Enable Javscript for better performance
Mahatma Gandhi 150th Birthday poems|மகாத்மா காந்தி வாசகர் கவிதை- Dinamani

சுடச்சுட

  
  gandhi2

  காந்தி மகான்

  நிலைமண்டில ஆசிரியப்பா

  விரைந்த நடையில் வீரமோ அதிகம்
  நிரைந்த மனதில் நீங்கா அண்ணலாம்.!
  மனிதரில் நீயே மகானாய் ஆனாய்
  புனிதராய் இருந்தே புவியில் வாழ்ந்தாய்.!

  இலக்காம் விடுதலை எட்டிப் பிடித்தாய்
  உலகம் எங்கும் உனக்குச் சிலைகள்.!
  குணத்தில் நீயே குன்றாய் நின்றாய்
  பணத்தில் முகத்தின் படமும் தந்தாய்.!

  அண்ணல் என்றால் அறியார் யாரோ
  எண்ணம் நிறைந்தே ஏற்பர் எவரும்.!
  அகிம்சைக் கொள்கையுன் அன்பின் பிறப்பு
  அகிலம் போற்றும் அணையா விளக்கு.!

  ஏந்திய ஆயுதம் இட்ட கறையால்
  காந்தியம் என்றும் கரைந்து விடாது.!
  மறுபடி நீயும் மண்ணில் உதித்தால்
  மறுக்கும் எண்ணம் மனிதரில் இலையே.!
   
  - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

  **

  பாவலர் கருமலைத்தமிழாழன்
  தமிழகத்து வள்ளியம்மை கண்ட ளித்த
  ----தவமணிதாம் காந்திமகான் ! தில்லை யாடி
  நிமிர்ந்துநிற்க மண்தொட்டு வணங்கி சென்னி
  ----நிமிர்ந்தவர்தான் காந்திமகான்! தென்னாப் பிரிக்கா
  அமிழ்தாகக் கடைந்தெடுத்து அள்ளித் தந்த
  ----அண்ணல்தாம் காந்திமகான்! புவிவி யக்க
  அகிம்சையெனும் புதுவழியில் வெற்றி கண்ட
  ----அறமகன்தாம் காந்திமகான்! நாட்டின் தாயாம் !
  நிறையாடை இல்லாமல் தமிழ கத்தில்
  ----நின்றிருந்த விவசாயி கோலம் கண்டே
  அரையாடை அரைகட்டி இந்தி யாவை
  ----அடியடியாய்க் காலடியால் அளந்த வர்தாம்
  திறைசெலுத்த மறுத்தவீர கட்ட பொம்ம
  ----தீரன்போல் நேத்தாசி எழுந்த போதும்
  சிறைக்குள்ளே நேருவுடன் பொறுமை காட்டிச்
  ----சிந்திக்க வெள்ளையனை வைத்த வர்தாம் !
  வீதிவழி இரவில்பெண் தனியாய் செல்லும்
  ----விரிந்தராமர் ஆட்சியினை விழைந்த வர்தாம்
  நீதிநெறி சத்தியமும் உண்மை யொன்றே
  ----நிலைத்தவாழ்வைத் தருமென்று வாழ்ந்த வர்தாம்
  சாதிமதப் பேதமற்ற நாடாய் ஆக்கும்
  ----சாந்திவழி தனிலுயிரை விட்ட வர்தாம்
  போதிமரப் புத்தரேசு பிறப்பாய் வந்து
  ----பொலிந்தமகான் காந்திவழி நடந்தால் வாழ்வோம் !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்
  **

  எதிரி தோற்கா வண்ணம் நீயங்கே
  ஜெயித்திட வேண்டும் எனமொழிந்த எம்மானே!
  கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை என்னும்
  ஆயுதம் ஏந்தி ஆதவன் மறையாப்
  பேரரசைச் சத்தமின்றி விரட்டிய அண்ணலே!
  காந்தியை நாம்ஏன் படிக்க வேண்டும்?
  மகாத்மா போதனை ஏதும் செயவில்லை!
  அவர்தம் வாழ்வே செய்தியும் சகாப்தமுமாம்!
  நள்ளிரவில் பெண்ணங்கே தனித்துச் செல்லவும்
  கிராமங்கள் செழிக்கவும் கனவு கண்டவரேநீர்!
  உண்மையின் இலக்கணம்! அகிம்சையின் பிறப்பிடம்!
  பாரதத்தின் ஆத்மா! அடையாளம்!! முகவரி!!

