'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 3

ஆடவொரு மேடை அதிலெம்மைப் பொம்மைகளாய்வேடமிட்டு விட்டவனோ வெறுங்காலில் ஆடவிட்டான்
'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 3
Published on
Updated on
3 min read

பொம்மை
 
இறைவன் செய்த
பொம்மை தானே
நாமனைவரும்
இயங்கித் திரிந்து
அலைந்து
உயர்வைத் தேடா
உறுதியுடன் வீணாய்
நெளியும் புழுக்களல்லவா!
சக மனிதம் பாராமல்
தத்துவத்தைப் பேசிக் கொண்டு
தன் மானங்கெட்டும்
தடம் மாறாமல் செல்லும்
தரி கெட்ட செயலால்,
இறைவனின் பொம்மைகள்
நூலாறுந்து தானாக ஆடுது
அகழியில் அடி வைக்குது.....

- சுழிகை ப.வீரக்குமார்

**

பொம்மைக்குத் தாலாட்டும்
பிள்ளையின் மனது,

முதலாளி சொல் கேட்கும்
தொழிலாளி கடமை,

விற்காத பொருளுக்கு
விலை குறைக்கும் 
வாடிக்கையால் வியாபாரி,

நாத்தீகக் கோமாளிக்கு
கருவறை கடவுள்,

அழகான பெண்களின்
ஊர்வலத்தால் 
கண்கள் சொல்லும் எழிலுரை,

மனைவியின் பிடியில்
கணவனின் செயல்,

காதலியின் கச்சேரியில்
கலந்து கொண்டு 
பணம் தொலைத்த காதலன்,

உலகமெலாம்
இறைவனாட்டும் 
பொம்மலாட்டம்,

அதன் ஞாபகமோ
நவராத்திரி அணிவகுப்போ.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

ஆட்டுவிக்க ஆடுகிறோம் ஆட்டுமவன் யார்? அறியோம்.
காட்டாது தன்னைக் கரந்தொருவன் ஆட்டுகிறான்.
பாட்டுமறியோம் பதம் பிடிக்கவும் அறியோம்.
கேட்டும் புரியவில்லை கிண்கிணியும் கட்டவில்லை
 

ஆடவொரு மேடை அதிலெம்மைப் பொம்மைகளாய்
வேடமிட்டு விட்டவனோ வெறுங்காலில் ஆடவிட்டான்
கூடநிறையப்பேர் குறை சொல்லப் பற்பலபேர், 
கூடுவிட்டுப் போம்வரைக்கும் குதிப்பதற்கு விட்டுவிட்டான்.

கட்டிவிட்ட நூலவனின் கையில் இருக்கிறது
நட்டுவமும் செய்தவனோ நமையாட வைக்கையிலே
எட்டாத வற்றையெல்லாம் எட்டக் குதித்தபடி
கிட்டாத வற்றுக்காய் கிடந்து முயல்வானேன்.

- சித்தி கருணானந்தராஜா.

**

பட்டுச்சேலைகளை  நாளும் உடுத்தி
….பணக்காரபொம்மை நிற்கிறது கடையில்
பட்டினியோடு வாழும் குழந்தையுடன்
….பாசபொம்மை வாழ்கிறது குடிசையில்
மிதிபடும் களிமண்ணும் கடைசியில்
….மனம்கவரும் பொம்மையாய் மாறுமே
மதியோடு பேசும் வானம்போல
….மௌனமாய் என்னோடு பேசுமே
தஞ்சாவூர் பொம்மையாய் சிலமனிதர்கள்
….தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள்
வஞ்சத்தை நெஞ்சில்வைத்து உன்னை
….வாழ்வில் கைப்பொம்மையாய் வைப்பார்கள்
உண்மைபோலத் தோன்றும் பொய்யும்
….உணர்ந்தால் யாவும் மெழுகுபொம்மை
நன்மையைச் செய்தால் உலகினில்
….நாமும் கடவுள்செய்த அழகுபொம்மை

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

எதைச் சொன்னாலும்
கேட்காத கூட்டம்
எதைச் செய்தாலும்
பார்க்காத கூட்டம்
தனக்கென ஒரு வழி
அது தனி வழி
பிறருக்கு கொடுக்கின்ற
வலிகள் கூட உணராதவர்கள்
செல்கின்ற அவ்
வழி
நல்வழி என்று சாவி கொடுத்திட்ட
பொம்மை போல
ஆடும் கூட்டமே!
இன்று உணராமல்
பிறரின் வலிகள் தெரியாமல் இருக்கலாம்.
விழாதவரைதான் மனிதன்.
உங்களை உங்கள் தோற்றத்தை
பொம்மைகளாக செய்து
வழிபடுவர்!
மாறுங்கள்
நல்ல மாற்றத்தை
ஏற்றத்தை தாருங்கள்.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**
கிள்ளைகளின் கரங்களால்
உயிரும் உணர்வும்
ஊட்டி ஊட்டி உருவாகிறது -
வீட்டில் புதியதோர் உறவு !
உண்ண உறங்க குளிக்க
என அனைத்து செயல்களுக்கும்
துணையாய் - புன்னகை மாறா
அழகுடன் ஐக்கியமாகிறார்கள் !
சிலபல சமயங்களில் 
கிள்ளைகட்கே கிள்ளைகளாகி
அவர்தம் மழலை மொழிக் கொஞ்சல்களால்
நம்மையும் ஏங்கத்தான் வைக்கிறார்கள்!
துள்ளும் கிள்ளைகளின் அள்ளும் அழகினை
முடக்கி விட்டனவோ - மின்னணு சாதனங்கள் ?
இல்லத்தை உயிர்ப்புடன் இயக்க
மீண்டும் மீட்டு வருவோம் - அழகு பொம்மைகளை !

- பி.தமிழ் முகில், ஆஸ்டின்.டெக்ஸாஸ்

**

தம்மோடு விளையாடும் குழந்தைகளை வளர்த்து விட்டே
பொம்மைகள் என்றும் பொம்மையாகவே இருக்கிறது!
குழந்தைகளின் உலகை
குத்தகை எடுத்துக்கொள்ளும் பொம்மைகள்!

நன்நடத்தையை போதிக்க
காந்தியின் மேசையில் தாவாத
மூன்று குரங்கு பொம்மைகள்!
நாட்டு நடப்பை போதிக்க
அரசியல் நாற்காலியில் மட்டும்
ஆயிரக்கணக்கான தாவும் பொம்மைகள்!

எவ்வளவுதான் சாய்த்தாலும்
சாய்ந்து போகாத
தஞ்சை தலையாட்டி பொம்மைகள்
குழந்தைகளின் நம்பிக்கை ஊட்டிகள்!

குழந்தைகள் விளையாட
பொம்மை வாங்க முடியாதவர்கள்
வறுமையில் இருக்கிறார்கள்!
பொம்மை விளையாட
குழந்தை பெறமுடியாதவர்கள்
வலியில் இருக்கிறார்கள்!

-கு.முருகேசன்

**

கொலுவினிலே வைத்திருக்கும் உருவம் எல்லாம்
கொண்டாட வைத்துவிடும் அழகைக் காட்டி
வலுவில்லை செயலில்லை ஏதும் இல்லை
வார்த்தைகளோ சாடைகளோ அசைவும் இல்லை
நலுங்குவைத்த சிலைகளெல்லாம் மௌனம் தானே
நாலுவார்த்தை பேசிடுமோ நாணம் கொள்மோ
உலுக்கினாலும் குலுக்கினாலும் உணர்வைக் காட்டா
உயிரடைத்த மனிதருண்டு “பொம்மை போலே”

இமயமலை அசைந்தாலும் அசைவைக் காட்டார்
இரும்பென்றே இதயத்தை வைத்துக் கொள்வார்
தமதுநிலை என்னவென்றே புரியா துள்ளம்
தன்கடமை நினைவில்லை தவித்தல் இல்லை
நமதுதுன்பம் துயரினையே துளியும் கேளார்
நன்மையெது நடப்பதெது நலிவும் பாரார்
சமமென்றே பிறந்துலகில் உருவம் காட்டி
சஞ்சரிக்கும் மனிதருண்டு “பொம்மை போலே”

சேர்ந்திருக்கும் உறவுகளில் நேசம் காட்டார்
சினந்திடுவார் சிடுசிடுப்பார் பாசம் காட்டார்
ஆர்வமென்றால் என்னவிலை என்றே கேட்பார்
அவசியமோ அவசரமோ அணுவும் தேடார்
நேர்ந்துவிட்ட மாடெனவே நடப்பார் என்றும்
நிலைதெரிந்து உதவுகின்ற எண்ணம் கொள்ளார்
தேர்ந்திருக்கும் ஞானியரின் தோற்றம் போலே
தினமிருக்கும் மனிதருண்டு “பொம்மை போலே”

-- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

பொம்மையைத்
தாலாட்டும் குழந்தையைத் தாலாட்ட
முடியாமல் அலுவலகம் மேவும்
தாயும் தந்தையும்...
கொலுவில் பொம்மைகளெனக்
காப்பகத்தில் குழந்தைகள்.
வேளா வேளைக்குப் பசியாறினாலும்
கேட்பாரற்றுக் கிடக்கிறதாக இருக்கிறது
கூலி வாங்கும் தாதியர் முன்னால்
காப்பகத்தில் குழந்தை போலவே
கோவிலில் கடவுள் பொம்மையும்...

- அமிர்தம்நிலா, நத்தமேடு

**

அங்காடி வழி நடந்த
அத்தனை குழந்தைகளின் ஏக்கங்களையும் சுமந்து
அலங்காரமாய் தொங்கும் வெளிச்சக்குமிழ்களின் கீழே
அழகோவியமாய் சிரிக்கிறது
அந்த பார்பி பொம்மை..

தெருமுனை வரை தொடர்ந்த சினுங்கல்
சட்டென்று நிற்கக் காரணமாகின்றன
அந்தக் கண்ணில்லா தாத்தாவின்
கை பிடி விசைக்கு சத்தத்துடன்
துள்ளிக்குதித்த வர்ணத் தவளைகள்..

தாத்தாக்களின் ஒருவேளைப் பசி தீர்க்கவும்
அப்பாக்களின் இயலாமையின் வலி போக்கவும்
மழலைகளின் மகிழ்ச்சிக்கு மகுடமாகவும்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இந்த ஏழை பொம்மைகள்..

- கீர்த்தி கிருஷ்

**

குழந்தை பொம்மையோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது
மடியில் வைத்துக்கொண்டு
மழைநீரில் காகிதப்படகு விடுகிறது
பொம்மை குதூகலித்துக் கைதட்டுகிறது
சாப்பிடும்போது என்னடி பொம்மை
என்று அம்மா கத்த
பொம்மை கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறது
உறங்கும்போது கண்களுக்குள்
கனவுகளை உற்பத்தி செய்கிறது
பள்ளிக்குச் சென்று குழந்தை திரும்பும்வரை
பொம்மை வாசலிலே காத்துக்கிடக்கிறது
வந்ததுமே தூக்கி உச்சிமுகரும்
குழந்தையின் கன்னங்களில்
முத்தமிடுகிறது பொம்மை
பருவங்கள் மாறின
ஆண்டுகள் ஓடின
குழந்தையும் பொம்மையும்

இன்னும் இணைபிரியாத தோழிகள்
முதலிரவு மெத்தையில் ஓர்
அந்நியனின் அன்பற்ற மூச்சுக்காற்றில்
மூச்சுமுட்டி பிறந்தவீடு வந்து
குற்றுயிராய் விழுந்தபோது
தத்திவந்து கண்ணீரைத் துடைக்கிறது
பரணிலிருந்து குதித்துவந்த பொம்மை
’சாப்பிடும் போது என்னடி பொம்மை’
என்று இந்தமுறை
அம்மா சொல்லவில்லை

- கவிஞர் மஹாரதி

**

பொம்மை தந்தால் குழந்தைகளே பொழுதும் ஆடும் விளையாடும் !
பொம்மை போல நாமிருந்தால் போகா எந்தத் தொல்லைகளும் !
பொம்மை அழகுப் பெண்களினால் புவியில் புதைந்தார் கதைபலவாம் !
பொம்மை போல சிலநேரம் போக்குக் காட்டல் பயனாகும் !

அழகு பொம்மை மயங்காதே அழகுக் கூட எமனாகும் !
ஊழலும் பொம்மை வாழ்க்கையிலே உலகார் ஆட்டம் ஒன்றிரண்டா ?
அழகு பொம்மை அதனுள்ளே அளவில் லாத வெடிபொருட்கள் 
பழக்கம் இல்லா இடந்தன்னில் பரப்பி வைப்பார் எடுக்காதே !
பொம்மை போன்ற வாழ்க்கையிதுப் போகும் காலம் யாரறிவார் ?
பொம்மை அழகுப் பொலிவாவாய் பொய்மை யாவும் பொசுக்கிடுவாய் !
நம்மை நாமே செதுக்குவதால் நாடே போற்றும் புகழடைவாய் !
பொம்மைச் சிலையாய்ப் புவியெங்கும் போற்ற வாழும் செயல்செய்வாய் !

- ஆர்க்காடு. ஆதவன்

**

கண் காது மூக்கென
உண்டு
கால் கைகளும் கூட
பொம்மைக்கு...

உயிரற்றுப் போனாலும்
கை கொட்டும் கால் நடக்கும்
குரல் கூடக் கொடுக்கும் சாவிக் கொடுத்தால்
சில மனிதர்களைப் போல...

குழந்தைகளுக்குப் போல
பொம்மைகளுக்கும் குழந்தைகளைப் பிடிக்கும்...

குந்தையின் தாய் உறங்கினாலும்
உறங்காமல் காவல் காக்கும் குழந்தையை;
பொம்மைக் குழந்தை...

குழந்தைகளும்
பொம்மைகளாக இருக்கின்றன
அலுவலகம் செல்லும் பெற்றோர்களுக்காக
காப்பகத்தில்...

பொம்மைகளும்
குழந்தைகளுக்கானத் தின்படங்களும்
விளையாட்டுப் பொருட்கள் கிடைத்தாலும் 
கிடைப்பதில்லை 
அவசரத்தில் அலுவலகம் செல்லும்
பெற்றோர்களின் பாசம்...

பால்மடி கனத்து 
அலுவலக அறைகளில் பீய்ச்சும்
வலியின் அவஸ்தையில்  துடிப்பது 
குழந்தைகளுக்குத் தெரியாது...

என்ன வேடிக்கையென்றால்
அம்மா அப்பாவைப் போல் சண்டையிட்டு
விளையாடும் குழந்தைகளைப் பார்த்து
ரசிக்கின்றன 
பொம்மைக் குழந்தைகள்....

- அனார்

**

பொம்மையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!
உண்மையாக இருக்க
என்னால்
முடியாத பொழுது
நான் பொம்மையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அசைகின்ற பொம்மைகள்
மழலைக்கு மகிழ்ச்சிகள்.
அசையாத பொம்மைகள்
வெறும் காட்சிப்பொருட்களே! --- ஆமாம்.
நானும், அந்த காட்சிப்பொருளே!
காரணம்,
அதிகாரத் திற்கும் ஆனவத்திற்கும்
தலைவணங்கி அசையாததால்
இசையாததால்
நானும் அசையாத 
பொம்மை ஆகி
காட்சிப்பொருளானேன்.
லஞ்சம் வாங்கவும் மாட்டேன்
கொடுக்கவும் மாட்டேன்
என்பதை என்னால்
நிறைவேற்ற முடியாத பொழுது
நானும் அந்த
பொம்மையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
பொம்மைகள்
பொய்பேசுவதில்லை.
அப்படி அது பேசினால்
அது பொம்மைகளில்லை.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்

**

ஏவாள் தந்த ஆப்பிளால் 
ஆதமிற்கு வந்த இச்சை தான்
இவ்வுலக  மனித சைத்தான்
ஆணிலிருந்து பெண்ணிற்குள்
போகத்தொடங்க
போடத்தொடங்கிய...போராட்டம்...
போகும் வரை...

வாழ்க்கையில் விளையாட
படைத்த பொம்மை
வாழ்க்கையாய் விளையாடியது...

விளையாட்டு புளித்துப்போய்
பொம்மையை தூக்கி எறிந்தது
குழந்தை

- கீதா ஷங்கர், லாகோஸ் நைஜிரியா.

**

சின்னச்சின்னப் பொம்மைகள், சிங்காரமாய் பொம்மைகள்
வண்ணவண்ண பொம்மைகள் மனதை தொடும் பொம்மைகள்
கண்ணைக் கவரும் பொம்மைகள் ! கருத்தை கவரும் பொம்மைகள்   
அசையா விழிப் பொம்மைகள் இந்தநாளிலே அசையும் பொம்மைகள்,     
மண்பொம்மை,,பிலாஸ்டிக், ரப்பர், உலோகம் என உண்டு
இசைகொடுக்கும் பாட்டு பாடும் எலரானிக்ஸ் தொழில்நுட்பத்தால்  
நமது மரபில் பொம்மை வைத்து திருவிழா வருடம் தோறும் வரும்       
அழகழகாய் படியமைத்து அலங்கரமாய் அடுக்கி வைப்பார்
நமது மரபுவழி பண்டியான நவாத்திரி நிகழ்ச்சி புரட்டாசியில்
இறுதி நாளில் கலைமகளுக்கு விழா சிறப்பாக நடைபெறும்
வீடுதோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொறு பள்ளி
என்று அழகாய் கவியரசர் சொன்னார், கடைப்பிடிக்கிறோம் நாம்.

- கவிஞர் ஜி.சூடாமணி, இராஜபளையம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.