Enable Javscript for better performance
kavithaimani dinamnai poem by readers |அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை - 1- Dinamani

சுடச்சுட

  
  1

  அப்பாவின் நாற்காலி
   
  முதல் நாற்காலி வாங்கியபோது
  அம்மாதான் அதிகம் மகிழ்ந்தாள்
  இரண்டாவது நாற்காலி
  முதல் நாற்காலி மாதிரியே  வந்ததால்
  ஏனோதானோ வரவேற்பளித்தால் அம்மா
  மூன்றாவது நாற்காலிக்கு அதே வரவேற்பளித்தாக
  அம்மாவே பின்னாளில்  சொன்னாள்
  நான்காவது நாற்காலி
  அப்பா நினைத்தமாதிரிய அமைந்ததால்
  அகமகிழ்ந்தால் அம்மா
  அத்துடன் நாற்காலி கனவு முடிவுக்கு வந்தது !
  அப்பாவின் நாற்காலி என்பது நாற்காலியல்ல . . .
  அது நாங்கள்தான் !                                                  

  - ரவி கார்த்திகா

  **

  அப்பாவின் நாற்காலியில் அமர்ந்திடத் துடிப்பார்
      அதற்கான தகுதியெதும் இல்லாதப் போதும்!
  எப்போதும் பதவிக்கு ஏங்கித் தவிப்பார்
      இதற்காக எண்ணற்ற பொய்களையும் சொல்வார்!
  தப்பான வழிமுறையை தனதெனக் கொள்வார்
      தான்தோன்றித் தனமாக முடிவினை எடுப்பார்!
  துப்பில்லாப் போதினிலும் பதவிக்கு ஏங்கித்
      துடித்திட்ட மோடியே இதற்குநற் சான்றாம்!

  அப்பாவின் நாற்காலி அருகினில் இருந்தும்
      அதில்சென்று  அமராமல் அறிஞன்தனை தேர்ந்து
   எப்போதும் பதவியாசை தனக்கில்லை என்று
      இவ்வுலகம் அறிந்திடச் செய்தவன் ராகூல்!
  தப்பான ஆசையுடன் சுப்ரமண்ய சுவாமி
      தன்கட்சி கலைத்திட்டு மோடியுடன் சேர்ந்தான்!
  எப்போது நிதியமைச்சன் நாமாவோம் என்றே
      ஏங்கித் தவிப்பதை யார்தன்வுண ராதார்?

  பதவியாசை இல்லாத ராகூலைக் கண்டு
       பப்புவெனப் பழித்தோர் பாவிகளென் றாவார்!
  இதனைவிடக் கீழ்புத்தி வேறொன்றும் இல்லை
      இதுவரையில் அரசியலில் நாம்கண்ட தில்லை!
  முதிர்ந்ததோர் தலைவனென அத்வானி இருந்தும்
      மூலைதனில் தள்ளிமோடி பதவிக்கு வந்தான்!
  அதர்மமிது என்பதனை ஆர்தான்அறி யாதார்
      அவனாட்சிப் பரிசாக அவலமதைக் கண்டார்!

  - அழகூர். அருண். ஞானசேகரன்

  **

  அப்பாவின் நாற்காலி அதனைக்கண் காண்கையிலே
  அப்பாவே அதிலமர்ந்து அதட்டல்போல் தான்தோன்றும் !
  எப்போதும் என்னுயர்வை எண்ணியவர் இயங்கியதை
  இப்போது நினைத்தாலும் இமயமவர் எனத்தோன்றும் !

  அப்பாவின் நாற்காலி
  அந்நாளை நினைவூட்டும்
  எப்போதும் கண்டிப்பை இயம்புவதாய் அதுதோன்றும் !
  தப்பென்றும் செய்யாமல் தடுத்தென்னை ஆட்கொள்ளும்
  ஒப்பில்லா அரசாட்சி உவந்தென்றும் தான்நடத்தும் !

  இந்நாளில் அவரில்லை என்றாலும் எப்போதும்
  அந்நாளில் அவர்சொன்ன அறிவுரையைத் தானகவும் !
  சிந்தையெலாம் வந்தவர்சொல் தேன்பாய்ச்சும் திசைகாட்டும் !
  எந்தையரின் நாற்காலி ஏற்றத்தில் ஏற்றுவிக்கும் !

  இயங்குகின்ற கதிரவனாய் இருள்விலக்கும் வெண்ணிலவாய்
  உயர்மழையின் பெருங்கொடையாய் ஒப்பில்லா அணிமணியாய்
  வயல்விளையும் செந்நெல்லாய் வாழ்வளிக்கும் தண்ணீராய்
  உயர்தந்தை நாற்காலி உரைப்பதுபோல் அமர்ந்திருக்கும் !

  நீதிக்கு தலைவணங்கும் நேர்மைக்கே வழியாகும்
  ஆதிமொழி தமிழ்நூல்கள் ஆழ்ந்தறிய வழிகோலும்
  ஓதியுணர் குறள்நெறியே உயிராகும் உடலாகும்
  ஆதியந்தம் எந்தையவர் அடிகாட்டும் மறுவுருவாய்.

  உயிரில்லாப் பொருளெனினும் உயிர்த்தெந்தை உள்ளதுபோல்
  ஒயிலாக நாற்காலி உணர்வூட்டும் இல்லத்தில் !
  வெயிலென்றால் நிழலாக வீழ்மழைக்குக் குடையாக
  உயிர்த்தெந்தை உணர்வெல்லாம் உருவாக இல்லத்தே !

  -சோழமாமல்லன் , இராணிப்பேட்டை மாவட்டம்

  **
  இருட்டறையில் இருமி இருமிச்
  செத்த அந்த வயோதிகக் குரல்
  ஒருகாலத்தில் ஹிட்லருடையதாக இருந்தது
  நெப்போலியனின் குதிரைபோல்
  திசையெங்கும் பயணித்தது
  அச்சத்தையும் வெறுப்பையும்
  அள்ளித் தெளித்தது
  தெருமுனையில் செருப்புச் சத்தம்
  கேட்டால் அப்பா வந்திட்டார்
  போய் படிங்கடா என்று அலாரமணி
  எழுப்புவாள் அம்மா
  அதுவரை சத்தக்காடாய் இருந்த வீடு
  அப்பா உள்நுழைந்து நாற்காலியில் அமர
  அம்மா அமைதியாகக் காஃபி தர
  போதிமரமாய் மாறிவிடும்
  இருட்டியதும் நாற்காலி வராண்டாவுக்கு
  இடம்பெயரும்; இரவு நெருங்கியதும்
  வாசல் வேப்பமரத்தடிக்குப் போய்விடும்
  அப்பாவின் அசைவும் நாற்காலியின் அசைவும்

  ஒரு சங்கீதம் போல் இரவைத் தாலாட்டும்
  அக்காவின் திருமணம்; அண்ணனின் மேல்படிப்பு
  பாட்டியின் இதயநோய்; அடகில் கிடந்த அம்மாவின்
  நகைகள் என்று எல்லா ஸ்வரங்களும்
  அந்தச் சங்கீதத்தில் இருந்தன
  அப்போது எங்களுக்குக் கேட்கவில்லை
  இன்று என் பையனின் அலைபேசியில்
  வீடியோவாக ஆடிக்கொண்டே
  எல்லா ஸ்வரங்களையும்
  சொல்லிக் கொண்டிருக்கிறது
  அப்பாவின் நாற்காலி
  காலதேவனின் கனவுபோல

  - கவிஞர் மஹாரதி

  **
  அள்ள அள்ள குறையாத
  அட்சய பாத்திரம் போலவே
  அப்பாவின் நாற்காலியும்
  ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்!

  இன்பம் துன்பம் கோபம் கவலை என
  அத்தனை உணர்வுகளையும்
  அப்பாவிடமிருந்து தன்னுள் வாங்கி
  அப்பாவிற்கு ஆறுதல் கொடுத்த
  அனுபவ நாற்காலி அது!

  தும்பைப்பூவாய் வெளுத்த
  வேட்டியுடன் சட்டையும் கூடவே 
  கண்ணாடியுமென கம்பீரமாய் வந்து
  அவர் சாய்ந்தமர்கையில் - ராஜாவாய்
  உயர்த்திக் காட்டும் சிம்மாசனம் அது!!

