புத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 1

எங்கோ எதுவோ யாருக்கோ காத்துக்கிடந்தது என்று அங்கே அதற்காய் எனக்காகபயணம் தொடங்கினேன்
புத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 1
Published on
Updated on
3 min read

புத்தரின் புன்னகை

எங்கோ எதுவோ யாருக்கோ
காத்துக்கிடந்தது என்று
அங்கே அதற்காய் எனக்காக
பயணம் தொடங்கினேன்
ஓர் ஏகாந்த முழுநிலா இரவில்
வழக்கமாய் அமைதிகாக்கும் நாய்கள்
குரைத்தன மாறிய என்நோக்கம் கண்டு
நாய்களின் ஆசிர்வாதங்களும், சாரல்மழையும்
என் தனிமைமுழுவதும் ஈரமாக்கின
சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன
காடுகள் வெறுமையின் ஆடைகளாய் விரிந்தன
ஒற்றை இரவு கற்றை இரவுகளாய் அகண்டது
யுகங்களின் கரைசலில் உப்பானது தேகம்
தேடிவந்தது எதுவென என்னைக் கேட்டேன்
மெளனம் எதிரொலித்தது; உருகி உருகி
கண்ணீர்க்குவியலாய் விழுந்து கிடந்தேன்,
கண்ணீரில் ஜொலித்தது புத்தனின் புன்னகை

- கவிஞர் மஹாரதி

**

ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்றவன்
அத்தனைக்கும் ஆசைப்படு
என்பதைக் கேட்டு
புன்னகைத்தான்!

அரசமரத்தடியில் ஞானம் பெற்றவன்
ஆசரமத்தில் ஞானம் பெற்றவனைக் கண்டு
புன்னகைத்தான்!

மனிதம் வளர்க்க சொன்ன
தத்துவத்தைக் கொண்டு
மதம் வளர்ப்பதைக் கண்டு
புன்னகைத்தான் புத்தன்!

துறவறம் பூண்ட இளவரசன்
இளவரசன் போல வாழும்
துறவிகளைக் கண்டு
புன்னகைத்தான்!

புத்தனின் புன்னகை
நகலைக் கண்ட
அசலின் புன்னகை!

-கு.முருகேசன்

**

அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்ந்திடாதீர்
அனுதாபம் கொள்ளுங்கள் அவர்மேல் – என்றும்
அடுத்துவரும் வேதனைகள் உங்களுக்காய்
அமைந்திடலாம் உலகோரே நகைப்பு வேண்டாம்
கெடுத்தெவரின் வாழ்வினையும் அதனால் இன்பம்
கிடைக்குமெனில் பின்விளைவு துயராமஃதால்
தடுத்திடுக மனம் நாடும் தீய நோக்கை
சாத்துவிக நன்னெறியில் என்றும் வாழ்க

என்றுரைத்தார் புத்தபிரான் இந்தியாவில்
இதனாலே புன்னகைக்கா வதனம் கொண்டார்
நன்றிதுதான் ஆனாலும் சீன யப்பான்
நாடுகளில் தொப்பை வயிற்றோடிருந்து
நன்றாகச் சிரிக்கின்றார் புத்த ஞானி
நம்மனதைக் கவருமிது புதிய பாணி 
அன்றிருந்த புத்தமகான் அழகின் மிக்கோன்
அவன் உதிர்க்கும் புன்னகைக்கே ஆற்றலுண்டாம்.

- சித்தி கருணானந்தராஜா

**
அன்பால் யாரையும் வெல்லலாம் வலிமையது
அவசரம் வேண்டாம் நடப்பது நடந்தே தீரும்
அடுத்தவர் பேசுவது கேள் சிலரிடமே நீ பேசு
அடுத்தவர் துன்பம் அறிந்திடு கருத்து கூறாதே

கோபத்தில் கூறும் சொல் கூரிய வாளொத்தது
ஒன்றும் தெரியாது என்பவன் சிறு அறிவாளி
எல்லாம் தெரியும் என்பவனோ முழு மூடன்
ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்

என்றெல்லாம் கூறிய புத்தர் புன்னகைக்கிறார்
குன்றளவு பொருள் சேர்த்தும் அலைகிற மனிதர்
தற்பெருமை தலைக்கேற ஆடுகின்ற அறிவீலிகள்
மற்போர் புரியுமளவு கோபத்தில் குதிப்பவர்கள்

