அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 1

அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 1

அன்பே சிவம்

தீயினில் ஆடிடும் தீமை ஒழித்திடும்
தெய்வம் ஒன்று நம்மைக் காக்கும்
நோயில் படுப்பதை நோவு வருவதை
நொடிக்குள் தடுத்திடும் நுட்பம் தோன்றும்
வாயில் வந்திடும் வார்த்தைகள் எல்லாம்
வசந்த காலப் பூக்களாய்ப் பூக்கும்
மாயிருள் எல்லாம் மாண்டு போகும்
மனதினை வாட்டும் துயர்கள் சாகும்

தாம்தீம் என்று தாளமிட்டே ஆடும்
தலைவன் என்றும் நெஞ்சில் மேவி
ஓம்ஓம் என்றே உரக்கச் சொல்லி
உய்யும் வழிகள் ஆயிரம் சொல்வான்
போம்போம் துன்பம் எல்லாம் போமென
போதனை செய்து போதை ஒழிப்பான்
ஆம்ஆம் அவனது பேரே சிவம்தான்
அன்பால் தேகம் முழுவதும் சிவந்தான்!

என்பும் தோலும் உடலின் எழுத்தாய்
எழுதிடும் எழில்மிகு அன்பே வரந்தான்
கொம்புத் தேனாய் கோவில் மானாய்
கொள்ளும் அழகாம் அன்பே ஜெகம்தான்
வம்புகள் வழக்குகள் வடிந்துப் போகும்
வற்றா நதியாம் அன்பே பலம்தான்
அன்பே சிவம்தான் அதுவே தவம்தான்
அனைத்து உயிர்க்கும் ஆன்ம சுகம்தான்

- கவிஞர் மஹாரதி

**

சூரியக் கதிரால் சுடர்விடும் வெள்ளி நிலவே !
       சூதெலாம் ஒழிந்திடப் பண்பினால் சுடரும் அன்பே !
அன்பே சிவமெனில், அன்பே இறை என்பார் !
       அன்பின் பிறப்பிடம் நலந்தரும் உயர்பண் பென்பார் !

குழந்தைக்கு அமுதொடுப் பண்பினை ஊட்டிடுத் தாயே !
         கோதிலா அன்பினைப் பிள்ளைப் பகிர்வான் தாயே !
அடுத்துக் கெடுப்பதும், அவனியை அழிப்பதும், அன்பு செய்யாது !
        அன்பது இறையாய், காத்திடுங் கரமாய், அலையென ஓயாது !

அன்னை, தந்தைப் பண்பினை  ஊட்ட, அன்பது ஒளிருமே !
         அன்பே சிவமென, அகிலம் காத்திடும்;  பகையும் ஒழியுமே !
ஊரும், நாடும், யாதாகினும், உள்ளவர் நல்லவர் என்றாலே,
           ஊரும், நாடும் பெற்றிடுமே, வளமும், பலமும் தன்னாலே !

அன்பினை ஈனும் பண்பில்லை என்றால், எவரின் குறை ?
          அன்பே இறையென அறியாதார் வாழ்வில் ஏது நிறை ?
அன்பினால் நற்குணம் கைக்கூடும் என்றவர், வள்ளுவர் ; வணங்குக !
ஆள்பவர் நீவீர், ஆண்டவரே ; பாழ்படும் மானுடம் காத்திடுக !

- கவி. அறிவுக்கண்

**

மூல சக்தியே! உலகின் முதல் சக்தியே! ஐம்பூத அரசனே!  
உமையாளை உடலின் மறுபக்கம் கொண்டவனே!
பூத உடலை பாெசிக்கி வரும் சாம்பலே!
சொல்லில்லாச் சுடரே! 
மூல முதல்வனே! அவனே என் சிவனே!
சிவத்திற்கு இணையான "அன்பே" "அன்பின்" அலைகடலே! - 
உலகில் தோன்றிய அனைத்து உயிர்க்கும் கிடைத்த நல் "அன்பே"
அதுவே என் "சிவமே"
அலை கடலின் ஓசை நிற்காது! கதிரவன் உதிப்பது நிற்காது!
காற்று இடம் அறியாது!
மழை பொழிவது நிற்காது! பிரபஞ்சத்தின் நிலை மாறாது! 
ஆனால் மாற்றம் தந்தது மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும்!
அதுவே நிலையான "அன்பு" சிவத்திற்கு சமமான "அன்பு"
உலக உயிர்களின் சிறந்த 
அனுபவம் வாழ்வியலில்!!
 சிவமே அன்பாகும்!
அன்பே சிவம்! ஆகிறது..

