கடந்த வாரத் தலைப்பு தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

கரைகின்ற கடிகை; கரையாத காதல் உறைகின்ற வெண்பனி; உரைக்காமல் நம்மிதழ்
கடந்த வாரத் தலைப்பு தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

தேநீர் பொழுதுகள்

கரைகின்ற கடிகை; கரையாத காதல்
உறைகின்ற வெண்பனி; உரைக்காமல் நம்மிதழ் 
இறைதந்த மாலை; இரவாகும் வேளை
இளகாமல் நீ; விலகாமல் நான்!

மேகத் திரைகடல்; மேவிடும் வெண்ணிலா
வேரல் குழலிசை, வேய்ந்திடும் விண்ணகர்
நிரல்நின்று யாவும், நிகழந்திடும் நேரம்
இளகாமல் நீ; விலகாமல் நான்!

இழந்திடும் நிறங்களில் நிறைகின்ற கோப்பையாய்
இசைவாய் என்றேனும் எனுமோர் ஆசையோடு
இத்தீராத் தருணங்கள், என் தேனீர்ப்பொழுதுகள்
இளகாமல் நீ; விலகாமல் நான்!

- கிருஷ்ணபிரசாத், பேராசிரியர், பெங்களூர்

**

பரிதி மயங்கிடும் பொழுதினில்
தேநீர் கடை வாசலில்
ஆலமர விழுதுகளின்
நட்பினில் கீச் கீச் பறவைகளின்
இன்னிசை ஒலியில்
கண்மூடிய பாவனையில்
படுத்திருந்த நான்கு காலினத்தை
நினைத்தே நானும் 
ஊற்றிய ஆண்டு கணக்கில்
சிரட்டை தேநீர் நட்புக்காக 
உடுக்களின் வெளிச்சத்தில் 
என்னுடன் பயணித்த நன்றியினம்
இன்று ஏனோ எனை
மறந்து விண்ணுலகம் சென்றதுவே!
ஊற்றி வைத்த தேநீர் 
ஆறிய நீராகி 
தேநீர் பொழுதுகளை
சுமையாக்கி சென்றதுவே!-

- சீனி

**

தோழர்கள் அண்மையில் இனிமையாய் இருக்கும்..
தனிமையின் வெறுமையில் துணையாய் இருக்கும்..
விருந்தினர் வருகையில் வீட்டில் மணக்கும்..
வறுமையின் கொடுமையில் தேனாய் இனிக்கும்..!!

அலுவல் நேரத்தில் ஆனந்தம் கொடுக்கும்..
அந்தி சாய்கையில் அருமையாய் சுவைக்கும்..
மழையின் தூரலில் மகிழ்வைக் கொடுக்கும்..
மனதின் தேடலில் ஒளிர்வைக் கொடுக்கும்..!!

கடின வேலையை விறுவிறுப் பாக்கிடும்..
காலை நேரத்தை சுறுசுறுப் பாக்கிடும்..
உறையும் குளிரில் கதகதப் பாக்கிடும்..
உள்ளத்தை என்றும் துறுதுறுப் பாக்கிடும்..!!

உடல்நலக் குறைவில் புத்துணர் வூட்டிடும்..
உழைப்பின் நிறைவில் இன்னுணர் வூட்டிடும்..
அமைதியின் இழப்பில் ஆறுதல் அளிக்கும்..
அனைத்து நிகழ்விலும் முதன்மையாய் இனிக்கும்..!!

- ஆ. செந்தில் குமார்.

**

அந்தி சாயும் சந்தி  வேளை - வியர்வை 
சிந்தி வேலை விட்டு திரும்பும் 
வேளை 
முந்தி வந்து தேநீர் தரும் 
சந்திர முகத்தாள் சாந்தமெனும் 
அகத்தால் 
வந்து நின்று நான் சொல்லும் 
இந்திரலோகத்துக்  கதைகளை
இருந்து கேட்கும் 
மந்திரி எனலாம் மங்கைநல்லாள் 
மகிழ்ந்திருக்கும் வேளை 
கவிதையாக்கம் 

- எஸ் வி ஆர் மூர்த்தி.பெங்களூர் 

**

காலைப் பனிப் பொழுதின் உற்சாகமாய்,
கடும் பயணத்தின் களைப்பு நீக்கியாய்,
உற்ற நட்புதனை வளர்க்கும் உண்ணதமாய்,
அரசியல் களம் பேசும் அரங்கமாய்,
குவலயத்தின் சேதியெல்லாம் குழைகின்ற கோப்பையாய்,
உரையாடல்களுக்கு உயிரளிக்கும் உணர்ச்சிப் பிழம்பாய்,
இளம் காதல் வளர்க்கும் சிநேகமாய்,
சிநேகத்தில் சில்லிடும் சிரிப்புத் தூரலாய்,
அன்பு மழையில் நனைத்திடும் அருவியாய்,
முதுமையின் இதழ்களில் இனிக்கின்ற புன்னகையாய்,
வசந்தகாலத்தின் அந்தி மாலைப் பொழுதாய்,
இனிக்கின்ற இனியபொழுதாம் தேநீர்ப் பொழுதுகள்.
ஆக்கம்

- கவிஞர். ராம் விஜய், குடியாத்தம்.

**

தெருவோரத் தேநீர்க்கடைகளில்  
காலையில் கலகலக்கும் 
மாலையில் சலசலக்கும்
அரசியல் அலசப்படும்
அரசமைப்பு பேசப்படும்
கட்சி விதிகள் மாற்றப்படும்
கட்சி தலைவிதி மாறும்
தோழர்கள் கூடுவர், 
தோழமை வளரும்
மனம்விட்டுப் பேசுவர்
மானிட நட்பு தோன்றும்
அலுவலக தேநீர் நேரங்களில்
இல்லக விவரங்கள் பேசப்படும்
இல்லல்கள் ஒழிய வழி பிறக்கும்
தெரியாதவை தெளிவுபடும்
தெரிந்தவை தெரிவிக்கப்படும்
மாலை காக்கைப் பள்ளி நடைபெறும்
மாலையில் வீட்டில் தேநீர் நேரங்களில்
குடும்ப உறுப்பினர் கூடுவர்
குடும்பச் சிக்கல்கள்  பிரிபடும்
மனைவி கணவன் மனம் கலப்பர்
மனம்விட்டுச் செய்தி கலக்கப்படும்
மனம் மகிழ்வு ஏற்படும்
இல்லறம் நல்லறமாகும்

- மீனாள் தேவராஜன்

**

உன்னையும் என்னையும்
நம்மையும் நம் மெள‌னத்தையும் 
கரைத்து நிரம்பிய‌ தேநீர்ப் பொழுதுகள்.
கனவுகள் பேசினோம்
கதைகளும் பேசினோம்.
உணர்வுகளை வழித்து
உள்ளங்கள் வழிந்த சொற்கள்.
காத்திருந்த தேநீர்ப்பொழுதுகளில்
உணர்வுகளும் சொற்களும்
கண்ணீரும் சிரிப்பும்
அவ்வளவும் கொட்டியும் தீர்த்தும்
பின்வந்த‌ தேநீர்ப்பொழுதுகளில்
தேடியதாய் வற்றியதாய் 
என்றும் நினைவில்லை.
சுமைகள் மறந்த நிமிடங்கள்.

