மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 2

இந்திய விடுதலை போரை முன்னெடுத்த போர்பந்தர் போவீரரே
மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 2

மகாத்மா காந்தி

இந்திய விடுதலை போரை முன்னெடுத்த
போர்பந்தர் போவீரரே
அகிம்சையை அளப்பரிய ஆயுதமாக்கி வெற்றி கண்ட
அரிய சிந்தனையாளரே
ஆள் பாதி ஆடை பாதி என்ற கூற்றை பொய்யாக்கிய
கூர்மையான மதியாளரே.
தீண்டாமை கொடுமையை தீவைத்து கொளுத்தவேண்டும்
என்று முழங்கிய தீர்க்கதரிசியே
உன் மேன்மை புரியா மூடர்கூடத்தின் முரடன் ஒருவன்
உன் மூச்சை நிறுத்தும் வேலை செய்தான்
உன் மூச்சை நிறுத்தி இருக்கலாம் ஆனால் உன்
அகிம்சையின் வீச்சு மதசார்பின்மை பேச்சும்
இன்னும் எதிரிகளை அச்சம் கொள்ளவைக்கும் ஆயுதங்கள்
அமைதியின் வழியிலும் அறத்தின் வழியிலும் இறுதிவரை
நின்ற மகாத்மா நீ வாழ்க உன் புகழ் !

- ம முரளிதரன்

**

எளிமைத் திருமேனி எந்நாளும் கொண்டவரை
அன்புமலையை ஆளுமாசையில்லா மணியை
ஏழ்மைப்பிடியிற் சிக்கியார்க்கு வாழ்வளிக்க வந்தவரை
குடிமக்களுள் ஒரு ம(க)கானாய் வாழ்ந்தவரை
சீரியானை அரசியல் பதவியேதும் ஆசையில்லாதவரை
மாசில்லா நேசத்தை மட்டும் நினைத்தவரை
போர்தனை வெறுத்தவரை பெருவாழ்வு பெறவதற்குச்
சத்தியமே ஜெயமென முழங்கிப் போராடியவரை
கரம் கறைபடியாக் கார்மேகம்தனை, தமிழகம் வந்ததால்
நான்கு முழ வேட்டியணிந்த தயாளரை
போர்பந்தர் பெற்றெடுத்த குறையில்லாக் குணக்குன்றை
உழைப்பே உயர்வுக்கு வழியென்றவரை
போர்வழி அஹிம்சை சத்தியமெனக் கொண்டவரை
குன்றென நெஞ்சுறுதி கொண்ட கோமகனை
அடிமை வாழ்வுதனை எதிர்த்துப் போராடியவரை
ஆங்கிலேயர்க்கு அடிபணியாப் பேராண்மையை
குடிமக்கள் உயர்வு பெறுவதற்கே உழைத்தவரை
உள்ளளவும் மனதிற் போற்றிப் பணிவோமே!

- மீனாள் தேவராஜன்

**

மகாத்மாகாந்தி மாமனிதர் அல்லவா! அவர்
மனவுரம் கல்வியின் பலனல்லவா !  
அமைதியும் அன்பும் நற்பண்பின் விதைகளல்லவா ?
அதையவர் வாழ்ந்தது வெற்றிக் கதைகளல்லவா  ?

மனமே மனமே உனைத்தான் உயர் வென்றார் !
தோல்வியும் மனவூக்கம் தரும் ஆக்கம் என்றார்!
நாம் வாழும் வாழ்க்கையே நம் அறிமுகமென்றார்  !
நன்றானது கொள்கையானாலும் வன்முறை கூடாதென்றார் !

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டமே !
எதையும் சாதிக்க முடியும் தேரோட்டமே !
காந்தி சிந்தனை படிப்புடன் சேவையுமே !
உடன் மாணவர் ஆற்றல் வெளிப்படுமே ! 

மகாத்மா காந்தி அண்ணல் சொன்னார் !
சிறந்தது மனிதம் என்ற புத்தகமே !
சீர்தூக்கிப் பார்ப்பின்  வணங்கும் நித்திலமே !