எல்லோரையும் பார்க்கிறது அவரது புன்னகை
இல்லார்கூட இனிது வாழ்வதையும் பார்க்கிறது
வல்லார் வகுத்த வாய்க்காலையும் பார்க்கிறது
நல்லாரைப் பார்க்கும்வரை புன்னகையில் புத்தர்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

புத்தரை கடவுளாய்ப் போற்றியே வணங்குவோர்
   புவியெலாம் நிறைந்துளார் போற்றுவோம் !- அவர்
வித்தென வணங்குவோர் வியன்நெறி விளைத்தவர்
   வேர்தனில் நீர்தனை ஊற்றுவோம் !

தன்னலம் நாட்டினில் தழைப்பதால் எங்குமே
   தவிப்பது மண்டியே தாக்கிடும் !- துயர்
இன்னலே எங்கிலும் இருளெனக் கவ்விடும்
   ஏற்றமும் சூம்பியே வீழ்ந்திடும் !

ஆசையை ஒழிப்பதால் அன்பதும் அமைதியும்
   அகமகிழ் வெய்தியே ஆழ்த்திடும் !- துயர்
ஓசைகள் யாவுமே இடியுடன் மின்னலாய்
   ஓயா தெழும்பியே ஒழிந்திடும் !

புத்தரின் புகல்நெறி புவியெலாம் புகழ்நெறி
   பூத்தது இந்திய நாட்டிலே !- அது
முத்திரை பதித்தது முழுவுல கெங்கிலும்
   முனைப்பிலாக் கேடரால் தாழ்ந்ததேன் ?

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**
எவன் ஒருவன் ஆசையைத் துறந்து
அனைத்து உயிரினங்களுக்கும்
நல்லதே செய்ய நினைக்கின்றானோ அவன் வசம்
புத்தனின் சிரிப்பைக்காணலாம்.
மனிதனை மனிதநேயம் என்ற புனிதத்தை 
எவனொருவன்
எப்பொழுதும் எங்கேயும்
யாராக இருந்தாலும்
தவறாமல் கையாள்கின்றானோ
அவன் வசம்
புத்தனின் சிரிப்பைக்காணலாம்.

" புத்தரின் சிரிப்பு" அவனின்
மனதிற்குள் ஒலிக்கும்.

அது  மற்றவர்களுக்கும்
வாழ்வின் ஒளியாக
நல் வழியாக 
நல்லதையே கொடுக்கும் .
அல்லவையை எடுக்கும்.

- கவிச்சித்தர் களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்

**
புத்தனே, புத்தனே, சாந்தமன்றோ ! -அவன்,
புன்னகை, நன்னகை காந்தமன்றோ !
புனிதனின் கொள்கை போதுமன்றோ !
புவி வாழ்வின் சிறப்பின் வெற்றியன்றோ !
ஆசையே துன்பம் என்றார் !
அனைத்துமே உன்னால் என்றார் !
அமைதியைத் தேடச் சொன்னார் !
அகிம்சையைக் காக்கச் சொன்னார் !
தர்மத்தைப் பேணச் சொன்னார் !
துயரமேப் படிப்பினை என்றார் !
பொறுமைதான் உயர்வு என்றார் !
போகத்தைக் குறைக்கச் சொன்னார் !
மனம் மண்டியிட்டது புத்தனின் முன்னால் !
மாசறுந்தது புத்தன் புன்னகை தன்னால் !

- கவிஞர் இலக்கிய அறிவுமதி.

**
முட்டாள் மனிதர்களே!
நான் சொன்னதை விடுத்து;− பெரும்
ஆசையில் பூத்த
அழுகிய மலர்களே!
இறப்பும் பிறப்பும்
இறைவனின் நடை;
நரையும், மூப்பும், துயரும்
நம்மின் வினை;
சுஜாதையின் போராட்டம்
அறியாத கூட்டமா ;
அன்பை எதிர்க்கும் அசுர வளையமா;
அன்பை விட ஆயுதம் உண்டோ;
அன்னை தந்த முதல் வினையதுவே;
புத்தனின் சிரிப்பினில்
ஏக்கம் கண்டேன்,
சொன்னதை மறந்து;
கதை சொல்லித் திரியும்;
கூட்டம் கண்டு;
தத்துவம் உரைத்தது அபத்தம் என்று;
தன்னையே வருந்தி அங்கதமாய்ச் 
சிரிக்கிறான் புத்தன்

- சுழிகை ப.வீரக்குமார்.

**

அன்பே கடவுளின் வழி
ஆனந்த பெரு வெள்ளச்சுழி
அறிவாய் மனிதா
ஆசை என்னும் துன்பம்
நமை ஆண்டு கொல்லுது
அதை எறிந்து விட்டு
அகன்ற மனமாய் ஆக்கு
உருளும் உலகம் சொல்லும் உண்மை;
உணர்ந்த பின் எல்லாம் தெரிவாய்;
உடலும் உயிரும் எப்படியோ;
அன்பும் ஆண்டவனும் அப்படியே!
இந்த புன்னகையில் 
ஒளிந்திருக்கும் மர்மமும் அதுவே!

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

புத்தியில்லா மனிதரும் எளிதில்
....புரிந்து கொள்ளும் புன்னகைமொழி
சத்தியம் கொண்ட வாழ்வே
....சரியானது என்னும் புத்தரின்வழி
சிறுமை மனதைச் செதுக்கி
....சிந்திக்க வைப்பது உன்சிரிப்பு
பொறுமையின் சிகரம் காட்டி
....பூமியை வென்றது உன்அன்பு
வாய்மையோடு நீயும் வாழ்ந்து
....வானமாய் வாழ்வில் நின்றாய்
தூய்மையோடு நீயும் வாழ்ந்து
....துயரங்களை வாழ்வில் வென்றாய்
நிலையில்லா மனித வாழ்வில்
....நிலையானதை உணர்தல் நன்றோ
விலையில்லா பாடங்கள் சொல்லி
....வழிகாட்டியது உன்சொல் அன்றோ

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

எல்லையிலா வானம் !
கிழக்கில்லை, மேற்கில்லை,
மாந்தர்களின் மன ஆறுகளில் அப்படி ஒரு
பெருந்தன்மை வெள்ளம் ஓடும் என்றார் !!
ரத்தமின்றி கொல்லும் நஞ்சாய் வாக்கு,
சுவை அரும்புகளுக்குள் விஷம் நிரம்பிய நாக்கு !
ஒரு அமைதிப்பூங்காவில் மட்டுமே
சொற்செடிகளை நடு என்றாரே !!
ஒரு திருப்திக்கடல் காற்றை
நுகர்ந்து மகிழ்ந்த சமுதாயம்,,
அங்கே நிம்மதி மரங்களை வெட்டிச்சாய்த்த
செயற்கை புயல் – பேராசை – விடு என்றாரே !!
கேட்டோமா! இன்றோ அந்த புத்தரின் புன்னகை
காணவில்லை என்று எந்த
காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது ?   

- கவிஞர் டாக்டர்.  எஸ். பார்த்தசாரதி,MD DNB PhD

**

புத்தரின் புன்னகை!

புத்தரின் புன்னகை யார்க்கு வாய்க்குமோ?
இந்நன்நிலத்தில் இன்று யார்க்கு வாய்க்குமோ?

முற்றும் துறந்தவர் ஞானியராகிலர்!
கோல் செய்பவர் மக்களுக்கிலாகினர்!
மாந்தர் அல்லல் போக்கிட யாருமிலர்! 

தொண்டு ஒன்று செய்து ஊர் பரப்ப!
விண்டு தகர்த்து மாரி பொய்க்க!
பண்டு மறந்து பொய் உரைக்க!
கண்டு காணாமற் யார் புன்னகைக்க!

தன்னலமற்றவர் ஒருசிலர் இருக்க!
இந்நன்நிலத்தில் புத்தரின் புன்னகை யார்க்கும் வாய்க்குமோ?

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

உதிர்ந்த சருகுகளின் அழுத்தத்தால்
மேலேற முடியாத  துன்பத்தில்
எறும்புகள்...

கிளைக்குக் கிளைதாவி இருப்பற்று
மடிசாய்த்து பேன் பார்க்கும்
குரங்குகளின் விருப்பு...

ஈன்று
பசிக்குப் புறம் வந்த மானை
கொன்று
தன் குட்டியின் பசிப் போக்கும்
புலி...

உழைப்பவரின்
உழைப்பை வலிந்து சுரண்டி
உட்கார்ந்து தின்று
தலைமுறைக்குச் சேர்த்து
உடல்கொழுக்கும் சுயநலங்கள்...

சிசுவானாலும்
சுடிதாரும் சேலையுமானாலும்
கிழிந்திருந்தாலும் கூட
சீண்டி சிதைக்கும்
சிந்தையற்ற காமாந்த அவலங்கள்...

உனக்கு நீயே ஒளியாக இரு
புறத்திலும் பிரகாசிப்பாய் நீ
என்பதை
துறந்து விட்டதைக் காணப்பார்த்து

நிர்வாண ஆசையை
நெஞ்சில் பதியெனப் போதித்தும்
புறக்கணித்த மனம் பார்த்து
கண்ணீர் வழிய

நொந்து வெளிப்படுத்துகிறது
புழுக்கத்தில் உலர்ந்து போன
புத்தனின் புன்னகை...

- அமிர்தம்நிலா.நத்தமேடு.

**
ஆனந்த வாழ்வே இன்பம்
தானந்த வாழ்வில் கண்ட
மகிழ்ச்சிகளை பார்த்து
அறியா  வயதில் சிறுவன் செய்ததே
"புத்தரின் புன்னகை"
இளமையில் வறுமை அறியா
வளமையுடன் வாழ்ந்த
தளபதி "புத்தர்"
வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து
ஆசையே அழிவுக்கு காரணம்
மோசமான நிலைக்கு தள்ளும் என்றும்
நேசமுடன் போத்தித்த பிறகே
"புன்னகை" என்ற அணிகலனை
வண்ணமாக அணிந்த உத்தமர்!
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும்
"புத்தரின் புன்னகை" ரசிக்க தெரிந்தால்
சித்தம் தெளிந்து புத்தம் புதிய
வழியினை காட்டும்  "கலங்கரைவிளக்கம்"
விழி முடிய கனவில் மிதக்காமல்
"புத்தரின் புன்னகையின்" பொருள் உணர்ந்து
மன நிம்மதி பெறுவோம்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**
செல்களோடு செல்கள் ஊர்ந்து
மரத்தின் கீழ் குடியிருக்க
எழுப்பிக் கொண்ட புற்றை
வலிந்து வந்து குடியிருக்கிறது
நாகம்...

தேயிலைத் தோட்டங்களை
விரித்துப் பரப்பி
வளப்படுத்திய தேசத்தைத்
தனதென்று சொந்தம் கொண்டாடி
விரட்டுகிறது
அடாவடி அதிகாரம்...

காடுகளைக் காப்பாற்றியும்
நாட்டை வளப்படுத்தியும்
பகை முறித்து
இமயம் சென்றவனின் தொப்புள் கொடிகள்
அறுபட்டுக் கொந்தளித்தும்
புறத்தை நம்ப வைக்க
அரிதாரம் பூசித் திரிகிறது
பக்தி...

பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது
எச்சமிட்டு பசுமை  வளர்த்த
பறவைகள்...

பொழுதெல்லாம்
பூசித்துக் கொண்டாடுவதாக
காட்டிக்கொள்ளும் பரிபாலனம்
ஆசையற்ற
நிர்வாணத்தைப் போற்றுவதாக
புத்தம் சரணம் கச்சாமியென
துறந்தவராய்
பஜனைச் செய்வதைப் பார்த்து
புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்
புத்தர்...!

- கா.அமீர்ஜான், திருநின்றவூர்

**

அன்பு பரிவு பாசத்தால் அனைவர் அகமும் ஆளலாம் !
துன்பம் தருவார் துன்பத்தால் தொடர்ந்தே வாடக் காணலாம் !
கன்னல் கனிவு காட்டுவதால் களிப்புக் கடலில் நீந்தலாம் !
மென்மை மேன்மை மேலோங்கின் மின்போல் இயங்கலாம் !

திட்டம் போட்டே எச்செயலும் திறமாய்ச் செய்வாய் எந்நாளும் !
கொட்டி முரசு அறைந்தார்போல் குவியும் வெற்றி எப்போதும் !
மட்டம் என்று எவரையுமே மனத்தில் துளியும் எண்ணாமல்
வட்ட மிட்டே வாட்டமுடன் வலிந்து செய்தால் வாழ்மகிழ்வாம் !

- ஆர்க்காடு. ஆதவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.