இன்றும் பனிக்காலம்.
என் தேநீர்க் கோப்பையோடு
மெல்லப் பேசுகிறேன்.
நீயும் பேசிப்பார்த்தால்
மெளனங்கள் விலகும் உணர்வுகள்
உன்னிடமும் மெல்லச் சொல்லும்
திரைகள் இல்லா உள்ளங்கள்
வழிந்துவழியும் சொற்கள் உணர்வுகள்
அவ்வளவு இனிப்பு..
சுமைகள் மறக்கும் நிமிடங்கள்...

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்


தென்றல் தவழும் மாலையில் - நம்மை
தீண்டும் இன்பமான வேளையில்..
தேனுறங்கும் பூக்களும் பூத்தது - நம்
தேநீர்ப்பொழுதுகள் நெஞ்சினில் இனித்தது..
காலாற கால்களும் நடந்தது -  நம்மை
காற்றும் பின்னால் தொடர்ந்தது..
காலம்தரும் கவலைகளும் மறந்தது - நமது
கனவுகளுக்கு ஊக்கமும் தந்தது..
ஒருகோப்பை தேநீரின் புத்துணர்ச்சி - அதில்
ஒளிந்து கொண்டது மகிழ்ச்சி..
இருவர் உள்ளத்திலும் புதுவெழுச்சி - அது
இன்பப் பொழுதுகளின் நெகிழ்ச்சி..
பொழுதுகள் யாவும் புதுமையானது - நம்
பொன்னான நிமிடங்களும் அழகானது..
மொழிகளும் இனித்திடும் பேச்சானது - அது
மென்மை பேசிடும் மலரானது..

- கவிஞர் நா. நடராசு

**

உழைத்து உழைத்து 
களைத்து  வரும் பொழுது  
உற்சாகம்  தரும்  
ஊக்கம் போல
தேநீரை  பருகுவோம்  
அந்த. தேனீர்  பொழுதினில்  
சிலவற்றை  அதிலும் 
பலவற்றை   பேசாமல்  
சுருக்கமாக  
பேசுவோம்
சுகமான பொழுதென  
தேநீர் பொழுதுகளை  மாற்றுவோம்  
ஒன்றாக நன்றாக  
பணிகள் ஆற்ற  
புறப்படுவோம்  
மனத்திற்கும்  
ஒரு தேநீர் பொழுது 
வேண்டும்
அதுதான்
உற்சாகம் தரும் 
உறவுகளை  பலப்படுத்தும்  நல்
ஒழுக்கம்  என்ற 
தேநீர்.
மனம் சரியானபொழுதுகளே  
உண்மையான தேநீர் 
பொழுதுகள்

- களக்காடு.வ.மாரிசுப்பிரமணியன்

**

நாழும் பொழுதுமாய்
நகருகின்ற வாழ்க்கையிலே
புலா்ந்து செல்லும் பொழுதுகளில்
அடுப்பங்கரையினிலே
அழுக்கு உடையினிலே

அழகாய் தொியும் என் அம்மாவின்
கரங்களிலே  தேநீர் குவளையுடன்
வரும் பொழுதிற்காய் காத்திருந்த 
பொழுதுகளில் இன்றும் என் மனதில்
பசுமரத்தாாணியாய் இருக்கிறது
நினைவுகளை தந்தபடி
தேநீர்ப் பொொழுதுகள்.

- ஈழநங்கை

**

ஒரு வேளை தேநீர்ப் பொழுது 
ஏழைக்கு உணவு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
செல்வந்தருக்கு பார்மாலிட்டி உணவு

ஒரு வேளை தேநீர்ப் பொழுது
எழுத்தாளருக்கு ஊக்கம் தரும்
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
மாணவர்களுக்கு விழிப்பு தரும்

ஒரு வேளை தேநீர்ப் பொழுது
தேநீர் கடைக்காரருக்கு வயிற்று பிழைப்பு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது 
அஜீரனக்காரருக்கு மருந்து

ஒரு வேளை தேநீர்ப் பொழுது
கிடைக்காதவர்களும் உண்டு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
கிடைத்தும் வீணாக்கியவர்களும் உண்டு

ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேலை கிடைத்தால் தான் 
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேலை கிடைக்காவிட்டாலும் தான்
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேளை கிடைக்காவிட்டால்

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**

உழுதுபயிர் செய்வோர்கள் களைத்த பின்னே
……….உழைப்பிற்குத் தேநீரும் தருமுற் சாகம்..!
எழுதுபவர்க் கிடையிடையே வேண்டும் தேநீர்
……….எழுச்சிமிகு சிந்தனையும் வருவ தற்கே..!
குழுவாகச் சேர்ந்துழைக்கும் கூட்டத் தார்க்கு
……….குடிக்குமந்தத் தேநீரால் விலகும் சோம்பல்..!
தொழுதுன்னை வரவேற்போம் ஆவல் கொண்டு
……….தேநீர்ப்பொ ழுதுகளாகத் தினமும் வாங்க..!
கேப்பைக்கூழ் கம்புக்கூழ் குடிப்ப தாலே

……….கட்டான உடலமைய வழிவ குக்கும்..!
ஆப்பையிலே அளந்துதரும் காளான் சூப்பில்
……….அளவற்ற சத்துக்கள் நிறைந்தி ருக்கும்..!
கோப்பையிலே அருந்துகின்ற குளிரும் பானம்
……….குடித்தாலே ஒருவிதத்தில் சுகம்கெ டுக்கும்..!
காப்பியோடு தேநீரும் நமக்கு என்றும்
……….காலையிலே அருந்துதற்கு உகந்த பானம்..!
பொழுதெல்லாம் ஊர்சுற்றிப் போன காலம்

……….பகலிரவு கழிந்ததெலாம் திரும்ப வாரா..!
அழுதாலும் புரண்டாலும் கடந்து போன
……….அருமையான நேரங்கள் மீண்டும் மீளா..!
ஒழுங்காக நேரத்தைத் திட்ட மிட்டு
……….உபயோக மாய்ச்செய்ய வழிகள் செய்வீர் ..!
பொழுதுகளைக் கழிக்கத்தான் வழிகள் இன்றி
……….பொன்னான நேரத்தை வீணாக் காதீர்..!
 
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
 
கீரியும் பாம்புமாய்-மனிதன்
வேலையோடு போராடும் 
பொழுதிற்கு நடுவே 
புல்வெளியில் புரண்டு 
புத்தாக்கம் செய்யவரும்  
தேநீர்ப் பொழுதுகள்!

காரிருள் அடைமழைக்கு இடையே
ஒளியூட்டும் மின்னல் போல 
தொடர்ப்பணிக்கு இடையே
தெம்பூட்டும் 
தேநீர்ப் பொழுதுகள்!

பணியில் மூழ்கி 
முத்தெடுத்தெடுப்பவர்களை
களைப்பிலிருந்து மீட்டெடுக்கும்
தேநீர்ப் பொழுதுகள்!

உழைத்தே ஓடாய் போனவர்களின் 
சோர்வை நீக்கி 
தேனீயாய் சுறுசுறுப்பூட்டும்
தேநீர்ப் பொழுதுகள்!

உழைத்து களைத்த 
களைப்புகளை
கலைத்து விரட்டும்
தேநீர்ப் பொழுதுகள்!

தேநீர்
உடலை பழுதாக்கலாம்! 
தேநீர்ப் பொழுதுகள்
உள்ளத்தை பழுதுபார்க்கும்!