  அப்பா காலடி அருகமர்ந்து கேட்க
  தலைவருடி அவர் கூறும்
  அனுபவக்கதைகள் ஒவ்வொன்றும்
  நம் எதிர்காலத்துக்கான அறிவுரைதான் 
   மனம் உணராமலே உள்வாங்கும்சக்தி கொடுத்த
  ஆசானின் நாற்காலி அது!!

  இன்றோ அப்பாவிற்கு அப்புறமாய்
  அவரின் நாற்காலியும் கைத்தடியும்
  அத்தனை ஏக்கங்கள் சுமந்து மௌனமாய் 
  அவர் வாசத்துடன் வெறுமையாய்!!

  - உமா 

  **

  அப்பாவின் நாற்காலியில்
  அவரின் எல்லா யோசனைகளும்
  புதைந்து இருக்கும்
  அதில் இருக்கும்போது எல்லா
  யோசனைகளும் வரும்
  எல்லா விதமான யோசனைகளும்
  ஒரு குவியலாய் இருக்கும்
  ஆனால் அப்பா அதில் இருக்கும்போது
  எல்லாம் ஒழுங்குபடுத்தப்படும்.
  அதில் போய் இருந்தால்
  எந்த நேரமும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டி வரும்.
  ஆனால் ஓய்வுக்கும் இடம் கொடுங்கள் அப்பா!
   
  - கனிசா கணேசன்

  **

  அப்பாவின் நாற்காலி பார்க்கப் பார்க்க
     அப்பாவே இருப்பதுபோல் நித்தம் தோன்றும் !
  ஒப்பில்லா அப்பாவின் ஆற்றல் எல்லாம்
     உள்ளத்தில் உயிர்ப்போடு நிழலாய் நீளும் !
  எப்போதும் அப்பாவின் செயலெல் லாமும்
     எழுகதிரைப் போலென்றும் எழுச்சி யூட்டும் !
  சிப்பிக்குள் முத்தேபோல் அவருக் குள்ளே
     சிறப்பான நல்லன்பே சீராய் ஆளும் !

  நம்நாட்டின் படைத்துறையில் பணியில் இன்றும்
     நாட்டெல்லை காவலிலே அவரெந் நாளும் !
  வெம்பனியின் குளிரதுவே வாட்டி னாலும்
     வெய்யிலதே எரித்தாலும் வாடி டாமல் ;
  அம்மம்மா ! கடுமழையே அடித்த போதும்
     அவர்பணியில் துவளாமல் விரைப்பாய் என்றும் !
  நம்நாடே தம்வீடாய் எண்ணி வாழும்
     நனிஅப்பா அவர்க்கிணையாய் அவரே ஆவார் !

  உடலுறுதி ஓம்பிடுவார் ஓம்பச் சொல்வார்
     உயர்கல்வி செல்வமென உணர்ந்து ரைப்பார் !
  கடமையேதம் கண்ணாகக் காண்பார் ; என்றும்
     கடமையுடன் வாழ்த்திடவே கனிந்து ரைப்பார் !
  மடமையெலாம் மனத்திருந்தே மாய்க்க வைப்பார்
     மாண்பார்ந்த செயல்செய்தே மலர வைப்பார் !
  திடமான எண்ணத்தில் திளைக்க வைப்பார்
     தீயெண்ணம் தீய்த்தெரித்தே சிறக்க வைப்பார் !

  அப்பாவின் நாற்காலி அவருக் காக
     அப்படியே அழகாக ; அவராய்த் தோன்றும் !
  எப்போதும் எங்களையே விழிப்பாய்த் தூண்டும் !
     ஏற்றத்தை எண்ணத்தில் விதையாய் ஊன்றும் !
  அப்பாவின் நாற்காலி அன்றும் இன்றும்
     ஆற்றலினை அளித்தல்போல் பார்க்கத் தோன்றும் !
  அப்பாவின் விடுமுறைக்காய்க் காத்தி ருக்கும்
     அப்பாவின் நாற்காலி எங்கள் போன்றே !

  - படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி,ஆர்க்காடு

  **

  ஒரு நீண்ட கனவைப் போல் இருக்கும் 
  இறந்த காலம்,
  எல்லா முன் இருத்தல்களையும் 
  கலங்கலாகவும்
  மங்கலாகவும் நினைவூட்டுவதற்கு தவறுவதில்லை.
  அப்பாவின் அப்பா அவ ரப்பா புகைப்படங்கள்
  வெள்ளையடிக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த சுவர்கள்,
  அவர்கள் இல்லாதிருத்தலை நினைவூட்ட,
  ஐந்து மணிக்கு கிளம்ப
  மூன்று மணிக்கே எழுப்பி விடும்
  அவரது காலந் தவறாமையை
  எப்போதும் நினைவூட்டுகிறது
  அப்பாவின் ஆடாத நாற்காலி .
  ஆனால் யார் அதைப் பொருட்படுத்துகிறார்கள்
   என்று ஸ்டேட்டஸ் போடும் அடுத்த தலைமுறை  
  வாட்ஸாப் காலம் தயாராகத்தான் செய்கிறது
  உறவுகளற்று இருக்க.. 

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்

  **

  அப்பாவின் நாற்காலி என்றால் அது மெத்துன்னு இருக்கும்
  சுகமாக இருக்கும் சூச்சுமாக இருக்கும் அனைவரும் அறிவர் 
  எப்பவோ அப்பா மும்பை போனபோது வாங்கி வந்தார்
  சிறப்பாக யாராவது வந்தால் வரவேற்று அமரச்செய்வார்
  இப்ப அப்பாவுக்கு இது ராசியாக அமைந்துலள்ளது சிம்மாசனம்
  விருந்தினர் அறையில் இந்த நாற்காலி அலங்கரிக்கிறது
  அப்பாவின் நாற்காலி என்றால் எங்களுக்கு பிடிக்கும்
  அப்பா இல்லாத போது எங்களுக்குள் போட்டி அதில் அமர
  அம்மா சொல்லுவாள்  அப்பாவின் நாற்காலி அதிஷ்டமானது
  அதில் வேறு யாரும் உட்காரக்கூடாது அம்மாவின் ஆணை
  பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவின் நண்பர் சொல்வார்
  “அது விக்கிரமாதித்தன் சிம்மாசனம் பொன்றது”
  அதில் உட்கார்ந்து பலசிக்கல்களை தீர்த்து வைத்துல்ளார்
  அனுதினமும் அவரை  பார்க்க வருபவர்கள் திருப்தி படுவார்
  எங்களின் நம்பிக்கை உட்கார்ந்து படித்தால் மதிப்பெண் கூடும்
  அதனால் எங்களுக்குள் போட்டி யார் அமர்ந்து படிப்பதென்று
  இப்படிபுகழ்பெற்றஅப்பாவின் நாற்காலியை தொலைக்காட்சியில்
  ஒளிபரப்பிலும் கண்டு நாங்கள் களித்திருக்கிறோம்
  அப்பாவின்நாற்காலிக்கு ரசிகர்கள்கூடிக்கொண்டே இருந்தார்கள்
  தீர்க்க முடியாத பிரச்சனைக்கு அப்பா நாற்காலி தீர்வுகாணும்

  - கவிஞர் சூடாமணி.ஜி, இராஜபாளையம் 

  **

  காலைமுதல் உழைத்த அப்பாவின்
  ....கால்களுக்கு ஓய்வளித்தது நாற்காலி
  மாலையில் மகிழ்வித்து அப்பாவின்
  ....மனதிற்கு மருந்திட்டது நாற்காலி
  அப்பாவின் வலிகளைப் புரிந்து
  ....ஆறுதல் நாளும்தந்தது நாற்காலி
  அப்பாவின் அனுபவத்தை எனக்கு
  ....அழகாய்ச் சொல்லியது நாற்காலி
  காலங்கள் மாறினாலும் அப்பாவின்
  ....கனவுகளைச் சுமந்தது நாற்காலி
  நிலவுசுமந்த வானமாய் அப்பாவின்
  ....நினைவுகளைச் சுமந்தது நாற்காலி
  அப்பாவின் நாற்காலியாய் இங்கு
  ....அப்பாவை தினம் தாங்குவேன்
  அப்பாவின் ஆசையைச் சுமந்து
  ....அவருக்காக தினம் உழைப்பேன்

  - கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்.

  **
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai