பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 3

பறவை போல நாமிருப்போம் பறப்போம் இன்பப் பயனடைவோம் !
பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 3



பறவை 

மணித்துளிகளை மென்றுதின்னும் மேகப்பெட்டகத்தில்
அணித்துணையாய் அலைந்திடும் ஏகச்சட்டகமே!

பனித்துளிகளை நின்றுதிர்க்கும் பூவின்சக்கரத்தில்
நுனித்துகளாய் அலையாடும் காற்றுத்தூதுவனே!

தனித்தனியாய் வாழ்ந்தொழியும் பாவமானிடர்க்கு
படிப்பினையாய் வாய்த்திட்ட அநேகச்சூரியனே!

தனித்துவமாய் திகழந்தொளிரும் தேவன்குடிலில் - உன்
கனிச்சிறுவாய் திறந்தருளும் தேனனைக்குரலில்

எனக்கிருசிறகுகள் கேட்பாயோ உன்போல்?
மனப்பெருங்குறைகள்தான் தாளாதோ உன்னால்!

பிணிப்பெருங்கடலையும் தாண்டவே என்னால்,
எனக்கிருசிறகுகள் கேட்பாயோ உன்போல்?

கிருஷ்ணபிரசாத்.ச, பேராசிரியர், பெங்களூரு

**

ஆதியில்
இறகுகளற்ற சிறகுகளென விரித்து
தொடர்ந்து பரவுகிறது
காலப் பறவை...

அன்பின் வானத்தை
அலகில் பிடித்து ஊட்டி மகிழ
கால்களற்ற வெறுமையுடன் கூத்தாடி
மகிழ்ந்து கொண்டிகிறது வெளி...

அண்டங்களால் ஆன
பிரமாண்டம்
எங்கும் வியாபித்து ரட்சிக்க
நிகழ்கிறது பரிபாலனம்...

ஞாலம்
அடைக்காத்துப்  பொரித்துக் கொண்டிருக்க
ஜனனித்துக் கொண்டிருப்பதில்
அண்டங்களாகிப் போன
பிண்டங்களின் துருவங்களோடு
தொடாமல்
துலங்கி கொண்டிருக்கின்றன
லோகங்கள்...

பூத கணங்களால்
பூத்து விரிந்த
வெறுமையின் அடர்த்தியில்
சலனமற்ற
பகிரண்ட பிரமாண்டம்
பறவைகளாகி
சிறகுகளற்று வியாபித்திருந்தன...

காலத் துவக்கத்தின்
முன்பிலிருந்தே
வெட்ட வெளிப் பறவையென
ஏதும் சுமந்தும்
சுமக்காதிருப்பதில் விலகாமல்
இருந்து கொண்டிருக்கிறது
வியப்பு..

- கவிஞர் கா.அமீர்ஜான் திருநின்றவூர்

**

எண்ணப் பறவை சிறகடித்தால் இயலும் இசையும் நாடகமாம் !
கண்ணாம் பறவை சிறகடித்தால் கவினார் கலைகள் காட்சிகளாம் !
விண்ணாம் பறவை சிறகடித்தால் வேண்டும் மழையே  மாட்சியதாம் !
மண்ணாம் பறவை சிறகடித்தால் மலர்ந்த பச்சை பாய்விரிப்பாம் !

ஆய்வுப் பறவை சிறகடித்தால் ஆவ தெல்லாம் வரலாறாம் !
வாய்ப்புப் பறவை சிறகடித்தால் வாழ்வெல் லாமும் இன்பமதாம் !
ஏய்க்கும் பறவை சிறகடித்தால் எண்ண வொண்ணா இழிதுயராம் !
நோய்செய் பறவை சிறகடித்தால் நுவலும் வாழ்வை நொடித்திடுமாம் !

மணக்கும் பறவை சிறகடித்தால் மனமெல் லாமும் மகிழ்ச்சியதாம் !
பணமாம் பறவை சிறகடித்தால் பாரெல் லாமும் பகருயர்வாம் !
உயர்வாம் பறவை சிறகடித்தால் உவக்கும் மழலைப் பிறப்பதுவாம் !
வணக்கப் பறவை சிறகடித்தால் வாகை நாளும் வரவதுவாம் !

பறவை பறந்தே தன்னுணவை பசிக்காய்த் தேடும் தானுண்ணும் !
பறவை கூடுப் பலகட்டிப் பணத்துக் காக விற்பதுண்டா ?
பறவை போல நாமிருந்தால் பாரில் யார்க்கும் துயரில்லை !
பறவை போல நாமிருப்போம் பறப்போம் இன்பப் பயனடைவோம் !

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.
**

காற்றரை பொள் எலும்புகளை
விசைப்பான்களாகக் கொண்ட 
போற்றத்தகு புள் இனங்களே
தட்ப வெப்ப நிலைக்கேற்ப 
வலசை போகும் உயிரினங்களே  
நீங்கள் புரியும் மகோன்னதமான 
உதவிகளை நீங்களே அறிய மாட்டீர்கள். 
உண்ட பழங்களின் விதைகளை 
பூமியில் உமிழ்வதின் மூலம் 
பல பயிர்களுக்கான வளர்ச்சிக்கு 
இனப்பெருக்கத்திற்கு உதவுகிறீர்கள். 
பயிர்களை நாசம் செய்யும் 
பூச்சிகளை உணவாகக் கொண்டு 
விவசாயின் வாழ்வாதாரம் பேணுகிறீர்கள். 
இயற்கை பேரிடர்களை அறிந்து கொள்வதிலும் 
மனிதனுக்கு முன்னோடி நீங்கள் தான் 
என்பதை நீங்களறிய வாய்ப்பில்லை. 
ஒரு கூடல் காலத்தில் 
ஒரே இணையோடு வாழும் 
விலங்கினமும் நீங்கள் தான் 
என்பதில் எத்தனை சிறப்பு. 
உங்களில் பல வகைகளை 
நாங்கள் சரணாலயத்தில் மட்டுமே 
ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது. 
வானூர்தியின் வடிவமைப்பும் 
வரத்தும் நிகழ்ந்ததும் உங்களால்தான். 
ஆறறிவு பெற்றவனால் சாதிக்க முடியாத செய்கையினை 
சாதித்து வியக்க வைக்கும் இரு காலிகளே 
உங்களில் சில வகை 
வணங்கப்பட்டு வருகின்றன
என்பது எத்துணை சிறப்பு. 
சிறகடித்து பறந்து திரிந்திடுங்கள் 
மனதால் மட்டுமே பறக்கத் தெரிந்த 
நாங்கள் பேணுவோம் உங்களை எந்நாளும். 

பான்ஸ்லே. 

**

கூட்டம் போட்டுக் கூச்சல் இடுமே
……………குரவைக் கூத்தாய் காக்கையுமே.!
ஆட்டம் போடும் அருமை மயிலோ
……………அழகாய் விரிக்கும் அதன்தோகை.!
பாட்டுக் குரலில் பாடும் ஒலியில்
……………பாங்காய்க் குயிலும் பாடிடுமே.!
நாட்டம் கொண்டே நாமும் வளர்ப்போம்
……………நல்ல செல்ல நற்பறவை.!
.
இறந்தால் கூட இனமே அழுமே
……………இழப்பின் தன்மை இதையறியும்.!
பறந்தே கடக்கும் பலமைல் தூரம்
……………பசியும் தாகம் பரந்தறியும்.!
இறகின் சக்தி இதற்குப் புரியும்
……………இறையின் அன்பால் இதையறியும்.!
பறக்கும் சிந்தை பரந்த மனமும்
……………பறவை இதையும் பகுத்தறியும்.!
.
கொடையின் உள்ளம் கொண்ட தன்மை
……………காக்கை குருவி கண்டறிவீர்.!
படையின் சக்தி பசியில் தெரியும்
……………பறவைக் கூட்டம் பகுத்தறிவீர்.!
விடையும் கிடைக்கும் விலங்குப் பண்பில்
……………விளங்காப் பொருளும் விளங்கிடுமே.!
படைத்தான் இறைவன் பலவாய் உலகில்
……………பாங்காய் உயிரைப் பல்லுயிராய்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com