- மு.செந்தில் குமார், திருநெல்வேலி

**

அன்பான வார்த்தைக்கு
ஏங்கும் முதியோர்
உரையாட விரும்பும்
குழந்தைகள்
உதவிக்கு ஏங்கும் 
முகமறியா மனிதர்கள்
பிற உயிர்கள்யென
யாவருக்கும்
கர்மமாக..
நாம் செய்யும்
அன்பே சிவம் ஆகிறது!

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்

**
அராஜகத்தைப் பிழிந்து குடித்து
அண்ணாமலயானிற்கு அங்கப்ரதட்சணம் செய்தவன் –
கொலையும் கொள்ளையும் இவனின் இரண்டு கண்கள் –
முக்கண்ணனிற்கு பாலாபிஷேகம் –
கங்கை யாற்றில் கழிவுநீர் கலந்துவிட்டு
அவன் உச்சி குளிர
பைரவா ! கைலாயா !! என்று மந்திரம் சொன்னவன் ---  
பிறர் குடி கெடுத்து அமைந்த வாழ்க்கை மேடை
அங்கே நடராஜனை ஆடச்சொன்னால் ??
இவர்களுக்கு தெரியுமோ ?
மகாத்மாவின் சொற்களில்
மண்டேலாவின் மனதினில்
மலேலாவின் இதயத்தில்
புத்தரின் கண் வீச்சில்
குடிகொண்ட அன்பே சிவம் என்று ?

- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி  -- MD DNB PhD

**

அன்பைச் சிவமெனச் சொன்னவர் திரு
அருளினிற் தோய்ந்திட்ட மூலனார்
என்பையும் ஈவர் நல்லன்பினார் என
எம் திருவள்ளுவர் கூறினார்.

உன்றனைப்போலுன் அயலவன் தனை
உள்ளன்பினோடு விரும்பென
அன்று உரைத்தவர் இயேசுவாம் அன்பின்
ஆற்றலைச் சென்னவர் புத்தராம்

முந்தி முகிழ்த்தது அன்புதான் லோக
முட்டை பிறந்தது பின்புதான்
அந்தரத்தே தொங்கும் அண்டகோளங்கள்
அனைத்திலும் உள்ளதவ் வன்புதான்.

எங்கும் நிறைந்த அவ்வன்பினால்
இக மீதிலுதித்த உயிரெலாம்
தங்களின் காதலுணர்வினால் தம்
சந்ததி சேர்த்தது பின்புதான்.
 
- சித்தி கருணானந்தராஜா

**
அறுசீர் விருத்தம்

அன்பும் சிவமும் ஒன்றுதான்
……………அறியும் வகையில் நன்றுதான்.!
துன்பம் விலகிச் செல்லுமே
……………துளியே வார்த்தைச் சிவமென.!
அன்பால் கருணை பிறப்பதே
……………அவனின் அருளால் ஆவதே.!
என்பும் சதையும் இருப்பதோ
……………எதனால் என்று அறிவிரோ.?
.
.

இன்னல் தீர்ப்பான் அன்பிலே
……………இவனுக் கடிமை எவனுமே.!
இன்சொல் வார்த்தை என்பதோ
……………ஈசன் பெயரா மென்பதே.!
முன்னின் பிறப்பை முறித்திடும்
……………முக்தி கிடைக்க வைத்திடும்.!
சின்னச் சொல்லே சிவமயம்
……………சிந்தை தெளியும் ஏன்பயம்.?

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

ஒன்றுக்கும் மேற்பட்ட
மனிதர்கள் இருக்கும் உலகில்
அடக்குமுறையைக் காட்டிலும்
அதிகாரத்தைக் காட்டிலும்
உடல் வலிமையைக் காட்டிலும்
அடுத்தவர்களின் இதயங்களை
வெல்ல ஒரே வழி அன்புதான்!

அன்பென்னும் நீர்
உறவை வளர்க்கும்!
அன்பென்னும் பாலம்
உலகையே இணைக்கும்!

ஒன்றையும் இரண்டாக்குவது ஆயுதம்
இரண்டையும் ஒன்றாக்குவது அன்பு!
ஆயுதம் ஏந்தினால் யுத்தம் வரும்!
அன்பினால்தான் முத்தம் வரும்!

