இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 1

ஓர் ஈர அந்தி மாலைப்போதில்
இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 1

இனிமேல் மழைக்காலம்

ஓர் ஈர அந்தி மாலைப்போதில்
எரிந்துகொண்டிருந்த சிதைத்தீயின்
நாவுகள் பேசத்தொடங்கின
மயானம் விட்டு மனிதர்கள் அகன்றபின்
செங்கனி உதடுகள் துடித்தன
என்னை வாவென அருகில் அழைத்து
ஒரு கருக்கிருட்டுச் சோலைவனத்தில்
முத்தம் பதித்ததும் செவ்வானமான கன்னங்கள்
நெருப்புக்கண்ணாடியில் தெரிந்தன
விலகிப்போகையில் எட்டி இழுத்த
கைகளாய் ஜ்வாலைகள் நெளிந்தன
உள்ளங்கைகளில் கோலமிட்ட
மருதாணிச் சித்திரங்கள் தீயில் வளையவந்தன
ஒரு சண்டையின்போது சிவப்புக் குன்றிமணிகளாய்ச்
ஜிவ்வென்று தெறித்த உன் விழிகள்
நெருப்பின் பரப்பு முழுவதும் வெறித்தன
சுற்றிலும் இருட்டு மெளனித்திருக்க
என்னை இழுத்து காதில் கிசுகிசுத்தாய் தீவழியாய்
”இனிமேல் மழைக்காலம்
உன் கண்களுக்கு’ 

- மஹாரதி

**

**

கோடை முடிந்துமழை கொட்டத்தான் போகிறது 
குடைகள் தயாராகட்டும் குடங்களினி வேண்டாம்
வாடை முடிந்து இனி வரப்போகும் சோழகத்தில்
வாடாதினிப் பயிர்கள், வளங்கொழிக்கப் போகிறது.

காவிரியில் கரைபுரண்டு வெள்ளமோடும்
கன்னடமும் கட்டவிழ்த்து நீரைப் பாய்ச்சும்
பாய்விரித்து நாவாய்கள் பயணம் செய்யும்
பாய்ந்து வரும் நீரலையில் மீன்கள்பாயும்
பூவிரிந்து களனியெலாம் பொன்னாய் மாறும்
பொலி கூடி நெற்கதிர்கள் தலையைச் சாய்க்கும்
மேவிய நீர் கடல்தன்னில் விரயமாகும்
விதிமாற்றும் மேலாண்மை நுட்பத்தாலே
ஆழ்துளையிட் டெம்நிலத்தில் குழாய்கள் பாய்ச்சி
அள்ளிமெதேன் உறிஞ்சவரும் கயவரெண்ணம்
பாழடையும், நீரில்மெதேன் கலத்தலாலே
பயன் கிட்டாதென்றினிய கனவு காண்போம்.

- சித்தி கருணானந்தராஜா

**
கொட்டைப் பாக்கின் 
நிறமான சோற்றுக் கற்றாழை
குழியாக காட்சியளிக்கும் சுனை
விளையாட்டு மைதானமான குளம்
மூச்சு வாங்க தினறும் 
கழிவுநீர் குட்டை
பல விழுதுகள் பரப்பியும் 
நீரின்றி வாடும் ஆலமரம்
ஆலமாக வேர் பரப்பியும் 
பசுமையற்ற அரசமரம்
இளநீரற்றுப்போன 
தென்னந்தோப்பில் இருந்து 
பனைங்காட்டிற்கு 
தஞ்சம் புகுந்த அணிகள்
மீன்கள் உண்ட கன்மாயில் 
பூச்சிகளை தேடும் பறவைகள்
சருகளான புற்களை 
இறையாக கொள்ளும்
செம்மறி ஆடுகள் என 
யாவும்
உயிர்ப்பிக்க காத்திருக்கின்றன
இனிமேல் மழைக்காலம் என்ற
நம்பிக்கையில்!

