்கும்

எங்கள் தாய்க்குலத்தின்

வியர்வையைச் சேமித்துப்பார்.

வேறொரு

வீராணம் உருவாகி இருக்கும்.

தாகத்தால்

ஆறு குளங்கள்

சுருண்டு கிடக்கின்றன

வறண்டு கிடக்கின்றன!

எங்கள்

நகராட்சிக் குழாய்களில்

வாயு பகவானை அனுப்பிவிட்டு

வருண பகவான் ஓய்வெடுக்கிறார்.

மழை வெள்ளத்தை

வரலாற்று ஏடுகளில்

பூதக் கண்ணாடி வைத்துத் தேடுகிறோம்.

இன்று

தண்ணீரைப்

பணம்கொடுத்து வாங்குகிறோம்.

நாளை

தங்கம் கொடுத்துத்

தண்ணீர் வாங்க வேண்டுமாம்!

வானமே…!

நாங்கள்

படும்பாட்டைப் பார்த்தாவது

கண்ணீர் விட மாட்டாயா?

- கோ. மன்றவாணன்

•••


10) வானமெங்கும் அலைந்த மழை

உன்னைக் காண விரும்பிய
குட்டி மேகங்கள் ஒட்டி உரசி
மழையைத் தூதனுப்பின

வனமெங்கும் அலைந்த மழை
மரங்களின் துளிரிலைமுதல்
வேரடி மண் வரை துழாவிக் களைத்து
பிரவாகமெடுத்தது நதியாய் 

ஊரெங்கும்
உன்னைத் தேடியலைந்த நதி
கண்ணீரோடு கடலில் கலந்தது

ஒரேயொருமுறை
கடற்கரைவந்து
உன் கால்களை நனைத்துப்போ

- கவிதாயினி இ.எஸ்.லலிதாமதி

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com