ஆயுதம் ஏந்திய அனைவரும்
வென்றி காண்பதில்லை!
அன்பை ஏந்திய எவரும்
தோற்றுப் போவதில்லை!

வள்ளுவன் ஏந்தியதும்
அன்புடமையே தவிர
ஆயுத உடமையல்ல!
ஆயுதம் ஏந்திய கடவுளையும்
அடையும் ஒரே வழி அன்பே!

-கு.முருகேசன்

**

ஆயிரம் ஆலயங்களில் தேடினாலும்
……..ஆண்டவனைக் காண முடியாது
பாயிரம் பல்லாண்டு பாடினாலும்
……..பக்தி என்பதாய் ஆகிவிடாது
தங்கத்தால் தெய்வத்தைச் செய்தாலும்
…….தங்கமான வாழ்வு அமைந்துவிடாது
கங்கை நதியினில் மூழ்கினாலும்
……..கருமம் நம்மை விலகிவிடாது

பசியோடு வந்தவருக்கு பிடிசோறுகொடு
……..பாவம் நம்மைவிட்டு நீங்கும்
கசியும் கண்ணீருக்கு கரமும்கொடு
……..கண்களில் அன்பு தேங்கும்
உயிர்களிடம் அன்பு இல்லாதவன்
……..உயிர் இருந்தும் சவம்தான்
உயர்வான  கடவுளே  அன்புதான்
…….உலகத்தில் 'அன்பே சிவம்'தான்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்.

**

மூன்று காலமும் அறிந்த முதல்வன் !
மூன்று தமிழையும் ஆளும் முனைவன் !

ஆணும் பெண்ணும் சரிசமம் என்றே 
காணும் நிலையால் கவினார் வடிவன் !

எவ்வுயிர் ஆயினும் எனதுயிர் எனவே
செவ்விய வழிவாழ் சிறப்பார் சீலன் !

நல்லார் எனினும் தீயார் எனினும் 
எல்லாம் சமமாய் எண்ணிடும் இனியன் !

எங்கும் எதிலும் இரண்டறக் கலந்தோன் ! 
பொங்கும் இன்பமே பூத்தநற் பொழிலன் !

ஆதி அந்தம் ஆனநல் அத்தன் !
ஓதி உணரா உயரரும் சித்தன் !

ஆசைக் கடலில் அமிழ்ந்ததும் இல்லை !
ஓசை இல்லாமல் ஓய்ந்ததும் இல்லை !

அடியார் தமக்கே அடிப்பொடி ஆனேன் !
அடிமுடி காணா அகத்தால் உயர்ந்தேன் !

அன்பே சிவமாய் ஆன அவன்நான் !
என்றும் சிவமாய் இருக்கும் இறைநான் !

அவனே எலாமுமாய் ஆனவன் ஆவான் !
அவனே அவனியை ஆள்பவன் ஆவான் !

அவன்போல் எலாமும் ஆக்கும் தாய்நான் !
அவன்போல் எலாமும் அளிக்கும் அருள்யான் !

அவனும் நானுமே அறிந்த எலாமும்
அவனிக் காகவே அனைத்தும் ஆகியே !

- ஆர்க்காடு. ஆதவன்

**

அன்பெனும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே,
இன்ப ஊற்றென்றே நிறைந்திட்ட அமுதே,
மறைந்திருந்தாலும் மறை போற்றும் திருவே,
கரைந்துருகி நிற்பவர் தம் உள்ளத்தில் வீற்றிருந்து
உடனுறையும் உருவே,
கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போன்றே - நின்
தடம் பற்றி தாள் போற்ற
இடம் சொன்ன - குரு வே
விடமுண்ட கண்டனே - நடராஜ  னென்றும்  
ஆதிநாத னென்றும், நாட்டோர் அழைக்கும்  
காட்டானை சிவமே என் அன்பே. 
மீண்டும் பிறவாத வரம் தா - யாண்டும் எனக்கு.

