பெண்ணென்று சொல்வேன் வாசகர் கவிதை பகுதி 4

தன்னை மெழுகாய் உருக்கி குடும்பத்திற்காக ஒளியேற்றி குறைகள் பல பொறுத்து
பெண்ணென்று சொல்வேன்
பெண்ணென்று சொல்வேன்

தன்னை மெழுகாய் உருக்கி குடும்பத்திற்காக ஒளியேற்றி
குறைகள் பல பொறுத்து
வறுமையில் கூட செம்மையாய்
சீர்படவே வாழ்ந்திருப்பாள் அவளை
பெண்ணென்று சொல்வேன்

அலங்காரமும் ஆடை ஆபரணமும்  அடையாளம் எனக் கொள்ளாது
போராட்டமும் வீரமும் கொண்டு   
வீறு கொண்ட வேங்கையென 
வீரமங்கையாய் ஒளிர்ந்திருப்பாள் அவளை பெண்ணென்று சொல்வேன்

தியாகமும் நேர்மையும் இரு கண்களாய்
தொலைநோக்குப பார்வை கொண்டு  அறிவுத்திறனால் மேம்பட்டு
நிலவில் கால் பதிக்கும் 
கலைமகள் அவளை பெண்ணென்று சொல்வேன்

குழந்தை அழும் குரல் கேட்கையில் மனம் பதறி பதைபதைத்து
தன் பிள்ளையாய் அரவணைத்து
மடியேந்தி பிச்சை வேண்டியேனும்
மழலையின் பசிக்களை போக்கிடும்
அன்னபூரணி அவளை 
பெண்ணென்று சொல்வேன்

சிறுக சேர்த்த சிறுவாட்டுக் காசையும்
சிக்கல்கள் எழும் வேளையில்
சிறிதேனும் முகம் கோணாது
சினமேதும் கொள்ளாது
சிரிப்புடனே தந்திடும் 
தனலட்சுமி
அவளை பெண்ணென்று சொல்வேன்

- உமா, நோர்வே

**
மண்ணையும்
பெண்ணென்று சொல்வேன் –அது
மரத்தை தன் கருப்பையில்
சுமப்பதாலே!

விண்ணையும்
பெண்ணென்று சொல்வேன்-அது
மாலையில் மஞ்சள் பூசி
இரவில் வட்டநிலாப் பொட்டு
வைத்துக்கொள்வதாலே!

ஓடும் ஆற்றையும்
பெண்ணென்று சொல்வேன் – அது
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டுக்குச் சென்று
வாழ்கைக் கடலில் கலப்பதாலே!

தென்றல் காற்றையும்
பெண்ணென்று சொல்வேன் –அது
நம்மைத் தொட்டுத் தழுவி
இன்பம் பயப்பதாலே!

தென்னை மரத்தையும்
பெண்ணென்று சொல்வேன்-அது
உடல் முழுக்க வளையலை அணிந்து
தலையிலே இளநீரை சுமந்திருப்பதாலே!

பூக்களை
பெண்ணென்று சொல்வேன்- அது
மொட்டு மலர்ந்து மணம் வீசி

மகிழ்விப்பதாலே!

நிலவையும்
பெண்ணென்று சொல்வேன் –அது
வெட்கத்தில் மேகத்தில்
முகம் மறைத்து போவதாலே!

நாட்டையும்
பெண்ணென்று சொல்வேன் –அது
நம்மை தாய்போல
அரவணைப்பதாலே!

-கு.முருகேசன்

**

உயிர் தந்து;
உதிரம் பாய்ச்சி

உருவம் தந்து;
ஈன்றெடுத்த மகிழ்ச்சி

அது அகமகிழ்ச்சி

இன்று பணம்
ஈட்ட;
மக்கள் பிணம்
ஆகிறார்கள்

இதில் பெற்ற பிள்ளைகள் 
என்ன செய்கிறார்கள்;
யார் பார்ப்பது?

இத்தனையும் தாண்டி,
டாக்டராக்க வேண்டாம்,
இஞ்சினியராக்க வேண்டாம்,
வக்கீலாக்க வேண்டாம்,
நல்லவராக்கினாலே போதும்;
அது புரட்சி

நல்லவர்களாக வளர்த்தெடுக்கும் தாய்;
அவள் தான் பெண்.

