அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 2

அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 2

அன்பே சிவம்

அறிவைப் புகட்டும் ஆசானிடம்
கைப் பிரம்பென
அன்பூட்டி வளர்க்கும் தாயிடத்தில்
அதட்டல் மிரட்டலான அரவணைப்பு

பிரம்பும்
அரட்டலும் மிரட்டலும் நிகழ்வது
முரண்களின் சாத்வீக இயல்பு...

அறிவோ அன்போ
அளிக்கும் போது
ஆளாளுக்கு வேறுபடக் கூடாது...

அவ்விதம்
வேறுபடும் போது தான்
ஆயுதங்களின் பரிவாரங்களுடன்
ஆட்சிச் செய்கிறது
அடக்கும் ஒடுக்குமுறைகளோடு
சாதிகளென்றும் மதங்களென்றும்..

உண்மைக்கும் பொய்மைக்கும்
இடைவெளி
இமைக்கும் கண்ணுக்கும் உள்ள தூரம்தான்
அன்புக்கு அதுவுல்லை...

அன்பே சீவனென
அண்டத்தை ஆட்சிச் செய்யும் போது
அன்பெனப் பேசிக்கொண்டே
ஆயுதங்களைத் தூக்குவதுதான்
தெய்வ முரணில் நிகழும்
மானிடத் துரோகம்...!?

- கவிஞர்.கா.அமீர்ஜான்.திருநின்றவூர்

**

முக்குண வடிவில்
ஐந்தொழில் புரியும்
ஆதியு மந்தமிலா− ஆதிப்
பெருஞ்சோதி
ஆணாய் பெண்ணாய் உருவில்
தெரிந்து
அகங்காரம் அழிக்கும் மௌன குருவே;
எக்குணந் தொழுது
சிக்கெனப் பற்ற
நெருப்புப் பொறியாய்
காக்கும் வார்த்தை
இதயத்தில் உறைந்து
இமயத்தில் ஏறிய
அருள் வெள்ளச் செல்வன்
ஓங்கியே சொல்வோம்
உயிரனைத்தும் அவனே
உலகான யுவனே
பரமான தந்தை
பக்தர்களின் விந்தை;
எந்நாடும் புகழும்
தென்னாட்டு இறை
வாழ்த்துக அன்பைப் போற்றிய
பிள்ளையின் தமிழ் இனத்தை.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**
அணுவின் இணைப்பை
மறவாத ஞானியோ
ஆசை அடங்காத
மட அஞ்ஞானியோ
உலக வாழ்வில்
உருண்டு ஓடும் விஞ்ஞானியோ
அன்பின் அடிப்படை காணாத
மனிதனோ;
புதுமை புகுந்தாலும்
இதயம் மறக்காத
மென்மையின் வார்த்தை
பெண்மையின் மெய்யாய்
ஆணும் பெண்ணுமிணைந்த
சிவத்தின் குணம்;
ஆழ் மனதின் தியாக ரூபம்;
அதையே பற்று
அகிலம் உன் சொத்து
மறவாதே இறையோடு இணைந்து;
இயற்கையைத் தொடர்வோம்......

- சுழிகை ப. வீரக்குமார்

**

அன்பெனும் மூன்றெழுத்து சொல்லுள்  அடைக்கலம்
இன்சொல்லுடன் பின்னிய மனிதநேயத்தை அளித்தலே !
பாசத்துடன் பரிவு ஒப்பனை கொண்டு
புதுமுகவரியுடன் நம்முள் குடியேறும் அன்பு
பணிவான மகரந்தம் நிறைந்து மலர,
இதழுதிர்க்கும் இன்சொல் பட்டாம்பூச்சியாய்
மகரந்தத்தை (அன்பை) பிறர் மனதில் விதைக்க,
அறியாமை இருளுடன் பகையுணர்வு நீங்கி
ஒளிவிளக்காய் பிரகாசிக்குமே மாசற்ற சகிப்புத்தன்மை !
அனைத்துமான நெற்றிக்கண்ணனின் அருளுடன்
அன்பு நிறைந்த மனதில் என்றுமே
இன்னா செயல்கள் செயலற்று போக
ஆணவம் நம்மின்று அழிந்து போக
பண்புடன் பணிவு ஒளிருமே மத்தாப்பாய்
காலாவதியாகாத அன்பே சிவமயமாய் !!

- தனலட்சுமி பரமசிவம்

**
கடவுளைத் தேடிப் போனேன்
நானே கடவுளாகிப் போனேன்
இனிதாகப் பொருள் விளக்கம்
ஏற்றமுடன் தந்தவர் கபீர்தாஸர்

அன்பெனும் ஊற்றில் பொங்குபவர்
அன்புக்குள் அடக்கமாக விரும்புவர்
அன்புச்சுனையின் இனிப்புச் சுவையவர்
அன்புமரத்தில் ஆணி வேரவரன்றோ

உயிர்களில் வேறுபாடில்லாதது அன்பு
உயர்வு தாழ்வறியாத பண்பே அன்பு
ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சமம் அன்பில்
தோற்றம் ஒரு பொருட்டல்ல அன்புக்கு

அன்பு செய்பவர் தெய்வத்துள் இணைவர்
அன்பே தெய்வம் அதுவே சிவம் அன்றோ
அன்பற்ற மனிதன் மனிதனே அல்ல
அன்புக்குள் அடங்காதது உலகிலில்லையே

அன்பென்பது வாரி வழங்குவது எப்போதும்
வழங்கும் எல்லையில்லாதது பரவலானது
அன்றும் இன்றும் இறைவனின் விருப்பமது
உழல்கின்ற உலகில் என்றும் அன்பே சிவம்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

அன்பு உணர்வில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்து செல்கிறது!
அன்பு என்னும் சொல்
காட்டிய நல்ல பாதையில்
நம்மவர் வாழ்க்கையே
ஓடிக் கொண்டேயிருக்கிறது!
மதங்களும் சாதிகளும்
அன்பு என்னும் மென்மலரை
மனதில் தாங்கிக் கொண்டுதான்
ஒற்றுமையே மலர்கிறது!
அன்பு என்னும் உணர்வு
ஓரிடத்தில் விதைத்தால்
ஓராயிரம் இடத்தில்
முளைத்துக் கொண்டே
உலகில் வலம் வரும்!
வன்முறைக்கு விடைகொடுக்கும்
அன்பு என்னும் ஊற்று
அனைத்து உயிரிலும்
சுரந்து கொண்டேயிருக்கும்!
அன்பு வேறு சிவம் வேறு
ஆர்பரிப்பர் அறிவிலார்
அன்பே சிவம் என்பர்
அறிந்து கொண்ட அன்பர்கள்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

**

சிவம் எனும் மூன்றெழுத்தில்
அன்பெனும் மூன்றெழுத்து
அடங்கி உலகின்
முதற்பொருள் உயிர் மூச்சு!
பொல்லா உலகினில்
நில்லா செல்வத்தினை
நிலைக்கச் செய்வதினால்
யாது பயன்?
யாக்கை நிலைபெறாமை
அறியச் செய்வது
சிவமன்றோ!
வேதாந்தம் பேசி பொழுதை
வீணாக்கும் மானிடரே!
கேளாயோ!
புரிந்து வாழும்
மானிடருக்கே
இறையே குடைபிடிக்கும்
இது நிச்சயமே!

- மினி

**
செடிகொடி மரங்கள்
நீரூற்றுவோம்-
அன்பே சிவம்.

பறவை மிருகங்கள்
உணவளிப்போம்-
அன்பே சிவம்.

மனிதநேயம் என்றும்
பேணிடுவோம் -
அன்பே சிவம்.

ஈஸ்வரன் ஈஷ்வரீ
வணங்கிடுவோம் -
அன்பே சிவம்.

தேச ஒற்றுமை என்றும்
காத்திடுவோம் -
அன்பே சிவம்.

புவியியல் வளங்களை
ரசித்திடுவோம் -
அன்பே சிவம்.