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்

**

ஆகாய  வீதியில் நடமாடும் 
மேகக்கூட்டம்  மக்களின் 
தாகம் தீர்க்க  பூமிக்கு  வரும் 
உன்னத செயலின்  பெயர்தான்  
மழை   அது இனிமேல்  மழைக்காலம்!
எதுதான்  எளிதில் கிடைக்கும் 
பொதுவான  மழை  நீர் மட்டும்தான் 
அம்மழை  நீர் உயிர்  நீர்  என 
சேமிக்கும்  முறையினை  கற்றால் 
பின்னாளில்  அவதியில்லா 
கண்ணான  வாழ்வு  கிடைக்குமே!
நால் வகை  காலத்தில் 
நம்  வாழ்க்கைக்கு  வசந்தம் தருவது 
"மழைக்காலமே!"
மழை பொய்ப்பின்  நம்  வாழ்வும் 
பொய்த்து  வறட்சியாகிவிடுமே!
இனிமேல் வரும்  மழைக்காலம் 
வசந்த  காலமாகி  வாழ்வில் 
பசுமை தருமென்ற நம்பிக்கையோடு 
சிவப்பு கம்பளமிட்டு  வரவேற்போம் 
"மழைக்காலம்" என்ற பொற்காலத்தை! 

- பிரகதா நவநீதன்.  மதுரை

சுட்டெரித்த  வெயில் 
பட்டென  குறைய 
தட்டுபாட்டிலா  மழை  பொழிய 
காத்திருக்கும் ஜீவன்களுக்கு 
இனிமேல்  மழைக்காலம்தான்!
தனியாக பொழியும்  மழை நீரை 
அணியாக வகுத்து சேமிப்போம்!
இயற்கை கொடுக்கும் நீர் 
செயற்கை  முறை அறிந்து 
சேமித்தால் பலனை  பெறலாம்!
பண சேமிப்பு  ஆனந்த  வாழ்வு போல 
நீர் சேமிப்பு பேரானந்த  வாழ்விற்கு 
வழி சொல்லும்  அற்புத செயல்!
சென்ற காலத்தில் மறந்த சேமிப்பை 
மன்றம் முழுவதும் எடுத்துரைத்து 
குன்றம் போல உயர்ந்து 
ஒன்றாக  சேர்ந்து  நீரை சேமிக்கும் 
முறையினை  கையாள்வோம்!
இன்றைய சேமிப்பு  நாளைய 
மகிழ்ச்சிக்கு  அஸ்த்திவாரம் 
என உணர்ந்தால் சேமிப்போம்!
மழை நீரை ........அதுவே 
தழைக்கும்  வாழ்வுக்கு உறுதி 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

குடையை கொஞ்சம்  மறந்து,
குழந்தைபோல 
நனைவோம் வா வா !
கூரைகளில்  சொட்டும் 
சாரலில் விரல்கள் நீட்டி
குளிரை வெல்வோம் வா வா!
இலையின் நுனியில்
மழைத் துளிகளின் 
தற்கொலையை
தடுத்து நிறுத்துவோம் வா வா !
ஓட்டை வீட்டிலே 
ஒழுகுதே நீரென்று
ஒப்பாரி வேண்டாம்
ஓடம் விடுவோம் வா வா!
செருப்பை தூரமெறிந்து
மணற் சேற்றிலே
கால் புதைந்திட
பாதம் வரைவோம் வா வா! 
சன்னல் மீதிலே
வழியும் நீர்த்துளியை
தொட்டு ரசிப்போம் வா வா!
சாலைக் குட்டையை
தாண்டவேண்டாம்
தடுக்கி விழுவோம் வா வா!
பச்சை பாசிகளில்
பாதம் வைத்து
தவறி விழுவோம் வா வா!
குடைகள் இல்லை என்றால்
கவலையென்ன
காளான்கள் வளர்ப்போம் வா வா!
ஆடிபாடி மழையில் குளித்து
அம்மாவிடம் பொய்கள்
சொல்லுவோம் வா வா !

- அம்பேத் ஜோசப்

**

இப்படி ஒரு காலம் இருந்தது 
என ஏங்க வைக்கும் காலமாக உள்ளது
ஜப்பசி முதல் மார்கழி வரை மழை 
அதுவும் ஜப்பசி அடை மழை காலத்தை ரசித்தவன் நான் ‌‌‌‌‌‌
இப்போது செயற்கை மழையா இயற்கை மழையா 
மழை வந்தால் போதும் என்ற நிலை