- ம.சபரிநாத்,சேலம்

**
பெற்றெடுப்பதால் தாய்மண்
பேணிவளர்ப்பதால் இயற்கை
தாங்கிச்சுமப்பதால் பூமித்தாய்
தனிநடைதருவதால் தாய்நதி

உச்சிமுகர்வதால் வளர்மதி
உன்மத்தம்கொள்வதால்  பெருங்காற்று
காதல்கொள்ளும் பூங்காற்று
கட்டியணைக்கத் தென்றல் காற்று

மெல்லினம் அன்பில்
வல்லினம் தெம்பில்
இடையினம் இன்பப் பங்கில்
இப்படியாய்த்தமிழ் முத்துக்குளியல்

படைத்தவன் வியந்த
படைப்பதனாலே நயந்து
படைப்பதில் பங்கு கொண்டான்
படைப்பின் துணையுடனே

இப்படியோர் படைப்பை
என்னென்று சொல்வேன்
உயிரும் சதையுமாய் உலவும்
ஒளிரும் சுடருமாய்த் திகழும்

பெண்ணென்று சொல்வேன், ஆம்
பெண்ணென்று சொல்வேன்.

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை.

**

அம்மாவாய் பசி போக்கி,
ஆதரவாய் புன்னகைத்து
இம்மையில் எனை வளர்த்து,
ஈன்ற வரை - இயன்றவரை
உளமாற உருவாக்கி,
ஊர் போற்ற உத்தமனாய்
எனை நாளும் சீராட்டி,
ஏற்ற முடன் எந்நாளும்,
ஐயமில்லா அன்போடு
ஒருமித்து ஒற்றுமையாய்
ஓத வைத்து ஓடமெனும்
ஒளடதமாய் அரவணைத்த,
அன்பு மலர் மனைவி அவளை
ஆசை தீர நான் சொல்வேன்;
பெண்கள் குலத்திலகமென்றே!

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
 அன்பின் அடையாளம் பெண்!!
 ஆசையின் பிறப்பிடம் பெண்!!
 உடலின் உயிரானவள் பெண்!!
 கருவை சுமப்பவள் பெண்!!
 குலத்தை வளர்ப்பவள் பெண்!!
 கற்பின் கலசங்கள் நம் பெண்!!
 நட்பின் இலக்கணமாய் நம் பெண்!!
 காவிய கண்ணகியும் நம் பெண்!!
 நம் நாட்டை ஆண்டவளும் ஓர் பெண்!!
 தாயானவள் அவள் சேயானவள்!!
உறவானவள் அவள் உயிரானவள்!!
அவளின்றி யாருமில்லை!!
 அவளுக்கு நிகர் அவள் மட்டுமே!!
 மறுபிறவி ஒன்றிருந்தால்
 அவளுக்கு  தாயாக வேண்டும்!!
 ஏழு பிறவியிலும் 
பணியாற்ற வேண்டும்!!
என்னென்று சொல்வேன்!!
 அவளே என் பெண்ணென்று சொல்வேன்!!

- மு.செந்தில்குமார், ஓமன்

**

வில்'லில் சிறந்த வியனரசி ! வேல்,வாள்' வீச்சில் வீரரசி !
நல்ல வளரி' வீச்சினிலும் நவிலும் சிறந்த தென்னரசி !
சொல்லும் குதிரை ஏற்றத்தில்' சுழலும் கதிராய் சுடரரசி !
எல்லா போரின் கலைகளிலும் இனிதே தேர்ந்த எழிலரசி !

முத்து வடுக நாதருடன் மொழியும் மனையாள் வடிவரசி
நித்தம் வணங்கும் பிரான்மலையில் நினைந்து சிவனை வணங்குங்கால்
சித்தம் இல்லா கீழ்மகனாம் தீயன் ஆங்கி லேயனவன்'
மெத்த மறைந்து வடுகரினை மீளா தங்கே சுட்டழித்தான்.

கணவர் தம்மைக் கொன்றவரை கடிதே அழிப்பேன் என்றுறுதி
கனன்றே எடுத்தார் நாச்சியார் கனலாம் அந்நாள் மங்கையவர் !
தனது மண்ணாம் சிவகங்கை தன்னைப் பிடித்தோர் ஓடோட
மனத்தில் உரமாய் திறமாக மலையாய் நின்றார் மனந்தெளிவாய் !

ஆங்கி லேயர் தமையெதிர்த்த ஆற்றல் மிக்க பெண்ணரசி
தாங்கும் இடியாய்ப் பலயின்னல் தாங்கி எதிர்த்த தனியரசி !
பாங்காய் வழிகள் பலவகுத்து பரங்கிக் கூட்டம் பயந்தோட 
ஓங்கும் முறையில் வென்றவரே உயர்ந்த வேலு நாச்சியவர் !

இந்தி யாவில் முதன்முதலாய் இங்கே ஆண்ட பரங்கியரை
விந்தை யாக எதிர்த்தவரே வீர மங்கை நாச்சியவர் !
இந்த செய்தி இருட்டடைப்பு இனியும் ஆகக் கூடாது !
சிந்தை ஏற்று விடுதலைக்கு சீர்பெண் இவர்தாம் வித்தென்றே !

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி ,ஆர்க்காடு.

**

பெண்ணென்று யாரைச் சொல்வேன் பேதைபோல் நாணத்தோடு
வெண்மதி முகத்தை மூடி வெருண்டு வீண் பயத்தினோடு
அண்ணியாய் சதியாய் அன்னை அக்காவாய் தங்கையாக
கண்ணிழந்தவளாய்ச் செல்லும் காரிகைதன்னைப் பார்த்தா?

மலரன்ன கண்ணாளென்று வள்ளுவன் வழுத்திவிட்டு
பலர்காணத் தோற்றிடாதே  பர்தாவே அழகென்றனா?
அன்றவன் தன்றன் மார்க்க அறநெறி கூறினாலும்
இன்றதை ஏற்கலாமா எதற்கிந்த அச்சம், நாணம்?
 
நிமிர்ந்த நன்னடையினோடும் நேர்கொண்ட பார்வையோடும்
திமிர்ந்த நல் ஞானத்தோடும் திகழ்ந்திடில் அவளே பெண்ணிற்(கு)
அமைந்த நல்லணிகள் பூண்ட அழகியாமென்று கூறி்  
எமை அறிவூட்டி நின்றோன் ஏந்தல்பா ரதியே, அஃதால்,

கவினுறு முகம் நிமிர்த்தி கண்களால் உற்றுப்பார்த்து
எவரதும் கருத்துக்காய்த் தன் இயல்பினை மாற்றாளாக
தவமெனத் தன்றன்வேலை தன்னிலே கவனம் வைக்கும்
அவளையே பெண்ணாமென்பேன், அணிகலன் அவனிக்கென்பேன்.

- சித்தி கருணானந்தராஜா

**

அன்னம்நடை  பயிலவரும் , அழகுமயில் வெட்கமுறும்,
இன்னிசைக்  குயில்களதும் ஏக்கமுறும்! -- என்னவளே
என்றெண்ணத்  தக்கவளே  இலக்கணப் பெண்ணாவாள்;
கன்னிவர  ஏங்கிடும்நம்  கனவு.

கண்களதும் மீன்கள்போல்,  கருங்கூந்தல்  மேகம்போல்,
வண்ணமிகு  உடலதுவும்  வானவில்போல்  -- கொண்டவளே
பெண்ணெனத்  தக்கவளாம்,  பேரழகி  என்றாவாள்;
எண்ணமதில்  நீங்காள்  இவள்!

பெண்ணெனச்  சொல்லிடநற் பெருமைதனைக்  கொண்டவள்நல்
உண்மைஅன்பு  கனிவுதனின்  உருவாவாள்! -- விண்ணுலக
நங்கையெனத்  தக்கபல  நல்வளங்கள்  கொண்டிட்ட
மங்கைக்கே  ஏங்காதோ  மனம் ?

- அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.

**

வணங்கத் தக்க
வனப்புள்ளவளாகவும்
சுணக்கமில்லா சோர்விலாளாகவும்
கனத்த களங்கங்கள் அற்றவளாகவும்
ஆகிவிடுவதிலில்லை
பெண்மை...

பெண்களை
ஆட்டிவிக்கும் பொம்மைகளாக
ஆட்டிவிட்டு மகிழ்ந்து கொள்கிறது
வர்ணாசிரங்மங்கள்...

பெண்கள்
உரிமைகளற்று சுயமுமற்று
சூழ்ந்து கொள்ள காய் நகர்த்துகிறார்கள் 
மதங்கொண்ட சூத்திரதாரிகளின்
சூழ்ச்சிகள்...

உடன்கட்டை ஏறுவதிலிருந்து
விடுப்பட்டும்
விடுபட வைப்பதில்லை சாதிகளின்
பிடிகள்...

திரைக்குள்ளேயே
தீண்டப்படாதவர்களாக ஒடுக்கி
சுதந்திரம் பெற்றும்
தெருக்களில் நடமாட முடியாதவர்களாக
தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது
ஆதிக்கம்....

