'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 1

விவசாயம் கைகொடுக்கவில்லை வாழ்வாதாரம் செழிக்கவில்லை
'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 1

பொம்மை

விவசாயம் கைகொடுக்கவில்லை 
வாழ்வாதாரம் செழிக்கவில்லை
வீணாகிப் போன உழைப்பு 
வீழும் நிலையில் பிழைப்பு 
வறண்டு போன பூமியும்
விலை பேச்சுக்கு ஆளானதே 
ஒட்டிய விவசாயியின் வயிறும்  
ஒடுங்கிப்போன பேழையும்
களத்தில் கட்டியங்கூறுதே 
கவலை கொள்ளச் செய்யுதே 
வானம் பொய்த்தாலும் 
வனங்கள் அழிந்தாலும் 
வீழ்ந்து விடாமல் விறைத்தபடி 
வீணில் நிற்கிறதே 
விலைபோகாத சோளக்காட்டு பொம்மை. 

பான்ஸ்லே. 

**

அழகைக் காண காட்டும் அனைத்து உயிரும் மகிழும் !
அழகில் மயங்கித் தானே அனைத்து உயிரும் கூடும் !

ஆன மட்டும் ஆடும் அனைத்துப் பாட்டும் பாடும் !
ஆன உறுதி யோடே ஆடிப் பாடி கூவும் !

மயங்க வைக்கத் தானே மலைக்க யாவும் செய்யும் !
தயக்கம் இன்றி யாவும் தணிக்கத் தானே செய்யும் !

பெட்டைக் காக சேவல் பெரிதும் அழகு காட்டும் !
ஒட்டி ஒட்டி உரசும் ஓடும் ஏறி மிதிக்கும் !

பாட்டுப் பாடும் பறவை பறவை உறவை நாடும் !
கூட்டும் குரலைக் கூட்டி கொஞ்சும் உறவைச் சேரும் !

ஆடு மாடு கூட அழகாய்க் கத்தி அழைக்கும் !
ஆடு மாடு கூடும் ஆசை தீர்த்துக் கொள்ளும் !

பூக்கள் அழகு காட்டும் பொழுதும் உறவுக் கேங்கும் !
ஈக்கள் பூக்கள் மேலே இணைந்தே ஒன்றாய் இழையும் !

உறவுக் காலம் வந்தால் உறவுக் காக ஏங்கும் !
உறவும் பசியாய் ஆகும் உறவு தீர்ந்தால் ஓடும் !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது
எண்ணத்தில் ஏது மிருக்காது – உண்மையிலே 
என்ன எமைச்சூழ்ந் திருக்கிறது என்றறியோம்
ஒன்றும் புரியா துலகில்.

காட்சி துலங்க காண்பவைகள் வேறுபட
மாட்சி தருவதுதான் வண்ணங்கள் – ஆட்சிசெயும்
வேறுபட்ட வர்ணங்கள் விதம்விதமாய் நாம்காணக்
கூறுபடக் காட்டும் குறித்து

கண்ணற்று வாழும் கபோதியிடம் ஓர்நாளும்
எண்ணத்தில் வண்ண மிருக்காது – உண்மைக்கும் 
பொய்க்கும் பொதுநிறமே புரியாதவர் வாழ்வு
மைக்குள் இருக்கும் மணி

வர்ண ஜாலத்தோடு வகைவகையாய் நம்மியற்கை
கண்ணிற் தெரிந்து கடப்பதால் – உண்மைநிலை
கண்டு தெளிகின்றோம் காணாதவர் வாழ்வில்
என்றும் அபேத நிலை

- சித்தி கருணானந்தராஜா

**

குழந்தைகளின் இரண்டாம் பெற்றோர் பொம்மை
குதூகலமாக விளையாட உதவிடும் பொம்மை!

அழுகையை நிறுத்திட உதவிடும் பொம்மை
ஆதரவாக குழந்தைக்கு இருந்திடும் பொம்மை!

வாய் இருந்தால் அழுதிடும் பொம்மை
வீட்டுக்கு வீடு இருந்திடும் பொம்மை!

உடைந்தால் உடைந்திடும் மனசு குழந்தைக்கு
உற்ற நண்பனாக இருந்திடும் பொம்மை!

தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மையைக் கண்டால்
தட்டி கைதட்டி மகிழ்ந்திடும் குழந்தை!

சவ்வுமிட்டாய் வருகையில் கைதட்டும் பொம்மை
சவ்வுமிட்டாயென இனித்திடும் பொம்மையின் ஓசை!

பொம்மைக்குச் சோறு ஊட்டிடும் குழந்தை
பொம்மையோடு பேசி மகிழந்திடும் குழந்தை!

இக்காலப் பொம்மைகள் நெகிழியில் உள்ளன
அக்காலப் பொம்மைகள் ஆரோக்கியம் தந்தன!