- கவிஞர் இலக்கிய அறிவுமதி

**

போர்பந்தர் மண்ணில் பிறந்த உத்தமரே !
இந்திய மக்களுக்காக வாழ்ந்த அண்ணலே!
கறுப்பின இந்தியர்களின் உரிமைக்காக தொடங்கிய
அறவழி போராட்டத்துடன் சுதேசி கொள்கையும் சேர
காங்கிரசு இயக்கம், மாபெரும் விடுதலை இயக்கமானதே !
திருப்புமுனை கண்ட தண்டி யாத்திரையுடன்
வெள்ளையனே வெளியேறு போராட்டம்
இன்னுமொரு மைல் கல் ஆனதே !
திண்ணடாமை எதிர்த்தும் முழு மது விலக்கு கோரியும்
தொடர் உண்ணாநிலைப் போராட்டங்கள் !
வறுமையில் தவிக்கும் இந்தியர் கண்டு 
நின் ஆடையில் எளிமையுடன் வறுமைக் காட்ட
‘மகாத்மா’ பட்டம் வழங்கினாரே தாகூர்  !
துப்பாக்கியேந்திய ஆங்கிலேயரும் சற்றே கலங்க
அகிம்சையுடன் வாய்மையும் ஆயுதமாக
பெரும் புரட்சி நடத்திய அண்ணலே
சுதந்திர இந்தியாவின் தந்தையானீரே !

- தனலட்சுமி பரமசிவம்

**

அந்த விடியல் சிவப்பாய் விடிந்தது
ரத்தநதியின் பிரதிபலிப்பில்; எங்கள்
தந்தையின் ரத்தம் அதைக்
கொடூரச் சிவப்பாய் மாற்றியது
எந்த இசைக்கருவியிலும் இல்லாத ஓர்
ராகத்தை வெறும்
ராட்டையில் வாசித்துக் காட்டினான் எங்கள்
பாட்டன் ஒருவன்
கட்டுக்கோப்பைப் போட்டுடைக்கும்
காலம் ஒரு பின்நவீனத்துவவாதி
நேசிக்கச் சொன்னவனுக்குச் சிலுவை
யோசிக்கச் சொன்னவனுக்கு விஷம்
போர்ப்பந்தரிலிருந்து ஒருவன்
போர்க்களத்திற்கு வந்தான்; கையில்
தூயப்புன்னகைப் பூச்செண்டு; பதிலுக்கு
நாங்கள் கொடுத்தோம் துப்பாக்கிக்குண்டு

அரங்கிலிருந்து எல்லோரும் காலியாகிவிட்டார்கள்
அவன் ஒருவன் மட்டும் இசைத்துக்
கொண்டிருக்கிறான், கல்லறையிலிருந்து
மலைமுதல் அலைவரை எதிரொலித்துக்
கொண்டுதான் இருக்கிறது;
நமக்குத்தான் காதுகேட்பதில்லையே
பல தசாப்தங்களாக!

- கவிஞர் மஹாரதி

**

வையத்து வரலாற்றில் முதன்முறையாய் - இந்த
வன்முறையின் போர்முறையை ஒதுக்கிவிட்டார்;
வையத்தார் வியந்திடுமோர் வழிபற்றினார் - அண்ணல்
வெளிப்படையாய் அமைதியாகப் போர்நடத்தினார்!

தடியடிகள் தூக்குமேடை துமுக்கிரவை -அந்தமான்
சிறைக்கொடுமை மரணத்தை ஈந்தபோதும்
விடுதலைதான் உயிர்மூச்சாய் நெஞ்சிலேற்றி - அண்ணல்
மனவுறுதிக் கருவிதனை நம்பிநின்றார்!

உலகத்தின்   பெரியாராம்   காந்தியண்ணல் - இந்த
உலகமுள்ள   வரைநாமும்   வாழ்கவென்போம்;
நிலமெங்கும்   இவர்போல   எவருமில்லை - இவரை
நெஞ்சிலேற்றி   வாழ்கவென்றே  வாழ்த்திடுவோம்!

அமைதியறப்   போர்தந்தை   வாழியவே! - எங்கள்
அடிமைவாழ்வு   விலங்கொடித்தோர்   வாழியவே!
அமைதியன்பு   சாந்தமூர்த்தி  வாழியவே! - எங்கள்
அண்ணலான  மகாத்மாவாம்   காந்தி   போற்றி!

- கவிக்கடல், கவிதைக்கோமான், பெங்களூரு.

**

கதராடை அதுவும்
அரையாடையில் உலவிய
அதிரூபன்.
கறுப்பின மக்களின்
கடுந்துயர் களைந்த
கருணையாளன் !.
மது மாமிசம் நீக்கி
மன உறுதியுடன் வாழ்ந்த
மாமனிதன் .
உண்மையால் உயர்ந்து
உலகம் போற்றிய
உத்தமன் .
அகிம்சை எனும்
ஆயுதம் ஏந்திய அவரே
அண்ணல் காந்தியடிகள் !
அல்லும் பகலும் பாடுபட்டு
அந்நியரை விரட்டிப்
பெற்றுத் தந்த சுதந்திரம்
கற்றுத் தந்த ஒழுக்கம்
காற்றில் பறக்குது இன்று !
மனிதர்கள் நிறைந்திருக்க
மனிதம் குறைந்திருக்க
மகாத்மாவும் சிரிக்கிறார்
பணத்திலும் படத்திலும் !