  - மரு. கொ.ரா. தர்மேந்திரா

  **
  மனித ஆத்மாவாகத் தோன்றி
  மகாத்மாவாக உயர்ந்தவர் நீ!

  ஆடையைக் குறைத்து
  அகிம்சயை அணிந்தவரே !
  உன் பிறந்த நாள்
  அகில உலகத்திற்கும்
  அகிம்சை பிறந்தநாள்!

  உன் கைகள் இரண்டும் இராட்டை சுற்றின
  உன் கால்கள் இரண்டும் நாட்டைச் சுற்றின
  உன் கொள்கைகள் இரண்டும் உலகை சுற்றின
  உன் அறப்போர் மட்டும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றன!

  தென்னாப்பிரிக்காவில் அகிம்சையை சோதித்தாய்!
  உன் தாய் நாட்டில் அகிம்சையால் சாதித்தாய்!

  அனைவரின் ஒத்துழைப்போடும்
  ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி
  ஆயுதத்தால் வெல்லமுடியாததை
  அகிம்சையால் வென்று - நீ
  உன் வாழ்நாளுக்குப் பிறகும்
  வாழும் மகாத்மா!
  வாழ்க! வாழ்க!

  - கு. முருகேசன்

  **

  சுதைமண் காந்தியின்
  தடியைப் பிடுங்கித்
  தலையை உடைக்கிறார்கள்
  காந்தி பதாகையில்
  குறிதவறாது சுட்டுக்
  குருதியோடச் செய்கிறார்கள்
  காந்தி சாலையில்
  பிராந்திக் கடைகளைத் திறந்து
  ஆடுவோமே – கள்ளு
  போடுவோமே என்கிறார்கள்
  காந்தி விழா கொண்டாடியதாகப்
  பொய்க்கணக்கெழுதிப்
  பொருளாதாரத்தை உயர்த்துகிறார்கள்
  காந்தியாக நடிக்கக்கூட
  இந்தியர் எவருமில்லை
  காந்தி பிறந்த நாளைக்
  கோலாகலமாய்க்
  கொண்டாடுகிறார்கள்
  தொலைக்காட்சியில் குத்தாட்டம் பார்த்து
  அது எப்படி?
  பணத்தாளில் புன்னகைக்கும் காந்தியைப்
  பாதுகாக்கிறார்களே
  பெட்டி பெட்டியாய்...

  - கோ. மன்றவாணன்

  **

  உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
  செப்பித் திரிந்தோர்க்கு செயலில் வழிகாட்டி
  தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
  பாழ்பட்டு நின்றிட்ட பாரத சமுதாயத்தை வாழ்விக்க வந்தாயென்று
  பாரதி சொன்னனென்று. - ஆனால்
  பாரதத்தில் உனக்குத் கிடைத்த பரிசு பச்சைப் படுகொலை.
  ஏனோ எனக்கு எதுவும் புரியவில்லை.
  இந்து வெறியரின் தர்மம் தெரியவில்லை.

  - சித்தி கருணானந்தராஜா

  **

  இந்திய மண்ணின்  பிதா
  சிந்திய   வியர்வைத்  துளியில்
  கிடைத்த  சுதந்திரம்!
  காந்தி      ஜெயந்தி  கொண்டாட
  சாந்தி  பெற வேண்டுமென
  முந்தி வேண்டிய  வேண்டுதல்
  சந்ததியினரையும் தொடருதே!
  இந்தியா என்ற அருமை மகளை
  கைபிடித்து  நல்வழி நடத்தி செல்லும்
  வல்லமை உடைய தந்தை நீங்கள்!
  உங்களின்  வழி  நடந்தோர் '
  கடைபிடிக்க விரும்பும் அஹிம்சை
  தடையின்றி  வருகுதே
  இந்திய மக்களின் வாழ்வில்!
  சட்டையணியா  உங்களின் கொள்கை 
   ஆகியதே உங்களை மகாத்மா!
  வெள்ளயனே வெளியேறு என்ற
  தொல்லை தராத  உங்களின் '
  அணுகுமுறை சந்தித்தது வெற்றியினை!
  வெற்றி வாகை சூடிக்  கொடுத்த
  முற்றிலும் அன்புடைய  உங்களை
  சுற்றி நின்று ஆராதிக்கிறோம்!

  - பிரகதா நவநீதன்.  மதுரை 

  **
  போர்பந்தரில் பிறந்து நாட்டிற்காக
  ....போராடிய ஒப்பற்ற தலைமகன்
  பார்முழுவதும் திரும்பி பார்க்கவைத்த
  ....பாரதத்தாய் வணங்கும் திருமகன்
  சத்தியத்தின் வழிகாட்டி எதிர்ப்போர்க்கும்
  ....சிந்தனையை முளைக்க வைத்தாய்
  புத்திக்குள் அன்பையும் புகட்டி
  ....பூமியெங்கும் அமைதி மலரச்செய்தாய்
  எளிமையோடு நீயும் வாழ்ந்து
  ....ஏழைகளின் வாழ்க்கை அறிந்தாய்
  தெளிவான பாதையைக் காட்டி
  ....தெய்வமகனாய் நீயும் உயர்ந்தாய்
  மண்ணிற்காக போராடி வாழ்ந்தவனிடம்
  ....மரணமும் இங்கு தோற்றுப்போகும்
  மண்ணில் வாழும் காலம்வரை
  ....மக்களிடத்தில் உனது புகழ்ஓங்கும்

  - கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்

  **

  வீட்டுக் காக வாழ்ந்தார் எல்லாம்
     வீழ்ந்தே மறைந்தார் மண்ணிலே !- நம்
  நாட்டுக் காக வாழ்ந்த அண்ணல்
       நாளும் வாழ்கிறார் நம்மிலே !

  அரையாய்க் குறைந்த ஆடை அணிந்தார்
       அண்ணல் காந்தி நாட்டிலே !- எங்கும்
  விரைந்து சென்றே அமைதி வழியை
       விதைத்து வந்தார் விரும்பியே !

  நாட்டில் பலவாம் போராட்டங்கள்
       நடத்தி வந்தார் நாளுமே !- பல
  வாட்டும் இன்னல் வளைத்த போதும்
       வருந்தார் எதிர்த்தார் வணங்கியே !

  அமைதி அன்பு வழியே எங்கும்
       அணிவகுத்தார் கூடியே !- துயர்
  அமைதி குலைத்தே அடக்கிப் பார்த்தும்
       அடங்க மறுத்தார் அடங்கியே !

  அடக்கி ஒடுக்கி ஆண்டவர் எல்லாம்
     அடங்கிப் போனார் தன்னாலே !- அவர்
  அடங்கி ஒடுங்கி அண்ணல் இடத்தில்
       அளித்தார் விடுதலை அந்நாளே !

  உலகம் போற்றும் அமைதி வழியை
  உயர்த்தி வைத்தார் நம்அண்ணல் !- இந்த
  உலகம் இன்றும் என்றும் போற்றும்
       உயர்வே பெற்றார் நம்அண்ணல் !

  காந்தி வழியே கண்கள் இரண்டாய்க்
       காப்போம் அதுவே வாழ்நியதி !- நம்
  காந்தி வழியே உலகம் வாழ்ந்தால்
       காணும் அமைதி பேரமைதி !

  - படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

  **

  அகிம்சையின் அரண்
  ஆங்கிலேயருக்கு முரண்
  இந்திய நாட்டின் அறம்
  ஈஸ்வர அல்லா தேரே நாம்
  உனது சமத்துவத்தால்
  ஊரும் நேராக, பாரும் சீராக
  என்றும் நம் வழி வாய்மையே,
  ஏகாதிபத்தியம் விட்டொழிய
  ஐரோப்பியர் ஆட்சி அகல,
  ஒத்துழையாமை நடத்தி,
  ஓங்க வைத்த ஒற்றுமையை
  ஒளவியத்தால் விடுவதா?
  தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா
  கண்ணீரால் காத்த பயிர் இதைக்
  கருகத் திருவுளமோ ?

  - கவிதா வாணி மைசூர்

  **

  இந்தியாவின் முகவரி நீ
  எளிமையின் திருவுருவம்

  சத்திய சோதனை
  நீ தந்த வேதம்
  அகிம்சையும் அன்பும்
  நீ இசைத்த கீதம்

  மாந்தரில் மகாத்மா
  போர்பந்தர் தந்த சூரியன்

  விடுதலைக் கிழக்கைக்
  காட்டியவன், சுதந்திர
  வேட்கையை உணர்வில்
  ஊட்டியவன்

  வெள்ளைப் பரங்கியரை
  வெளியே ஓட்டியவன்
  அரை நிர்வாணத்தால்
  வெளிச்சங் கூட்டியவன்

  பொக்கைவாய்ப் புன்னகையால்
  எழிலைக் காட்டியவன்
  பூக்களில் எரிமலைத்
  தீயினை மூட்டியவன்

  இத்தனை ஆண்டுகள் கடந்தும்
  காந்தியம் இங்கு மட்டுமல்ல
  உலகையே உற்றுப்பார்க்க வைக்கிறது

  தீண்டாமை ஒழிப்பிற்கான
  வேரடி மண் நீ
  இந்திய ஆலமரத்தின்
  விழுதும் நீ

  ஆகவே காந்தி மகாதமா
  வாழ்க நீ எம்மான், இவ்
  வையத்தைப் பாலிக்க
  வருவாய் இம்மண்ணிற்கு மீண்டும்.

  - கவிமாமணி "இளவல்" ஹரிஹரன், மதுரை.

  **

  போர்பந்தரில் அவதரித்த மகான்....உங்களின்
  பிறந்த  தினம்  இமயமாக கொண்டாடப்பட
  சிறந்த  இத்தினத்தில்   அனிச்சையாக  கைகள் கூப்பி
  அஞ்சலி  செய்யும்  நம்  அனைவருக்கும் 
  எடுத்துக்காட்டு நீங்கள்!
  உங்களின் கனா  ஒன்றுதான்....
  சுதந்திர இந்திய  கண்கள் என்ற
  விழிக்கு  நீங்கள்  பார்வை!
  உங்களின் உயிர்  உடலை விட்டு பிரிந்தாலும்
  "வந்தே மாதரம்"  என்ற  சொற்கள் சொல்ல
  உடல் மண்ணில் சரிந்ததே!
  மகாத்மா  உங்களின்  கனா  பலித்ததா?
  எழுந்ததே  பெரிய வினாக்குறி?
  ஆயினும்
  உங்கள்  புன்னகையில்  இந்திய உயிர்கள் 
  ஆசைகள்   மெல்ல மெல்ல
  புரிய வைத்தாலும்  அதை மறந்து
  உங்களின் கைத்தடியின்  அடியில்
  போட்டு  புதைக்க விட்டனரே!
  இதனால்............. சிலர்
  சட்டென எழுந்ததுண்டு...ஆனால்
  பட்டென  மறந்ததுண்டு...
  வெட்டென  உங்களின் கனாவினை  மறந்து
  கொண்டாடுகிறோம் 
  உங்களின்  பிறந்ததினத்தினை!

  - உஷாமுத்துராமன்,  திருநகர்

  **

  கரன்சியில் சீரிக்கும் காந்தி
  கள்ள நோட்டிலும் சிரிப்பதால்தான்
  சிரிக்கத் தோன்றுகிறது...

  கண்ணாடி போட்ட
  காந்தியின் படத்தருகே இருக்கும்
  இன்னொரு கண்ணாடி
  யாருடையதெனத் தெரிய யோசிக்கிறது
  மனம்...

  வேற்று நாடு புறக்கணித்த
  காந்தியை
  தேசப்பிதாவென எங்கள் நெஞ்சமென
  போற்றி மகிழ்கிறது இந்தியா...

  சுதேசியை
  சேர்த்தணைத்துக் கொண்டால்
  சுயமரியாதை நிமிர்த்துமெனப் போதித்த
  பெருமை வார்த்தைகளை மறந்து
  கார்ப்பரேட்டுகளுக்கு
  கம்பளம் விரித்துக் கால்விழுவது
  கம்பீரமென்கிறது சிம்மாசனம்...

  யார் யாரையோ மகாத்மாவாக்க
  துடிக்கிற கர்ம யோகிகள்
  களம் புகாமலலேயே
  தேசத்தியாகிகளாக சித்திரப்படுத்திக்
  கொள்வதில் குழம்புகிறது
  வரலாறு...

  எனினும்
  மகாத்மாவின் ஆன்மா
  சாந்தி பெற வேண்டி வணங்கி
  பிறந்த நாளிலும் கூட போற்றி

  வரலாற்றை
  மறைக்க முடியாதென்ற
  நம்பிக்கையுடன் இருக்கிறது
  இந்தியா...

  - அமிர்தம்நிலா, நத்தமேடு

  **

  ஹரே ராம்
  என்று அலறி ஒடுங்கியது
  காந்தியின் ஆன்மா...

  அகிம்சா வழியில் பெற்றுக் கொண்ட
  சுதந்திரம்
  இப்படியாகத்தான் தொடர்கிறது...

  நினைவு நாளும் பிறந்த நாளும்
  வந்து போவதாக இருக்கிறது
  நாட்டின் போக்கு...

  மகாத்மாவை
  வெறும் ஆத்மாவாக வீசியெறிய
  முயல்வதாகத் தெரிகிறது
  நடைமுறை...

  மலையின் உச்சிக்கு மேலாக
  நிற்க வைத்து அழகு பார்க்க
  சிலையாக அல்லாமல்
  தேச பிதாவை
  தரையில் அமரவைக்க முயலுகிறது
  வியூகம்...

  கரண்சியில்
  இன்னும் எத்தனைக் காலத்திற்கு
  சிரித்துக் கொண்டிருப்பார்
  என்பது புரிய முடியாமல்
  புதிராக இருக்கிறது காலம்..

  - கா.அமீர்ஜான்/திருநின்றவூர்

  **

  கீழே விழுந்த  சத்திய சோதனை
  புத்தகத்தை,  எடுத்து வைக்க மாட்டேன்,
  இந்த மனிதர்களால் மீண்டும்
  நீ விழுவதை, நான் விரும்பவில்லை.

  தோட்டாக்கள்   உன்னை
  முத்தமிட்டதே,
  அதற்கும் அகிம்சை பிடிக்குமோ?...

  நீ  பளிங்கு மாளிகையில்,
  மட்டும் தான்  தங்குவாயா?
  எங்கள் குடிசைக்கெல்லாம்,
  வரமாட்டாயா  என 
  ரூபாய் நோட்டை
  பாரத்து,  தொழிலாளி்
  ஒருவன்  கேட்டுக்கொண்டான்.

  பெரியாரின் தடி பெரியாதா?
  காந்தியின் தடி பெரியதா?
  என்ற கேள்விக்கு,
  இரண்டுமே, மனிதனிடம்
   பாகுபாடு   பார்க்கும்,
  உங்களை அடிக்க தான்
  என்று  5வயது சிறுமி
  பதிலளித்து  ஓடியது.

  - கவிஞர்.மைக்கேல், மதுரை

  **
  அவரது தண்டி யாத்திரையால்
  அந்நியனுக்கு நித்திரை பறிபோனது....
  அந்நிய துணிகளை எரிக்காமல்
  ஏழைகளுக்கு கொடுக்காலமே
  என்றொருவர் உரைத்தபோது... - அவர்
  உலகத்துக்கே உரைக்கும்படி கூறினாா்
  ஏழைகளுக்கும் தன்மானம் உண்டென்று... -
  அவரது ஒத்துழையாமை இயக்கத்தால்
  அந்நியனின் ஆட்டம் செயலிழந்தது....
  அந்நியன் கொடுத்த அவமானங்களையெல்லாம்.... -
  அகிம்சையெனும் சிப்பிக்குள் பொதிந்துவைத்தாா் -
  அவர் பொறுமைக்கு பரிசாய் -
  முத்துக்கள் முழக்கமிட்டு வந்துவிழுந்தன
  'மகாத்மா' எனும் பெயரைச் சொல்லி -
  காந்தியத்திற்கு என்றுமே இல்லை வறட்சி
  என்றும் இருப்பது வளர்ச்சி... எழுச்சி...
  அதற்கும் உண்டு சாட்சி...மெரினா புரட்சி....!!!

  - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

  **

  அன்பே உலகில் உயர்வாகும் அறிவை விடவும் உயர்வாகும்  !
  தன்னின் பெருமை தகர்த்தாலே தனித்த ஒழுக்கம் உருவாகும் !
  உண்மை, அன்பு எந்நாளும் உயரும் உயர்த்தும் எப்போதும் !
  அண்ணல் காந்தி சொல்லெல்லாம் அனைவர் போற்றும் பொன்மொழியாம் !

  எண்ணம் அதுவே வாக்காகும் ஏற்றம் மிக்க உயர்வாக்கும் !
  கண்ட தோல்வி அத்தனையும் காட்டும் வெற்றிப் படியாகும் !
  பண்பும் பரிவும் பகலவனாய்ப் பரவ வேண்டும் பாரெங்கும் !
  எண்ணி அன்பாய் உரைத்ததெலாம் எங்கள் காந்தி மொழியாகும் !

  என்றும் விரும்பும் உயர்மாற்றம் இன்னே உன்னில் எழவேண்டும் !
  துன்பம் படுவார் எவரெனினும் துடித்தே உதவும் மனம்வேண்டும் !
  தன்னின் குறிக்கோள் அடையுவரைத் தளரா முயற்சித் தொடர்வேண்டும் !
  அன்பு அண்ணல் காந்தியவர் அன்பு மொழிகள் விழியாகும் !

  சிந்தை சரியாய் இருந்தாலே செய்யும் செயல்கள் சரியாகும் !
  எந்த உயிரும் கொல்லாமை என்றும் ஏற்ற வழியாகும் !
  எந்த மதமாய் இருந்தாலும் ஏற்ற அன்பே பொதுவாகும் !
  விந்தை காந்தி வழியெல்லாம் விரிந்த வையக் கொடையாகும் !
                 
  - ஆர்க்காடு. ஆதவன் 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai