வாசகர் கவிதை வர்ண ஜாலம் பகுதி 1

கனவு நெய்த கன்னிமை முகத்தில் கவிதை நிறங்கள் பள்ளி கொள்ளும்
வாசகர் கவிதை வர்ண ஜாலம் பகுதி 1

வர்ணஜாலம் 

தீயும் தீயும் சேரும்போது
வெப்பம் மெல்ல தணியுதே
தீ இலக்கணம் நீஎன்னில்
கூடும்போது மடியுதே

அதுதான் காமன் வசந்தகோலம்
அழகுத் தேவதை வர்ணஜாலம்

கனவுநெய்த கன்னிமை முகத்தில்
கவிதைநிறங்கள் பள்ளிகொள்ளும்
உழவுசெய்த வெள்ளாமை நிலமாய்
உந்தம் தேகம் அள்ளிக்கொள்ளும்

விடியல் வானம் செடியில் பூத்த
வெள்ளைப் பூ; பின் செவ்வரளிப்பூ
மடியில் கிடந்து பார்க்கும் போது
மங்கை நீ மன்மதன் அன்பளிப்பு

நிறங்களின் கடல்நீ; மலர்களின் திடல்நீ;
நிமிடந்தோறும் நிறமாறும் காமன் படைநீ;
வரங்களின் தொகுப்பு; வசந்தகால வகுப்பு
வண்ணவிழிக் கறுப்பு; மின்னல்முகம் சிகப்பு

அடடா; ஆயிரமாயிரம் வர்ணஜாலம்
அள்ளிக் கொடுக்கும் சொர்ணதேகம்!

- கவிஞர் மஹாரதி

**

வானம் காட்டும் வண்ணக் கோலம்
     மன்னுயிர்க் கெல்லாம் மழையாகும் !
ஆன மழையால் ஆற்றின் ஓட்டம்
     அஞ்சும் அரவம் போலாகும் !

வான முகில்கள் வளைத்துத் தழுவல் 
     வாஞ்சை மிக்கத் துடிப்பாகும் !
கான மயில்கள் ஆடும் காட்சி
     காதல் காதல் எனலாகும் !

திரையில் காணும் நடிகர் கோலம் 
     திகைக்க வைக்கும் மலைப்பாகும் !
திரைக்குப் பின்னே காணும் கோலம் 
     சீச்சீ என்றே வெறுப்பாகும் !

பெண்கள் காண ஆண்கள் கோலம் 
     பெரிதாம் சொல்லின் மாளாது !
பெண்ணுக் காக உலகுயிர் எல்லாம் 
     பெருமை காட்டும் தப்பாது !

ஒன்றை ஒன்று உறவுக் காக
     உயிர்க்கும் கோலம் பலவாகும் !
ஒன்றும் உறவு இல்லா விட்டால் 
     உலக உயிர்கள் வாழ்வேது !

ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்வே
     அகவற் கான வாழ்வாகும் !
ஆணும் பெண்ணும் சேரா விட்டால் 
     அடடா வாழ்வே பாழாகும் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**

கரைத்தெடுத்த வானவில்லின்
வண்ணங்களைக் குழைத்து
வாழ்க்கையில் பூச எத்தனித்து
தோற்றுப்போன வெள்ளைக் கனவைத்தான்
சுமந்து கொண்டிருக்கின்றன
இந்தப் பூ விழுந்த கண்கள்..

எண்ணத்துப் பச்சைகளில்
படிந்த பாசிகளில்
பசுமையற்ற வெறுமை..

மென்தங்கத்து நிறத்தில்
அங்கங்கே ஒட்டிய படிமங்களில்
தகரத்தின் துரு..

நீலம் குடித்து
நீண்டு விரிந்த வானவெளியாய்
நீளும் துயர்க் கறை..

மௌனித்த மஞ்சளின்
மதகுகள் உடைத்தெறிந்தவற்றில்
மதயானையின் கருஞ்சாம்பல் நிறம்..

சிலிர்த கணங்களின் சிவப்பை
சிறையெடுத்து வைத்த காலத்தில்
மண்டிக்கிடக்கிறது மண்ணிறம்..

இத்தனை 
வர்ண ஜாலங்களுக்கிடையே
கசந்து கசங்கி கழிந்து 
கொண்டிருக்கின்றன
ஞாலத்துப் பொழுதுகள்..

- கீர்த்தி கிருஷ்

**
ஆடுகின்ற மயில் அழகு தோகை விரித்து – அதை
 காணுகின்ற நாம் மகிழ்வோம் மனதை விரித்து
இயற்கை அன்னை எழுதி வைத்த வர்ணஜாலம்
பரந்து விரிந்து  காட்சி தரும் கடல்- அதைப்

குழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பழகு –அது
 காட்டுகின்ற இன்பம்தான் கொள்ளை! கொள்ளை !
தொழுது போற்றும் இறைவன் தூண்டுகின்றான்
  மழலை அழகைர்சிக்க ஒரு வர்ணஜாலம்

வான்முகில்கள் விலக்கி வரும் மஞ்சள் நிலா – அது
  விண்ணுலகில் நீந்தி வரும் பேரழகு
நமக்களிக்கும் பேரின்பம் உவகை மகிழ்ச்சி
  உன்னதமாய் காட்சிதரும் ஒரு வர்ணஜாலம் !

- கவிஞர் அரங்ககோவிந்தராசன்

**
வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும் 
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில் 
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

-பி.தமிழ் முகில், ஆஸ்டின், டெக்ஸாஸ்  

**

வார்த்தைகளின் வர்ண ஜாலம்
அண்ணாவின் பேருரை
பக்தியில் வர்ண ஜாலம்
வாரியாரின் சீருரை
சிலம்பின் வர்ண ஜாலம்
ம.பொ.சி ஓருரை
ராமாயண ஜால வித்தை
கம்பநாடன் எழுத்தில்,
குறளின் வர்ண ஜாலம் 
கலைஞர் தீட்டிய ஓவியம்
பொன்னியின் செல்வனை
கண் முன் நிறுத்திய - மணியம் செல்வம்,
அடுக்கு மொழி -வசனத்தில்
அதிர வைத்த - எஸ்.எஸ்.ஆர்
கறுப்பு - வெள்ளை கார்ட்டூனிலும்
ஜாலம் காட்டிய மதியும் - மதனும்,
ஆனாலும் அன்பே நீ பேசாமல் காட்டும் 
பொய்க் கோபமே - நிகரிலா - ஜால வித்தை.

- கவிதா வாணி, மைசூர்

**

புலரும் பொழுதிலே
மலரும் பலவண்ண மலர்கள்!
நீலமேகங்களிடையே
உலா வரும் வெண்ணிலா!
உடலெங்கும் வண்ணம்பூசி
வலம் வரும் வண்ணப் பூச்சிகள் !
கடலும் வானும் கொண்ட
கண்கவரும நீலவண்ணம் !
பச்சைப் பசேலென விரிந்த
பசுமைப் புல்வெளி !
மஞ்சள் வெயில் பட்டு
மலரும் சூரியகாந்தி !
அந்தி வேளையில்
அமிழும் ஆரஞ்சு சூரியன்.!
அடர் சிகப்பு நிறத்திலே
உடலிலே ஒடும் குருதி என
இயற்கை அன்னைத் தன்
இருகரம் கொண்டேத்
தூரிகை எடுத்து
தூவி விட்ட
வண்ணங்கள் தான்  நம்
எண்ணங்களில் புரிகின்றன
வர்ண ஜாலம் !

- கே.ருக்மணி

**

அங்கவஸ்திரங்களை 
ஆக்கிரமித்துக் கொள்ளும்
வர்ணஜாலங்களின் ஆபத்து
மனிதர்கள் கூடும்
ஆஸ்ரமங்களிலும் உண்டு...

நுழைவாயில்களுக்கு
சுவர்களுக்கு
பிரத்தியேக மேடை வளாகத்திலும்
அலங்கரிக்கப் பூசப்படுவனப் போலவே

இடைவரிசைப் போல
முன்பின் வரிசைகளென
இடைவெளியிட்ட வரிசைகளிலும்
பூசாமலேயே
வண்ணங்களின் மின்னும் ஜாலமென
நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன
வரிசை மாறாமல்...

வண்ணங்களின் ஜாலங்களென
ஆங்காங்கே
வெவ்வேறாய் நிறுத்தப்பட்டவர்களை
கீழிறக்கவே பழக்கி விட்டிருக்கிறது
பிரதான ஞானம்...

ஆஸ்தான ஜாலங்களில்
மதமாச்சிரிய ஜாலங்களே வருணங்களாகி
அமர்க்களப்படுத்துகிறார்கள்
பூகோள வெளிகளில் 
சுதேசியெனப் பேசிக்கொண்டே

- கவிஞர்.கா.அமீர்ஜான்.திருநின்றவூர்

**

வான் மேகம் பொழிந்து
வையகமே நனைந்து
பயிர்கள் விளைந்தால்
விதைத்தவன் வாழ்க்கையில்
வர்ணஜாலம்!

கடலில் வலைவிரித்து
மீன்பிடித்து
கரை வந்து சேர்ந்தால்
மீனவன் குடும்பத்தில்
வர்ணஜாலம்!

இரை தேடும் பறவை
இரையோடு கூடு வந்தால்
பறவைகள் கூட்டிலும்
வர்ணஜாலம்!

உலகில் பகையின்றி போரின்றி
பசியின்றி பட்டினியின்றி
நோயின்றி வாழும் நன்னாளே
உலகில் அனைவர்க்கும் வர்ணஜாலம்!

-கு.முருகேசன்

**

தமிழே என்னின் உயிரென்று
……தமிழைக் கொச்சை ஆக்கிடுவார்.!
அமிர்தத் தமிழை அறியாமல்
……அதிகப் பிழையில் எழுதிடுவார்.!
உமிழும் உளறல் வார்த்தைகளே
……உயிராம் தமிழின் உயிர்நீக்கும்.!
குமிழி நீரில் உடைவதுபோல்
……குன்றாத் தமிழும் மறைந்துவிடும்.!
.
வர்ண ஜாலம் செய்திடுவார்
……வார்த்தை ஜாலம் இருக்காது.!
அர்த்தம் கொண்டு பாடிடாமல்
……அபத்தச் சொல்லில் எழுதிடுவார்.!
மர்மம் நிறைந்த எழுத்துகளால்
……மனமும் நிறையா அரைகுறையே.!
கர்ண கடூர எண்ணமதைக்
……கவிதை காண வடித்திடுவார்.!
.
தரணி எங்கும் பறைசாற்றேன்
……தமிழே நம்மின் மூச்சென்று.!
வரமாய்த் தமிழைப் பெற்றுவிடு
……வாழ்க்கை முழுதும் வென்றுவிடு.!
இரவும் பகலும் உருப்போடு
……இறவாத் தமிழில் உரையாடு.!
நரகத் தொல்லை நீங்கிடவே
……நற்பாத் தமிழில் இசைத்துவிடு.!

 - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

காலையில் கடலில் எழுந்து
.....கதிரவனின் கண்கள் விழிக்குமே
மாலையில் கதிரவன் மறையும்
.....மலைக்காட்சி மனதை மயக்குமே
செவ்விதழ் காட்டிச் சிரிக்கும்
.....செவ்வானத்தின் அழகு குறையுமோ
செவ்வாய் போல சிவக்கின்ற
....செந்தூரப்பூவாய் வானமும் மாறுமோ
வண்ணமாய் அழகு மிளிரும்
.....வானம் காட்டும் வர்ணஜாலம்
எண்ணங்களுக்கு மகிழ்ச்சி கூட்டும்
.....வானவில் என்னும் மாயஜாலம்
மயில்தோகை விரித்தாடும் அழகில்
.....மனமும் வண்ணத்தின் மொழியானதே
குயில்கள் இசைபாடும் காற்றோடு
....கொஞ்சும் வண்ணப்பூக்களின் விழியானதே

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

என்னதான் நகரங்களானாலும்
நரகத்தை கடப்பதைப் போலத்தான்
சில பொது இடங்கள் இருக்கின்றன

சிறுநீர் கழித்தே நாசமாக்குவோரால் -
அவ்விடமே முகம்சுழிக்க வைக்கிறது -
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க -

சுகாதாரத்தையும் சுவரையும் காக்க - 
கடவுள்களை வரிசையாய் வரைந்து -
எச்சரிக்கை வாசகத்தையும் எழுதிடுவர் -

ஓவியனின் வர்ணஜாலங்களால்
சுவர்கள்யாவும் வண்ணமயமாகிறது -
வாசமும்  சுவாசமாகிறது - புதுமழையின்
மண்வாசமும் உணர முடிகிறது...

என்ன செய்வது - இன்று
தனியொழுக்கம்கூட  - கடவுள்
வீதிக்கு வந்தால்தான் காப்பற்றமுடிகிறது...!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**

ஏழு  வர்ணங்களால் ஜாலம்  காட்டும் 
வானவில் அலங்கரிக்கும் 
இடம் விண்!.................................
தடம் மாறா   சொற்களை  பேசினால் 
புடம் போட்ட  தங்கம் போல 
ஜொலிக்கலாம்!........... இந்த 
ஜொலிப்பு கொடுக்கும் நற்பெயருக்கு 
வர்ணஜால பேச்சும்  உதவுமே!
தர்ணா  செய்ய அறியா  மழலையிடம் 
பேசினால்  அதில்  வரும் 
மழலை சொல்லில்  மின்னுவது 
வர்ணஜாலம்........ மானுடனே 
வர்ணங்களிடம்  கற்கலாம்  வாழ்க்கைப்  பாடம்!
வெண்மை வர்ணத்திடம் கற்கலாம் தூய்மை!
பச்சை  வர்ணத்திடம் கற்கலாம்  வாய்மை!
மஞ்சள் வர்ணத்திடம் கற்கலாம் நேர்மை!
 ஆரஞ்சு  வர்ணத்திடம்  கற்கலாம் உரிமை!
கருப்பு  வர்ணம்    அணிந்து      எதிர்ப்பினை தெரிவிக்கலாம்!
வர்ணம்  கடவுள்  நமக்கு கொடுத்த  பொக்கிஷம்!
 உணர்வுகளை   வெளிப்படுத்த  உதவி  
கரம் கொடுக்கும்  கடவுளின்  உன்னத   படைப்புதான் 
இந்த  வர்ணங்கள்!
சிரம்  தாழ்த்தி வர்ணங்களை 
போற்றி சீர்மிகு  வாழ்வு  வாழ்வோம்!
வர்ணஜாலங்களை  நேசிப்போம்!

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

வாழ்க்கையே  ஒரு  கர்ணம்....
போடும் விளையாட்டு!
இதில் ..............
ஜாலங்கள்  செய்தால் 
ஞாலம்  உன்னை  தூற்றும்!
வர்ணஜால பேச்சு உன்னை 
உயர்த்திக்  காட்டினாலும் 
அது  வாழ்க்கையில் சிறந்ததல்லவே!
வெள்ளை மனசுடன்  பழகு 
கொள்ளை போகும் உறவினரிடம் 
உன் மனசு............
கருப்பை நிராகரித்து 
வெறுப்பை பெற்றுக் கொள்ளாதே!
நீலம்  அது உனக்கு 
அகிலத்தினைக் காட்டும் உன்னத  வர்ணம்!
சிவப்பு தேடித்தேடி பார்
உவப்பு மிக்க சிறந்த வர்ணம்!
பச்சை உன் கண்ணுக்கு பசுமையானதை 
இச்சை என்ற உற்சாகமளிக்கும் 
அற்புத  வர்ணம்..........!
வர்ணங்களை  ரசித்து  
வர்ணஜாலங்களை  விட்டொழித்து  
மகிழ்ச்சியாக  வாழ்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

முகில் தந்த 
திவளைகளில்
ஊடுருவும்
பரிதி கணைகளால்
வானில் வரும்
வர்ணஜாலம்
எழு வண்ணங்கள்
எழுதிய கோலங்கள்
இயல்பாய்,

கந்தகப் பொருட்கள்
வர்ணங்கள் கக்கும்
புவியிலும் வானிலும் 
பலவித வண்ணங்களாய்
ஒலியோடு ஒளியும்
செயற்கையாய்,

பிள்ளைகளின் சிரிப்பும்
மூத்தோரின் பொறுப்பும்
இளையோரின் பண்பாடும்
வெண்மையாய் பிரகாசிக்கும்,

தியாகமே சிவப்பு
பசுமையே உழைப்பு
நன்மையே மஞ்சள்
நீலமே வள்ளல்
பறிப்பதே ஊதா
ஆரஞ்சு சிரிக்கும்
சோகத்தில் கருப்பாய்
கசக்கும்....
வாழ்வும் கூட
வர்ணஜாலம் புரிந்தால்
தெளிந்தால்........

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

வாழ்வின் நிகழ்வுகள்
ஒவ்வொன்றும்

வழிகாட்டும் தருணங்கள்
சுமையா சுகமா

என சிந்திக்கும்
பருவங்கள்
இயற்கையா செயற்கையா

என விவாதிக்கும்
நேரங்கள்

உணர்வுகள் தரும்
விதவித உணர்வுகள்

மனம் ஆளும் 
பலவித எண்ணங்கள்

புரியா நிலையா 
புரிதல் குணமா

அவை ஒவ்வொன்றும்
தரும் வெளிப்பாடே
வண்ணங்கள்

பூக்களின் நிறத்தின்
தோற்றம் 
புடிக்காமல் வருவதாம்,

மனிதனுக்குப் பிடித்தும்
பிடிக்காமலும் வருகிறது....

- சுழிகை ப.வீரக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com