ஒதுக்கீடற்று ஓரங்கட்டவும்
சமமற்று தாழ்ந்திருக்கவும்
நிழலொற்றித் தொடரவும் நிர்பந்திக்க
மனுக்களில் வரலாறிருப்பதாக
வாய்க்கிழிக்கிறார்கள்...

எனப் பெண்மைக்கெதிராக
கோலேச்சி
நிர்பந்திக்கப்படும் எவைகளையும்
தூளாக்கி சரியாசனம் அமர்ந்து கொள்ளும் 
பெண்தான் பெண்ணென்பேன்...

- அமிர்தம்நிலா, நத்தமேடு

**

சபை நடுவே
துகிலுரிய துடிப்பதிலிருந்து
துவண்டுவிடுவதாக இருந்துவிடாமல்
பாடமாக அமையாதிருப்பது
போற்றுதற்கில்லை...

மதுவின் நெடித் துளைக்க
விலக்கானப் போதும் விலாஒடிக்கும்
ஆண்திமிரை
ஆராதிப்பவளில்லை பெண்...

பின் தூங்கி முன்னெழுந்து பதியின்
பாதம் பணிந்து
தாலித் தொட்டு வணங்கி கொள்வது
பெண்மையைப் போற்றுவதாக இல்லை...

சுயமாய் இருக்க விடாமல்
அடிமைப்படுத்திப் புடைக்கும்
ஆணாக்கத்தை போற்றிப் பாராட்டி
பின் தொடர்வது மரபல்ல..

இருளில்
என்றில்லாமல் விரும்பும் கணம்
பகலில்
புனைவுகளோடு புணர்ந்து கொள்ளும்
நுகர் பொருளாகவும்
உணர்வுகளை ஒடுக்கிக் கொள்வதிலும்
மவுனிப்பதும் பெண்ணில்லை...

உரிமைகளிலும் உணர்வுகளிலும் சகமனுஷியாகிவிடுகிறவள்தான்
பெண்ணெனும் இயல்பினள்...

விடுதலைக் கொண்ட சுதந்திரமானவளாக இருந்தால்தான்
பூரித்துப்போகும் பூமி....

- கா.அமீர்ஜான், திருநின்றவூர்.

**

எண்ணிலா உடல் வளர்த்து
இயங்குகின்ற நிலவே
கண்ணிலா மூடர் கண்ட
கற்கண்டின் நிலையே
தின்னாமல் கல்லென்று உளறுகின்ற
வகைதனையை தள்ளி;
கரும்புக்குச் சுவை கொடுக்கும் சக்தியவள் நீயே!
நிலமாய் படைத்து, நீராய் நீரே காத்து;
நெருப்பெனும் சோதியிலே வழியினை அளித்து
காற்றினூடே  சுவாசத்தைக் கொடுத்து
விண்ணிலிருந்து வரும் விசித்திர சக்தியே;
அன்னையே வாரீர் அருகினில் வாரீர்;
பிள்ளைக்கு ஒளியே நீதான் வாரீர்;
உலகினில் தன்னைக் கடந்து
சிந்திப்பது பெண்;
உலகில் குடும்ப அமைப்பின் 
ஆதாரம் பெண்கள்;
பெண்களில்லா உலகில் ஆண்கள்
வெறும் கல்லே;
சிற்பியும் சிற்பமும் சிறப்பாய் 
அமைய  பெண் கள்தேவை;
அப்படி உலகம் உய்ய வருபவள்
யாரோ அவளே நல்ல பெண்ணென்று 
சொல்வேன்......

- சுழிகை ப.வீரக்குமார்.

**

பின்னலின் தத்துவம் புரிந்து
பின்னலற்ற வாழ்வை வாழும்;
பெரும் பண்பாடு போற்றும்
பெண்ணவள் என்று;
அனுசுயா, நயாயினி, கண்ணகி
தெரிந்து 
கற்பினைப் போற்றி, ஒழுக்கத்தில் உயர்ந்து;
கனியாய் மனங் கனிந்த படி;
கணக்கே இல்லா விருந்தோம்பல் செய்து;
பொன் குணமாய் மின்னும் பூவையே;
பூவாய் மலர்ந்து தேவ மாலையாய் தொடர்ந்து;
பூவாய்  பண்பட்ட உயிரைப் படைக்கும்;
திருவாய் குடும்பக் களைமாற்றி;
மறவாய் நிற்கும் மாதவ எங்குலப்
பெண்டீரே வணங்குகிறேன்;
சக்தியின் அம்சமாய்
சகலத்தின் வம்சமாய்
எல்லா நிலையிலும் அன்னை எனும்
அற்புத பெண்ணே நீயெனச் சொல்வேன்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com