- பாரதிராஜன் பெங்களூர்

**

இனி எல்லாம் மழைக்காலம் தான்.
பணி வாங்கித் தருகிறேன்
என்று சொல்லி ஏமாற்றி பணம் பார்ப்பவர்களுக்கு
தினமும் அது  பணமழைக்காலம் தான்.
என்ன செய்வது ஏமாறுபவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவன்
இருக்கின்ற தரையில் தினமும்
அனுதினமும் ஏமாந்தவன் கண்ணில்  வடியும் கண்ணீரெல்லாம் 
மழைக்காலம்(கோலம்) தான்.
படித்து பட்டம் பெற்ற பின்னர்
வேலை ஒன்றை பிடித்து
அமரும் வரையில்
நெஞ்சில் வழியும்
ஏக்கமும் மலையாக
நீங்காத நிலையாக வருத்தமாக
சொ(கொ)ட்டுவதும்
மழைக்கோ(கா)லம் தான்.----ஆனால்,
இன்ப மழைக்காலம்
ஊரணியில் நீர் பெருகும்
கழநி எல்லாம் நெற்கதிர் பெருகும்.
பஞ்சம் பசியின்றி
வாழ வழிகாட்டும்
அந்த மழைக்காலம்
இனி வருமா?
ஆனந்த மழையில்
நம் மனங்கள் எல்லாம் இனி எல்லாம் நாளும் இன்ப மழைக்காலத்தில் நனையுமா ?????????? 
கேள்விக்குறிகளே பதில்கள்

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**

இனிமேல் மழைக்காலமே; வைரச்சாரல் சன்னல் ஓரமே  
இப்புவிமேல் மழைக்கொடையே; ஈடிணையிலா இயற்கை வரமே  
பயிரெலாம் செழித்திடுமே ! உயிரெலாம் களித்திடுமே  
பறவைகள் கானம் பாடுமே ! வண்ணப் பூச்சிகள் உளம் மயக்குமே   
உணவைச் சேர்த்திடுமே, எறும்பினமும் ஏனைய உயிரினமும் 
உன்னத மனிதனுமே சீர்தூக்கிச்  சிந்தித்தே செயல்படணும்  
கொட்டும் மழைதான், கொட்டும் மழைதான், கோடிச்செல்வமே 
குளம் நிறைய, ஏரி நிறைய மனிதா, மனிதா உன்னறிவால் முடியுமே  
மழைக்காலம், நீ வளங்காண, மன்பதைக்கு வழி வகுக்குமே  
ஓடி வரும் வெள்ளமது, உனைத் தேடி வரும் செல்வமே; நாடி வரும் சுகமே  
சினங் கொண்டெழுந்து  மழைநீர், ஊரைச் சிதைக்காமல், சேமித்திடுக 
சிந்திக்கும் மானுடா, அறிவுச் சிகரமே, நீ சீரானத் திட்டந் தீட்டிடுக  

- கவி. R.அறிவுக்கண்

**

தரவு கொச்சகக் கலிப்பா

பனிபடரும் மலைமுகட்டில் பச்சிலைகள் தளிர்விடவே
கனிகொடுக்கும் மரங்களெலாம் கடுகளாய் வளர்ந்திடவே
இனிமேலும் மழைக்காலம் இனிவருமே வசந்தகாலம்.!
இனியெங்கள் வாழ்வினிலே இலட்சியமும் நிறைவேறும்.!
.
.
அருகிவரும் காடுகளை அவனியிலே காப்பதற்கே.!
இருக்கின்ற மரங்களையே இனிமேலும் வெட்டாதீர்.!
பெருகியோடும் ஆற்றினிலே பருமணலை அள்ளாதீர்.!
வருகின்ற நாட்களிலே வளமாக மழைபொழியும்.!
.
.
வரும்நீரை வீணடித்து வராதநீருக் கேங்காமல்.!
பெருகும்நீர் சேமிக்க பொறுப்புடனே உழையுங்கள்.!
தருகின்ற கொடையருளைத் தந்தருளும் ஐம்பூதம்.!
இருபோக விவசாயம் இங்கேயும் தழைத்திடுமே.!
.
.
மழைவேண்டி மண்ணுயிர்கள் மண்ணுலகில் தவித்திருக்க
தழைசெடியும் மரங்களுமே தண்ணீரை எதிர்பார்க்க
புழைவழியே மழைநீரும் புதியநீராய்ப் பாய்ந்தோட
விழையும்நல் விருப்பமுடன் வரவேற்போம் மழைக்காலம்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com