- ஜெயா வெங்கட்

**

வாய்மையையும் தூய்மையையும்
போற்றிய தாய்மை நெஞ்சின் நேயன்,
சேயாய் இருந்து அனைத்தும்
மாயாது கற்ற எளியன்,
ஓயாது உரைத்தது ஹேராம்
காயாத போராட்டம் இயக்கம், 
ஒத்துழையாமை
அஹிம்சை நெறியை ஊர் அறியாத போதே 
அகிலத்திற்கு தந்தவன்,
தமிழ் கற்று தேர்ந்து கடைசி வரை 
பாரதியையும் நேசித்தாய்
இந்த பாரையும் நேசித்தாய்,
உலகில் உனைத் தெரியாதவர் உளரோ?
வஞ்சகரும் உன் நோட்டை 
நாளுமிங்கே பதுக்கிட்டார், 
கீழே நீ எழுதியது  
வாய்மையே வெல்லுமென்று
காந்தீயம் புரிந்திட நாளும் ஓங்கும்
சாந்தி தான்,
சத்யமேவ ஜயதே..

- செந்தில் குமார் சுப்பிரமணியன்.

**
போர்பந்தரில் உதித்து
போர்க்கப்பல்களை
அமைதிக்கடலில் மூழ்கடித்தவர் !!
சட்டம் படித்தார் –இருந்தும்
சத்யாக்ரஹத்தை வாதிட்டார் !!
ஒவ்வொரு இந்தியனின் மனப்பெட்டியிலும்
அஹிம்சைத் தபாலை நுழைத்தவர் !!
வல்லினம் கற்காத வல்லவர் !!
கத்தியில்லை , கத்தல் இல்லை,
ஒரு ஒத்துழையாமையால்
எண்ணிலடங்கா எண்ணங்களில்
ஒற்றுமை ஊற்றை எழுப்பியவர் !!
அரசியல் - தம் பிள்ளைகளை மட்டுமே தூக்கிவிடும்
ஒரு மந்தை! – ஆனால்  நீங்களோ
இந்த மண்ணையே வாரிசாக நினைத்த விந்தை !
பாரதம் கண்டது அதனால் தனக்கென்று ஒரு தந்தை !!  

- கவிஞர்.  டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**

மனிதகுலத்தை நேசித்த மாமனிதர் காந்தியடிகள்
மனிதரில் யாரையும் வேற்றுமை பாராட்டாதவர்
இனிய சொற்களில் அன்பை விதைத்தவரவர்
மனிதம் எத்தொழிலையும் இழிவு படுத்தாதென்றார்

அடிமைத்தனத்தை அகிம்சையால் எதிர்த்து நின்றார்
குடியரசே மக்களுக்கு நன்மை பயக்குமென்றார்
படியாத ஆங்கிலேயரை மக்கள்சக்தியால் வென்றார்
விடியலாய் சுதந்திர இந்தியாவை உருவாக்கினாரவர்

எளிமையின் உருவமாய் எங்கும் நடந்தாரவர்
களிப்பாக இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டினார்
துளிர்த்திட வேண்டுமென அதை நினைத்தாரவர்
ஒளியின்றி பிரிவினையின் இருட்டில் நின்றதது.

நிறவெறி எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் நின்றார்
அறநெறியில் அதன் வெற்றியைக் கண்டாரவர்
புறநெறியாய் அகிம்சையெனும் ஆயுதம் தரித்தார்
உறவில்வந்து மக்களவரை மகாத்மா என்றனரே.

மகாத்மா காந்தியின் கீர்த்தி அளவற்றதல்லவா
சுகாதாரமாய் தன்பணி தானே செய்யவேண்டினார்
புகாதவர் மனதிலும் தூயஅன்பு புகுமென்றாரவர்
முகாந்தரமாய் தன்னுயிரையும் இனிதாய் தந்தாரே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

காந்தியே!
மகாத்மாவே!
மானிடராய்ப் பிறந்து...
மகோன்னதவம் அடைந்தவரே!
உண்மையே தெய்வமென்று...
உலகுக்கு உணர்த்திய உத்தமரே!

அரிச்சந்திரன் நாடகம்கண்டு...
பொய்மைக்கு முடிவு கட்டியவரே!
கீதையைப் படித்ததிலிருந்து...
இருப்பதையெல்லாம் துறந்தவரே!
வாய்மையாலேயே வாழ்வு சிறக்குமென்று
வல்லுலகை உணர வைத்தவரே!

மானுடரை மதித்ததால்தானே நீவிர்
மகாத்மாவாய்  உருவெடுத்தீர்!
பாரிஸ்டர் படித்த நீவிர்
பாமரனின் உடையணிந்தீர்!
அஹிம்சையும் பொறுமையுமே 
ஆயுதங்கள் என்றுணர்த்தியவரே!

இப்படித்தான் வாழ்வதென்று
இதயத்தில் ஏற்றபின்பு...
எத்தனைதான் இடர் வந்தாலும்
சத்தியத்தின் வழியில் நின்று
சாதனைகள் நிகழ்த்திக் காட்டி
உலகத்தார் உளத்திலெல்லாம்
உயர்ந்தவரே! உமது புகழ்...
மண்ணுலகம் உள்ளவரை 
மறையாது!இது உறுதி!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

தான் உண்டு தன் வேலையுண்டென இருந்தவனை;
வம்புக்கு இழுத்தது ஆங்கிலேயக்கூட்டம்

வம்பு செய்பவனுக்கு தெம்பைக்காட்ட 
அம்பை விட்டான்;
அது அவர்களைக்
குத்தவில்லை,
அது காகித அம்பு

காகிதத்தால் ஆவது என்ன?
படித்தவன் தன் பகட்டுக்காக  கடிதம் எழுதிக்கொண்டிருந்தால்,
அதனால் என்ன ஆகப்போகிறது?
சிரித்தார்கள் பலர்

சிந்தித்த கொஞ்சம் சிலர்,
படித்த இவன் பக்கம் நின்றனர்;
அதுவே நாளாக ஆக கோடிக்கணக்காக பெருகியது

படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்,ஏன்?
மேலே உள்ள காரணங்கள் மட்டும் போதுமே

படிக்காத பரதேசிக்கூட்டம் நாட்டை ஏய்க்குது பார்!
படித்தவனே எழுந்து வா,
காந்தி தேசம் அமைப்போம் வா.

- ம.சபரிநாத்,சேலம்

**
வாங்கித் தந்தார் தந்தை காந்தி நம் 
மண்ணுக்கு விடுதலை ! அப்போதே 
சொன்னார் இந்த மண் உன் பூர்விக 
சொத்து அல்ல ...உன் பிள்ளைக்கு 
நீ பட்டிருக்கும் கடன் என்று !
கடனாளி நீ இந்த மண்ணுக்கு சொந்தம் 
கொண்டாட முடியுமா ?
உனக்கு என்ன உரிமை கடன் சொத்தை 
அழிக்க ? கோடிட்டு காட்டினார் உன் 
எல்லை என்ன என்று அன்றே மகாத்மா ! 
நிலை மறந்து எல்லை தாண்டி விட்டாய் 
மனிதா நீ இன்று ! 
இந்த மண்ணின் வளம் அழிக்க கடனாளி  
உனக்கு ஏது உரிமை ?  கேட்கிறார் இன்று 
உன் பிள்ளைகள் ! பதில் சொல்லு நீ !
கேள்வி கேட்கும் ஓவ்வொரு பிள்ளையும் 
ஒரு மகாத்மா காந்தியே !  

- கந்தசாமி  நடராஜன் 

**

அகிம்சையின் அத்தியாயமே!!
அன்பின் அர்ப்பணிப்பே!!
ஒற்றுமையின் ஒளிவிளக்கே!!
இந்தியத் தாயின் பிதாமகனே!!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்க வைத்தாய்!!
ஜாதி, மத பேதமின்றி 
பழக வைத்தாய்!
தர்மம் தலைகாக்கும் என
அகிம்சையை போதித்தாய்!!
எல்லாமாய் இருந்த நீ!
இல்லாமல் வாடுகிறோம்!!!
பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க,
நீ மறுபடியும் பிறந்து வா!!
எங்கள் பிதாமகனே!!
இந்தியத் தாயின் முதல் மகனே!!
எங்கள் வீட்டின் தலை மகனே!!
அகிம்சையின் ஆணிவேரே!!
சட்டத்தின் வல்லுனரே!!
பொறுமை காத்து
இந்திய நாட்டின் 
பெருமை சேர்த்தாய்!!
நாங்கள் எதிர்பார்க்கிறோம் இன்னும் இன்னொரு காந்தியை!!
ஜெய்ஹிந்த்!!   வந்தே மாதரம்!!

- மு.செந்தில் குமார், ஓமன்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com