தூரத்தில் கேட்குது: நெல்லை முத்துவேல்

Updated on
1 min read
நாகரிக விழுமியங்களைத் தகர்த்தெறிய 
நரி வேடம் தரித்துப்  பதுங்கித் திரியும் 
நயவஞ்சக அரசியல் நடிகர்களை 
வேருடன் சாய்க்கும் புயலைப் போல  
வீறு கொண்ட இளைஞர் படையின் ஆர்ப்பரிப்பாய் 
எட்டும் தூரத்தில் கேட்குது இடி முழக்கம் 
ஜல்லிக்கட்டு தடை என்பது 
மாட்டுக்கு அல்ல அது நம் 
பண்பாட்டுக்கென புரிந்து நமக்கு வைத்த 
வேட்டுக்கு மொத்தமாய் வேட்டு வைக்க  
வீட்டுக்கு வெளியே வந்து போராடிய இளைஞர்கள்
இந்த நாட்டுக்கு விடுக்கும் செய்தியாய்  
தொலை தூரத்தில் கேட்குது சிம்மக் குரல்  
மதுக் கடைகளை எதிர்த்து 
வரும் தடைகளை உடைத்து 
வஞ்சியரும் வாலிபரும், வயோதிகரும் 
அஞ்சாது அறப்போர் தொடுத்து தினம் 
துஞ்சாது களம் கண்டு மதுவுக்கெதிராய் 
விஞ்சி நின்று வீரம் காட்டும் நெஞ்சுரமாய் 
சற்று தூரத்தில் கேட்குது சங்க நாதம் 
குண்டர்களெல்லாம் கோமான்களாய் உலா வர
குலப் பெண்களையும் குரல் உயர்த்திய ஆண்களையும் 
குண்டர்களெனச் சிறையிலடைக்கும் 
கொடுமைக்கெதிராய்க் கொதித்தெழுந்த மக்களுடன்  
தொண்டர்களும் துடிப்போடு போராடி சமர் புரிந்து 
தொலைந்து போன வாழ்வாதாரம் மீட்டெடுக்க 
வண்டமிழ் நாட்டின் விடியலை வேண்டி 
வானதிர முழங்கி வரும் பேரணிக்கிடையில்    
சிறிது தூரத்தில் கேட்குது செண்டை மேளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com