- கவிஞர் இரா .இரவி

**

அச்சமில்லை  அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்த போதும்
அச்சமில்லை அச்சமில்லைஎன
குச்சி மீது நின்றிருக்கும் !
குருவி காக்கை பயந்து ஒடும்.
கண்கள் விரிநதிருக்கும் .!
கரங்கள்  நீண்டிருக்கும்.!
கால்கள் கட்டப்பட்டிருக்கும்.!
இரவும் பகலும்
உறக்கமின்றி விழித்திருக்கும்
உணவின்றி காத்திருக்கும் !
தொள தொள சட்டை அணிந்து
பளபளக்கும் சோளக்காட்டு 
திருஷ்டி  பொம்மை தான் அது!

- ஜெயா வெங்கட்

**

அலங்கார கூடத்திற்கு அழகூட்டும் மரப்பொம்மைகள் ||
உடையாதிருந்து செலவை குறைக்க மரப்பாச்சி பொம்மைகள் ||
மழலையர் விளையாடி மனம் மகிழ
மண்பொம்மைகள் ||
கயிறால் வேலைப்பாடு செய்திருக்கும் சூத்திரபொம்மைகள் || 
தஞ்சாவூரின் புகழ் பேசும் தலையாட்டி பொம்மைகள்||
மறைந்த தலைவர்கள் பெயர் சொல்ல உருவபொம்மைகள் ||
காட்சிக் கூடமதில் காட்சி பொருளாக மெழுகுபொம்மைகள் ||
யாசகம் கேட்டிட ஏந்திச் செல்லும் சின்னிபொம்மைகள் ||
வயிற்றை கழுவ கைகொடுக்கும் 
பொம்மை ஆட்டம்||
நவராத்திரியில் கும்பிட்டு குறைத்தீர
கொலு பொம்மைகள்||
தலையுமிராது வாலுமிராது இயங்கும் பொம்மையாட்சி ||
பட்சிகளிடமிருந்து பயிர்காக்கும் சோளக் காட்டு பொம்மை ||
பொம்மையாக பிறந்திருந்தால் செம் மையாக இருந்திருக்கும் ||
உண்மையாக நடப்பினும் நண்மையே நடப்பதே யில்லையே ||
பசி பட்டினி தலைவலி பூராயணம் இருந்திருக்காது ||
பிறக்கனும் இறக்கனும் மன உளைச் சல்கள் நீங்கியிருக்கும் ||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

தலையாட்டும் பொம்மையாகப் பிறரின் சொற்குத்
----தலைவணங்கி வாழ்வதெல்லாம் வாழ்க்கை யாகா
விலையாகிப் பிறர்காலின் அடிமை யாக
----வீழ்ந்தவர்க்காய் வாழ்வதெல்லாம் வாழ்க்கை யாக !
வலைக்குள் அகப்பட்டு வேடன் கையில்
----வாழ்விழந்து போவதுவும் வாழ்க்கை யாகா
அலைகள்போல் மோதிமோதிக் கரையைத் தாண்ட
----அலுக்காமல் முயல்வதுவே வாழ்க்கை யாகும் !
கொஞ்சுகின்ற பொம்மைகளாய் இருந்தி டாமல்
----கொலுவிருக்கும் பொம்மைகளாய் இருந்தி டாமல்
அஞ்சியஞ்சிப் பொம்மைகளாய் இருந்தி டாமல்
----ஆர்த்தெழுந்தே கயமைகளை எதிர்க்க வேண்டும் !
தஞ்சாவூர் பொமமைபோல் தோல்வி கட்குத்
----தலைசாய்ந்து போகாமல் நிமிர வேண்டும்
வஞ்சினந்தான் கூறியிந்த வாழ்க்கை தன்னை
----வரலாறாய் மாற்றுவதே உயர்ந்த வாழ்க்கை !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

சிவந்த இளரோஜாவின். வர்ணம்
கவர்ந்திழுக்கும். காதல் கயல்விழி
பகுமானமாய் பட்டுப். புடவையணிந்து
வெகு நேர்த்தியாக. உருவ. அழகுடன்
நாணத்துடன் சிரிக்கும் கடை. பொம்மை
காணக்கண் கோடி வேண்டும் அம்ம‌ !
எனினும். புடவை தேர்வு செய்ய. சென்ற
வனிதை மணிக்கணக்காய் வரவில்லை
எத்தனை. பணம், காலம் விரையமெனக்கு ?
சத்தனைத்தும் வேர்த்து வடியலாயிற்று .
ஆடிமாதம். பிறந்தால் தள்ளுபடி என
ஓடிவரும் மங்கையே ! மனமிரங்கி
புடவை தேர்வுக்கு விடை கொடுத்து
மடவை நீ விரைந்து வரவேண்டும் .
ஆசனத்தில் நிலைத்து. அமர்ந்திருக்க
சாசனமான பொம்மையும் நானில்லையே !

- ராணி பாலகிருஷ்ணன்

**

மனமே பாராய்! மனமே பாராய்!
கணமே நிலையா மனமே பாராய்!
மதியும் கெட்டு சதியில் ஆடும்
மனிதன் என்றொரு பொம்மை பாராய்!

அறமே வெறுத்து அல்லல் ஆற்றில்
தினமே அலையும் பொம்மை பாராய்!
ஓடையைப்  போலவே நாளும் ஓடி
ஓடாய்த் தேயும் பொம்மை பாராய்!

ஆசைக் கடலில் நாளும் நீந்தி 
அறிவை இழக்கும் பொம்மை பாராய்!
கண்மாய் போல சினமும் வைத்தொரு 
கலிங்கே இல்லா பொம்மை பாராய்!

மடுப்போல் உள்ளே வஞ்சம் வைத்து
மடைபோல் பாயும் பொம்மை பாராய்!
உடம்பில் நீரே மிகையும் கொண்டோர்
ஈரம்  அற்ற பொம்மை பாராய்!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

உயிர் இல்லா பொருள் பொம்மையா?
இல்லை;
குழந்தைகளுக்கு அது உயிர்

உயிருள்ளவைகள் எல்லாம்
உண்மையா?
இல்லை;
மண்ணிற்கு அது பயிர்

பயிரால் உயிர்!
உயிரால் பயிர்!
இந்த சுழற்சியே,
உலகமென்ற உருண்டை பொம்மை

- ம.சபரிநாத்,சேலம்

**
கவலைக்கடலிற்குள்
தத்தளிக்கும் கண்களுக்கு
நீ ஒரு மகிழ்ச்சித்தோணி--
வீசி எறிந்தவனையும் ஏச மாட்டாய்,
பேசாமல் கண் சிமிட்டி,
‘நீசன் நானில்லை”  
என்று அடிப்பாய் ஒரு ஆணி –
ஆயுத பூஜையில் உன்னை
அமர்த்தி வழிபடுவதில்,
உனக்குள்ளும் தெரிவாள் ஒரு வாணி—
தூக்கத்தில் ஏக்கத்தில் துணையிருப்பாய்,
யார் தான் தோண்டினார்
உனக்குள் ஒரு பாசக்கேணி –
ஆனால் – இன்றோ ....
உன் குணங்கள் மறந்ததால்,
மனிதன் தேடிக்கொண்டே இருக்கிறான்,
வாழ்க்கை மலையேற ஒரு ஏணி !!

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

தாயின் மடியில் குழந்தை ஒரு பொம்மை !
விளையாடும் வயதில் குழந்தையின் பிடியிலும்  ஒரு 
பொம்மை ! குழந்தை வளர வளர அது விளையாடும் 
பொம்மைகளும் வளரும்.... அலைபேசி , 
மடிக்கணிணி , என்று விதம் விதமாக ! 

சிறு குழந்தையின் பிடியில்  பேசாத பொம்மை 
இருந்த காலம் மாறி , ஓயாமல் பேசிக் கொண்டே 
இருக்கும் கை பேசி , மடிக்கணிணி இந்த இரண்டின் 
கிடுக்கிப் பிடியில் "வளரும்  குழந்தை " இப்போது 
வெறும் பொம்மைதான் ! 

இயந்திர பொம்மை சொல்லும் சொல்லுக்கு 
ஆடும் மனித பொம்மைகளைப்  பார்த்து 
"ரோபோ " பொம்மைகள் " நாளை எமதே"
என்று இன்றே சொல்லுதே ...கேக்குதா 
மனித பொம்மைகளே  உங்களுக்கு ! 

- கந்தசாமி நடராஜன் 

**
இறைவன் படைத்த பொம்மைகள் மனிதர்கள்
நிறைவாய் வண்ணம் கொண்டவை பொம்மைகள்
மனிதம் பேசும் பொம்மை பேசாது சிரிப்பிக்கும்
இனிதாய் சிரிக்கும் மனிதரில் வேடதாரிகளுண்டு

தலையாட்டும் பொம்மைக்கே தனிச் சிறப்பு
விலையாக மதிப்புகள் கூடிக் கொண்டாடும்
இடம்விட்டு நகராத மக்கு பொம்மை சோம்பேறி
தடம்மாறி தறிகெட்டுப் போகும் அவற்றின் நிலை


ஓடியோடி உழைப்பவர் பொம்மை கணக்கிலில்லை
ஆடிப்பாடும் ஆரணங்குகள் அழகு பொம்மைகள்
தேடியோடும் காமப்பேய் அலங்கோல பொம்மைகள்
நாடி பார்த்து நன்மை தரும் மருத்துவ பொம்மைகள்

குழந்தையும் பொம்மையும் குணத்தால் ஒன்றுதான்
இழப்பறியாத இன்னலறியாத பிறப்புகள் அவை
குழப்பமேதுமில்லா ஞானிகளாய் சிரித்திடுவர்
முழக்கமிடா மெல்லியளார் சிரிக்க வைத்திடுவர்..

கவிஞர்  ராம்க்ருஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com