- கவிதா வாணி, மைசூர்

**

கண்களில் சுரந்து
காதோரம் வழிந்து
நெஞ்சிலே நிறைந்து
நெடுவாழ்வு வாழவைக்கும்.
அன்பு .....  வற்றாத ஜீவ ஊற்று!
ஆனந்தம் தரும்..
அற்புதங்கள் படைக்கும்
அச்சம் போக்கும்
அகந்தை நீக்கும்
அடிபணிய வைக்கும்
அரவணைத்து காக்கும்
அன்பு . . ..என்ற மந்திரச்சொல்!
அனைத்துயிர்களையும்  
தழைக்கச் செய்யும்...
மனிதன் மனிதனாக வாழ
மாபெரும் சக்தி அளிக்கும்!
அன்பு இருக்கும் இடம்
ஆண்டவன் உறையும் கோயில்!
அன்பே சிவம் !
வாழ்வே தவம் !

- கே. ருக்மணி.

**
இரவுக் கிண்ணத்தில் உறவென நிலவிலிருந்து வழிந்த மது -
மறக்காமல் தவிக்க வைத்த மாதவளின் சிரிப்பு 
புறந்து தள்ளிய நினைவுகளில் எழுந்த  பூ மாலை வாசம்
திறந்த மனதுடன் சுற்றித் திரிந்த உன் வரவிற்கான எனது காத்திருத்தல்
பறந்து சென்றாய் எங்கோ நீ
என்பதை சீரணிக்க இயலாத என் அறியாமை
நிறம் மாறாத பூக்களுடன்
முற்றத்தில் நிற்கிறேன் நான்
அற்றைத் திங்களின்
நேற்றைய நினைவுகளில் -
அன்பே சிவமென .

- செந்தில்குமார் சுப்பிரமணியன்.

**

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த முனிவர் திருமூலர்
  மூவாயிரம் பாடல்கள் பாடினார் “ திருமந்திரம்”
அய்யன் திருவள்ளுவர்க்கே ஆசான் என்பதால்
   அவரிடம் எப்போதும் ஈர்ப்பும் மரியாதையும் உண்டு
ஞானிகள், மேதைகள், சித்தர்கள் தங்கள் அறிவைக்கொண்டு
   ஆண்டவனைத் தேடிக்கொண்டே இருந்தனர்
திருமறை என்றாலும் திவ்வியப் பிரபந்த மானாலும்
  உள்நோக்கம் ஆண்டவனின் ,கல்யாணகுணங்களை அனுபவிப்பது

ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரித்தான வாசகத்தால்
   ஒழுக்கத்தை வளர்த்து, பக்தி மார்க்கத்தை வளர்த்தார்கள்
அதிலே ஒருவகைதான் “ அன்பே சிவம் “ என்பது, இது
  திருமூலர் தந்த தீர்க்க வாக்கியம், “ அன்பும் சிவமும் இரண்டு
எனச்சொல்பவர் அறிவிலார் ! அன்பே சிவமென சொல்பவர்
   ஆவதறிவார், அன்பே சிவமாய் அங்கமர்ந்தாரே “ சொல்கிறார்

- அரங்ககோவிந்தராஜன், ராஜபாளையம்

**

அன்பாகவும் அறிவாகவும் அகமாகவும் அவனே
   அணியாகவும் பணியாகவும் அனைத்தாகியும் ஆனான் !
இன்பாகவும் எழிலாகவும் இனிப்பாகவும் இருந்தான்
   இதழாகவும் மலராகவும் காயாகியும் கனிந்தான் !
தென்னாட்டிலும் வடநாட்டிலும் திகழ்நாடெலாம் நிறைந்தான்
   திருவாகவும் மருவாகவும் சிறப்பாகியும் திளைத்தான் !
முன்பாகவும் பின்பாகவும் மொழியாகியும் முளைத்தான்
   என்னில்அவன் சிவனேஎன எண்ணத்தக இணைந்தான் !

பொன்னாகியும் பொருளாகியும் பொழுதாகியும் பொலிந்தான் 
   புல்லாகியும் புழுவாகியும் போற்றும்வகை புரிந்தான் !
மின்னல்என இடியாய்மிக மேலாய்மழைப் பொழிந்தான்
   மென்மையென மேன்மையென  மிகவாய்எனில் முளைத்தான் !
தென்றல்எனத் தீண்டியெனை சீரார்சிறப் பளித்தான்
   தேனின்சுவை அமுதேயெனத் திகழ்ந்தேயெனில் சிறந்தான் !
அன்னையென தந்தையென அரசன்என ஆண்டான்
   அன்பேசிவம் எனவேயெனின் அகத்தில்வளர்ந் துயர்ந்தான் !

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com