தேநீர்ப் பொழுதுகளில் 
நட்புகள் கைகுலுக்கும்!
நகைச்சுவை தேன் தெளிக்கும்!
உற்சாகம் ஊற்றெடுக்கும்!

தேநீர்ப்பொழுதுகள்
சோகத்தை சுளுக்கெடுக்கும்!
மன காயத்திற்கு
மயிலிறகில் மருந்து போடும்!

தேநீர்ப் பொழுதுகள் 
களைப்பை களையெடுக்கும்
உழைப்பை விளைவிக்கும்!

தேநீர்ப் பொழுதுகள்
நொறுக்குத்தீனியை வாயில் போடும்!
நாட்டு நடப்பை காதில் போடும்!
மனக்கவலையை வெளியில் போடும்!

தேநீர்ப் பொழுதுகள் 
தேனான பொழுதுகள்!
என்ன விலை கொடுத்தாலும் 
வாங்க முடியாதவை!

-கு.முருகேசன்

**

தேனீர்ப் பொழுதுகள்
விழி திறக்க வந்து நிற்கும்
படுக்கை அறையிலேயே...

விடியலை விழிக்க வைத்து
நீர் வளாவி
சிற்றுண்டித் தயாரிப்பில்
நேரம் கருதி
அவசர அன்னோன்யத்தில்
ஊட்டி விட்டு
மதியத்திற்கும்
கூட வரும் அடுக்கு உணவு பாக்சும்,
தேனீர் சுமக்கும் பிளாக்சும்,
வாசலில்
பறக்கும் முத்தங்களோடு...

மாலையில்
வெறுங்கையோடு திரும்பினாலும்
எதிர் நோக்க 
பார்வையில் விரிந்திருக்கும்
சிற்றுண்டியும் நொறுக்குத் தீனியும்
மேசை மீது தேனீரோடு...

பிள்ளைகளுடன் கொஞ்சிவிட்டு
படுக்கப் போகும் முன்னான சமிக்ஞைக்குப் 
புரண்டுப் படுக்க
பெருமிதங்கள் வெளிச்சம் பெறும்
இரவு...

எனத்
தொடரும் எதுவும்
வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்
பரிமாற்றம் நிகழாமல்
அரவமற்றப் பொழுதுகளில்
சிணுங்குகளில் சிலிர்க்கும்
மனது
வேண்டா வெறுப்பாக...

இடைவெளியானதில்
பராமரிப்பெல்லாம்
பிள்ளைகள் வசமானதில்
தனியனாகிவிட்ட நினைப்பற்ற
பொழுதில்
பணி நிறைவுப் பெற்றாகி விட்டதில்

இப்போதெல்லாம்
தேனீர்ப் பொழுதுகள் தேய்ந்து விட்டதில்
வலிந்து கேட்க வேண்டியிருக்கிறது
ஆவியற்ற தேனீராவது...

- அமிர்தம் நிலா, திருநின்றவூர்

**

செய்திதாள்களை வாங்கமுடியாத சூழலில் 
தேநீர்க் கடைக்குச் சென்று
தேநீர் அருந்தியப் பொழுதுகளில்
செய்திகளைப் படித்ததைவிட
வறுமையை படித்தது அதிகம்...

அடுக்கடுக்காய் கவலைகள் இருப்பினும்
ஆருயிர் நண்பர்களோடு பேசியவண்ணமாய்
தேநீர்க் கடையில் தேநீர் அருந்தும்பொழுதினில்
மனச்சுமைகள் யாவும் காற்றில் கரைந்தோடும்...

தன்குடும்பம் - உணவினை உண்பதற்காக
தேநீரையே மட்டுமே - தனது
உணவாக்கி உழைக்கும் உத்தமர்களின்
தேநீர்ப்பொழுதுகள் - என்றும்
வணங்குதற்குரிய தேநீர்ப்பொழுதுகளாகும்...

தொடர்வண்டியிலே - பயணிகளுக்குதான்
தேநீர்ப்பொழுது - ஆனால்
அதனை விற்பவனுக்கோ - அந்த
விற்பனையைப் பொறுத்தே
வாழ்க்கைப் பொழுது...

கடவுளுக்கு உண்ணாவிரதம் என்றுக்கூறிவிட்டு
நாள்முழுக்க தேநீரோடு திண்பண்டங்களையும்
அளவுக்கு அதிகமாக உண்டதை
நினைக்கையில் - அறியாமையும்
நகைப்புமே இன்றும் வெளிப்படுகிறது ..

வரன் பாா்க்கும் தருணத்திலும் -
வரன்கிடைத்த பின்னர் - திருமண
அழைப்பிதழ் கொடுக்கும் தருணத்திலும் - 
அன்பின்பிடியால் - தேநீரை ஓரில்லம்
தவறாது அருந்திய - விருந்தோம்பல்
தேநீர்ப்பொழுதுகள் என்றுமே மறவாது...

அலுவலகத்தில் தேநீர் இடைவெளியில்
வேலையோடு மன அழுத்தங்களையும்
இறக்கிவைத்த தேநீர்ப்பொழுதுகள்
தேநீரைவிட சுவையானவை...

இதயம்வருடும்
மழைக்காலப்பொழுதுகளில் மட்டுமல்ல -
இரத்தம் சூடேறும்
கோடைக்காலப் பொழுதுகளிலும்
பித்துபிடித்த மனம்  - தேநீர்ப்
பொழுதுகளையே விரும்பி அருந்துகிறது....

ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில்
போராடியவர்களுக்கு உணர்வோடு - தேநீரைக்
கொடுத்து உதவிய நல்லோா்களின்
உணர்வுமிக்க அப்பொழுதுகள் - என்றென்றும்
வரலாற்று சிறப்புமிக்க தேநீர்ப்பொழுதுகளாகும்...

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

**
சோம்பிய  உடலில் 
உற்சாகம்  கொடுக்கும் 
அற்புத பானம்  "தேநீர்"
நண்பர்களுடன் அமர்ந்து 
உல்லாசமான  தலைப்புகளில் 
அலசி  ஆராயும்  நேரம் 
கையில் "தேநீர்  கோப்பையுடன்"
இருந்தால்  நல்லப்பொழுதாய் 
சுறுசுறுப்பை  கொடுக்குமே!
தேநீர்  கடைகளில் 
சிநேகிதர்களின்  பாசமும்,
நேசமும்  ஒருசேர 
உரையாடலைத்  தொடங்கி 
"தேநீர்" அருந்தும் அற்புதபொழுதில் 
உலகமே  மறக்குமே!
துள்ளித் துள்ளி   எழும் அலைபோல 
கிள்ளிக்  கிள்ளிய  பிஸ்கட்டுடன் 
மெல்லிய  "தேநீர்"  பானமும் 
பொழுதுகளை  இனிமையாக்குமே!   

- உஷா முத்துராமன், மதுரை

**

மனசெங்கும் இடிச்சத்தம் 
அவன் காதுகளை மூடிக்கொண்டான்

வெளியில் ஓடினான்
கருமேகங்கள் அவனை சூழ்ந்துக்கொண்டது

சில்லென வீசிய காற்றும் மழையின் சாரலும்
அவனை அமைதிப்படுத்தியது

மீதம் உள்ள குழப்பங்களை அமைதிப்படுத்த
பயண உலகம் ஆட்கொண்டது

எல்லையற்ற ஆனந்தத்தில் பயணித்துக்கொண்டே இருந்தான் 
மாலைபொழுதின் மயக்கம் அவனது தனிமையை உணர்த்தியது

இறுதியாக தேனீர் குடித்தான் - முடிந்ததென்று நினைத்த பயணம்
தொடர்ந்தது தேனீர்ப் பொழுதாக தனிமையை தகர்த்து….

- கலைபரமேஷ்.ம 

**

தேநீர் குவளைகளின் உயர வேறுபாட்டில் 
ஆரம்பிக்கும் சொற்போர் 
எங்களிருவரின் உயர வேறுபாட்டிற்கு 
திசை மாறி மற்போராகியிருக்கும்/
சரிசமனாய் குவளைகள் வந்த நாளில்
தேநீர் அளவீட்டில்  குறை பாடிருப்பதாக 
மீண்டுமொரு சொற்போரை அக்கா ஆரம்பித்திருந்தாள் 
ஆதவனோடு போட்டியிட்டு நித்தமும் கொல்லைப்புறத்தில் 
அரங்கேறும் போர்கள் ஒரு தேநீர் பொழுதில் நிறுத்தம் பெற்றன/
கொல்லைப்புறத்தில் உலவிய இடுகாட்டு அமைதியை 
எவரும் குலைக்காமலே பொழுதுகள் வருடங்களாகி கழிந்தன/
ஓர் தேநீர் வேளையில் நிரந்தரமாக  
என் தமக்கை பிரிந்த செய்தி வந்தது/
எங்கள் வீட்டு கொல்லைப்புறம் 
அமைதியை கலைத்து கதறி அழுதது.
 
- தேவி பிரபா

**

உலவி வரும் உயிரினங்களிடத்தில் 
உயிரைக் கைகளில் கொண்டு 
நிலவி வரும் பருவநிலை மாற்றத்திலும் 
நற்சுவை நல்கி நறுமணம் கொண்டு 
நின்றாடும் நந்தவனம் தான் 
பல நூறு பச்சை புன்சிரிப்புகள் கொண்ட 
பசுந்தேயிலைத் தோட்டங்கள் 
உற்பத்தி உயர்ந்தாலும்
அங்கே உழைப்பவனின் ஊதியம் 
வாமனனின் உயரம் தான் ! 
தேயிலையின்த் தன்மைகளோ சில வேறு 
தேநீரின் சுவைகளோ பல வேறு 
தேயிலைத் தொழிலாளியின் துயரோ ஒரு நூறு ! 
உழைப்பவருக்கு ஓர் ஊக்க மருந்து
உறங்கி எழுபவருக்கு ஓர் உற்சாக மருந்து 
பாலைவனத்தில் அரிதாய் பிறக்கும் 
மழையைப் போல், பயணப் பாதைகளில் 
பிறக்கும் புத்துணர்வு மருந்து 
கண்ணீரின் பொழுதுகள் பலவற்றை புறந்தள்ளி என்றுமே 
தெவிட்டாதத் தென்றலைப் போன்ற 
பொழுதுகள்தான் அந்த "தேநீர்ப் பொழுதுகள்"  
 
- கார்த்திக் பாரதிதாசன் 

**

ஆவி பறக்கும் தினசரிகளின்
செய்திகளால் 
ஆறிப் போயிருந்தது 
தேனீர்

அந்தக்
காலைப் பொழுதின் பனிக்குளிரில்
கனன்று 
அனல் உமிழ்ந்து கொண்டிருந்தது
உடலைக்காட்டிலும்
மனம்

வன்புணர்வில்
சிறுமியுடன் நைந்தது பெண் தோல்
எனினும்
சிதைத்து மகிழ்வதும்

கை மாறும் லஞ்ச லாவன்யம்
கள்ளக் கடத்தல்
கொலை கொள்ளை
மலிந்து விட்ட ஊழலுடன்

போதையென
சாதிச் சண்டைகள்
மதங்களின்
அதிகார போராட்டங்கள்

சதிகள்
சண்டாள நாசத்தின்
ரகசியங்கள்
சிலை கடத்தல் 
என

நிகழும் கலவரங்களால்
அற்றுப் போன அமைதி
எந்த தேனீர்ப் பொழுதில்
மகிழ்ச்சி வந்து
தினசரிகளின் ஊடகங்கள்
எல்லோர் மனமெல்லாம்
பரிபாலனம் செய்யும்...!?

- கவிஞர்.கா. அமீர்ஜான்

**

அலுவலகம் நுழைவு
முதல்
அன்றாட வேலைகள் சுகமா! இல்லை சுமையா?
சிரிப்பும் கோபமும்
மாறி மாறி உறவாட

வந்த தவறுகளும்
வருந்திய கணங்களும்,
எரிச்சலூட்டி

போதுமடா சாமி
இந்த வேலை என்று
வெறுத்துப் பேசி

சக ஊழியரிடம்
மீண்டும்
நட்பு பாராட்டி
உணவகம்சென்று

ஒரு கோப்பைத்
தேநீர் ருசித்து
பகிர்ந்து கொள்ளும்
இன்ப துன்ப நிகழ்வுகள்
அப்போதே காணாமலாகும்

தேயிலை நீரின்
திடமா அல்லது மாயமா!
மனதை மாற்றி
நரம்பினுள் ஓடி
மூளைச் செல்களைத்
தட்டி
மீண்டும் உற்சாகம்
தரும் உன்னத
வேலை(ளை) அது....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

தொடர்ந்து செய்யும் வேலைக்கு இடையே
  புத்துணர்வு ஏற்படுத்தும் ஒருமுயற்சியே
தேநீர் பொழுதுகள் என்னும் முறையாகும்
  தேடாது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

தேநீர் பொழுதுகள் சிலவற்றை தீர்மானித்துள்ளது ! நட்புகளை
 கொள்கை குழுக்களை , கூட்டணிகளை - அது
நல்ல அரசியல் போக்கு உருவாக உதவும்
  நல்ல தலைவர்கள் உருவாக காரணமாய் அமையும்

இது ஒருவகையாய் ஆனது, ஆனால் உண்மையில்
  அலுவலகத்தில் வேலைபார்ப்பவர், தொழிற்சாலையில்
தொழில் செய்வோர், மற்றும் கட்டிட வேலை, வண்ணம்
   அடிப்பவர், வயரிங் வேலை செய்வோர்,ஏனையோர்

இயல்பாகக் கொண்டதுதான் இந்த தேநீர் பொழுது
   இனிமையான அனுபவமாகும் அதை ரசிப்போம்
இந்த வீட்டு வேலைசெய்வோர் மற்றும் கூலிவேலை
   செய்பவர்க்கும் ஏனில்லை இந்த வாய்ப்பு?

குடும்பப் பெண்கள், ஆம் இல்லத்தரசிகள் வீட்டில்
   குடும்பத்தில் இருக்கும் ஏனையவர்க்கும் ஏனிலை?
ரேஷங்கடையில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
   பால் டிப்போ  மாவு மிஷின், குழாயடி இவர்களுக்கும்

தேநீர் பொழுது ஒதுக்கவேன்டும் ! காத்துக்கடகிறார்கள்
   நீண்ட வரிசையில், பழியாய் கிடக்கிறார்கள்
வரிசையை கிடைத்து விட்டு டோக்கனோடு செல்ல
 வழிவகுக்க வேண்டும் தேநீர்பொழுது அனைவரும் பெற !            

- கவிஞர் ஜி. சூடாமணி

**

தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவை
தளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை!

தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்
தரமாக இருந்தால் மனம் மகிழும்!

விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டு
விசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு!

அறியாத முகங்கள் அறிமுகம் நடக்கும்
அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்!

உலக அரசியலும் பேசுவது உண்டு
உள்ளூர் அரசியலும் பேசுவது உண்டு!

பிந்தியவர்களுக்கு கிடைக்காமல் போவதும் உண்டு
முந்தியவர்கள் பருகி மகிழ்வது உண்டு!

இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வாய்ப்பு
இறுக்கம் தளர்த்தி இளைப்பார விடுதலை கிட்டும்!

தேநீருக்கு முன் ரொட்டிகளும் தருவது உண்டு
தேநீரில் முக்கி ரொட்டி உண்பதும் உண்டு!

பேசியவர் பற்றிய விமர்சனம் நடப்பதுண்டு
பேசியவர் கேட்டு  நொந்து விடுவதுண்டு!

சோர்வை நீக்கி புதுப்பிக்க உதவும்
சோம்பல் முறித்து புத்துணர்வு பெறலாம்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பு
தேமதுரத் தேநீராய் உருவானது மகிழ்வு!

நல்ல தேயிலைகள் ஏற்றுமதி ஆகின்றன
குப்பைத் தேயிலைகள் நமக்கு வருகின்றன!

அயல்நாட்டான் குடிக்கும் அற்புத தேநீர்
அனைவருக்கும் நமக்கும் கிட்டும் நாள் திருநாள்!

- கவிஞர் இரா .இரவி

**
இமை மூடிய விழிகளுக்குள்
இதமான கனவுகள் .
இமைகள் பிரிய மறுத்தாலும்
நாசியைத்  துளைத்தது 
நறுமணம் கொண்டதேநீர் !
அதிகாலை வேளை இன்று
அன்புக்கணவர்   தயாரித்த
இஞ்சியுடன் கருப்பட்டியின்
இன்சுவைசேர 
தேநீரது 
தேவாமிர்தமாக
சுவையோ சுவை .!
சுகமான வேளை .!
தேடினாலும் கிடைக்காத
தேநீர் பொழுதன்றோ ?

- ஜெயா வெங்கட்

**

தனிமை இருட்டின்
காதுகளில் கிசுகிசுத்து
நள்ளிரவு மழைச்சாரல்
யுகங்களின் சோகங்களை
உச்சரித்த ஓர் வனத்தில்….

அந்தரங்கத்தின் சுந்தர
கணங்கள்
நீலக்கனவுகள் ஈரமாய்
கோலம்போடும் 
உன் வண்ணத்துப்பூச்சி
விழிகளில் சிறகடித்தன

உதடுகளைச் சுழித்து 
முத்தம் கொடுப்பது
போலச் செய்த
உன் பாவனை 
மன்மதனுக்கு
வைத்த சோதனை
நம்முன்
இரண்டு
கோப்பைகள் 
இருந்தன
பேசிக்கொண்டே
இருந்ததை
கேட்டுக்கொண்டே
வெட்கத்தில்
நெளிந்தது
சூடான தேனீர் 
ஆவி

கோப்பை விளிம்புகளில்
நர்த்தனமாடின
இதயங்கள்,
நுரைக் குமிழிகளில் 
திரைபோட்டு
உட்கார்ந்திருந்த
காதலை
வெட்கத்தோடு 
மறுத்தது உன்முகம் 
இல்லை என்று
உதடுகளும் தலையும்
காற்றில் ஆடும் தீபமாக
அசைந்தன;
ஆமாம் என்று கண்கள்
அகலில்
ஒற்றைக்கோடாய்ப்
பற்றவைத்த ஜோதிபோல்
நின்று எரிந்தன

சுவைத்துமுடித்த
தேனீர்த் துளி
உன் உதட்டில்
மிச்சமிருந்தது

துடைக்க நீண்ட
என் கைவிரல்கள்
காலாதீதத்தின்
மத்திமத்தில்
உறைந்தன

யுகம்பல முடிந்து
சோகங்களை
மீண்டும் உச்சரித்து
நடுராத்திரி மழைச்சாரல்
வந்தது ஓர் அமானுஷ்ய
கணத்தில்

முன்னே 
ஒற்றைக்
கோப்பை
வெறுமை

இன்மையில் இருந்த
தேனீர் ஆவியாக
முத்தம் கொடுப்பதாய்
பாவனையில் சுழித்த
உன் உதடுகள்

உதட்டின் மிச்ச
தேனீர்த்துளியை
துடைக்க 
நீண்டன 
உடலை
துறந்துவிட்ட
என் விரல்கள்

- கவிஞர் மஹாரதி

**

மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால் 
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான் 
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா 
அவள் எதற்கு முத வாதவ ளாயினும் 
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும் 
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே 
யவன் உணர்வானோ உணர மாட்டானோ 
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ 
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய் 
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு 
குறையுதங்கே எந்தன் வரவுக்காய் 
காத்திருப்போ னென் காதலன் 
கொதிப்பு கூடிடுதேயங்கே 
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில் 
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்

**
காலையிலும்   மாலையிலும்   குடும்பத்   தோடு
    கலந்தமர்ந்து   பருகிட்ட   தேநீ   ரோடு
சோலையிலே   பூத்திட்ட   பூக்க  ளோடு
    சொல்லாடல்   நிகழ்த்திட்ட   வண்டு  கள்போல்
வேலைகளை   வரவுசெலவு    இன்ப   துன்ப
    வேதனையைப்   பகிர்ந்துகொண்ட    காலம்   மாறி
மூலையிலே    அமர்ந்தபடி   கைப்பே  சிக்குள்
    முகம்புதைத்து   தனித்துள்ளார்   வீட்டிற்   குள்ளே !

தெருவோரக்    கடைகளிலே   அமர்த   வாறு
    தேநீரின்   கோப்பைகளைக்   கையி   லேந்தி
அருந்திநாவில்    சுவைகூட   அறிந்தி   டாமல்
    அரசியலின்   போக்குகளை   அலசிப்   பேசிப்
பெரும்மாற்றம்   ஆட்சியிலே   செய்த   வற்றைப்
    பெருமையுடன்    பேசுகின்ற    கனவாய்ப்  போக
உருமாறித்   தேநீரின்    கடைக்குச்   சென்றோர்
    உணர்விழக்கும்   மதுக்கடைக்குச்   செல்ல   லானார் !

அலுவலக    இடைவெளியில்    அருந்தி   வந்த
    அருமையான்   தேநீரோ    குளிர்நீ   ராக
சிலுசிலுக்கும்   அறைகளிலே   அமர்ந்த  வாறு
    சின்னதிரை    தொடர்களினை   மெல்ல   லானார் !
குலுங்கிநடைப்   பயிற்சியினைச்    செய்த   பின்பு
    குடித்ததேநீர்   அருகம்புல்   சாறாய்   மாறக்
கொலுசொலிதான்   போனதுபோல்   தேநீர்   போழ்தைக்
    கொண்டதின்று   கட்புலனும்   முகநூல்   சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**

தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும்  இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!

அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!

வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!

நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது! 
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!

தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல! 
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்! 
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்! 
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும்  தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும்  தேநீர் பொழுதுகள் –

- கவிஞர் டாக்டர்.  எஸ். பார்த்தசாரதி

**

என் நண்பன் சொல்வான் “ தேனிர் நேர சந்திப்பில்
  கொள்கை விளக்கம் செய்து ஆள்பிடிப்பேன் ” என்று
சில ஓட்டுக்கள் மாறி விழும் குறுகிய நேரத்தில்
  சில பிரச்சினகள் தீர்த்திடுவோம் உதவி செய்வோம்
தொழிற் சங்கம் வளர்ப்பதற்கு தேனீர் பொழுது
  தோதக இருக்கிறது ! இதுபோல நாட்டிலும் தோடரலாமே
பணம் காட்டி வாக்காளரை மாற்றும் மார்க்கம் தடுக்கலாமே
 தேனீர் நேரம் தொடரவேண்டும் திருத்திடுவோம் வாக்காளரை 

தேனீர் நேரச்சந்திப்பில் காதல் மலர்கிறது என்கின்றார்
  அது கல்யாணமாய் முடியும் வாழ்க்கை காவியமாகும்
தேனீர் நேரம் வரட்டும் என்று நண்பரை இருக்கசொல்வார்
 இனிக்கும் மேடைப் பேச்சுக்கள் கேட்கலாம் பொழுதுபோக்கும் மன்றில்
தேனீர் நேரச் சந்திப்பில் புது நண்பர்கள் நமக்குக்கிடைப்பார்
 போகும்போது சொகமாய் போய் வரும்போது மகிழ்வுடன் வரலாம்
சிலநேரம் அலுவலகப் பிரச்சினைகள் புரிதலில் வந்தகோளாறுபோகும்
  சிந்திக்கவும் நம்சிந்தனையை சரிசெய்யவும் தேனீர்நேரம் பயன்படும்

சிலர் தேனீர் நேரம் செல்லாமல் படிப்ப றையிலேயே கழிப்பர்
  சிலரைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கும் இப்படி செய்வார்கள்
தேநீர் பொழுதுகள் தீர்மானிக்கும் சில திருமணங்களை, கூட்டணிகளை
 அரசியல் மாற்றங்களை தலைவர்களின் தேநீர் பொழுது தீர்மானிக்கிறது
 
- கவிஞர் அரங்க கோவிந்தராசன்
 
**

அயற்சி கலைத்து 
முயற்சி கொடுக்கும் 
எண்ணங்கள் ஏற்றி 
வண்ணங்கள் கூட்டும்
பொழுதொன்று உண்டு - அது 
தேநீர்ப் பொழுது.

காலை வேளை
மட்டும் அல்லாது  
மாலையில் கூட 
மூளையின் மூலையில் 
விடியலை தூண்டிடும் - பல 
விடைகளை காட்டிடும்.

உறவினர் நண்பர் 
காதலர் என்று 
உலகோர்க்கு எல்லாம்
உயர்ந்தநற்ப் பொழுதாம் 
பகைமையைப் போக்கி - நற் 
பயன்தரும் பொழுதாம்.

தனிமையை நீக்கிட
மனநலம் பேணிட 
வாரீர் வாரீர் 
உறவோர் வாரீர் 
தேநீர் அருந்தி  - புதுப் 
பொலிவுற வாரீர்!

- கு. இராமகிருஷ்ணன்.

**

காலை பொழுது மலர்ந்ததும் வேண்டும் தேநீர் சிலருக்கு 
மாலையில் ஒரு "நொறுக்குடன் " தேவை தேநீர் சிலருக்கு !
தேநீர் நேரம் என்று ஒன்று  பணிநேரத்தில் இருந்தாலும் 
தேநீர் ஒன்றே தலையாய பணியாக மாறும் சிலருக்கு !
தேநீர் பொழுதை  ஒரு விருந்தாக மாற்றி வணிகம் 
வர்த்தகம் செய்யும் வித்தகர்களும் உண்டு உலகில் ! 
தேநீரும் ஒரு "பொறையும்" மட்டுமே  உணவாக 
மாறும் மூன்று வேளையும் ஒரு உழைப்பாளிக்கு !
தேநீர் பொழுது அவனுக்கு ஒரு பொழுது போக்கு 
அல்ல ! தன் பொழுதை வீணாகப் போக்குபவனும் 
அவன் இல்லை !

- K.நடராஜன் 

**

இஞ்சியும் ஏலமும் மணக்க
இம்மி எலுமிச்சை சாறு சேர
இருக்கட்டுமென இட்ட இனிப்புடன்
இனித்தது் தேநீருடன் ..இல்லறமும்

செய்தித்தாள் நான் கையிலேந்தி
சூடான தேநீர் உறிந்தபடி 
சுற்றி நடக்கும் செய்திகள்
சுவையாய் நீ சொன்ன காலமது

சொல்லாமல் சென்றாயே அன்று
செயலிழந்தேன் நானும் இங்கு.
செயலிகள் பல இருந்தும் இன்று
சலிப்பே  மிச்சமே இங்கு.

தேனாய் இனித்த நாட்கள்
திரும்ப இனி இல்லவே இல்லை
தனிமையில் எனக்குத்  துணையாக..
தேநீர்க் கோப்பையில் ..
தித்திக்கும் உன் நினைவுகளே..

- அகிலா ராமசாமி

**

உழவன் ஏர்க்கலப்பையுடன் ஒருநாள் நின்ற வேளை
பொழுதும் புலர்ந்தது தேநீர் கடையினுள் சென்ற வேளை
கற்றவன் மற்றவன் நின்றவன் தாள்பார்த்து படித்த வேளை
அரசியல் அடுத்த தெரு பொண்ணு ஓடிப் போன வேளை
வரப்பு தகறாரில் பங்காளி தலை வெட்டிய செய்தி
மூன்றாம் பத்தியில் போட்டோவுடன் செய்தி
முழு மூச்சில் படித்திட கட்டிப்புரண்டு மானம் போக
பேசித் தீர்ந்த போது தேவைப்பட்ட பொழுது தேநீர்ப் பொழுதுகள்
ஏழை நடுத்தர பணக்கார வர்க்கம் தூங்கியெழுந்த போது
தேவைப்பட்ட பொழுது தேநீர்ப் பொழுதுகள்
வீணான பேச்சு பேசி நேரத்தை விரயமாக்கும் பொழுது 
கூடிநின்று நாணயம் தேடும்பொழுது தேநீர்ப்பொழுதுகள்
படித்தவர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் மட்டும் அல்ல
வணிகர்கள் நுகர்வோர்கள் தொழிலாளர்கள் 
களைப்பு தீர மட்டும் அல்ல
நோக்கம் மேம்படுத்த கூட்டாக தனியாக இளைப்பார
ஒதுங்கும் பொழுது தேநீர்ப்பொழுதுகள்.

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை

**

ஆங்கிலேயரின்
அடிமைத் தளையிலிருந்து
விடுபட்டாலும்
அவர் அன்று  அறிமுகப்படுத்திய 
அதீத சுவைக்கொண்ட
அற்புதபானமாம்  தேநீருக்கு  அடிமைப்பட்டுக் கிடக்கும் 
நம்மில் பலருக்கு 
தேநீர்ப்பொழுதுகள் சில
அலாதியானவை !

மறக்க முடியாத
மாணவப் பருவத்தில்
உருப்போட்ட  பாடங்களுடன்
உறக்கத்தை விரட்ட
உதவியவை
உற்சாகம் அளித்த
தேநீர்ப் பொழுதுகள்
என்றால் அது மிகையில்லை!

பசியும் தாகமுமாய் 
நெடுந்தூரம் பயணிக்கையில்
தெருவோரம் அமைந்த
தேநீர்க்  கடையொன்றில்
கலீ ரென்ற சத்தத்துடன்
கழுவப்பட்ட 
கண்ணாடித் தம்ளரில்
ஊற்றித் தூக்கி
ஆற்றித் தந்த
ஆவிபறக்கும் தேநீர்
அருந்தும்  அந்த நேரம்
ஆவி உள்ளவரை
நினைவில் 
நீங்காது நிற்கும்
சுகமான
சுவையான
தேநீர்ப் பொழுது தான் !

இளமையோ  முதுமையோ
வளமையோ  வறுமையோ
எந்த நிலையிலும்
ஏதோ ஒரு வகையில்
 நம் வாழ்க்கையை 
நேசிக்க வைப்பவை
தேநீர்ப் பொழுதுகள் தான் !

- கே. ருக்மணி, கோவை.

**

ஓயாது புரியும் பணியில் நேரம் கிடைப்பதில்லை
தேயாத நிலவு அமாவாசைக்கு வருவதில்லை
பாயாத நதிகளின் ஓரம் நாகரீகம் வளர்வதில்லை
வேயாத கூரையின் கீழும் தேநீர் மட்டும் வேண்டுமே

மாலைப் பொழுதின் மயக்கத்தில் காதல் வருகிறது
ஒலைக்குடிசையிலும் மாலை நேர மயக்கமுண்டு
சோலைப் பூங்காவிலும் மயக்கும் மாலைப் பொழுது
பாலை நிலத்தில் காணும் சுனையாய் தேநீருடன் தான்

கசக்கிப் பிழிந்து அறிவு வடிக்கும் மென்பொறியாளர்
இசங்கள் பேசி விவாதங்கள் வடிக்கும் அறிவாளிகள்
வசதி வாய்ப்புடன் பொருள் சேர்த்த பணக்காரர்களும்
அசதி போக்க அமர்வர் தேநீர்ப் பொழுதுகளில் தேநீர்க்கு

வீட்டுப் பணிபுரியும் ஓயா உழைப்பாளப் பெண்டிர்
நாட்டு நடப்புகளை தொலைக்காட்சியில் கண்டாலும்
மீட்டும் வீணை இசையின் லயிப்பில் இருந்தாலும்
வாட்டும் தலைவலிக்கு மாலைப் பொழுது தேநீர் தான்

தேநீர் மாலைப் பொழுதுகள் தரும் இன்பம் தனிதான்
காணீர் எங்கும் தேநீரருந்தும் மக்களை மாலையிலே
நாணீர் மது அருந்தும் மாக்களைப் பார்த்து என்றும்
தேநீர் அருந்திடுவீர் தெம்புடன் நடந்திடுவீர் நலமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

"இஞ்சி" சுவை சேர்த்த  தேநீர் 
கொஞ்சி  பேசி  அம்மா  கொடுத்தால் 
மிஞ்சிவிடுமே  "தேநீர்ப் பொழுது!"
சோர்ந்த  உள்ளத்தில் 
சேர்ந்த வருத்தம்  என்ற  அழுக்கினை 
தேர்ந்தெடுத்து  ஓட்டும் 
வல்லமை  படைத்த  இனியபொழுது 
அது  -  "தேநீர்ப்பொழுதுகள்"
தேர்வுக்கு  படிக்க  பாடம் 
தேர்வு செய்யும்  நேரம் 
கோர்வையில்லா  எண்ணங்கள்  வந்து 
சோர்வை  கொடுக்க  முயலும்  தருணம் 
போர்வைக்குள்  முடங்காமல் 
"தேநீர்"  அருந்தும்  அப்பொழுதில் 
எல்லா  சோகமும்  ஓடி 
நல்ல  படிக்க  தெம்பு  தரும் 
இனியப்  பொழுது  
அது  -  "தேநீர்ப்  பொழுதுகள்!"
"தேநீர்ப்  பொழுதுகளை" அனுபவிப்போம் 
வாழ்க்கையில்  உற்சாகமாக  இருப்போம்!

- பிரகதா நவநீதன், மதுரை

**

தெருமுனையில் டீக்கடையில்
தினந்தோறும் கூட்டம்
பண மதிப்போ பொருள் வரியோ 
மதியின் கார்டூனோ
சரியா தப்பா என ஒரு சாரார் 
வழக்கிட்டு வாதாடிக் கொள்வர். 
தினமணியோ-கதிரோ இன்னும் 
பல நாளிதழை (பழைய தானாலும் பரவாயில்லை என) 
ஒரு சாரார் படிப்பர்,
நானும் +2 வினா விடைக்கு 
நாளிதழைப் புரட்டிய துண்டு ஆர்வமாய்,
எனக்கென்னவோ இன்னமும் 
நாளிதழின் செய்திகளில் தேனீர் வாசம் வீசி 
நாவில் இனிக்கிறது 
அப் பழமை மாறா தினங்களில், 
இப்போது நாளேடுகள் டிஜிட்டலாக 
டீயும் டிப் டீ ஆக, 
மறந்தும் மறத்தும் போயிற்று 
அந்த மண் மணம் மாறாத பழைய 
தேனீர்ப் பொழுதுகளின் _ சுவடுகள்.
இப்படி எமை ஏக்கப் படுத்தி
நாகரீக நிழலில் நாற்காலி போட்டு வீற்றிருக்கிறது
அந்தக் காலத் தேனீர்ப் பொழுதுகள் 

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

கடின வேலையும்
பதட்ட வேளையும்
செவ்வானமாய்
சிவக்க விட்டு

வாடிக்கையாளரின்
வன் முகத்தால்,
கோபம் கெடுத்து
மென் முகத்தால்
மென் சிரிப்பு
உதித்து,

அரசியலும்
விளையாட்டும் பேசும்
இளைஞர்களின் இடையே
பகை ஏற்படா வண்ணம்
புகுந்து சிரிக்க விட்டு
தேநீர் கடை முன்,

அப்பாடா என்று,
பெருமூச்சு வாங்கி
ஒவ்வொரு நாளும்
இடை வெளி  தான்
இன்பத் தேன்
என நினைத்து
மகிழும் தருணங்கள்....
 -  ப. வீரக்குமார், திருநின்றவூர்.

**
                  
தேநீர்ப் பொழுதுகளே வாழ்வின் திகட்டாத நேரமென்று
உரக்கச் சொன்னாலும் உலகத்தின் மூலையெல்லாம் 
ஆமாம் ஆமாமென்று அதி அற்புதமாய்த் தலையாட்டி
அப்படியே அதையேற்கும்... அதுதானே உலக பானம்!

அடைமழையின் பொழுதுகளில் அரவணைக்கும் தோழர்களுடன்
ஆவிபறக்கும் தேநீரை அருகிருந்து பருகையிலே
உள்ளத்தின் ஆழத்தில் உற்சாக நாதமொன்று 
மெல்லக் கேட்பதற்கு மேனிலத்தில் ஈடுண்டா?

தேநீரால் தீராத திட்டங்கள் ஏதுமில்லை!
உற்சாக பானமது!உறவை வளர்க்குமது!
இந்த விருந்துக்கு ஏகமாய்ச் செலவில்லை!
ஆனாலும் தரும் பயனோ அதிகம்... மிகவதிகம்!

அசாமோ கேரளாவோ அருகிலுள்ள ஈழமோ
எந்த நாட்டுத் தேநீருக்கும் இயல்பான சுவையுண்டு!
பனிக்காலத் தேநீருக்கு அதிகச் சுவையுண்டு!
அதனையே உணவாக ஆக்குவோர் பலருண்டு!

ரஸ்க் பிஸ்கட் நயமான கேக்கென்று
எதனோடும் இணைசேர்ந்து இன்பத்தைக் கொடுப்பதற்கு
இதுவென்றும் யோசிக்காது!இதன்மூலம் மக்களுக்கு
கலப்பு மணம் செய்வதையே களிப்பாய் நினைவூட்டும்!

ஆக்கம் மிகத்தருமாம்!அப்படியே அது தருகின்ற
ஊக்கம்...உற்சாகம்...உண்மையாய் மிகவதிகம்!
தேக்கமின்றி வாழ்க்கையிலே தேர்ந்திடவே அனைவருமே
பார்த்தே தேநீரைப் பருகிடுதலே நல்லுசிதம்!

- ரெ.ஆத்மநாதன்,   கூடுவாஞ்சேரி

**

மழை  சாரலோடு  தென்றலாய்  
சில்லிடுகிறது காற்று,
கொட்டும்  மழையின்  சத்தமோ 
பின்னிசையாய்  ரீங்காரமிடுகிறது,
தூரத்தில் சிறுபிள்ளைகள் 
தேங்கிய  தண்ணீரில் கப்பல் 
விட்டு  விளையாட,
ரசித்தபடி  நான்.
அருகில் வந்தாள் அவள், 
துவட்டிய  தலையோடு 
இரண்டு தேநீர் கோப்பைகள் 
கையில்  ஏந்தி, 
கோப்பையை  வாங்கியபடி  
மெய்சிலிர்த்தேன், 
அவள் அழகைக் கண்டு, 
அவள் இரண்டு கைகளால் 
அந்த கோப்பையை பிடித்து 
தேநீரை ஊத  
அந்த சூடான ஆவியும் 
அவளை தீண்ட, 
சற்று பொறாமையும் 
என்னை தொற்றி கொண்டது,
அவளை வைத்தகண்  
வாங்காமல் பார்ப்பதை அவளும்  அறிய ,
கண்களால்  அவள் என்னிடம் பேச ,
அந்த  தேநீர் பொழுதில்,
மறைந்து  இருந்த 
எங்கள் காதல் கரை புரண்டது!

- பிரியா ஸ்ரீதர்   

**

நற்பொழுதாம் தேநீர் பொழுது - அது 
இல்லையெனில் கண்ணீர் பொழுது!
பள்ளிப்படிப்பின் இடைப்பொழுது - அது 
நண்பன் பணத்தில் நன்பொழுது!
கல்லூரியின் கடைப்பொழுது - அது
இடர் தளர்வுகளை நீக்கும் தனி  பொழுது!

காதல் கொண்டேன் கன்னியிடத்தில் 
இரவு முழுவதும் தேநீர் பொழுது!
ஞாயிறு பொழுதை வீட்டில் கழித்தால்
மணிக்கொரு தேநீர் பொழுது!

பணிக்குச் சென்று வேலைப்பார்த்தால் 
மனம் எதிர்பார்க்கும் தேநீர் பொழுது!
மார்கழி மாத குளிரில் கூட
இதமாய் அருந்தும் தேநீர் பொழுது!

முப்பொழுதும் இதை அருந்துவதால்,
முக்தி நிலைதனை அடைந்திடுவோம்!
எப்பொழுதும் இதை பருகுவதால் பரவசநிலையில் பறந்திடுவோம்!
தேநீர் பருகி வாழ்வதனால்,
இதய நோய் எவருக்குமில்லை!
அளவாய் அருந்தி வளமாய் வாழ,
தேநீர் போல ஒரு நீரும் இல்லை!

-செந்தில்குமார், திருநெல்வேலி

**

உழைத்ததால் மனமும் 
உடலும் உள்ளமும் 
களைத்துப் போன நேரங்களில்
கணநேர ஓய்வில் 
கவ்விப் பிடித்துள்ள 
கவலைத் துயரங்களை மறக்க 
கனிச்சுவையும்  சுடுநீரும் 
கலந்த உணர்வூட்டல் தரும் 
களிப்புத் தரும் சிறு மருந்து 
தேநீரை சுற்றத்தோடும் 
தேடி வரும் சொந்தத்தோடும் 
தேனமுதாய்ப் பருகிய 
தேடக் கிடைக்காத பொழுதுகள் 
தென்றல் வந்து சில சமயம் தீண்டிப் 
போகும் உணர்வுகள் 
தெவிட்டாத மலர்க்கணைகள் 

- பாலா கார்த்திகேயன் 


**
தேநீர்ப் பொழுதுகள் இல்லையென்றால்
சுவைப்பதே இல்லை வாழ்க்கை

காலியாக இருக்கும் 
கண்ணாடிக் கோப்பையும் 
தேநீரால் நிரம்ப வேண்டுமென்றே
தேவனை வேண்டுகிறது

செய்யும் வேலையிலிருந்து 
சிறிது விலகித்
தோழமைகளோடு தேநீர்ச்
சுவைக்கவில்லை என்றால்...
மனமடங்க
மாத்திரை கேட்டு 
மருத்துவமனைக்கு ஊர்வலம் போயிருப்போம். 

எந்த இலக்கிய நிகழ்வும்
சச்சரவு இல்லாமல் முடிந்ததில்லை
தேநீர் இல்லாமல் நடந்ததில்லை

எங்கள் 
எழுத்தாளர்கள் முன்
ஞானபீடத் தகட்டையும்
தேநீர்க் கோப்பையும் வைத்தால்
மொத்தக் கூட்டமும்
மொய்க்கும் தேநீர்க் கோப்பையைச் சுற்றி.

இந்தக் கவிதையைப் பிறகு முடிக்கிறேன்
இப்போது
எனக்குத் தேநீர்ப் பொழுது.

-கோ. மன்றவாணன்

**

'கொழுந்து'  அதனை குழவியாய்ப் பாவித்து சீராட்டும் பக்குவத்துடன்  

 பின்னோக்கி இழுக்கும்  பாரம் தாங்கி தலையை முன் தள்ளி 

முதுகில் பொதி சுமந்து வில்லாய் வளைந்த மேனியுடன் 

மழையும் வெயிலும் எங்களுக்கல்ல என்கிற தியாக நோக்கில்   

இடிந்த நிலையில் அமைந்த இருப்பிடங்களில் வாழ்ந்து  

மறைவிடம் சரியாக அமையாத கழிப்பறைகளில் கழித்து

 உழைப்பிற்குண்டான ஊதியம் கிடைக்கப் பெறாமல் 

உடலை மறைக்க நேர்த்தியான உடையில்லாமல் 

குளிரை மறுக்க இதமான போர்வையில்லாமல் 

அரை வயிற்று உண்டிக்கு அல்லல் பட்டு உழைக்கும் 

 உங்களின் துயரங்களை அறவே மறந்து விட்டு 

நிதமுமே இனிமையாக்கிக் கொள்கிறோம்

 எங்களின் தேநீர் பொழுதுகளை.. 

பான்ஸ்லே.. 

( மாலதி சந்திரசேகரன்) 

கொழுந்து = பக்குவம் செய்ய பறிக்கப்படும் தேயிலையின் பெயர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com