மெளன சிறை வாசகர் கவிதை பகுதி 1

தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்ற மனிதக் கூட்டத்தோடு நானும் அவ்வழியோ!
மெளன சிறை வாசகர் கவிதை பகுதி 1

மௌன சிறை

எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

அன்புச் சிறையில் அடைக்கும் நம்மை
……….அமிழ்தத் தமிழின் வார்த்தைகளே..!
துன்பச் சிறையில் துளிரும் சொல்லாய்த்
……….துயரம் போக்கும் ஆறுதலே..!
மின்னல் போலே மனத்துள் உதிக்கும்
……….மெளனச் சிறையில் எண்ணமுமே..!
என்பும் தோலும் இருக்கும் வரையில்
……….எல்லாம் நமக்குத் தமிழ்த்தாயே..!
.
துள்ளும் உள்ளம் துவளா இன்பம்
……….தொய்வே இன்றி அலைததும்ப..!
பள்ளம் மேடும் பாய்ந்தே ஓடும்
……….பசுமைத் தமிழின் மூதுரையே..!
உள்ளும் புறமும் உலுக்கும் எண்ணம்
……….உதிர்க்கும் சொற்கள் அளவிலையே..!
மெள்ள மெள்ள மெளனச் சிறையில்
……….மொழியின் எழுச்சி அற்புதமே..!
.
செலவும் இல்லை சோம்பல் இல்லை
……….சுலபத் தமிழைக் கற்பதற்கே..!
விலக்கும் இல்லை வினையும் இல்லை
……….விளைவும் பயிராய்த் தமிழதுவே..!
வலமும் இல்லை இடமும் இல்லை
……….வளரும் அறிவின் எல்லையதே..!
மலரும் காதல் மங்காத் தமிழ்மேல்
……….மெளனச் சிறையில் விடுதலையாம்..!

 - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் கத்திக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் சத்தத்தோடு சமர்செய்கிறார்கள்
வார்த்தைகள் பைத்தியக்காரனின் மூக்குச்சளியாய்
ஒழுகிக் கொண்டிருக்கின்றன
வன்மத்தின் ஆத்திரமாய்ச் சொற்கள்
மூத்திரமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகின்றன
அவனவன் மொழித்துப்பாக்கியை நாவில்
செருகிக்கொண்டுதான் வெளியே கிளம்புகிறான்
குறுக்கே சாத்தானைப் போல் ஓடிமறையும்
ஆட்டோக்காரனுக்கு ஒரு குண்டு
குண்டும்குழியுமான சாலையில் இருசக்கர வண்டி
பல்டி அடித்தால் அரசுக்கொரு குண்டு
போனில் கடன்வேண்டுமா என்று கேட்கும்
குரலுக்கொரு குண்டு
வட்டி தராதவனுக்கு ஒரு குண்டு
அம்மாவை மையம் வைத்துத் திட்டியவனுக்கு
ஒரு குண்டு

அரசுக்கட்டிலில் துயில்பவர்களுக்கு ஒரு குண்டு
சிம்மாசனம் நோக்கி ஓடுபவர்கள் ஒருவர்மீது
ஒருவர் வீசும் குண்டு
பூமி புடைநாற்றம் அடிக்கிறது
சப்தக்காடு சுடுகாடு கூச்சல்நாடு
தத்துவம் எல்லாம் கல்லறையில்
சத்தியம் எப்போதும் மெளனசிறையில்

- கவிஞர் மஹாரதி

**

ஏனிந்த அடர் மௌனம்
என் அன்பே?
வார்த்தைகளைத் 
தொலைத்து விட்டாயா? 
இதயத்துள்
புதைத்து விட்டாயா? இல்லை
வரத்துடிக்கும் அவற்றை
வைராக்கியத்துடன்
சிறைபிடித்து வைத்திருக்கிறாயா?

எதுவாயினும்  என்னவளே!
கோடரியாய் என் 
இதயம் பிளக்கும்,
கனத்த உன் மௌனத்தைக்
கலைத்து விடு...!
என்னை வதைக்குமிந்த 
உன் விளையாட்டை 
உடன் நிறுத்திவிடு...!

- ஆதியோகி

**

அமைதியைத் தேடி!
அலைபவர் கோடி!
வாடிய உள்ளங்கள் எல்லாம்!
தேடுவது நாடுவது
அமைதி! அமைதி!

மெளன சிறையில்!
மனதிற்குள் புலம்பும் கைதிகள்!
தண்ணீரில் மூழ்கிய நிலையில்!-- அவர்கள்
கண்ணீர் விடுவது யாருக்குத் தெரியும்?

எதுவும் நடக்காது என்று!
தெரிந்த அன்றே!
ஏமாற்றம் ! தடுமாற்றமாகி!
பேசமுடியாமல்!
மெளன சிறையாகிறோம்!

தனிமையில்
இனிமையா?
இனிமையில்
தனிமையா?
மௌனமே சிறையா?

சிறைக்குள் சிக்கிய
மௌனம் கலைந்தால்!
உள்ளத்தின் குமுறல்கள்!
கடும் வெள்ளமாய்!
பாய்ந்திடும்!
மௌன சிறைகள்
ஓய்ந்து விடும்!
எங்கும் மகிழ்ச்சி வெள்ளங்கள்!
பாய்ந்து விடும்!
வெளிப்படையாக பேசிட !
வெளிச்சங்கள்! தடைகளில்லை!

அவைகள்! வெளிச்சத்திற்கு வந்தால்!
மௌன சிறைகள்! எங்குமில்லை!

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

**

கண்ணிமைக்கும் பொழுதொன்று
காற்றோடு கலந்திங்கு
கவி பாடி சென்றதுவோ

நித்தம் நித்தம் நிஜமொன்று 
நின் மதியென நகர்ந்திங்கு
நிழலாடிச் சென்றதுவோ

சட்டம் போட்ட கால்களெல்லாம்
கண்டம் விட்டு கண்ணிமைக்கும்
காலமென்றானதுவோ

விட்டு விட்டு சென்றாலும்
விதையொன்று முளையாகி
விடையொன்று தேடாதோ

யாரோ நட்டு வைத்து
விட்டுச் சென்ற செடியொன்று
மொட்டு வைத்து 
முட்டி மோதி 
மலர்ந்திங்கு மணம் வீசாதோ!

- யோகராணி கணேசன்/ நோர்வே

**

உரிமைக்கு வழிகள் இங்கில்லை
உதவிக்கென்றும் எவருமில்லை
சொல்வதற்கொரு வார்த்தை இல்லை
சொல்லும் முறையதும் புரியவில்லை

ஊமை கண்ட கனவைப் போல
உள்ளத்தில் உறைந்து போனது
பேசும் மொழியெது தெரியாது
பேசவும் அனுமதி கிடையாது
 
வெற்றுக் காகிதம் போலவே
வெறுமை என்பதே நிரந்தரமாய்
சமையல்கட்டின் நாற்சுவரும்
சிறைக்கம்பியென சாளரமும்
அதன் வழி தெரியும் வெளியுலகும்

மங்கையவளின் மனதின் வலியை
வார்த்தைகளற்றே கண்கள் பேசும்
மொனச்சிறையில் வாடுகின்றாள்
மலரினும் மெல்லிய மனதுடையாள்!

 - உமா, நோர்வே

**

சதிசெய்து பிறர்தம்மின் செல்வமதைக் கவர்வோன்
        சழக்கனே என்றிட்டு ஊர்தூற்றக் காண்போன்
விதியதனின் பலனென்றே வெம்பிமனம் தளர்வோன்
        விவேகமதைக் கொள்ளாத வீணனென் றாவோன்
துதிபாடி பிழைப்பதைத் தொழிலாகக் கொண்டோன்
          துரோகமதை செய்வதை நெறியாக ஏற்றோன்
மதித்திறன் இன்றியும் மார்தட்டிக் கொள்வோன்
          மாண்பினை.இழந்திட்டு மௌனச்சிறை புகுவான்!

- அழகூர். அருண். ஞானசேகரன்.

**

மௌனச் சிறையில் என்னை வைத்தேன் !
என் எண்ணங்களைக் கட்டி வைத்தேன் !
புன்னகை ஏதும் பூக்கவில்லை !
புதிராய் நானே எனைப் பார்த்தேன் !
வாய்மொழி ஏதும் புரியவில்லை ! 
செயலில் விளக்கம் செதுக்கவில்லை !
பொய் நர்த்தனமாட உண்மையிங்கே நாணிடுதே !  
சங்கது ஊதின் கேட்குமா, 
செவியது செவிடாகி விடில் !
பாதகச் செயலால், வன் சொல்லால் 
தணலானது மனதில் துயரங்கள் !
பூட்டினேன் மௌனச்சிறையில், 
புண்பட்ட மனமே, உன் வேதனைகள் !
உறவுடன் கூடிச்  சிரிப்பினும், 
நம்  வருத்தமும் கோபமும் மௌனச் சிறைதனிலே !
உறவுகள் சில வருந்துதல் போல் நடித்து, 
உளங்களிக்கும் மௌனச் சிறைதனிலே !
புலி பாயுதலும், நாகம் சீண்டுதலும், 
மறைப்பதற்கு இல்லை ஒரு மௌனச்சிறை ! 
நன்றும் தீதும் யாதாகினும், 
நவிலாமல் சிறை வைக்க,
 மானுடர்க்குண்டு ஒரு மௌனச்சிறை! 

- இலக்கிய அறிவுமதி

**

மனிதர்கள் மட்டுமே
நுழைந்து கொள்ளும் சிறை
மௌனச் சிறை!

மௌனச் சிறையில் இருப்பது
உதடுகளுக்குப் பூட்டு போடுவதல்ல
உள்ளத்திற்கு பூட்டு போடுவது!

மௌனச் சிறை கம்பிகளால் ஆனதல்ல
கட்டுப்பாடுகளால் ஆனது!
மௌனச் சிறையில்
நாக்கு நடனமாடுவதில்லை
உள்ளம் ஓய்வெடுத்துக்கொள்வது!

சித்தரும் புத்தரும்
மௌனச் சிறையிலிருந்து வந்தவர்களே!
மனிதர்களே! மனிதர்களே!
ஒவ்வொரு நாளும் சிறிது நேரமேனும்
உங்களை மௌனச் சிறையில் அடைத்துக்கொள்ளுங்கள்
மௌனச் சிறைதான் பெருங்காவியம் படைக்கும்
மகத்தான சிந்தனையின் கருவறை!

மனிதர்களே! கைபேசியை
மௌனச் சிறையில் அடையுங்கள்- அது
மனிதர்களின் சிந்தனைகளை
சிறையிலிருந்து மீட்கட்டும்!

இயற்கையும் இருளைப்போர்த்தி
ஊரையே மௌனச் சிறையில் அடைக்கிறது!
நூலகம் என்னும் மௌனச்சிறையில்

உள்ள புத்தகங்கள் தான்
நம் மனக் காயத்தை போக்கும் மருந்துகள்!

-கு.முருகேசன்

**

கூடுகளைக்கொண்டு வந்து
பறவைகளை உள்ளுக்கு வைத்து
ஒரு சின்ன மரக்குச்சியை வைத்து
சின்ன மரங்களை வைப்பார்கள்
கூவுது கூவுது
அந்த குயில் - அனால்
என்ன சொல்கிறது
என்று அறியமுடியாது
நானும் உங்களைப்போல் பறக்க வேண்டும்
மலைகளைக் கடந்து கடலையும் பார்க்க வேண்டும்
அனால் அது உங்களுக்கு சொல்லமுடியாது
என்று நினத்துக்கொண்டு இருக்குதோ, என்றதை
அறியமுடியாது.
அனால் நீங்கள் அமைதியாய் இருந்து,
ஒழுங்காய் கேட்டால், என்ன சொல்கிறது
என்று கேட்கலாம்
பறவைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது
நீங்கள் பறவைகள் ஒன்றும் சொல்லவில்லை என்று
நினைக்காதீர்கள்
ஏனென்றால் பறவைகள் ஒன்று சொல்லவருகிறது
நீங்கள் அதை கேளுங்கள்! யோசியுங்கள்!
 
-கனிசா கணேசன்

**

மௌன சிறை நம்மை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிடும்
பேசாத வாயெமக்குப் பெருமின்பம் சேர்த்து விடும்
அளவிறந்த ஆற்றலொடும், அளவோடும் பேசுகிற
உளங்கொண்டோர் ஒரு போதும் ஊமையராய் ஆவதில்லை.

பொருளிடங்காலம் பொருத்தமெனில் வாய் திறந்து
நல்ல மனத்தோடு நாவுதிர்க்கும் சொல் வெல்லும்.

குரைக்கும் நாய் வீண்பயத்தில் கொக்கரிக்கும் பெண் கோழி
இரைச்சலிடும் தவளை இவையாற் பலனென்ன?
காலம் வரும் வரைக்கும் காத்திருந்து கூவியிந்த
ஞாலத்துயிலெழுப்பும் நாட்டுப்புறச் சேவல்
செய்யும் கடமைக்குத் தேவையுண்டு எப்போதும்.

காக்கையெழுந்து கரைந்து விடிகாலைத்
தூக்கம் கலைத்துத் துயிலெழுப்பி நற்சேவை
ஆற்றும் கடமைக்கு ஆற்றலுண்டு எப்போதும்.

ஆதலினாலிந்த அகிலத்தீர் வீணான
பேச்சைக் குறைத்துப் பேணிடுக மௌனத்தை.

- சித்தி கருணானந்தராஜா

**

வேப்பங்காயாக பேச்சு மொழி பிடிப்பதில்லை சிலருக்கு
தோப்புக்குள் உலவும் சிறுத்தையாக வாழ்ந்து வருபவரவர்
கோப்புகளுக்குள் வாழும் கோமான்கள் செல்வர்கள் அவர்
மூப்படைந்த அவர்களிடமிருந்து மௌனமே காப்பாற்றும்

வெட்டிப் பேச்சு பேசும் வீணர்களிடம் விலகியிருங்கள்
தட்டிப் பேசும் தடியர்களிடமும் பேச்சுகள் வேண்டாம்
ஒட்டி உறவாடி அடுத்துக் கெடுப்போரையும் தவிருங்கள்
முட்டி மோதாமலிருக்க மௌன மொழியே சாலச் சிறந்தது

பேச்சின்றி செயலிலிறங்கி சேவை புரிவதே சிறப்பன்றோ
பூச்சின்றி புன்னகை முகமே ஓராயிரம் பேச்சு பேசுமே
வீச்சின்றி கழுத்தறுக்கும் பேச்சுகள் தீய கங்குகளன்றோ
மூச்சடக்க வேண்டாம் நாவடக்கி மௌனம் காக்கலாமே

நமக்கு நாமிடும் வேலியான சிறை தானே மௌனம்
துவக்கத்தில் வாய் திறக்காதிருப்பது கொடுமை தான்
விவரங்கள் தராமல் ஊமையாயிருத்திடும் மௌனம்
சுவரில்லா சித்திரமாய் சுணங்கி மௌன சிறையாகுமே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

கொதிக்கின்ற உள்ளங்கள் ஆறாதோ!;
மூடர்களின் முடவாதப் போக்கால்;
கண்களே நீ காணவில்லை;
செவிகளை நீ சாயவில்லை;
முன்னோரின் முழு அறிவும்,
முட்டாளின் பகையானதே!;
தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்ற
மனிதக் கூட்டத்தோடு நானும் அவ்வழியோ! 
புரியாத புலம்பல்கள்,
அறியாத உரிமைகள்,
அகலாத சங்கடங்கள்,
சமுதாய அக்கறை,
கறையாலே கரையானது,
விடியலே! − இங்கு
விடிவது எப்போது
வினாவுக்கு விடையளி,
தொல்லைகள் தொலைந்து
தூரம் போக வழியுண்டோ!
எரிமலைத் தணலாக
கொதிப்பதும் அணையாதோ!;
மனதுள் பூட்டிப் பூட்டி
சுமைப்பது போதுமே!.......

- சுழிகை ப.வீரக்குமார்

**

உள்ளத்தை அறிவாய்  மானிடா; − அதில்
உள்ளதைத் தெரிவாய் மானிடா;
புகுந்த கொடுமைகள்;
புதைந்து புதைந்து கரியாகி;
வைரமாய் மாறுமென நினைப்பதோ;
ஆயிர மாயிர மாண்டுக ளாகும்;
அறியாயோ மனச் சிறையை உடைத்து;
உன் மௌனத்தை விடுத்து
துணிந்து நில்லாயோ;
சமுதாய எதிரிகள், சாதீயப் பேய்கள்;
மதம் பிடித்த மடைப் பன்றிகள்;
இறை யாண்மைத் துறந்தோர்;
தீவிர முகத்தோர், சமூகத்தைக் கெடுப்போர்;
கையூட்டுக் கைதிகள், பஞ்சமா பாதகர்கள்;
எத்தனை கொடுமையை தினந்தினந் தாங்குவது,
கூடுமோ, கூடிக் கூடி வெடித்திடதோ;
புரியாயோ மனமே நீ புலம்பாமல்,
முடிவெடு வெகுவாய், முடியென புறப்படு;
முட்டாள்களின் முரண்பட்ட கருத்தைத் தோலுரிக்க.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

மலர்மவுனம் தனைக்கண்டு மகிழ்வண்டு தேன்குடிக்கும் !
உலர்ந்தமர மவுனமது உயிர்மழையால் தான்துளிர்க்கும் !
சிலந்தியதன் மவுனத்தால் சேர்பூச்சி இரையாகும் !
கலங்காது மவுனத்தால் காண்வெற்றி களிப்பூட்டும் !

கல்'மவுனம் காத்ததனால் காணுமெழில் சிலையாகும் !
சொல்'மவுனம் காப்பதனால் சூழின்னல் தோற்றோடும் !
அல்'மவுனம் காப்பதனால் அழகுநிலா காய்ந்துலவும் !
தொல்'மவுனம் காத்ததனால் துலங்குதின்று 'கீழடி'யாம் !

ஆறு'தனின் மவுனத்தால் அழகாட்சி அழிந்துவிடும் !
சேறுதனின் மவுனத்தால் சிரிக்கும்பூ தாமரையாம் !
கூறுபட்டார் மவுனத்தால் கொண்டதுயர் கொடுமையதாம் !
ஆறுதலாம் மவுனத்தால் ஆவதெலாம் வானுயர்வாம் !

மண்சிறையில் இருக்கின்ற மாண்வித்தே மரமாகும் !
மண்சிறையின் நிலக்கரியே மாண்பார்ந்த நல்வைரம் !
மண்சிறையின் தாதுக்கள் மாநிலத்தார் சொத்தாகும் !
மண்சிறையின் பொன்னதுவே மாநிலத்தார் அணிகலனாம் !

அன்பர்தம் சிறையினிலே அடைபடுதல் அகமகிழ்வாம் !
வன்மர்தம் சிறையினிலே வதைபடுதல் பெருந்துயராம் !
தன்மையர்தம் சிறையதுவும் தனித்தவுயர் மேன்மையதாம் !
கன்னியர்தம் சிறையதுவே காளையரின் வாழ்வினிதாம் !

கல்வியெனும் சிறையதுவே காலத்தின் காப்பாகும் !
கல்வியெனும் சிறையதுவே கவினினிய வாழ்வாக்கும் !
கல்வியெனும் சிறையதுவே காலத்தின் கனியாகும்!
கல்வியெனும் சிறையதுவே கண்காணும் ஒளியாகும் !

மவுனமதே சிறையானால் மறுமலர்ச்சி மண்ணழியும் !
மவுனமதே சிறையானால் மாட்சியெலாம் மாண்டுவிடும் !
மவுனத்தின் சிறையுடைத்தால் மனமெல்லாம் பூமணக்கும் !
மவுனத்தின் சிறையுடைத்தால் மண்ணிலின்பம் சேர்ந்தினிக்கும் !

- படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி, ஆர்க்காடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com