இயற்கையுடன் இணைந்து
வாழ்ந்திடுவோம்
அன்பே சிவம்

பரமன் நம் சிந்தையில்
உணர்த்திடுவான் -
அன்பே சிவம்.

எங்கும் உள அவனே
சதாசிவன் ஆனவன் -
அன்பே சிவம்.

- ராணி பாலகிருஷ்ணன்

**
அன்பே சிவம் என்பதை அறிந்திடுங்கள்
அனைவரும் உடன்பிறப்பாக உடன்படுங்கள்!

சைவம் வைணவம் வேறுபாடு வேண்டாம்
சங்கமித்து ஒற்றுமையாக வாழ்ந்திடுங்கள்!

வேற்று மதத்தவரையும் மதித்து வாழுங்கள்
வேற்றுமை இன்றி உடன்பட்டு வாழுங்கள்!

மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்
மனிதம் போற்றி அன்பைச் செலுத்துங்கள்!

மாட்டிற்காக மனிதனைக் கொல்வது மடமை
மனித உயிரின் மகத்துவம் அறிவது கடமை!

கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்
கண்டபடி பேசி புண்படுத்திட வேண்டாம்!

மதத்தை விட மனிதம் பெரிது உணருங்கள்
மனிதனை மனிதன் மதித்து நடந்திட வேண்டும்

வன்முறை போதிக்கவில்லை எந்த மதமும்
வன்முறை போதித்தால் அது மதமே இல்லை!

- கவிஞர் இரா. இரவி.

**

அன்பிருக்கும் இடம்தனில் 
பகைவரும் கரைந்திடுவர்...
கருணையிருக்கும் இடம்தனில் 
வெறுப்பவரும் வணங்கிடுவர்...
அகிலமும் இயங்குதல் அன்பினாலே...
இறைவனும் இறங்குவான் அன்பினாலே...
இவ்வுலகையே வெல்லுதல் பெரிதெனினும்...
அன்பின் வழியே செல்பவரை
இவ்வுலகம் என்று போற்றிடுமே...

- ஹேமசந்திரன்

**

இன்று -
அடிமனதில் இருக்கும் -
அன்பினை வெளிக்கொணர
வழிதேடுவதை விட்டுவிட்டு
அடிமண்ணில் இருக்கும்
மீத்தேனை எடுக்க வழிதேடுகிறாா்கள்.....!!!

அன்பும் பரிவும் - இன்று 
முகநூலில் மட்டுமே
பதிவிடப்படுகிறது - முகம்பாா்த்து
பழகும் மனிதர்களிடத்தே
பதிவிட மறந்துபோகிறது....!!!

அணுதினமும் - அன்பினை
வலியுறுத்தியே வாழுங்கள் - ஆனால்
அன்புடையவரின் நெஞ்சத்திலே
வலியேற்படுத்தி வாழாதீர்கள்.....

உன்னதமான மனித இனமே - 
உங்களின் பாதம்தொட்டு கேட்கிறேன்
அன்பினை புதைத்து
இறைவனை வணங்காதீர்கள்....
அன்பினை விதைத்து
இறைவனை வணங்குங்கள்....
ஏனெனில் - அன்பே கிறிஸ்து....
அன்பே அல்லா.... அன்பே சிவம்....

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

ஆண்டவன் உருவில்
அன்னை அவளின்
அன்பு ....நிகரற்றது !
ஆதரவற்றவரையும்
அரவணைக்கும்
அன்பு .... அருமருந்தானது !
கருவறை முதல்
கல்லறை வரை தொடரும்
அன்பு ...காலம் கடந்தது !
கொடுத்தாலும் கூடும்
பெற்றாலும் பெருகும்
அன்பு ...அளவற்றது !

விலை  இல்லை
விற்பனைக்கு  இல்லை
அன்பு ...விலை மதிப்பற்றது !
சாதி மத பேதமில்லை
சதிக்கு இடமில்லை
அன்பு ...சமத்துவமானது !
பிடிக்காதவரையும்
பிடிக்கச்செய்யும்
அன்பு... பிரிவற்றது !
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமின்றி  வளரும்
அன்பு ...கருணையானது !

- ஜெயா வெங்கட்.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com